சாதிய வன்கொடுமைக்கு உள்ளாகி, பலியான மாணவன் அகிலனின் உடலை வாங்க மறுத்து ஐந்து நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், நேற்று 26 ஆம் தேதி அகிலனின் பெற்றோரிடம் பேசி ஒரு சமரசத்திற்கு வரவைத்து போராட்டம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் சிபிஎம் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பெ. சண்முகம் தலையிட்டு முக்கிய பங்காற்றியுள்ளார். இன்று அக்டோபர் 27ஆம் தேதி மாணவன் அகிலனின் பெற்றோர்கள் அகிலனின் உடலைப் பெற்று அடக்கம் செய்துள்ளனர்.
நாயுடு ஆதிக்க சாதிவெறியை நேரடியாக சொல்வதில் என்ன பிரச்சினை?
ஒரு மாணவனின் உயிரையே பறித்துள்ள ஒரு ஆதிக்க சாதி வெறியின் பெயரை குறிப்பிட்டு அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தி, தாக்குவதற்கு கூடவா திராணியற்றுப் போய்விட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை? அவர் கொடுத்த பேட்டியிலோ, ஆர்ப்பாட்ட உரையிலோ அப்படி குறிப்பிடாமல் பொதுவாக பேசிச் செல்கிறார்.
நேற்று வரை திருமுருகன் காந்தி, நாகை திருவள்ளுவன், வெண்மணி, அதியமான் போன்றவர்கள்தான் போராட்டத்தில் தொடர்ந்து முன்நின்று வந்தனர். கோவை மாவட்ட சிபிஎம் கட்சியினரும் களத்தில் இருந்துள்ளனர். களத்தில் போராடியவர்கள் “பள்ளியின் பெயரிலேயே சாதி எதற்கு? – நீக்கு“ கேகே நாயுடு பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்! பள்ளியை அரசே ஏற்று நடத்து என்று கோரிக்கைகளையே முன்வைத்தனர்.
பள்ளி நிர்வாகத்திற்கு துணையாக கம்மவார் நாயுடு சங்கத்தினர் அணிவகுகின்றனர். அதற்கு வகை மாதிரியாக விவேகானந்தன் பழனிச்சாமி பேசியதை அம்பலப்படுத்தி ஏற்கனவே மக்கள் அதிகாரம் இணையதளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டும் உள்ளது. நாயுடு பள்ளியின் ஆசிரியர்கள் சாதிய மனோபாவத்துடன் நிற்கின்றனர். நாயுடு பள்ளியின் நிர்வாகமும் ஆதிக்க சாதித் திமிருடனே அணுகுகிறது.
கம்மவார் நாயுடு பெரும்புள்ளிகளும் பள்ளி நிர்வாகத்தை காப்பாற்ற, “அர்பன் நக்சல்”களுக்கு எதிராக ஒன்றிணைய, பிற சாதிய அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும் அறைகூவல் விடுத்து வருகின்றனர். இந்துவுக்காக பொங்கும் பாஜக சங்கிகளோ, கோவையின் வானதி சீனிவாசனோ இப்பிரச்சினையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அர்ஜுன் சம்பத் ஆளையே காணோம்.
படிக்க: பள்ளி மாணவன் தற்கொலை : கோவையின் வெள்ளைக்காலர் கொலையாளிகள்!
இப்படி தெளிவாகவே ஆதிக்க சாதி வெறியர்களும், இவர்களுக்கு பின்னால் பார்ப்பனிய சக்திகளும் அணிவகுத்து நிற்கும் போது, தோழர் சண்முகத்திற்கு மட்டும் இப்பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு பின்னால் சாதி இருப்பதாக தெரியவில்லை அல்லது அதை பேசாமல் தவிர்க்கிறார்.
நடப்பது கட்டைப் பஞ்சாயத்தா?
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் மகனை இழந்த துயரிலும் கூட ஆதிக்க சாதி வெறியர்களை எதிர்த்து தொடர்ந்து களப்போராட்டம் நடத்தி வருவது என்பது அசாதாரணமானது. அக்குடும்பத்தின் துணிவிற்கு அடிப்படையாக இருப்பது நீதிக்காக களமாடும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவுதான்.
தோழர் சண்முகத்துடன் ஆதவ் அர்ஜுனா போனில் பேசினாராம். பிரச்சினையை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றும், தேவைப்பட்டால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு விடலாம் என்றும் கூட கூறினாராம். அதன்படிதான் காம்ரேடு சண்முகம் நேற்று கோவையில் சமாதானம் பேசி முடித்துள்ளாராம். இதை தோழர் சண்முகமே மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இங்கே நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. அநியாயமாக ஒரு பள்ளி மாணவனை மன உளைச்சலுக்கு தள்ளி, வன்கொடுமையை ஏவி, தற்கொலை வரை தள்ளியுள்ள கிரிமினல்களை சிறையில் அடைக்க வேண்டும். முதல் கட்டமாக அருண்குமார், விஜயகுமார் என்ற இரு ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்பதுதான் மாணவனை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் முதன்மையான கோரிக்கையாக இருந்து வந்துள்ளது. மகனை இழந்து தாம் தவிப்பதை போல் வேறு எந்த பெற்றோருக்கும் இந்த நிலை வந்து விடக்கூடாது என்பதுதான் அவர்களின் போராட்ட நோக்கமாகவும் இருந்துள்ளது.
