
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதானி லஞ்ச விவகாரம், சம்பல் கலவரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க மறுத்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது பாசிச பாஜக.
இந்த நேரத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை நிறைவேற்ற தொடர்புடைய 2 மசோதாக்களை இந்த குளிக்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்தியா ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து தரகு முதலாளிகளிடம் கைமாறிய பிறகு 1951 முதல் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. 1951 முதல் 1967 ஆம் ஆண்டு வரை அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வந்தது.
அதன் பின்பு மாநிலத்திலோ அல்லது மத்தியிலோ பதவிக்காலம் முடியும் முன்பே பல்வேறு காரணங்களால் அரசு கவிழ்ந்தன. அதாவது குறிப்பிட்ட ஐந்து ஆண்டு பதவி காலம் முடியும் முன்பு ஆட்சிக் கவிழ்ந்ததால் ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போயின.
2014க்குப் பிறகு அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக மூன்று விதமான தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் செலவு குறையும் நிர்வாகம் மேம்படும் என்பது தான். அது உண்மையான காரணம் இல்லை. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்த எதிர்ப்புகளை சிறிதும் கண்டுகொள்ளாத பாசிச பாஜக 2018 ஆம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் மூலம் அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்க தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முன்னாள் குடியரசு தலைவரும் தீவிர ஆர் எஸ் எஸ் அனுதாபியுமான ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை கடந்த ஆண்டு அமைத்தது.
இக்குழுவானது 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மார்ச் மாதம் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கியது. அதில் 2029 ஆம் ஆண்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த ஏற்ற வகையில் சட்டப்பேரவைகளின் பதவி காலத்தை மாற்றி அமைக்க அரசியலமைப்பு சட்டத்தில் 18 திருத்தங்கள் மற்றும் உட்பிரிவுகளைக் கொண்டு வர பரிந்துரை செய்திருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட ஒன்றிய அரசு 3 சட்டதிருத்த மசோதாக்களை கொண்டு வர திட்டமிட்டது.
படிக்க: ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் முன்னே! ஒரே கட்சி ஒரே அதிபர் வரும் பின்னே!
இதன் பின்பு கூடிய ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவது உட்பட இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட திட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பலம் ஒன்றிய அரசுக்கு தேவை. 2019ல் நாடாளுமன்றத்தில் இருந்த அசுர பெரும்பான்மை பலம் தற்போது பாசிச பாஜகவிற்கு இல்லை. மக்களவையில் மொத்தம் 543 எம்பிக்களில் 361 உறுப்பினர்களின் ஆதரவு தேவை ஆனால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களே உள்ளனர் என்பதால் சட்ட திருத்த மசோதா சட்டமாக வாய்ப்பு குறைவு. எதிர்க்கட்சிகளின் ஆதரவும் தேவை என்பதால் நிறைவேறாது என தெரிந்தும் தாக்கல் செய்யப் போகிறார்கள்.
தற்போதைய குளிர்கால கூட்டத்தொடரில் அதானி, சம்பல், மணிப்பூர் பிரச்சனைகளை விவாதிக்க துப்பில்லாமல் கூட்டத்தொடரை முடக்கி வரும் பாசிச பாஜக இந்த பிரச்சனையை மடை மாற்றுவதற்காக இந்த மசோதாவை தாக்கல் செய்ய முனைகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவாத பொருளாக்கிவிட்டு அதானி லஞ்ச விவகாரங்களை ஊற்றி மூட பார்க்கின்றது.
மற்றொரு புறம் பார்த்தால் மாநில அரசுகளின் சுயாட்சி உரிமை பறிக்கப்பட்டு, ஒட்டுமொத்த அதிகாரமும் மைய அரசுகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவர ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை பாஜகவுக்கு பயனளிக்கலாம். ஏற்கனவே மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒன்றிய அரசிடம் பறிகொடுத்துவிட்டு நிதிக்காக கையேந்தி நிற்க வேண்டிய சூழல் உள்ளது. ஜிஎஸ்டி வரியில் மாநிலத்தின் பங்கை ஒப்படைக்காத நிலையும் தொடர்கிறது.
படிக்க: “ஒரே நாடு ஒரே தேர்தல்” நூல்விட்டுப் பார்க்கும் மோடி அரசு!
