
இந்தியாவில் செயல்படுகின்ற வங்கிகளில் மூன்று வங்கிகள் தான் பாதுகாப்பானது என்று இந்தியாவின் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கார்ப்பரேட் காவி பாசிசம் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பயங்கரவாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக பொதுத்துறை மற்றும் தனியார் அடங்கிய வங்கித் துறைகளின் சேமிப்பு தொகை சுமார் 290 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கொண்ட மிகப்பெரும் தொகையானது கார்ப்பரேட்டுகளிலேயே ஒரு பிரிவினருக்கு அதிகபட்ச சலுகையை அளித்து, நாட்டின் செல்வ வளங்களை சூறையாடுவதற்கு துணை நிற்கின்றது.
இந்தியாவில் பிரிட்டன் காலனியாதிக்கத்தின் போதே உருவாக்கப்பட்ட வங்கித் துறையானது, முதலில் இந்தியாவில் உள்ள தரகு முதலாளிகள், பெரும் நிலப்பிரபுக்கள் போன்றவர்களின் கருப்பு பணத்தை ஒன்று திரட்டி வைப்பதற்கான நிறுவனமாகவும் பாதுகாப்பான கொடுக்கல், வாங்கல் செய்வதற்கான வட்டி லேவாதேவி தொழிலை வங்கி மூலதனம் என்ற பெயரில் பாதுகாக்கவுமே தனியார் வங்கிகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த தனியார் வங்கிகள் திவாலாக துவங்கிய போது நாட்டின் தனியார் வங்கிகளை ஒன்றிணைத்து பொதுத்துறை வங்கிகளாக்கி நாட்டுடைமை ஆக்கியது இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரசுக் கட்சி.
அதே காங்கிரசுக் கட்சி தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறு காலனியாக்க கொள்கைகள் இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட போது பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக் கட்டுவதற்கு நரசிம்மன் கமிட்டி மூலமாக படிப்படியாக வங்கிகளை தனியாருக்கு கொண்டு சென்றது.
2014 ஆம் ஆண்டு பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் வங்கி துறை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு அதன் மூலதனம் ஒன்று குவிக்கப்பட்டது. அது கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பல்லாயிரம் கோடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கியது.
அதன் பிறகு வாராக்கடன் என்ற பெயரில் வங்கி மூலதனத்தின் பெரும் தொகை கார்ப்பரேட் முதலாளிகள் சுருட்டிக் கொண்டு நாட்டை விட்டு ஓடுவதற்கும், அந்த பணத்தை வைத்துக் கொண்டு வெளிநாடுகளில் மூலதனத்தை குவிப்பதற்கும், தேசங்கடந்த மூலதனமாக வெளியேறி செல்வதற்கு வங்கித் துறை மிகப் பெரிய அளவில் உதவியது.
இந்திய வங்கிகளின் வளர்ச்சி பற்றி சுருக்கமாக புரிந்து கொண்டால் தற்போதைய நிலை பற்றி நாம் அறிய முடியும்.
படிக்க: ரிசர்வ் வங்கியின் இருப்பு தொகையையும் அம்பானி, அதானி கொள்ளையடிக்க துணை போகும் பாஜக!
இந்தியாவில் 1930, 1940 மற்றும் 1950-களில் நாட்டில் அனைத்து வங்கிகளும் தனியார் வங்கிகளாகவே இருந்தன. அவற்றில் சில அந்நிய வங்கிகளாகவும் இருந்தன. பல தனியார் வங்கிகள் தோல்வியடைந்து, மூடப்பட்டன.
இந்த வங்கிகளில் தங்களது சேமிப்புகளை வைத்திருந்த அப்பாவி மக்கள் தங்களது பணத்தினை இழந்தனர். 1913 தொடங்கி 1960 வரை 1639 வங்கிகள் இவ்வாறு தோல்வியடைந்து மூடப்பட்டுள்ளன. 1939 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் அதிகபட்சமாக முறையே 117 மற்றும் 107 வங்கிகள் திவாலாகியுள்ளன.
1961 முதல் 1968 வரை, தோல்வியடைந்த 263 வங்கிகள் வேறு ஏதாவது ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டன. எந்த ஒரு வங்கியும் மூடப்படவில்லை . இதில் அதிகபட்சமாக 1964 இல் 82 வங்கிகள் வேறு ஏதாவது ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டன. 1969 தொடங்கி 2020 வரை 25 தனியார் வங்கிகள் பல்வேறு பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் 1947 முதல் 1969 வரை 500-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலானது. மேலும், அது தனியார் நிறுவன முதலாளிகள் வசமிருந்தது. இவ்வாறு வங்கிகள் திவாலாகி மக்களின் நம்பிக்கையை இழந்த காலத்தில்தான் ஜூலை 19, 1969-ல் 14 பெரிய தனியார் வங்கிகளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தேசியமயமாக்கினார். விவசாயம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை மையப்படுத்தும் வகையில் இந்த வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதாக முன் வைக்கப்பட்டது. எனினும் இது வங்கிகளின் வரலாற்றில் திருப்புமுனை எனச் சொல்லலாம்.