இந்தக் கோரிக்கையை கைவிட்டு சிபிசிஐடி விசாரணை என்பதை நம்பி பெற்றோர்களை போராட்டத்தில் இருந்து பின்வாங்க செய்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவிடம் “முதலில் உங்கள் போலீசை ஏவி ஆசிரியரையும், தலைமை ஆசிரியரையும், பள்ளி நிர்வாகியையும் கைது செய்யுங்கள்” என்று கறாராக சொல்லி இருக்க வேண்டும். இப்படி கேட்பதற்கு தோழர் சண்முகத்தை எது தடுத்தது?
நாயுடு பள்ளி நிர்வாகிகள் தரப்பு தவெக அமைச்சரை சந்தித்து பெரிய தொகையை கைமாற்றி சுமூகமாக முடித்துக் கொடுக்கும்படி டீல் பேசியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. விஜய் அரசு காசுக்கு விலை போய் உள்ளது அல்லது எஜமான் பாஜகவின் கண்ணசைவிற்கு கட்டுப்பட்டு நிற்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
படிக்க: ஆதிக்க சாதிவெறி சங்கங்கள், அதை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை தடை செய்!
தோழர் சண்முகம் ஏன் பாதிக்கப்பட்டு நீதி கேட்டு நிற்கும் குடும்பத்தின் ஒற்றை கோரிக்கையை புறந்தள்ளி விட்டு, “6 லட்சம் ரூபாய் தருகிறார்கள்; அக்கா நேத்ராவுக்கு அரசு வேலை தருகிறார்கள்” என்று ஏன் சமரசப்படுத்த பார்க்கிறார்? இதுவாவது கிடைத்தது என்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளும்படி வழி நடத்தினார்? போன்ற கேள்விகள் விடையில்லாமல் நிற்கின்றன.
மாணவனின் உடலை வாங்காமல் நடத்தி வந்த போராட்டத்தால் தான் கோவையின் நாயுடு சாதி வெறியும் தவெக அரசின் யோக்கியதையும் ஓரளவு அம்பலமாகியுள்ளது. குறைந்தபட்சம் கொலை குற்றவாளிகளை கைது செய்ய வைத்திருந்தால் இன்னும் ஒரு படி முன்னேற்றத்தை பார்த்திருக்க முடியும். அகிலன் மரணத்துக்கு நீதி கேட்கும் போராட்டம் விடாப்பிடியாக நீள்வதை தோழர் சண்முகமும் அவருடன் ஒத்துழைத்தவர்களும் தடுத்து விஜய் அரசாங்கத்தையும் நாயுடு சாதி வெறியர்களையும் காப்பாற்றிவிட்டனர் என்பதே எதார்த்தம்.
தேவைப்படுவது நீதி – நிதி மட்டுமல்ல!
ஒருதலைப் பட்சமாக கட்டப்பஞ்சாயத்து பாணியில் பிரச்சனையை தீர்ப்பது எவ்விதத்திலும் நீதியாகாது. காவல்துறை எப்படி அரசுக்கு கட்டுப்பட்டு ஏவல் துறையாக நிற்கிறதோ, அதில் ஒரு பிரிவுதான் சிபிசிஐடி என்பதும். எனவே அது மட்டுமே சரியாக மோப்பம் பிடித்து கொலைக் குற்றவாளிகளின் கெண்டைக்கால் சதையை கவ்வும் என்று நம்புவதற்கும் அடிப்படை ஏதுமில்லை. பணக்கட்டுகள் அமைச்சருக்கு பாய்ந்திருந்தால் அது கண்டிப்பாக காவல்துறைக்கும் பொசிந்திருக்கும். மேலும் அதன் உட்பிரிவுகளுக்கும் பொசியும். சிபிசிஐடி விசாரணை கிடைத்தது வெற்றியாகிவிடாது.
எனவே இழப்பீட்டு பணத்தையும், அரசு வேலையையும் ஒரு நிவாரணம் என்ற வகையில் மட்டும் ஏற்கலாம். அதே நேரம் நீதி கிடைக்கப்பெறவில்லை; குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை;சிறைக்கு அனுப்பப்படவுமில்லை.; இனிமேலும் அகிலன்களின் மரணம் நடக்காது என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் தரப்படவில்லை.
எனவே போராட்ட களம் அகிலன்களின் சக மாணவர்களின் வரவுக்காகவும் அகிலன்களை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் வரவுக்காகவும் காத்துக் கிடக்கிறது. ஆதிக்க சாதி வெறியர்களின், கம்மவார் நாயுடுகளின், சாதி வெறியை தூண்டி ஆதாயம் தேடும் காவி பாசிஸ்டுகளின் திமிரை அடக்காமல், தக்க பாடத்தை கற்பிக்காமல், அகிலன்கள் பலியாவதை நம்மால் தடுக்க முடியாது.
இளமாறன்