இந்த சூழலில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அதிகாரத்தின் குவி மையமாக ஒன்றிய அரசு இருக்கும். மாநில அரசுகளுக்கு இருக்கும் குறைந்தபட்ச சுயேச்சை தன்மையை இழந்து விட்டு டம்மி அரசாக செயல்பட வேண்டிய நிலை ஏற்படலாம். இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களின் தனித்தன்மையை அகற்றுவதற்கான அரசியல் வழியாகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாசிச மோடி அரசு அமல்படுத்துவதற்கு வேறு சில முக்கியமான காரணங்களும் உண்டு.
ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்களின் கனிமவள கொள்ளைக்கும், கட்டற்ற சுரண்டலுக்கும் மாநில அரசுகள் ஒரு வகையில் தடையாக இருக்கிறது. முதலாளிகளின் லாப வெறிக்காக கொண்டுவரப்படும் நாசகர நச்சு ஆலைகளையும், விவசாய நிலங்களை அழித்து போடப்படும் கார்ப்பரேட் நலத்திட்டங்களையும் எதிர்த்து போராடும் மக்கள் மாநில அரசுகளுக்கு நிர்ப்பந்தங்களை கொடுத்து தடுத்து நிறுத்துகிறார்கள்.
இதனால் மோடியின் முதலாளிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. நாடு முழுவதும் ஒரே ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையையும் சுரண்டலையும் எந்தவித தங்கும் தங்கு தடையின்றி அமல்படுத்தலாம்.
மேலும் சட்டமன்றத் தேர்தலுக்கும் அதாவது மாநிலத்தில் நடக்கக்கூடிய தேர்தலுக்கும் மத்தியில் நடக்கக்கூடிய தேர்தலுக்கும் மக்கள் வாக்களிப்பதில் வேறுபாட்டை கடைபிடிக்கிறார்கள். சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய கட்சிகளே பெரும்பாலும் வெற்றி பெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜகவோ அல்லது காங்கிரஸோ மாநில கட்சியாக செல்வாக்கு உள்ள பகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிகிறது.
இதனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் மத்தியில் யார் வருவது என்ற பரபரப்பு பெரிதாக இருக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ள சூழலில் அது மாநிலத்திலும் பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
அதற்கான காரணங்கள் சிலவற்றை பார்க்கலாம். மாநிலத்தில் நடைபெறும் தேர்தல்களில் பெரும்பாலும் பாஜகவால் மதவெறி விவாதத்தையோ அல்லது தேசிய வெறியையோ கிளப்ப முடியாது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் புல்வாமா தாக்குதலை மையப்படுத்தி தேசிய வெறியூட்டப்பட்ட பிரச்சாரங்கள் நடந்ததன் விளைவு பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் 2024 தேர்தலில் தேசிய வெறியை உருவாக்கவில்லை என்றாலும் தீவிரமான மதவெறுப்பு பிரச்சாரங்களை பாஜக தூண்டிவிட்டது. வேலையின்மை, வறுமை உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் மதவெறி பிரச்சாரத்தின் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது பாசிச பாஜக.
தனித்தனியாக மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் போது மாநில கட்சிகள் கொடுக்கும் கவர்ச்சிகர திட்டங்களுக்கு இணையாக வாக்குறுதிகளை அளிக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்படுகிறது. மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் போது ஒன்றிய ஆட்சியிலும் கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோத சட்டங்களை கொண்டுவருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற தடைகளை ஒழித்துகட்டுவது பாசிச பாஜக வரைமுறையற்ற வகையில் கார்ப்பரேட் சேவை செய்ய தேவைப்படுகிறது. சுருக்கமாக கூறுவதெனில் நாட்டின் செல்வத்தை ஒரிடத்தில் (கார்ப்பரேட்டுகளிடம்) குவிக்க அதிகாரத்தை ஒன்றியத்தில் குவிப்பது அவசியமாகிறது. அதை நோக்கிய பாசிச பாஜகவின் முக்கிய படியே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஏதோ தேர்தல் கட்சிகளின் பிரச்சினை அல்ல, அரசதிகாரம் முழுவதும் ஒன்றியத்தில் குவிக்கப்படுவதன் மூலம் உழைக்கும் மக்கள் இதுகாறும் போராடி பெற்ற உரிமைகளைப் பறிப்பதற்கான சதி. இதனை முறியடிப்பது எதிர்கட்சிகளுக்கு மட்டுமேயான பணி அல்ல; போராடி பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது இந்திய மக்களாகிய நமது கடமையாகும்.
நலன்