
கடந்த சனிக்கிழமை அன்று (அக்டோபர் 17, 2026) எட்டு லட்சம் பேர் கலந்து கொண்ட மிகப் பிரமாண்டமான போராட்டம் பிரான்ஸ் முழுவதும் பற்றி படர்ந்தது. (பிரான்ஸ் அரசின் செய்திக் குறிப்பு 5 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகிறது)
இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர். சாதாரண மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை; மைனஸ் டிகிரிக்கு செல்லும் உறைபனிக் குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள ஹீட்டர்கள் இல்லை; குளிர் பிரதேச நாடான பிரான்சில் கோடை காலத்தில் 100 டிகிரி தாண்டி செல்லும் வெப்ப நிலையில் இருந்து மாணவர்களை காக்க ஏசி வசதிகள் இல்லை; சிதலமடைந்துள்ள பள்ளிக்கட்டிடங்கள் சரி செய்யப்படவில்லை என்ற காரணங்களுக்காக மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தில் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், எரிபொருள் (பெட்ரோல், டீசல், கேஸ்) விலை ஏற்றம், விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். வெறும் 6 கோடியே 90 லட்சம் (சுமார் 7 கோடி) மக்கள் தொகை மட்டுமே கொண்ட பிரான்சில் 8 லட்சம் பேர் (1.16%) திரண்டு போராடியுள்ளனர் என்பது சாதாரண விஷயம் அல்ல.
இது இந்தியாவில், சுமார், ஒரு கோடியே 62 லட்சம் பேர் திரண்டு போராடுவதற்கு சமமான ஒரு மாபெரும் போராட்டம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களின் மீது கொடும் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட காவல்துறையினர் போராட்டக்காரர்களின் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதை எதிர்த்து போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
படிக்க: பிரிட்டன், பிரான்ஸ் முதல் ஈரான், மெக்சிகோ வரை தேர்தலில் இடதுசாரிகள் வெற்றி எனப்படும் ’கானல் நீர்’!
போராட்டத்தின் போது 143 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க லிமோஜ் (Limoges) நகராட்சி மன்ற கட்டிடத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதுமட்டுமின்றி Adidas, Apple, Louis Vuitton போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளை அடித்து உடைத்த போராட்டக்காரர்கள் ஐபோன்கள், கணினிகள், விலை உயர்ந்த காலணிகள், அழகு சாதன பொருட்கள், உடைகள் போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 95% பேர் அமைதியான முறையில் போராடியதாகவும் மீதி 5% பேர் மட்டுமே காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டதாகவும், அதிலும், சில ஆயிரம் பேர் மட்டுமே தீ வைப்பது, கடைகளை உடைப்பது மற்றும் கடைகளில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டம் நடப்பதற்கு முன்பே, சென்ற செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மோசமான பள்ளி கட்டடங்கள், ஆசிரியர் பற்றாக்குறை, அதிக மாணவர்களை கொண்ட வகுப்பறைகள் போன்றவற்றை எதிர்த்து போராட்டத்தை தொடங்கினர். இது பின்னர் பிரான்ஸ் நாடு முழுவதும் பல நகரங்களுக்கும் பரவியது.
அதேபோல செப்டம்பர் 29ஆம் தேதி அன்று பொதுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் போன்றவர்கள் ஒன்றிணைந்து பணியாளர்களின் பற்றாக்குறை, அரசின் செலவு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு எதிராக வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். இதன் தொடர்ச்சியாகத் தான் தற்பொழுது இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: அமெரிக்கா ஏற்கனவே போரில் தோற்கடிக்கப்பட்டது! பிரவீன் சாஹ்னி!
அதுமட்டுமன்றி, சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு (2018 நவம்பர் 17ஆம் தேதி அன்று) பிரான்ஸ் அரசை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்து கொண்டிருந்தனர். அந்தப் போராட்டத்தின் போது, எரிபொருள் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தையும் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், பணக்காரர்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை நீக்க வேண்டும், கிராமப்புற மக்களின் போக்குவரத்துச் செலவை குறைக்க வேண்டும் வாழ்க்கைச் செலவு உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசின் முடிவுகளில் அடித்தட்டு மக்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
2018 லேயே இப்படிப்பட்ட கோரிக்கைகளுடன் மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கி விட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் பெருமளவுக்கு உயர்ந்தன. இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருந்ததாலும் பிற பொருள்களின் விலைகள் உயர்ந்ததாலும் தங்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு பிரான்ஸ் மக்கள் வந்தனர்.
