விஸ்வகுரு மோடியின் ஆட்சிக்காலத்தில் அதாவது 2014 முதல் 2023 வரை 13,75,000-க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளுக்கு படிப்புக்காகவும் , வேலை தேடியும் சென்று செட்டில் ஆனவர்கள்தான். இவர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு சாதாரண கூலிவேலைகளுக்குச் சென்றுள்ள உடலுழைப்புத் தொழிலாளிகள் அல்லர்.
மோடி பிரதமராவதற்கு முன் தான் ஆட்சிக்குவந்தால் எப்படி அமெரிக்கா விசா பெறுவதற்கு இந்தியர்கள் அமெரிக்கா தூதரகத்தின்முன் தவம் கிடக்கிறார்களோ அதேபோல பிறநாட்டவர்கள் இந்திய தூதரகத்தின் முன் காத்திருப்பார்கள் என்று நீட்டி முழங்கினார். ஆனால் அப்படியொரு காட்சியை உலகத்தில் எங்குமே காணகிடைக்கவில்லை என்றுதான் இதுவரை வந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
‘வெளிநாடுவாழ் இந்தியர்கள்’ யார்?
“வெளிநாடுவாழ் இந்தியர்கள்” (Non-Residential Indians -NRI) என்ற பதமே தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி ஏற்பட்டு பார்ப்பன அம்பிகள் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கத் தொடங்கியதும்தான். இவர்களுக்காகவே ஒன்றியத்தில் ஒரு துறை உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல் எல்லா வங்கிகளிலும் அவர்களுக்காகவே தனியாக வங்கிக்கணக்குகளும், முதலீடுகளில், வங்கி சேவைகளிலும் பல்வேறு சலுகைகள் தரப்பட்டன. ஆனால் இந்தப் பார்ப்பன கும்பலுக்கு முன்னரேயே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்காசிய நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் உடலுழைப்பு வேலைகளுக்காகச் சென்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு என்று NRI அந்தஸ்தும், சலுகைகளும், மரியாதையும் தரப்படவில்லை.
இந்திய குடியுரிமையைத் துறந்துள்ள பார்ப்பனர்களும், வடநாட்டு பனியாக்களும் அடங்கிய இந்தக் கூட்டம் தான் என்பதும் இந்தக்கூட்டம்தான் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது அந்தந்த நாடுகளில் இந்தியக்கொடியுடன் ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் முண்டியடிப்பதும், மோடியின் அமெரிக்கப் பயணங்களின்போதும், “ஹவ்டி மோடி” போன்ற நிகழ்ச்சிகளில் மைதானங்களில் நிரம்பிவழிவதும். இந்தியாவில் மோடியின் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக தங்கள் விசைப்பலகையில் தட்டி சமூக ஊடகங்களில் பறக்கவிடுவதும் என்னாவொரு நகைமுரண்.
படிக்க: இந்திய தொழிலாளர்கள் விற்பனைக்கு!
அப்படி தேனாறும் பாலாறும் ஓடும் இந்தியாவிற்குத்தானே இக்கும்பல் எல்லாவற்றையும் துறந்துவிட்டு வரவேண்டும். ஆனால் வெளிநாடுகளில் பல லட்சங்களில் சம்பளம், வேலைவாய்ப்பு, மேம்பட்ட வாழ்க்கைமுறை ஆகியவற்றை விட்டுவிடமனமின்றி தாய்நாட்டை விட்டுவிடும் இவர்கள்தான் நமக்கு தேசபக்தி பாடம் எடுக்கிறார்கள். இந்துத்துவ நிகழ்ச்சிநிரலான இந்து ராஷ்டிராவை இந்தியாவில் அமைக்க முன்னெடுக்கும் உலக பயங்கரவாத அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்-க்கு பெருமளவில் பணம் அனுப்பும் புரவலர்களாக இருப்பதும் இந்த கும்பல்தான்.
இது ஒருபுறம் என்றால் மறுபுறம் கள்ளத்தனமாக அமெரிக்கா, கனடாவுக்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 90000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாக புள்ளிவிபரம் உள்ளது. இது அமெரிக்காவின் அண்டைநாடான மெக்சிகோ நாட்டினருக்கு அடுத்ததாகும் . ஒவ்வொரு ஒருமணிநேரத்துக்கும் 5000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதாகவும், இந்த ஆண்டில் மட்டும் ஒரு மாதத்துக்கு சுமாராக 18000 வரையிலான இந்தியர்கள் அந்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதானி, அம்பானி உள்ளிட்ட ஒருசிலருக்காகவே நடத்தப்படும் விஸ்வகுருவின் ஆட்சியில் அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், வேலை வாய்ப்பின்மை, கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடி, வரிச்சலுகைக்காக சாதாரண மக்கள் மீது நடத்தப்படும் கொடூர சுரண்டலில் இருந்து தப்பிக்கவும், வெளிநாடுகளில் பிச்சை எடுத்தாவது வாழ்ந்து விடலாம் என்ற அற்ப நம்பிக்கையுமே இவ்வாறு சட்டவிரோதமாக அந்நாடுகளில் குடியேற வைக்கிறது. அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, பட்டினி, வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச குறியீடுகளில் இந்தியா தொடர்ந்து பின்தங்கிவருவதும் மோடி தலைமையிலான பாசிச கும்பல் இந்தியாவை வாழத்தகுதியற்ற நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதையும்தான் மேற்கண்ட இப்புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபரங்களை இருட்டடிப்பு செய்யும் கோடிமீடியாக்களையும், இந்தியக் குடியுரிமையைத் துறந்துவிட்டு தேசபக்தி பாடம் எடுக்கும் வெளிநாடுவாழ் பார்ப்பன-பனியா கும்பலையும் அம்பலப்படுத்துவோம். கார்ப்பரேட்-காவி பாசிசத்தின் பிடியிலிருந்து இந்தியாவை மீட்டெடுப்போம்.
- ஜூலியஸ்