பொதுவில் வெள்ளை காலர் வேலை செய்பவர்கள், அதாவது எந்த ஒரு உடல் உழைப்பிலும், உற்பத்தியிலும் ஈடுபடாத ஊழியர்களாகவும், அதிகாரிகளாகவும் இருப்பவர்கள் தம்மை நாகரிகமானவர்களாகவும் மேலானவர்களாகவும் கருதி, உடல் உழைப்பில் ஈடுபடும் பெரும்பான்மையினரான மக்களை கீழானவர்களாகவும் அவமரியாதையுடனும் நடத்துகின்றனர். இப்படிப்பட்டவர்களில் சிலர் கொடூர கொலைகாரர்களாகவும் கூட ‘பரிணாம வளர்ச்சி’ பெறுகின்றனர்.
ஒரு மாணவனின் உணவு பழக்கத்தை – மாட்டுக்கறி உண்பதை குறிப்பிட்டு கேலி செய்து, வகுப்பறையிலேயே ஒரு புறக்கணிப்பை அமல்படுத்தி தற்கொலை வரைக்கும் தள்ளிச் செல்லவும் முடிந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை இங்கு பரிசீலிப்போம்.
ஆசிரியர்களிடம் வளர்ந்து நிற்கும் ஆதிக்க சாதி வெறி!
கொங்கு மண்டலம் என்றாலே அங்கு கவுண்டர்கள் மற்றும் நாயுடுக்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறப்பதையும், அவர்களின் நிறுவனங்களிலோ, அல்லது கிராமப்புறங்களில் அவர்களின் பண்ணைகளிலோ சாதிய அடக்குமுறைகளும், இழிவுபடுத்தப்படுதல்களும், புறக்கணிப்புகளும் இயல்பாக நடப்பது குறித்து பலரும் அறிந்திருக்க கூடும்.
ஆனால் கல்வி நிலையங்களிலும் கூட ,இத்தகைய சாதி வெறிபிடித்த பயங்கரவாதிகள் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பது தான் தற்போது வெளிவந்திருக்கும் செய்தி.
கோவையில் ஸ்ரீ கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளி (Shri K.K. Naidu Higher Secondary School) அரசு உதவி பெற்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தான் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமையாசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பார்ப்பனக்கூட்டம் வளர்த்தெடுத்த சாதிய கட்டமைப்பை உயர்த்தி பிடிக்கும் சில காவி ஆசிரியர்களால் வளரும் மொட்டு கசக்கியெறியப்பட்டு விட்டது.
தீண்டாமை ஒரு பாவச் செயல், பெருங்குற்றம் என்று கற்பிக்க வேண்டிய பள்ளியும் வகுப்பறையுமே தீண்டாமையை உயர்த்தி பிடிப்பதற்கான இடமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கோவையைப் பொருத்தவரை பல ஊர்களில் உள்ள பள்ளியின் பெயரிலேயே “நாயுடு” என்பது ஒட்டிக் கொண்டுள்ளது.
கோவையின் விஞ்ஞானி ஜி.டி யின் குடும்பத்தினரே அவரின் சாதிப் பெயரை துண்டித்து விட்டபோது, சமூகநீதி பேசும் திமுக அரசாங்கம் கடந்த முறை ஆட்சி கட்டிலில் இருந்தபோது புதிதாக திறந்து வைத்த மேம்பாலத்தின் பெயரில் சாதியை மீண்டும் ஒட்ட வைத்தது. இன்னும் கூட மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தின் பெயர் “கவுண்டர் மில்ஸ்” ஆகும். இதுதான் கொங்கு மண்டலத்தின் கள நிலவரமாக உள்ளது. அங்கு தான் தற்போது உயிர்ப்பலியும் நடந்துள்ளது.
ஆதிக்க சாதி திமிருக்கு பலியான அகிலன்!