இதற்கிடையில் உக்ரைன் – ரஷ்யா போரில் உக்ரேனுக்கு ஆதரவாக 2022ல் 114 மில்லியன் யூரோக்களை பிரான்ஸ் அரசு வழங்கியது. இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் இந்தத் தொகை 588 மில்லியன் யூரோவாக உயர்ந்தது. 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் பிரான்ஸ் அரசு உக்ரேனுக்கு மொத்தம் 1646 மில்லியன் யூரோக்களை வாரி வழங்கியிருந்தது.
படிக்க: அமெரிக்க மேலாதிக்கத்துக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் ஈரான்!
ஒருபுறம் இந்தப் போரின் காரணமாக பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் அதன் காரணமாக பிற பொருட்களின் விலை ஏற்றம் என்ற ஒரு சுமை அழுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையை பிரான்ஸ் அரசு, உக்ரேனுக்கு கொடுத்துக் கொண்டிருந்ததும் பிரான்ஸ் அரசை பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடுத்த போர் காரணமாக, பிரான்சிற்கு வளைகுடா நாடுகளிலிருந்து செல்லும் எரிபொருட்களிலும் பெரும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. இது பிரான்சில் எரிந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போன்ற நிலையை ஏற்படுத்தி விட்டது.
பிரான்ஸ் நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் பொழுது அந்த நாட்டின் கடன் 119 % ஆக உள்ளது. இந்தக் கடனுக்கான வட்டி, ஓய்வூதியம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அரசின் பொதுச் சேவைகள் போன்றவற்றிற்காக ஒரு பெரும் தொகையை பிரான்ஸ் அரசு செலவு செய்ய வேண்டியுள்ளது. பெரும் முதலாளிகளின் வருமானத்தின் மீதும் சொத்துக்களின் மீதும் போடும் வரியை உயர்த்துவது, உக்ரேன் நாட்டிற்கு செய்து வரும் ராணுவ உதவிகளை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம், இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வழியை பிரான்ஸ் நாட்டு ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை.
படிக்க: இலங்கை : பொருளாதார நெருக்கடியும் விட்டுவிட்டுத் தொடரும் போராட்டங்களும்!
மாறாக, கல்வி உள்ளிட்ட பொதுநலத்திட்டங்களுக்கான அரசின் செலவை குறைப்பது, ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதன் மூலம் ஓய்வூதியம் கொடுப்பதற்கான தொகையை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசு ஈடுபடுகிறது. இதனால் புதிதாக வேலைக்கு ஆள் சேர்ப்பது கணிசமாக குறைவதால் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது.
1917 ல் ரஷ்யாவில் நடந்த சோசலிசப் புரட்சியை தொடர்ந்து தங்களது நாடுகளிலும் அப்படிப்பட்ட ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள முதலாளித்தவ அரசுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு எட்டு மணி நேர வேலை, உத்தரவாதமான – நியாயமான சம்பளம், தரமான வாழ்க்கை நிலைமை போன்றவற்றை வழங்கிட முன்வந்தன.
1990களில் ரஷ்யா உடைந்த பிறகு “கம்யூனிசம் தோற்றுவிட்டது இனி சோசலிசப் புரட்சிக்கு – பாட்டாளி வர்க்க புரட்சிக்கு வாய்ப்பே இல்லை” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த முதலாளித்துவ நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களின் மீது மீண்டும் முதலாளித்துவ சுரண்டலை தீவிரப் படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடத் துவங்கின.
படிக்க: உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்! தீர்வு கம்யூனிசம் மட்டுமே!
அதன் விளைவாக பிரான்ஸ் போன்ற முதலாளித்துவ நாடுகளில் உழைக்கும் மக்கள் மீதான சுரண்டல் அதிகரித்து விட்டன. இதன் வெளிப்பாடுதான் தற்பொழுது பிரான்சில் நடந்து கொண்டிருக்கும் போராட்டம். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று முழங்கிய ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் தொடர்ந்து முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியில் சிக்கிவருகின்றன.
அந்த வரிசையில் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கத்தை முன்வைத்து உலகத்திற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் நாடு முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், அல்பேனியா,பெல்ஜியம் போன்ற அதன் அண்டை நாடுகளிலும் மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடிகளை நிரந்தரமாக தீர்ப்பதற்கு வக்கற்ற ஏகாதிபத்திய முதலாளித்துவம் தற்காலிகமாகவேனும் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழியை தேடிக் கொண்டிருக்கிறது. தற்காலிக தீர்வுகள் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை. இந்த நெருக்கடிக்கு முடிவுகட்ட பாட்டாளி வர்க்கக் கட்சியின்கீழ் உழைக்கும் வர்க்கம் ஒன்றிணைந்து சோசலிசப் புரட்சியைச் சாதிப்பதே உண்மையான தீர்வாக அமையும்.
– குமரன்







எளிய நடையில் சிறப்பான தொகுப்பு