டசென்னையின் எண்ணூரை சுற்றியுள்ள பகுதிகளில் டிசம்பர் 4 இல் வீசிய மிக்ஜாம் புயலின்போது CPCL நிறுவனம் வெளியேற்றிய  எண்ணைக் கழிவே முழுமையாக அகற்றப்படவில்லை. நிலத்தில் கச்சா எண்ணை கழிவு ஊற்றெடுக்கிறது.

இந்நிலையில் டிசம்பர் 26 நள்ளிரவில் அம்மோனியம் வாயு கசிவு ஏற்பட்டு கடலில் மீன்கள் உட்பட அனைத்தும் செத்து மிதக்கின்றன. எண்ணூர் பகுதியிலுள்ள மக்கள் மூச்சுத்திணறி, தொண்டை வலியெடுத்து மயங்கி சரிந்துள்ளனர். அவர்களில் 66 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடுகின்றனர்.

வடசென்னையும் ரெட் அலெர்ட்டும்!

மனிதர்கள் வாழ முடியாத அளவு காற்று விசமாக்கப்பட்டுள்ள பகுதியாக வடசென்னையின் திருவொற்றியூர், மணலி உள்ளிட்டவை மாறிவிட்டுள்ளது. தற்போது ஆறுகளின் கழிமுகங்களும், நிலத்தடி நீரும், கடலோர பகுதிகளும்கூட விசமாக்கப்பட்டு விட்டது.

காற்று மாசானது நுரையீரலை கெடுத்து, தோல் பாதிப்பை கொண்டுவந்து, கண்ணை காயப்படுத்தி வதைக்கிறதென்றால் தற்போது எண்ணைக்கழிவும் சேர்த்து நம் உடல்நலத்துக்கு சவால் விடுகிறது. அந்த வரிசையில் எண்ணூரில் கசிந்துள்ள அம்மோனியம் வாயு அச்சுறுத்துகிறது. வடசென்னையில் மணலி மட்டுமல்ல; எண்ணூரும் சிகப்பு எச்சரிக்கை பட்டியலுக்குள் வந்துவிட்டது.

தொடரும் அலட்சியம்!

புயலடித்து ஓய்ந்தவுடன் ஒவ்வொரு ஆலையும்  தமது ஆலையில் ஏற்பட்டுள்ள பழுதை கண்டறிந்து சரிசெய்த பின்னரே உற்பத்தியை தொடங்க வேண்டும். ஆனால் இந்த விதியெல்லாம் ஆபத்தான அம்மோனியத்தை கையாளும் முருகப்பா குழுமத்தின் கோரமண்டல் ஆலைக்கு மட்டும் பொருந்தாது போலுள்ளது. கப்பலில் கொண்டு வரப்படும் திரவ அம்மோனியத்தை கடலில் பதிக்கப்பட்ட குழாய் மூலம் கரையிலுள்ள தனது ஆலைக்கு வழக்கம்போல் கொண்டு வந்துள்ளது.


இதையும் படிக்க:

 எண்ணூர் மீனவர்களின் வாழ்வை அழித்த எண்ணெய் நிறுவனங்கள்!

10 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. எண்ணெய் கழிவால் வாழ்விழந்து நிற்கும் மீனவர்கள்!


இந்த குழாயில் டிசம்பர் 26ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கடலுக்கடியில் குழாயில் கசிவு ஏற்பட்டு கடல்நீரில் அம்மோனியம் கலந்து கொந்தளித்து கடலின் நிறம் வெண்மையாகி விட்டுள்ளது. இது கடல்வாழ் உயிர்களை கொன்றுள்ளது.

இப்படிப்பட்ட அம்மோனியம் காற்றிலும் பரவி மேற்கு நோக்கி வந்ததில் சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் கடும் நெடியுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய வணக்கத்துக்கு முதலில் கண்கெடவேண்டும் !

பெரிய குப்பம் மீனவர் கிராமத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த மீனவ மக்கள் சுவாசிக்க முடியாமல்,மூச்சுவிட முடியாமல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர். ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்த மக்களும் பயந்து நள்ளிரவில் ஊரை விட்டு வெளியேறி 8 முதல் 10 கி.மீ. தொலைவு தாண்டி சமுதாயக் கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர்.  திருவொற்றியூர் முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரை உள்ள கிராம மக்கள் அனைவரும் தெருக்களில் மாஸ்க் அணிந்தவாறு அச்சத்துடன் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளனர் என நடந்துள்ள துயரத்தை பூவுலகின் நண்பர்கள் முகநூல் பக்கம் விவரிக்கிறது.

அதிகாலையிலேயே தொழிற்சாலையை ஆய்வு செய்து கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது. ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 இருக்க வேண்டிய அமோனியா 2090 microgram/m3  இருந்தது. கடலில்  5 mg/L இருக்க வேண்டிய அமோனியா 49 mg/L  இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இனி இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசோ ஆலையை தற்காலிகமாக மூடியுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் விழிக்க வேண்டுமென்றால் நம் மக்கள்தான் கொத்துகொத்தாக சாகவேண்டும்.

IOC பாய்லர் வெடிப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CPCL மட்டுமல்லாது, இந்தியன் ஆயில் கார்ப்பரேசனும் வட சென்னையில் உள்ளது. இன்று தண்டையார் பேட்டையில் உள்ள IOC எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிலாளர்கள் படுகாயமைடைந்துள்ளனர். அவர்களில் பெருமாள் உயிரிழந்துள்ளார்; இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

பொதுத்துறை, கார்ப்பரேட் நிறுவனங்களின் கிரிமினல் குற்றத்துக்கு இணையான பொறுப்பின்மையும், அதனால் அழிவுக்குள்ளாகும் மக்களின் வாழ்வதாரமும் சந்தேகத்தையே கிளப்புகிறது. தொடரும் அரசுத்துறைகளின் அலட்சியத்துக்கு பின் இப்பகுதி மக்களை கூண்டோடு விரட்டும் நோக்கம் இருக்கிறது என்ற கருத்தும் பரவியே வருகிறது. அதானியின் துறைமுக விரிவாக்கத்துக்கு, எதிர்கால கார்ப்பரேட் நல திட்டத்துக்கான முன் தாயாரிப்பாகவும் இவை இருக்கக்கூடும்.

 

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here