கற்பிக்கும் குருவான ஆசிரியரின் அனுமதியுடன் நடக்கும் அவமானப் படுத்தல்களையும், சாதிய ஒதுக்கல்களையும் சகிக்க முடியாத பிளஸ் ஒன் மாணவன் அகிலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதால், அவர்களின் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து மறியல் போராட்டத்திலும் காவல் நிலைய முற்றுகையையும் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள் அந்த மாணவனின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் விடுகின்றனர். திருமுருகன் காந்தி போன்றோர் களப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்
சாதாரண உழைக்கும் மக்களின் குடும்ப பிரச்சனை என்றால் போட்டோவைப் போட்டு கிசுகிசுக்களை எழுதி கல்லாக்கட்டும் பத்திரிகைகள் ஆதிக்க சாதி வெறியர்கள் அகப்பட்டுக் கொண்டால் அவர்களின் அடையாளங்களை கூட வெளிப்படுத்துவது இல்லை.
படிக்க:
♦ என்றுதான் மடியும்… ஆணவப் படுகொலைகளும்? ஆதிக்க சாதிவெறிக் கொழுப்பும்?
♦ ஆதிக்க சாதிவெறி சங்கங்கள், அதை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை தடை செய்!
இன்று 23. 10. 2026 இல் நாளிதழ் செய்திகளில், கோவையில் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த அகிலன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத்தான் செய்திகள் வெளிவந்துள்ளன.
தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவனின் குடும்பத்தை பற்றி – அப்பா, அம்மா, அக்கா உள்ளிட்டவர்களைப் பற்றிய முழு விவரங்கள் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் மாணவனை தற்கொலைக்குத் தள்ளிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆசிரியரின் பெயரையோ அதற்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் சக மாணவர்களைப் பற்றியோ குறிப்பாக எதையும் முதல் பக்கத்தில் எழுதவில்லை.
இதற்கு சமூக நீதிப் பேசும் திமுகவின் தினகரனும் விதிவிலக்கு அல்ல. தினகரன் முதல் பக்கத்தில் செய்தியை தொடங்கி எட்டாவது பக்கத்தில் அதை முடித்துள்ளது. அந்த எட்டாவது பக்கத்தில் தான் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பீளமேட்டைச் சேர்ந்த விஜயகுமார் என்றும், தலைமை ஆசிரியர் அருண்குமார் என்றும் எழுதியுள்ளது. இதே அணுகுமுறையை ஏன் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு அல்லது உழைக்கும் மக்களின் குடும்ப செய்திகளுக்கு பொருத்துவதில்லை.
கொலைகாரனை பாதுகாக்கும் கயமைத்தனம்!
கொலைகாரர்கள் முரட்டு தோற்றத்துடனும், முறுக்கு மீசையுடனும், சிவந்த கண்களுடனும், கையில் பட்டாகத்தி, துப்பாக்கிடனும்தான் சுற்ற வேண்டும் என்று அவசியமில்லை. பவ்யமாக, பவிசாக, நவ நாகரிகமாக உடை அணிந்து கொண்டு, அதிராமல் மென்மையாகப் பேசி கூட கழுத்தை அறுக்க முடியும். நேரடியாக பல்லி, கரப்பான் பூச்சியை கூட நசுக்கி கொல்லாதவர்களும் – அதாவது ஒயிட் காலர்களும் கூட கொலையாளியாக மாற முடியும்.
இத்தகைய ஒயிட் காலர் கிரிமினல்களை ஊடகங்களும் காவல்துறையும் அரசும் கையாளும் விதம்தான் நம் பரிசீலனைக்கு உரியதாக உள்ளது. ஏன் அவர்களின் புகைப்படத்தை போட்டு பொதுவெளியில் பகிரங்கப்படுத்த மறுக்கிறது காவல்துறையும் தவெக அரசும்? சரி விடுங்கள்! வழக்கு தான் போடப்பட்டு விட்டது. நீதிமன்றத்தில் தண்டித்துக் கொள்ளலாம் என்று ஒதுங்கி செல்ல முடியாது. ஏனென்றால், நீதித்துறையாவது நேர்மையாக நடக்குமா என்பதிலும் சந்தேகமே எழுகிறது.