அந்த 14 வங்கிகளாவன: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பாங்க், கனரா வங்கி, யுனைடெட் கமர்சியல் வங்கி, சிண்டிகேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யுனெட்டட் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் வங்கி, டினா வங்கி, அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா போன்றவை தான் அது.
இதைத் தொடர்ந்து 1980-ல் 200 கோடிக்கு மேல் முதலீடு உடைய 6 வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன அவை: ஆந்திரா வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து பாங்க், நியூ பேங்க் ஆப் இந்தியா, விஜயா பாங்க், கார்ப்பரேஷன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் காமர்ஸ் போன்றவை.
படிக்க: எஸ்.பி.ஐ. வங்கியை தலையில் குட்டிய உச்சநீதிமன்றம்!
அதன் பிறகு பாசிச மோடியின் ஆட்சியின் கீழ் 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்காக என்ற பெயரில் நாட்டில் உள்ள 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக செயல்படத் தொடங்கின. இதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸ் ஆகியவை இணைந்துள்ளன. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளன. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைந்துள்ளன.
இந்த வங்கிகள் எவ்வாறு வாடிக்கையாளர்களை நடத்துகின்றன, அதன் காப்புத் தொகை எவ்வளவு போன்றவற்றை இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து அவற்றில் எந்த வங்கிகள் பாதுகாப்பானது D-SIBS பட்டியல் என்ற பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான D-SIBS பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட இந்த மதிப்பீட்டின்படி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் தனியார் துறையை சேர்ந்த எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் 2024ஆம் ஆண்டில் பாதுகாப்பான வங்கிகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியால் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக (D-SIBs) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 31, 2024 வரை உள்ள பட்டியலின்படி, டி-எஸ்ஐபிஎஸ் வங்கிகளின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளது வெளியிட்டுள்ளது. அதில், உள்நாட்டு அமைப்புக்கு முக்கியமானதாக அறிவிக்கப்பட்ட வங்கிகள் காமன் ஈக்விட்டி டயர் 1 (CET1) மூலதனம் எனப்படும் கூடுதல் நிதியையும் பராமரிக்க வேண்டும். இதில், இழப்பு அல்லது ஆபத்தைத் தவிர்க்க இந்த மூலதனம் அவசியம். இந்த கூடுதல் மூலதனத்தின் அளவு ரிசர்வ் வங்கியின் பட்டியலில் உள்ள வங்கிக்கு ஏற்ப மாறுபடும்.
இந்தியாவைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் 96,508, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1534, வெளிநாட்டு வங்கிகள் 46, மண்டல ரீதியாக மட்டும் செயல்படும் கிராமப்புற வங்கிகள் 43, தனியார் வங்கிகள் 21 மற்றும் பொதுத்துறை வங்கிகள் 12 என்ற அளவில் செயல்படுகின்றன. இவற்றின் மொத்த சேமிப்பு மற்றும் சொத்து மதிப்பு 290 லட்சம் கோடி டாலர் என்பது தான் தற்போதைய நிலவரமாகும்.
வங்கிகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது என்ற பெயரில் வங்கிகளில் வைக்கப்படும் காப்பு தொகையை வைத்து அவை நம்பகமானது என்று முன்வைக்கப்படுகிறது. ஏற்கனவே பங்கு சந்தை ஊழலில் இந்திய ரிசர்வ் வங்கி உட்பட அனைத்து வங்கிகளிலும் மக்களின் சேமிப்பு தொகையான காப்பு தொகையை ஹர்ஷத் மேத்தா போன்றவர்கள் வாங்கி பயன்படுத்தி சூறையாடினார்கள் என்பதும், இதற்கு அனைத்து பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்கள் என்பதுதான் வரலாற்று ரீதியான அனுபவமாகும்.
வங்கிகளை ஒன்றிணைப்பது என்ற பெயரில் வங்கி மூலதனத்தை ஒன்று குவிப்பதன் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்து வரும் பாசிச மோடியின் ஆட்சியின் கீழ் வங்கிகள் பாதுகாப்பானது என்பது ’கடவுள்’ மீது உள்ள நம்பிக்கை போல குருட்டு நம்பிக்கை தான்.
- பார்த்தசாரதி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி