பணப்பையுடன் பிடிப்பட்ட மஹாராஷ்டிரா பாஜக தலைவர்!

இதையெல்லாம் எதிர்கட்சிகள் கருத்தில் கொள்ளாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசினால் வெற்றிப் பெற்று விடலாம் என நினைப்பது நடக்காது என்பதை உணர வேண்டும். இந்த தேர்தலில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் அதற்கு எடுத்துக்காட்டு.

0
கையும் களவுமாக பிடிப்பட்ட பாஜவின் வினோத் தாவ்டே

ஹாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே இன்று (நவம்பர் 19) ஓட்டல் ஒன்றில் ஏராளமான பணத்துடன் சிக்கியுள்ளார்.

மன்வெல்பாடாவில் உள்ள விவாண்டா ஹோட்டலில் பணப்பையுடன் அமர்ந்திருந்த தாவ்டேவை சுற்றி வளைத்து பிடித்துள்ளார்கள் பகுஜன் விகாஸ் அகாடி கட்சித் தொண்டர்கள். தாவ்டேவுடன் இருந்தவர்களும் கையில் பணத்துடன் இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தாவ்டே தனது பையில் ரூ.5 கோடியும், பணம் கொடுக்கப்பட வேண்டிய நபர்களின் பெயர்கள் அடங்கிய டைரியும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்த சம்பவத்திற்கு பிறகு வினோத் தாவ்டே என்னை 25 முறை அழைத்து மன்னிப்பு கேட்டார்” என்று BVA தலைவர் ஹிதேந்திர தாக்கூர் கூறினார். இந்த விசயத்தை பெரிதாக்க வேண்டாம் என்று வினோத் தாவ்டே தன்னிடம் கூறியதாக தாக்கூர் கூறினார்.

உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக கூறப்படும் மற்ற பாஜக உறுப்பினர்களின் பெயர்கள் தன்னிடம் உள்ளதாக குற்றம் சாட்டுகிறார்.

“மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15லிருந்து 20 கோடி சென்றடைந்தது. இன்று நாசிக்கில் உள்ள தாஜ் ஹோட்டலில் பணத்துடன் மேலும் ஒருவர் சிக்கினார். அந்த பணம் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு சொந்தமானது” என்கிறார் சஞ்சய் ராவத்.


படிக்க: தேர்தல் ஆணையர் நியமனம்: ‘ஜனநாயகத்துக்கு’ சாவுமணியடிக்கும் பாசிச பாஜக!


கையும் களவுமாக பிடிப்பட்ட பின்னரும்  இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பாஜக மறுத்துள்ளது..

இந்தியாவில் தேர்தல் காலத்தில் ஓட்டுக்கு பணம் விநியோகிக்கப்படுவது இயல்பானதாக மாறிவிட்டது. அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறது. பணத்தின் அளவு கட்சியின் வருமானத்திற்கு ஏற்ப மாறுபடும். பெரும்பாலான மக்கள் எந்த கட்சி அதிகமாக பணம் கொடுக்கிறதோ அதற்கே வாக்களிக்கிறார்கள். சிலர் பணம் கொடுத்து சத்தியம் வாங்குவதும் உண்டு. ஆனால் நேரடியாக பிடிபட்டால் சிறை செல்ல நேரிடும் என்ற அச்சம் பிற கட்சியினருக்கு இருக்கும். ஒளிவுமறைவாக பணம் கொடுக்கும் வேலையை செய்வார்கள்.

ஆனால், பாசிச கட்சியான பாஜக தனது அதிகார பரிவாரங்களான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றுடன் தேர்தல் ஆணையத்தையும் இணைத்து விட்டது. தேர்தல் நிதி வசூல் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி தேர்தல் பத்திரம் மூலம் சுருட்டியது. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவின் கள்ள ஓட்டு சந்தி சிரித்தது, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது அனைத்திற்கும் பாஜகவிற்குத் தேர்தல் ஆணையம் பக்கபலமாக நின்றது, நிற்கிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் இருந்தும் இதுவரை தேர்தல் ஆணையம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை நீதித்துறை. பல இடங்களில் வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்து பாஜக வெற்றிப் பெற காரணமாக இருந்தது தேர்தல் ஆணையம் தான்.

இதையெல்லாம் எதிர்கட்சிகள் கருத்தில் கொள்ளாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசினால் வெற்றிப் பெற்று விடலாம் என நினைப்பது நடக்காது என்பதை உணர வேண்டும். இந்த தேர்தலில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் அதற்கு எடுத்துக்காட்டு.

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் போலி ஜனநாயகத்தில் தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை இந்த அதிகார மையங்களை வைத்துக் கொண்டு தான் பாசிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள். இதனை மக்களிடம் அம்பலப்படுத்தாமல் இதற்கு மாற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்யாமல் தேர்தலை சந்திப்பது வீண். இருக்கும் மிச்ச்சொச்சங்களை பயன்படுத்தி இனி ஒன்றும் செய்ய இயலாது.

இப்போது மகாராஷ்டிராவில் நடந்திருக்கும் சம்பவம் உணர்த்துவதும் இதை தான். அங்கு பணம் விநியோகிக்கப்படவில்லை என்பார்கள். நம் கையில் வீடியோ ஆதாரங்கள் இருந்தாலும் இது போதாது என்பார்கள். உச்சநீதிமன்றமே சென்றாலும் எங்கள் நேரத்தை வீணடிக்காதே என கூறுவார்கள்.

இதெற்கெல்லாம் மாற்றுத்திட்டம் வைப்பதும் பாசிஸ்டுகளுக்கு எதிராக உறுதியாக போராடும் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதுமே தற்போதுள்ள ஒரே வழி. தேர்தலினால் மட்டும் பாசிஸ்டுகளை வீழ்த்த முடியாது.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here