நீதிமன்றத்தின் வர்க்க சார்பு!
நீதித்துறையைப் பற்றி புரிந்து கொள்ள சமீபத்தில் தரப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
படிக்க:
♦ சாதிவெறி கொலைகாரனை கொண்டாடுவதற்கு வெட்கமாக இல்லையா?
♦ கண்ணகி – முருகேசன் கொலையாளிகளுக்கு தண்டனை! ஆதிக்க சாதிவெறிக்கு முழுமையாக முடிவு கட்டுவது எப்போது?
கடந்த 2025 ஆம் ஆண்டில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் (MTC) இளநிலைப் பொறியாளராகப் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் அவர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தனக்கு விடுப்பு வழங்க மறுத்து, “ஆப்சென்ட்” (Absent) குறித்ததுடன், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து மன உளைச்சல் ஏற்படுத்தியதாகத் தன் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் (HR Manager) மற்றும் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில் போலீஸார் தற்கொலைக்குத் தூண்டியதாக (Abetment of suicide) வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கொலையாளிக்கு ஆதரவாகவே தரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனிதவள மேலாளர் மீதான தற்கொலைக்குத் தூண்டிய (கொலை) வழக்கை ரத்து செய்து, பின்வருமாறு உத்தரவிட்டார்
‘ஒரு அதிகாரி தன் கடமையைச் செய்யும்போது, ஊழியரின் விடுப்பு விண்ணப்பத்தை நிராகரிப்பது, பணிக்கு வராதபோது ஆப்சென்ட் போடுவது அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது போன்ற வழக்கமான நிர்வாக ரீதியான செயல்பாடுகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கருத முடியாது என்று அறிவித்துவிட்டார்.
நாளை அகிலனின் தற்கொலைக்கு தள்ளப்பட்ட அகிலனின் படுகொலை வழக்கில் என்ன நடக்க வாய்ப்பு உள்ளது? பள்ளியில் யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுகிறீர்கள் என்று கருத்து கணிப்பு நடத்தியது, ஸ்காலர்ஷிப்புக்கான விவரமாக சேகரித்ததை எல்லாம் தற்கொலைக்கு தூண்டிய குற்றமாக கருத முடியாது என்று கொலையாளிகளான ஆசிரியர்களை விடுவிக்கவும் வாய்ப்புள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரத்தாழ்வாரங்களில் காவி கும்பல்கள் தான் கயிறு கட்டி ஊஞ்சலாடிக் கொண்டுள்ளனர். இந்த பலத்தில்தான் ஆதிக்க சாதி வெறியர்கள் துணிந்து தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
அதிகார வர்க்கத்தில் காவி கும்பல்!
தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவனின் தந்தை ஒரு சலவை தொழிலாளியாகவும், தாயார் தூய்மை பணியாளராகவும் வேலை செய்து வருகிறார்கள். இத்தகைய அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினரை அதிகார வர்க்கம் எப்படி நடத்தி வருகிறது என்பதை நாடே அறியும்.
படிக்க:
♦ நாங்குநேரி சின்னதுரையும், பண்ருட்டி அஜித்குமாரும் ஒரு ஒப்பீடு!
♦ மாணவன் தேவேந்திர ராஜா மீதான சாதிவெறி தாக்குதல்! அதிகரிக்கும் சாதிய வன்முறைகள் தடுக்கும் வழி என்ன?
அந்த வகையில் சிறுவனின் பிணத்தை வைத்துக்கொண்டு நீதி கேட்டு போராடும் குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் காவல்துறையினர் ஆதரவாக அணுகாமல் அச்சுறுத்துவதையே செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உறுதியாக நின்று போராடியதால் தான் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவதும், ஆசிரியரின் மீதான கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையமும் இதில் தலையிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அறிக்கை தரும்படி கோவை மாநகர கமிஷனர் ரம்யா பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியும் உள்ளது.
