மெக்காவில் உள்ள மசூதியில் அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு வங்கதேச நாட்டை சார்ந்தவர்களுக்கு சவூதி அரேபியா மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. ஏன் மரண தண்டனை அறிவித்தார்கள்? என்ன நடந்தது? என்று இதுவரை முழுமையான உண்மையான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இது சரியா தவறா என்பதை விவாதிக்க வேண்டியது கட்டாயம்.
என்ன நடந்தது?
மேலே சொன்னவாறு முழுமையான விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றாலும் வங்கதேசத்தை சேர்ந்த தி டெய்லி ஸ்டார் பத்திரிக்கைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், “அக்டோபர் 18 ஆம் தேதி தேதியிடப்பட்டு, வெளிநாட்டவர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட குறிப்பாணை, மக்காவில் தூக்கிலிடப்பட்ட நஸ்ருல் இஸ்லாம் மற்றும் சுவேட்டி அக்தர் (குடும்பத்தினரின் கூற்றுப்படி ஸ்வீட்டி அக்தர்) என இருவரையும் அடையாளம் காட்டுகிறது.” என்கிறது.
செப்டம்பர் 30 அன்று வங்கதேச தூதரகத்துக்குக் கிடைத்த கைதிகள் பட்டியலின்படி, நஸ்ருல் 2023 ஆகஸ்ட் 1 அன்று சவூதி அரேபியாவின் இணையக் குற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 2 அன்று, திருமணத்துக்கு வெளியேயான பாலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சுவீட்டி கைது செய்யப்பட்டிருந்தார். நஸ்ருல் ஜெத்தா சீர்திருத்தச் சிறையிலும், சுவீட்டி ஜெத்தா பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். இருவரும் அல் மஜால் (Al Majal) நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.
கடந்த 2026 அக்டோபர் 14 ஆம் தேதி இருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்காவில் உள்ள ஒரு மசூதிக்குள் “ஒழுக்கமற்ற செயலில்” ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. இதுவரை வங்கதேச அரசிற்கும் தீர்ப்பின் நகல்களோ, மரண தண்டனை குறித்த விவரங்களோ சவூதி அரேபிய அரசால் தெரிவிக்கப்படவில்லை.
இருவேறு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஒன்று மக்காவில் உள்ள ஒரு மசூதிக்குள் “ஒழுக்கமற்ற செயலில்” ஈடுபட்டதாக அடுத்து திருமணம் கடந்த பாலியல் உறவு மற்றும் இணைய குற்றம். இது இரண்டுமே உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டும் குற்றமாக கருதப்பட்டு மரண தண்டனை வரை விதிக்கப்பட்டிருப்பது தான் விவாதத்தை உருவாக்குகிறது. அதுவும் சம்பந்தபட்டவர்கள் கேள்விகேட்பாரற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை நாட்டை சேர்ந்தவர்கள்.
சவுதியின் சர்வாதிகாரமும், மரணதண்டனையும்
லட்சக்கணக்கான மக்கள் கூடும் மக்கா இஸ்ளாமியர்களின் புனித தலமாக உள்ளது. மக்கள் அதனை புனித தலமாக பார்த்தாலும் சவுதி அரசை பொறுத்தவரை சுற்றுளாதூறை மூலம் பல மில்லியன் டாலர் வருமானம் கொழிக்கும் இடம். அந்த மெக்காவில் ஒழுக்கமற்ற செயல் என்று எதை தெரிவிக்கிறார்கள் என்பது நமது கேள்வி. ஆனால் பதில் இல்லை. அல்லது யாருக்கும் தெரியாது. யார் கேட்கப்போகிறார்கள் என்ற சர்வாதிகார திமிர். நீதிபதிக்கு அளவற்ற அதிகாரம். இவையெல்லாம் சேர்ந்து இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சவுதி அரசால் கொல்லப்பட்டுள்ளார்கள்.
படிக்க: Homebound- இந்திய அவலத்தின் பிரதிபலிப்பு!
ஒருவர் குற்றமிழைத்தார் என்றால் என்ன குற்றம் செய்தார், அது எத்தகைய தண்டனைக்குரியது, அதற்கு என்ன ஆதாரம் என்ற விவரங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்கள் சார்ந்த நாட்டு அரசுக்கும், பொதுவெளியிலும் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்சொன்ன எதுவும் அறிவிக்கப்பட வில்லை. அதாவது தனது மகன், மகள் என்ன குற்றம் செய்தார் என்ற விவரம் குடும்பத்திற்கு தெரியவில்லை. வங்கதேச அரசிற்கும் தெரியப்படுத்தவில்லை. இது சவுதி அரசின் சர்வாதிகார மனநிலையை காட்டுகிறது.
திருமணம் கடந்த பாலியல் உறவில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று எந்த சட்டம் கூறுகிறது. அதே போல் மெக்காவில் “ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டால் மரண தண்டனை” என்று எந்த சட்டம் கூறுகிறது. வங்கதேசத்தவர்களின் மரண தண்டனையில் Ta’zir முறையில் மரணதண்டனை நிறைவேற்றியதாக சவுதி அறிவித்தது. அது என்ன Ta’zir என்றால் சவூதி அரேபியாவில் முழுமையாகத் தொகுக்கப்பட்ட குற்றவியல் சட்டம் இல்லாததால், நீதிபதிகள் ஷரியா சட்டத்தின் விளக்கங்களையும் Ta’zir எனப்படும் நீதிபதியின் விருப்ப அதிகாரத்தின் கீழான தண்டனை முறையையும் பயன்படுத்துகின்றனர்.
குற்றத்தை நிரூபிப்பதற்கு, பாலியல் உறவை நேரில் கண்ட நான்கு சாட்சிகள் அல்லது குற்றத்தைத் தன்னிச்சையாக ஒப்புக்கொள்வது போன்ற மிகக் கடுமையான ஆதார நிபந்தனைகள் குறிப்பிடப்படுகின்றன. எனவே, நான்கு சாட்சிகள் என்ற ஆதார நிபந்தனையைப் பூர்த்தி செய்யாத வழக்குகளிலும், வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்படலாம். இந்த வழக்கிலும் குற்றத்திற்கான ஆதாரங்கள் இல்லையென்ற போதிலும் சர்வாதிகார(Ta’zir) முறையில் மரண தண்டனை விதித்துள்ளார்கள் என்று தெரிகிறது.
படிக்க: ஈரான்: ஹிஜாப் தீயில் கருகும் ஆணாதிக்கம்!
அதேபோல் திருமணமாகாதவர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டால் ஷ்ரியா சட்டத்தின் படி 100 கசையடியகள் என்றும், திருமணமானவர்கள் ஈடுபட்டால் மரண தண்டனை அல்லது கல்லெறிந்து கொல்லுதல் என்ற கொடூரமான மத அடிப்படைவாத சட்டங்களை பயன்படுத்துகிறது சவுதி அரசு. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களே. அதாவது வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல சவுதியில் உள்ள பெண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
2017-2018 ஆண்டுகளில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதாவது ஆணுக்கு இணையாக பெண்கள் செயல்படக் கூடாது என்ற ஆணாதிக்க மனநிலை. ஆண்களின் துணையில்லாமல் பெண்கள் வெளிநாடு செல்ல முடியாத நிலையும் இருந்தது. இவையனைத்தும் பலத்த போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையில் மாற்றங்களை கொண்டு வர முடிந்தது. ஆனால் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் குடும்ப வன்முறை இன்றும் அதிகமாக நடைபெறுகிறது. இந்த செய்திகள் அந்த குடும்ப ஆணை தாண்டி வெளியில் வராது. இதுதான் சவுதி அரேபியாவில் பெண்களின் உண்மை நிலை.
சவுதி அரேபியா எண்ணெய் வளமிக்க நாடு. இதை சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் மருத்துவதுறை உள்ளிட்ட உட்கட்டமைப்பு துறைகளில் அதிகமான அளவு புலம்பெயர் தொழிலாளர்களே பயன்படுத்தப்படுகிறார்கள். குறிப்பாக ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாட்டு தொழிலாளர்களை கொண்டே அவர்களது பொருளாதாரம் இயங்குகிறது. அவர்களைப் பொறுத்தவரை எந்த மதமாக இருந்தால் எனெக்கென்ன நீ ஒரு தொழிலாளி என்று தான் பார்க்கிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் ஒரு சிலர் சவுதி அரசின் சர்வாதிகார மரணதண்டனைக்கு புனிதத்தைக் காரணம் காட்டி முட்டுக் கொடுக்கிறார்கள்.
