வம்பர் 30-துடன் முடிவுக்குவந்த போர்நிறுத்தத்தை அடுத்து பாலஸ்தீனத்தின் காசா மீது கொடூரத் தாக்குதலை தொடர்ந்துள்ளனர்  சியோனிச வெறியர்கள். இந்தமுறை காசா பகுதியில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீனைர்களை கொன்று குவித்துவிடுவது என்ற இன அழிப்பு நோக்கத்துடன் தற்போதைய தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். சர்வதேச அளவில் ஒரு சில செய்தி சேனல்களைத் தவிர பெரும்பான்மையானவை சியோனிச இஸ்ரேல் காசாவில் நடத்திவரும் போர்க்குற்றங்களை இருட்டடிப்பு செய்துவருகின்றன. அதேபோல இந்தியாவிலும் அனைத்து சேனல்களும் மோடியின் தேர்தல் வெற்றிக்காகவும், ராமர் கோவிலுக்கும் தங்களை அர்பணித்துவிட்டன. மக்களின் சிந்தனையிலிருந்து காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த நினைவுகள் மறக்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில்தான் ஐ.நா. சபையின் கையாலாகாதத்தனத்தையும், பாலஸ்தீன மக்கள் மீதான சர்வதேச நாடுகளின் புறக்கணிப்பையும் தொடர்ந்து தென்ஆப்பிரிக்க நாடு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஒரு இடைக்கால தீர்ப்பின் மூலம் போர்நிறுத்ததைக் கொண்டுவரலாம் என்று முனைந்துள்ளது. நெதர்லாந்தில் உள்ள “தி ஹேக்” நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்ற வாத, பிரதிவாதம் குறித்த விவரங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன.

1948-ல் ஐ.நா. சபையில் தாக்கல் செய்யப்பட்ட “இனஅழிப்புக்கு எதிரான பிரகடனத்தில்” (Genocide Convention) கூறியுள்ளவகையில் இஸ்ரேல் செய்துவருவது ஒரு இன அழிப்புப் போர் என்றும் அது தொடர்பாக நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் பேசியிருப்பவை, பாலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்யும் நோக்கில் சர்வதேச போர் விதிகளைமீறி மருத்துவமனை, அகதிமுகாம்களில் தஞ்சமடைந்திருக்கும் மக்களை விமானம், பீரங்கி குண்டுகளால் தாக்கிப் படுகொலை செய்வது, பெண்களை, குழந்தைகளைக் குறிவைத்து கொல்வது, நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும் பல்வேறு நெருக்கடிகளைக்  கொடுப்பது என்பவற்றை ஆதாரப்பூர்வமாக வைத்து வாதிட்டுள்ளது.

இதற்கு முன் பல்வேறு நாடுகளுக்கிடையே நடந்த மோதல்கள், போர்களின்போதும், லட்சக்கணக்கான மக்கள் கொன்றுகுவிக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புகளின்  அடிப்படையிலும் இஸ்ரேல் செய்வது ஒரு இன அழிப்பே என்று வாதங்களை தென்ஆப்பிரிக்கா முன்வைத்துள்ளது. இதற்கு எதிராகத் தான் செய்வது நியாயமே என்பதற்கு இது இஸ்ரேல்-காசாவுக்கு இடையேயான பிரச்சினை எனவும், இதில் தென்னாப்பிரிக்கா தலையிடமுடியாதென்றும், மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணம் ஹமாஸ் போராளிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்துவதே போன்ற சில சொத்தையான பிரதிவாதங்களை இஸ்ரேல் வைத்துள்ளது.

தற்போது ஸ்லோவேகியா, பிரான்சு, மொரோக்கோ, சோமாலியா, சீனா, உகாண்டா, இந்தியா, ஜமைக்கா, லெபனான், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக உள்ளனர். இவர்களைத் தவிர வழக்கு தொடுக்கும் நாட்டின் சார்பில் ஒரு நீதிபதியும், தொடுக்கப்படும் நாட்டின் நீதிபதியும் தற்காலிகமாக நீதிபதிகளின் அமர்வில் சேர்க்கப்படுவார்கள். இந்த சர்வதேசிய நீதிமன்றத்திற்கு தற்போது ரசியாவைச் சேர்ந்த நீதிபதி கிரில் கேவோர்கன் துணைத்தலைவராகவும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் டோனோக் தலைவராகவும் இருக்கின்றனர்.

என்னதான் சர்வதேசிய நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்தாலும் இஸ்ரேல்-காசா பிரச்சினை குறித்து தத்தம் அரசுகள் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளதோ அதைத்தான் இந்த நீதிபதிகள் பிரதிபலிப்பார்கள் என்ற நிலைமையே உள்ளது. இஸ்லாமியர்களை இன அழிப்பு செய்வதையே தங்களது சித்தாந்தமாகக் கொண்ட பாசிஸ்டுகள் ஆளும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இஸ்ரேலுக்கு சாதகமான பார்வையே உள்ளது. ஆகவே இந்திய நீதிபதியும் அதற்கேற்ப செயல்பட வாய்ப்புள்ளது. இந்த நீதிபதிகளின் அமர்வு விசாரித்து எப்படியான தீர்ப்பு வந்தாலும் அது தற்போதைய தலைமை நீதிபதியை தாண்டித்தான் வரவேண்டும். இவர் ஏற்கனவே அமெரிக்கா-நிகராகுவா பிரச்சினையின்போது அமெரிக்காவுக்கு சாதகமான நிலையெடுத்தவர் என்ற முறையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்ப்பு வருமா என்பது சந்தேகம்தான்.

இதையும் படியுங்கள்:

இத்தகைய இடர்பாடுகளைக் கடந்து இஸ்ரேலுக்கு எதிரான தீர்ப்பு வந்துவிட்டாலும், அதை அமல்படுத்துவதற்கான எந்த அதிகாரமும் சர்வதேச நீதிமன்றத்துக்கு கிடையாது. மீண்டும் ஐ.நா.-வின் பாதுகாப்பு சபையில் இத்தீர்ப்பை சுற்றுக்குவிட்டு பெரும்பான்மை அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்புப் படையை காஸாவுக்கு அனுப்பி இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமா என்கிறீர்களா? நீங்கள் நினைப்பது சரிதான். அப்படியே ஒருவேளை பெரும்பான்மை உறுப்பு நாடுகள் இத்தீர்ப்பை அங்கீகரித்தாலும் அமெரிக்கா தன்னிடம் உள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்ப்பையே செல்லாக்காசு ஆக்கிவிடும்.

பாலஸ்தீன மக்கள் மீது சியோனிச இஸ்ரேலால் நடத்தப்படும் இன அழிப்புப் போரை அனைத்து உலக நாடுகளும் கண்டும்காணாமல் இருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவாவது தன்னால் இயன்றதை முயற்சிக்கிறதே என்றவகையில் கண்டிப்பாக பாராட்டுவோம். ஆனால் அதே சமயத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, இவற்றின் தாளத்துக்கு ஆடும் ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி உலகமகா ரவுடியான இஸ்ரேலைத் தண்டிப்பது  பரந்துபட்ட மக்களின் கைகளிலேதான் உள்ளது. உலகெங்கிலும் நடக்கும் இசுரேசுலுக்கெதிரான போராட்டங்களில் திரளான மக்கள் பங்கேற்று ஆளும்வர்க்கங்களுக்கு நெருக்கடி தருவதன் மூலம் தங்கள் நாட்டை இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு நகர்த்த முடியும். இதுவே உடனடியாக பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான சியோனிச வெறியர்களின் இன அழிப்புப் போரை முடிவுக்கு கொண்டுவரும்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here