
நாட்டில் உள்ள கனிம வளங்களை அமெரிக்கா தாராளமாக வெட்டியெடுத்துக் கொள்வதற்கான பொருளாதார ஒப்பந்தத்தை இறுதி நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக உக்ரேன் அறிவித்துள்ளது. உக்ரேனுக்கு சாவை பரிசளித்தே அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை தட்டி பறித்துள்ளது. தற்போதும் தன்னிடம் ஆயுதத்துக்காக கையேந்த வைத்துள்ளது.
ஆயுத உதவிக்கு கையேந்தும் ஜெலன்ஸ்கி !
உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஜெலன்ஸ்கி தன் நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களுக்காக அமெரிக்காவிடம் கையேந்த வில்லை . தன் நாட்டு மக்களை வளப்படுத்தக்கூடிய ஒப்பந்தங்களுக்காகவும் அவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் இறங்கவில்லை.
மாறாக, அமெரிக்கா தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும்; ஆயுதங்களை தொடர்ந்து தமக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று தான் வலியுறுத்தி வருகிறார்.
பாதுகாப்பும் ஆயுதங்களுமே முதன்மை பிரச்சனையானது ஏன் ?
அமெரிக்க வல்லரசிற்கு ரஷ்யாவை மிரட்டல் விடுக்க உக்ரேன் போன்ற நாடுகளை NATO வின் கீழ் இணைப்பது அவசியமாக இருந்தது.
அமெரிக்க எஜமானனின் உத்தரவுக்கு இணங்கவே உக்கிரேன் ரஷ்யாவுடன் வம்புக்குச் சென்றது. 2022 பிப்ரவரியில் ரஷ்யா போரை அறிவிக்கும் படி சீண்டியதன் மூலம் அழிவுக்கான போரிலும் குதித்தது. அன்று போரை தூண்டி விட்ட அமெரிக்க எஜமானனே தற்போது காரியத்தை சாதித்துக் கொண்டு உக்ரேனை கை கழுவி விட பார்க்கிறான்.
இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் நடந்து வரும் உக்ரேன் – ரஷ்யப் போரை நடத்த துணை நின்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனைத் தொடர்ந்து அடுத்த அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின் காட்சியும் மாறுகிறது.
தனது பரம எதிரியாக வகைப்படுத்தி உள்ள ரஷ்யாவுடனையே ‘நட்புறவு பாராட்டவும்’ அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார். இது உக்ரேனின் அடிவயிற்றில் ஈட்டியை சொருகியதற்கு ஒப்பானதாகும்.
படிக்க:
🔰 பாசிஸ்டின் நண்பர் அமெரிக்காவில் மீண்டும் அதிபர்!
🔰 அமெரிக்காவின் பதிலிப் போர் உத்தி! ரஷ்யாவுக்கு உக்ரைன்; சீனாவுக்கு தைவான்!
அமெரிக்காவுக்கோ உக்ரேனை ஆதரித்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆனால், புலி வாலை பிடித்த கதையாக உக்ரேன் இன்று ரஷ்யாவை எதிர்த்து களத்தில் நின்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. எனவே அமெரிக்காவில் வருகின்ற
பிப்ரவரி 28 இல் ட்ரம்ப்பை சந்திக்க இருக்கும் ஜெலன்ஸ்கி எதை நிபந்தனியாக வைத்தாக வேண்டும்?
அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் ஆயுத தளவாட உதவியை கட்டாயமாக கேட்டுப் பெற்றாக வேண்டும். இதற்காக அமெரிக்காவின் ஆயுத தளவாட சப்ளையை கெஞ்சி கேட்கும் அளவிற்கும், தனது கனிம வளங்களை எதிர்ப்பே காட்டாமல் தாராளமாக தாரை வார்க்கும் நிலைக்கும் தாழ்ந்து செல்கிறது ஜெலன்ஸ்கியின் அரசு.
நாயுடன் படுத்தவன் உண்ணியுடன்தான் எழ முடியும்!
உலக மேலாதிக்க வெறிபிடித்தலையும் ஏகாதிபத்தியங்களின் கரத்தை யாரெல்லாம் பற்றுகிறார்களோ அவர்களுக்கு கேடு தான் வந்து சேரும். வல்லரசுகள் தனது தேவைக்கேற்பவே பிற நாடுகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி உருட்டும். இதை உலக வரலாறு பல முறை நிரூபித்து வந்துள்ளது.
இப்போது உக்ரேனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துவிட்டது. இதன் மூலம் ஆண்டு கணக்கில் நடந்து வரும் போரே உக்ரேனை பொறுத்தவரையில் அர்த்தமற்றதாக மாற்றப்பட்டுவிட்டது.
ஆனால் அமெரிக்காவிற்கோ கொழுத்த ஆயுத விற்பனை நடந்துள்ளது. இது அந்நாட்டை பெரும் கடன் சுமையில் தள்ளியுள்ளது. போர் பொருளாதாரத்தை தூண்டிவிட்டு சம்பாதித்துள்ள பல லட்சம் கோடி டாலர்களுக்கும் மேலாக உக்ரேனின் கனிம சுரங்கங்களையும் தனது கைப்பிடிக்குள் கொண்டு வந்து விட்டுள்ளது அமெரிக்கா. இதிலிருந்து ஜெலன்ஸ்க்கி பாடம் கற்றுக் கொள்கிறாரோ இல்லையோ உக்ரேன் நாட்டு மக்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

கிரீமியாவை ஆக்கிரமித்த ரஷ்யா எப்படி தனது நலனுக்கு எதிராக நிற்கிறதோ; அதேபோல் போரை தூண்டிவிட்டு, ஆயுத உதவியும் செய்து, இதுவரை துணை நின்று தற்போது கை கழுவியுள்ள அமெரிக்காவும் உக்ரேனை ஆக்கிரமிக்கவே விரும்பியுள்ளது. ஒருவன் நேரடி ஆக்கிரமிப்பாளன் என்றால் மற்றொருவன் மறைமுகமாக அடிமைப்படுத்துபவன்.
எதிரியை கூட மதிக்கலாம். ஆனால் துரோகியை…? வரலாறு தீர்ப்பெழுதட்டும். அமெரிக்காவால் திணிக்கப்பட்ட போரால் தாம் இழந்தவற்றுக்கும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் தாம் அனுபவித்தவற்றிற்கும் மும்மடங்காக உக்ரேன் மக்கள் வல்லரசுகளுடன் கணக்கு தீர்க்கட்டும். உலக மக்கள், உழைக்கும் மக்கள் உக்ரைன் மக்களுக்கு துணை நிற்போம்.
இளமாறன்.