விஜயின் அரசாங்கத்திற்கு முரட்டு முட்டு கொடுத்து வரும் விடுதலை சிறுத்தைகள் இதில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, சாதி வெறிபிடித்த ஒயிட் காலர்களுக்கு ஒரு அச்சுறுத்தலை தரத் தவறிைொனால் கொங்கு மண்டலத்தில் இத்தகைய படுகொலைகள் தொடரவே செய்யும்.
தென் மாவட்டங்களில் முக்குலத்தோர்கள், நாடார்கள், தேவேந்திர குல வேளாளர்கள் என ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும்படியான ஒரு பகைமை வளர்த்தெடுக்கப்பட்டு விட்டது. ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக களம் ஆட முடியாத படி எண்ணிக்கை, பொருளாதார, அதிகார பலத்திலும் பலவீனமாக உள்ள சில சாதிகள் மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவினருக்கும் கீழானதாக நசுக்கப்பட்டு அடங்கி நிற்கின்றன. குமுறி வெடிப்பதற்கு காத்து கிடக்கின்றன.
கொங்கு மண்டலத்தில் அத்தகைய ஆயுத மோதல்கள் தற்போது இல்லை. ஆதிக்க சாதி வெறியர்களின் அடாவடித்தனங்களால் தற்கொலை செய்து கொள்ளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இப்படியே தங்களை மாய்த்துக் கொள்வார்கள் என்று கருதவும் கூடாது. திருப்பி அடிக்கும் துணிவை பெற்றால், துணிவை வளர்த்துக் கொண்டால், கோவையும் தென் மாவட்டத்தை போன்று கலவரக் காடாக மாறும். அதை தடுக்க வேண்டிய கடமை ஆதிக்க சாதி வெறியர்களுக்கு பாடத்தை எடுத்து பணிய வைக்க வேண்டிய கடமை சமூகநீதி பேசும் அனைவருக்கும் உள்ளது.
படிக்க:
♦ மேல்பாதி கோவிலுக்குள் சாதிவெறி!
தற்போது வழக்கில் சிக்கி உள்ளவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல; இவர்களுக்கு இத்தகைய ஆதிக்க சாதி வெறி கண்ணோட்டத்தை ஊட்டி வளர்த்த அனைவருமே கூட குற்றவாளிகள் தான். அப்படிப் பார்த்தால் கோவையில் களமாடி வரும் RSS – பாஜக கும்பலுக்கும் இந்த படுகொலையில் பங்கு இருக்கிறது. மாட்டுக்கறியை தீட்டு என்று வெறுப்பை கக்கி வரும் அனைவருக்கும் கூட மறைமுகமான பங்கு இருக்கவே செய்கிறது.
இந்த அடிப்படையில் பார்ப்பனிய வைரசால் தாக்குண்ட அனைவருக்கும் மாற்று மருந்தும், சிகிச்சையும் தேவை. அதை விஜய் அரசாங்கம் தரத் தவறினால், அமைச்சர் வன்னியரசு தலையிட்டு நீதியை நிலைநாட்ட தவறினால், பார்ப்பனியத்தை எதிர்த்து களமாடும் கட்சிகளும் இயக்கங்களும் தான் வைரஸை கொல்ல களமிறங்கியாக வேண்டும். அதி தீவிரமாக பாதிக்கப்பட்டு விட்ட சிலருக்கு தேவைப்பட்டால் தந்தை பெரியாரின் வழியில் நின்று அறுவை சிகிச்சையும் கூட செய்ய வேண்டும்.
- இளமாறன்







தவெக விஜய் ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமைகள் கொலைகள் படுகொலைகள் எட்டு தலித் அமைச்சர்கள் என பீற்றிக் கொள்ளும் இவர்கள்தான் தலித்துகள் மீதான அரசு அடக்குமுறையும் சாதிய சங்கங்களின் அடக்க முறையையும் மௌனமாக கடந்து செல்கிறார்கள் மக்கள் தான் உரக்க பேச வேண்டும் சாதியவாதத்துக்கு எதிராக அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் தீவிரமாக களமாட வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது