உலகமகா ஆக்கிரமிப்பாளனும், யூத இனவெறி ரவுடியுமான இஸ்ரேலை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் போராளிக்குழு கடந்த சனியன்று ஏவுகணைகளை வீசி எதிர்தாக்குதல் தொடுத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து இஸ்ரேலும் இன்னும் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டு ஹமாஸை வேரோடு அழிக்கும்வரை இராணுவ நடவடிக்கை இருக்கும் என்று அறிவித்து காஸா பகுதியில் அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து, வீடுகளையும், கட்டிடங்களையும் அழித்துவருகிறது.
பாலஸ்தீனம் நாட்டில் கல்வியறிவற்ற அப்பாவி பாலஸ்தீனர்களிடமிருந்து நிலங்களை விலைக்குவாங்கியும், ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளாக இருந்து அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மண்ணில் தங்களுக்கான ஒரு நாடாகவும் உருவாக்கி “கூடாரத்திற்குள் தலையைவிட்ட ஒட்டகம்போல” பாலஸ்தீன நிலப்பரப்பை அனைத்தையும் ஆக்கிரமித்து அந்நாட்டை படிப்படியாக காஸா துண்டு என்று இஸ்ரேலுக்கு மேற்கிலும் மேற்குக்கரை என்று கிழக்கிலும் இரண்டு துண்டுகளாக உடைத்திருக்கின்றனர் யூத இனவெறியர்கள்.
காஸா துண்டு பகுதியில் ஹமாஸ் என்ற போராளிக்குழு 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று அப்பகுதியை ஆட்சி செய்துவருகிறது. அதுமுதல் இஸ்ரேல் அப்பகுதியைச் சுற்றி 7 மீட்டர் உயரமுள்ள சுற்றுச்சுவரைக் கட்டியும், அதன் மேற்குப்பகுதியிலுள்ள மத்தியதரைக்கடலில் தனது இராணுவக்கப்பல்களைக்கொண்டும் கடந்த 16 வருடங்களாக முற்றுகையிட்டுள்ளது. 20.5 லட்சம் மக்கள் வசிக்கின்ற 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட ஒரு மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலையாக காஸா துண்டு பகுதியை இஸ்ரேல் மாற்றியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் பாலஸ்தீனர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைந்து, வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில் போதிய வருமானமின்றி வறுமையில் வாடிவருகின்றனர். மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஒரு அந்நிய இனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு, ஒடுக்கப்படும் பாலஸ்தீன மக்களை செல்வச்செழிப்புள்ள அரபுநாடுகளும், உலகிற்கு ஜனநாயக வகுப்பெடுக்கும் ஐரோப்பிய நாடுகளும், ஐ. நா. சபை, ஐரோப்பிய யூனியன் போன்ற ஏகாதிபத்திய சொம்புதூக்கி அமைப்புகளும் கைவிட்டுவிட்டன. ஆண்டாண்டு காலமாக ஒடுக்குமுறைக்கு உள்ளான பாலஸ்தீன மக்கள் ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து தம்முடைய நிலைக்குக் காரணமான இஸ்ரேல் மீது ஒரு எதிர்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இஸ்ரேலிய யூதஇனவெறி பாசிசத்தின் இந்தியபதிப்பான RSS-பாஜக மற்றும் பல்வேறு ‘எலைட் சங்கிகள்’ பாலஸ்தீனர்களின் இந்த எதிர்தாக்குதலை தீவிரவாதம் என்றும், இஸ்ரேல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது, இஸ்லாம்தான் பிரச்சினை போன்ற ஹாஸ்டாக்குகளை X தளத்தில் பறக்கவிடுகின்றனர். பாசிச மோடியும் தான் இந்தியாவின் பிரதமர் என்பதை மறந்துபோய் இதுநாள்வரை இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது நண்பன் அதானியின் ஹைபா (Haifa) துறைமுகத்துக்காகவும், தனது நண்பர்களின் இஸ்ரேலிய முதலீடுகளுக்காகவும், பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருளுக்காகவும், நெதன்யாகு என்ற யூதஇனவெறி பாசிஸ்டுக்கு மற்றொரு காவி பாசிஸ்டு உதவுவது இயல்பே என்றவகையிலும் தனது ஆதரவை நல்கியுள்ளார். இதன்மூலம் தனது கார்பொரேட் விசுவாசத்தையும், அமெரிக்காவுக்கு எஜமான விசுவாசத்தையும் காட்டியிருக்கிறார்.
இஸ்ரேலைப் போலவே இந்தியாவிலும் பல்வேறு கலவரங்களின் மூலமும், CAA, NRC, NPR மூலம் இஸ்லாமியரின் குடியுரிமையைப் பறித்து அவர்களை முள்வேலி முகாம்கள் என்ற திறந்தவெளி சிறைகளில் ஒடுக்க ஒரு முன்மாதிரியாக இருக்கும் இஸ்ரேலுக்குத் தமது பகிரங்க ஆதரவைத் தந்துகொண்டிருக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள். அதற்காக பல போலியான வீடியோக்களை சமூகவலைதளங்களில் பரப்பிவருகின்றனர். உதாரணமாக,
பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இராணி உள்ளிட்டு சுமார் 1.23 லட்சம்பேரை பின்தொடர்பவர்களாகக்கொண்டுள்ள Mr. சின்ஹா என்ற சங்கி ஹமாஸ் தீவிரவாதிகளின் கொடூரம் என்று சிரியாவில் 2016-ல் அமெரிக்க ஆதரவு படைகளால் தலையைவெட்டிப் படுகொலை செய்யப்படும் ஒரு குழந்தையின் வீடியோவை பரப்பி வருகிறான். அல்ஜீரியாவில் நடைபெற்ற ஒரு வானவேடிக்கை நிகழ்வை ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் வான்வெளித்தாக்குதல் என்று ஒரு வீடியோவையும் பரப்பி வருகின்றனர். இவைதவிர பாஜக பாசிஸ்டுகள் “போர்க்களம் தயாராகிவிட்டது, இஸ்ரேலே நமது நண்பன்” என்ற வெறிக்கூச்சல்களுடன் மிகப்பெரிய பேரணிகளை டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்:
- பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி போராடுவோம்!
- 1,50,000 பாலஸ்தீன மக்கள் 33,000 குழந்தைகள் அ.முத்துக்கிருஷ்ணன்
இஸ்லாமியருக்கு எதிராக, இஸ்லாமுக்கு எதிராக வெறுப்புணர்வை உள்நாட்டில் மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்திடமும், அறிவுஜீவிகளிடமும், பொதுமக்களிடமும் உருவாக்கி அதன்மூலம் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை எந்த உரிமையுமற்ற இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் இந்துராஷ்டிராவை உருவாக்க முனைகிறார்கள். இவர்களுடன் சேர்ந்துகொண்டு பல கிறிஸ்துவக் கூமுட்டைகளும் இஸ்ரேலுக்கு சொம்படிக்கின்றனர்.
அமெரிக்க பிரிட்டன் முதலிய மேல்நிலை ஏகாதிபத்திய வல்லரசுகள் மற்றும் இந்தியா போன்ற அவற்றின் அடியாட்களின் உறுதுணையுடன் ஒடுக்கப்படும், கொன்றுகுவிக்கப்படும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும், யூத இனவெறி இஸ்ரேலுக்கு எதிராகவும் குரல்கொடுப்போம். நிராயுதபாணியாகி நிற்கும் பாலஸ்தீன மக்களை கொன்றுகுவிக்கும் உலக ரவுடி இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து உடனடியாக போர்நிறுத்ததை வலியுறுத்தாத உலகமகா பஞ்சாயத்தானா ஐ. நா. சபை, ஐரோப்பிய யூனியன் போன்ற பல்வேறு கூட்டமைப்புக்களின் முகத்திரையை அம்பலப்படுத்துவோம். இந்தியாவில் காவி பாசிஸ்டுகளின் இந்துராஷ்டிர முன்னெடுப்புகளை முறியடிப்போம்.
- ஜூலியஸ்