வங்கதேசத்தின் சர்வாதிகாரியான ஷேக் ஹசீனா மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவத்தை பயன்படுத்தி தாக்குதல்களை தொடுத்து வந்தார்.
300க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரை துள்ளத் துடிக்க சுட்டுக் கொன்று வெறியாட்டம் போட்ட கொடூரமான பாசிச ஹசீனா மாணவர்களின் எழுச்சி அதிகரிக்கவே தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு திருட்டுத்தனமாக ஹெலிகாப்டரில் ஏறி இந்தியாவிற்கு வந்து இறங்கினார்.
பிரிட்டன் காலனி ஆதிக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டையும் துண்டாடி 1947 ஆம் ஆண்டு தனித்தனியாக சுதந்திரத்தை வழங்கிய போது பங்களாதேஷ் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவே இருந்தது.
1971 ஆம் ஆண்டு வங்க தேசத்தின் அவாமி லீக் கட்சியின் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தனிநாடு கேட்டு போராடியதை ஆதரித்து இந்தியா தனது ராணுவத்தையும், ரா உளவு நிறுவனத்தையும் அனுப்பி உதவி செய்தது என்பதை பற்றி ஏற்கனவே நாம் எழுதியுள்ளோம்.
பங்களாதேஷ் தனி நாடாக உருவான காலத்திலிருந்து பாகிஸ்தான் அதற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பதால் தனது நாட்டில் இருந்து தப்பி ஓடிய ஷேக் ஹசீனா அங்கு செல்லவில்லை. அதேபோல் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஷேக் ஹசீனா கொண்டுள்ளார். என்பதால் சீனா அவரை அனுமதிக்காது. அதேபோல் இலங்கை செல்வதை அவர் பாதுகாப்பாக நினைக்கவில்லை. இதனால் ஷேக் ஹசீனா நட்பு நாடான இந்தியாவுக்கு வர தயாரானார். இதையடுத்து அவர் அந்த நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான C-130 J ரக விமானத்தில் இந்தியா நோக்கி புறப்பட்டு வந்தார்.
துரோகி பாதுகாப்பாக தப்பிய கதை!
சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ராணுவத்தை ஏவி அடக்குமுறையை கையாண்ட கொடூரமான பயங்கரவாதியான ஷேக் அசீனா தப்பிச்சென்றதை ஆக்சன் திரில்லர் படங்களில் வருகின்ற கதாநாயகனோ அல்லது கதாநாயகி தப்பி சென்றதைப் போல சுவாரசியமாக விளக்குகிறது மோடி ஆதரவு கோடி(Godi) ஊடகங்கள்.
“பொதுவாக ஒரு நாட்டின் பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் அல்லது விமானம் இன்னொரு நாட்டின் வான்வெளி பரப்பில் அனுமதியின்றி நுழைய கூடாது. அப்படி பறந்தால் சம்பந்தப்பட்ட நாடு அதனை சுட்டு வீழ்த்தலாம். இத்தகைய சூழலில் தான் எந்த முன்னறிவிப்பும் இன்றி நேற்று மதியம் 3 மணியளவில் இந்திய வான்வெளி பரப்பை நோக்கி மிகவும் தாழ்வாக வங்கதேசத்தின் விமானம் பறந்து வருவதை நம் நாட்டு விமானப்படையினர் அறிந்தனர். நம் நாட்டின் விமானப்படை ரேடார்கள் இதனை கண்டுபிடித்து சிக்னல் செய்தது.
மேலும் அந்த விமானத்தில் ஷேக் ஹசீனா இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். வங்கதேசத்தில் நிலைமை மோசமான நிலையில் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு வருவதை விமானப்படை உணர்ந்தது. இதையடுத்து அவரை பாதுகாப்பாக நம் நாட்டில் தரையிறங்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக இந்தியா செய்ய தொடங்கியது. அதன்படி நம் நாட்டின் வான்வெளி பரப்புக்குள் நுழைய அனுமதி வழங்கிறது.