படிக்க: NEOM நகரத்திற்காக கொல்லப்படும் சவுதி அரேபியா பழங்குடிகள்!
உண்மையாகவே புனிதத்தை சவுதி அரசு பாதுகாக்கிறது என்றால் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரன் முகமது பின் சல்மானுக்கு தான் மரண தண்டனை அளித்திருக்க வேண்டும். பிஞ்சு குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொலைகாரன் எஃப்ஸ்டீன் டைரியில் முகமது பின் சல்மானின் தகவலும் இருப்பது செய்திகளில் வந்து நாறியது. சவூதியிலிருந்து தனக்கு கூடாரம் உள்ளிட்ட பரிசுகள் வந்ததாகவும் எஃப்ஸ்டீன் தெரிவித்துள்ளான். எப்ஸ்டீனின் நியூயார்க் மாளிகையில் முகமது பின் சல்மானின் பிரேம் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் வளைகுடா போர் நடந்தபோது தனது கடல்பரப்பில் அமெரிக்காவின் கப்பல்களை நிறுத்தி அமெரிக்க படைகளின் பாலியல் இச்சைக்கு மது, மாது உள்ளிட்ட அனைத்துவிதமான ஏற்பாடுகளை செய்துக் கொடுத்தது சவுதி அரசு. ஏகாதிபத்தின் காலை நக்கிப்பிழைக்கும் சவுதிக்கு அப்போது புனிதம் கெட்டுவிடவில்லையா?
சவுதி அமெரிக்க அடிமை என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் இனவெறியர்களால் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போதும், அவர்களின் புனிதமான மசூதிகள் இனவெறியர்களால் தரைமட்டமாக்கப்பட்ட போதும் அமெரிக்க ஆதரவு அடிமை மனநிலையில் அமைதிகாத்த போது புனிதம் கெடவில்லையா? தன் சமூக மக்களை கொன்றொழித்த நெதன்யாகுவிற்கு மரண தண்டனை அறிவிக்க துப்பில்லாத சவுதி அரசு தான் புனிதம் கெட்டுவிட்டதாக வங்கதேச தொழிலாளர்களை கொன்றுள்ளது. இதை எப்படி ஒரு சமூகம் ஆதரிக்க முடியும்?
சவுதி அரசு தெளிவாக ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளனாக வர்க்க அடிப்படையில் பிரித்துப் பார்க்கிறது. இதுவரை ஏதாவது ஒரு ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை அளித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? ஆனால் இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மதத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டு மரண தண்டனையை நம்மால் ஆதரிக்க முடிகிறது என்றால் நம்முடைய மனநிலை என்னவாக இருக்கிறது? அதேபோல், இந்த நாட்டு சட்டம் என அமைதியாகவும் இருக்க முடியாது. இந்தியா உட்பட எந்த நாட்டிலும் காட்டுமிராண்டித்தனமான, ஜனநாயக விரோத சட்டங்கள் அமலில் இருந்தாலும் அவற்றை எதிர்த்துக் குரல் கொடுப்பது ஜனநாயகத்தை விரும்பும் அனைவரின் கடமையாகும்.
சவுதி அரேபியா முதலாளித்துவத்தின் சுரண்டல், சொகுசு சுற்றுலா- என அனைத்து கூறுகளையும் அனுமதித்துவிட்டு இன்னும் பழமையான மன்னராட்சி முறையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் ஜனநாயகத்தின் கூறுகளான மனித உரிமை, பாலின சமத்துவம், கருத்துரிமை அனைத்தும் மறுக்கப்பட்டு நிலபிரபுத்துவ காலத்தில் எழுதப்பட்ட மத அடிப்படைவாத சட்டங்களான ஷரியத் சட்டம், புனித குர்ரானின் விதிகளை பின்பற்றுகிறது. இதே அடிப்படையில் நீடித்தால் தான் ஏகாதிபத்திய கும்பல் தனது சுரண்டலை நீடிக்க முடியும். பின்னிப்பிணைந்துள்ள ஏகாதிபத்திய சுரண்டலையும் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையும் ஒழித்துக்கட்டுவதே உலக மக்களுக்கு விடுதலையைக் கொடுக்கும்.
பரூக்







