வட சென்னையை அழிக்காதே! புதிய அனல் மின் நிலையங்களை அனுமதிக்காதே!

10 லட்சத்திற்கும் அதிகமான உழைக்கும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் வட சென்னையில் புதியதொரு அனல்மின் நிலையத்தை அங்கு அமைப்பது அப்பகுதியை வாழத்தகுதியற்ற இடமாக மாற்றிவிடும்.

வட சென்னை அனல்மின் நிலையம் Source: PP MEDIA

ந்தியாவின் மொத்த மின் உற்பத்தி 1949 டெரா வாட்/1மணியாகும். இந்தியாவில் 78 சதவீதத்திற்கும் அதிகமான மின்சாரம் நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது, இந்த வகையான மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமே கிடைக்கிறது.

உலகம் முழுவதும் நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பது முதல் நிலக்கரியை பயன்படுத்தி தொழிற்சாலைகளை இயக்குவது, செங்கல் சூளைகளை இயக்குவது வரை அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற சூழலியல் சிக்கல் மிகவும் முக்கியமான பிரச்சினையாக பேசப்பட்டு வருகிறது.

நிலக்கரி மூலம் இத்தகைய ஆலைகள், சூளைகள் இயங்குகின்ற போது அதன் கழிவு பொருளான சாம்பல் மிகவும் முக்கியமான சிக்கலை உருவாக்குகின்றது. குறிப்பாக இந்த சாம்பல் சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகளுக்கு பயன்படுகிறது என்பதை தவிர இதனை கழிவுகளாக மாற்றுவதில் பல்வேறு நெருக்கடிகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

புவி வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றங்களுக்கும் இத்தகைய நிலக்கரி பயன்பாட்டிற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என்பதால் சர்வதேச அளவில் நிலக்கரி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று ஏகாதிபத்திய முதலாளித்துவாதிகள் ஒருபுறம் கூச்சலிட்டுக் கொண்டே மின் உற்பத்திக்கு அனல் மின் நிலையங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அது போலவே இந்தியாவில் படிப்படியாக அனல் மின் நிலையங்களை மூட வேண்டும்; நிலக்கரி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று ஒரு புறம் பேசிக்கொண்டே நிலக்கரி உற்பத்திக்கு முன்னுரிமை கொடுப்பதும், வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதற்கு இது ’பணம் கொட்டும் மரம்’ என்பது ஒரு முக்கியமான காரணமாகும்.

சூழலியல் போராளிகள், பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள் காரணமாக சில இடங்களில் அனல் மின் நிலையங்கள் மூடப்படுகிறது. எடுத்துக்காட்டாக இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள ராட்க்ளிஃப்-ஆன்-சோர்(Ratcliffe-on-Soar) அனல் மின் நிலையம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதியுடன் மூடப்பட்டது. இத்துடன் இங்கிலாந்து நாட்டின் 142 ஆண்டு கால நிலக்கரி அனல் மின் நிலைய வரலாறு முடிவுக்கு வந்துள்ளது.

அதேபோல 1962 ஆம் ஆண்டு முதல் 1970 வரை உருவாக்கப்பட்ட நெய்வேலி முதல் அனல் மின் நிலையம், அதன் தாங்கு திறன் காலம் தாண்டி (ஆயுட்காலம்) மேலும் 30 ஆண்டுகளுக்கு ஓட்டப்பட்டது சமீபத்தில் தான் அது முழுமையாக மூடப்பட்டு படிப்படியாக அங்கிருந்த கட்டுமானங்கள் அகற்றப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


படிக்க: கொட்டி தீர்த்த மிக்ஜாம் புயல்: நிராதரவாக வட சென்னை மக்கள்!


எதிர்வரும் பத்தாண்டுகளில் இந்தியாவில் கூடுதலான அனல் மின் நிலையங்கள் மூடப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக புதிய மின் நிலையங்கள் போதுமான அளவிற்கு உருவாக்கப்படவில்லை என்பதால் இத்தகைய அனல்மின் நிலையங்களையே கால் நீட்டிப்பு செய்து ஓட்டவே இந்திய ஒன்றிய அரசு தயாராக உள்ளது.

”தமிழகம் இத்தகைய நிலக்கரி பயன்பாடு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு அடிப்படையான சூழலியல் சிக்கலில் இருந்து முதலில் விடுபடும் மாநிலமாக இருக்கும்’ என்று தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் வைத்துள்ள போதிலும், புதிய அனல் மின் நிலையங்கள் மற்றும் அனல் மின்நிலைய விரிவாக்க ஒப்பந்தங்களுக்கு அனுமதிப்பதும் அதைப்பற்றி மக்கள் மத்தியில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த வகையில் “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO) எண்ணூரில் அமைத்து வரும் 1×660MW நிலக்கரி அனல்மின் நிலையத்திற்காக 2009ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்ததால் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முயற்சியை TANGEDCO தொடங்கியுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி எர்ணாவூர் மகாலெட்சுமி நகரில் உள்ள பெருந்தலைவர் காமராசர் மாளிகையில் நடைபெறும்” என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த இரு அனல் மின் நிலையங்கள் மட்டுமின்றி வட சென்னை பகுதியில் அமைந்துள்ள் நாசகார தொழிற்சாலைகளைப் பற்றி, “எண்ணூர், மணலியில் வெறும் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள், மூன்று துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலை, பாலிமர் மற்றும் இரசாயன ஆலைகள், வாகனத் தொழிற்சாலை, நிலக்கரி சேமிப்பிடங்கள் எனச் சூழலைப் பாதிக்கும் 40க்கும் மேற்பட்ட அபாயகரமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

10 லட்சத்திற்கும் அதிகமான உழைக்கும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் வட சென்னையில் ஏற்கனவே 3330MW அளவிற்கான அனல்மின் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் புதிதாக 660MW அனல்மின் நிலையத்தை அங்கு அமைப்பது அப்பகுதியை வாழத்தகுதியற்ற இடமாக மாற்றிவிடும்.


படிக்க: வடசென்னையில் தொடரும் துயரம்! கார்ப்பரேட்டுகளால் விழுங்கப்படும் எண்ணூர் பகுதி!


அங்கு செயல்பட்டு வரும் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள்தான். சராசரியாக ஒரு 500MW அனல் மின் நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 105டன் சல்பர் டை ஆக்சைடு , 24 டன் நைட்ரஜன் ஆக்சைடு , 2.5 டன் நுண்துகள்கள், மற்றும் 3500 டன் அளவிற்கு சாம்பல் உள்ளிட்ட காற்று மாசு வெளியேறுகிறது.’” என்று இதன் பாதிப்புகளை பூவுலகின் நண்பர்கள் குழு சரியாகவே முன் வைத்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் மின் தேவைக்கு பொருத்தமாக மாற்று எரிசக்தி மூலம் உற்பத்தி செய்வதுதான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும். அதற்கு மக்கள் மீது அக்கறை கொண்ட, சூழலியல் மீது உண்மையான பற்று கொண்ட அரசாங்கத்தினால் மட்டுமே இதனை உருவாக்க முடியும். அத்தகைய அரசாங்கம் பாசிசத்தை வீழ்த்தி அமைக்கப்படுகின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்றின் மூலமாக உருவாக்கப்படும் என்பதுதான் தற்போதைய சூழலில் மக்களுக்கு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டிய செய்தியாகும்.

  • ஆல்பர்ட்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here