படிக்க:
♦ மாணவர்கள் போராட்டத்தால் பற்றி எரியும் வங்காள தேசம் !
அதுமட்டுமின்றி ஷேக் ஹசீனாவின் பாதுகாப்புக்காக 2 ரஃபேல் போர் விமானங்களை உடனடியாக இந்திய விமானப்படை அனுப்பி வைத்தது. அதாவது ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மேற்கு வங்க மாநிலம் ஹஷிமாரா விமான தளத்தின் 101வது படைப்பிரிவில் இருந்து 2 ரஃபேல் போர் விமானங்கள் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானங்கள் ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
தொடர்ச்சியாக விமானங்கள் வானில் பறந்தபடி தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் இருந்தது. இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தின் தலைவர்களான ஏர் ஷிப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் ஜெனரல் உபேந்திர திவேதி ஆகியோர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் விமானம் உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக மாலை 5.45 மணிக்கு தரையிறங்கியது
இதையடுத்து நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் வங்கதேசத்தில் நிலவும் நிலைமை, ஷேக் ஹசீனாவின் அடுத்தக்கட்ட பிளான் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு அஜித் தோவல் அதுபற்றிய விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொண்டார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தில் அஜித் தோவல் இதுபற்றி விளக்கினார்.” என்று விளக்குகிறது ஒன் இந்தியா பத்திரிக்கை.
நடந்த உண்மை இப்படியே கூட இருக்கட்டும். ஆனால் இந்தியா தனது உளவு நிறுவனத்தின் மூலம் பங்களாதேஷ் அதிபரான ஷேக் ஹசீனாவிற்கு முன்கூட்டியே தகவல் கொடுக்காமல் எப்படி இவ்வளவு பாதுகாப்பாக வந்து சேர முடியும் என்பது தான் நமது கேள்வி. இந்த உரிமை வங்கதேச மக்களுக்கு உண்டா.
பாசிச சர்வாதிகாரிகளும் சரி, ராணுவ சர்வாதிகாரம் செய்கின்றவர்களும் சரி! அடக்கு முறைகள் ஏவுகின்ற வரை அதுவும் குறிப்பாக அதிகாரத்திலிருந்து ஆட்டம் போடுகின்ற வரை கொடிய பயங்கரவாதிகளாகவும், மக்கள் எழுச்சியின் மூலம் அதிகாரத்தை விட்டு துரத்தி அடிக்கப்படுகின்ற போது கோழைகளாக உருமாறி தப்பியோடுவதற்கும் முயற்சிக்கின்றனர்.
இரண்டாம் உலகப்போரில் சீனாவை ஆக்கிரமித்து வந்த ஜப்பானை சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் விடுதலைப் படை முறியடித்த பிறகு அதுவரை சீனாவின் அதிகாரத்தில் இருந்த சியாங்கே ஷேக் தைவானுக்கு தப்பி ஓடியது தான் வரலாறு.
அதேபோல பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வாதிகாரியான ஊழல் பெருச்சாளி மார்க்கோஸ் மற்றும் இமெல்டா மார்க்கோஸ் மக்களின் எழுச்சிக்கு பயந்து நாட்டை விட்டு தப்பி ஓடினார்கள். இலங்கையின் ராஜபக்சே சமீபத்தில் நாட்டை விட்டு இவ்வாறு தான் தப்பி ஓடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் போராடுகின்ற போது தன்னெழுச்சியான போராட்டங்கள் எவ்வளவு தீரமாக நடந்தாலும் அவை வெற்றி பெறுவதில்லை.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுதான்.
பாசிச சர்வாதிகாரமும், ராணுவ சர்வாதிகாரமும் வீழ்த்தப்பட்ட பிறகு அந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கின்ற அடிப்படை கொண்ட தேசிய விடுதலை இயக்கம் தலைமை தாங்கி கொண்டு செல்ல வேண்டும் அல்லது கம்யூனிஸ்டுகள் தலைமையில் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதுதான் அந்த அனுபவமாகும்.
- ஆல்பர்ட்