பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக யூதர்கள் ஆக்கிரமிக்க தொடங்கிய 1948 முதல் இன்று வரை யூத சியோனிஸ்டுகள் பல்வேறு போர்க்குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். பாலஸ்தீனக் குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஐ.நா. தீர்மானத்தின் மூலம் பாலஸ்தீனர்களின் நிலம் பங்கு போடப்பட்டபின் சுமார் 7 லட்சம் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகள், உடைமைகள், நிலங்களை விட்டு யூத பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது வீடு வீடாக தேடிச்சென்று பாலஸ்தீனர்களைக் குறிப்பாகக் குழந்தைகளை படுகொலை செய்தனர். இப்படுகொலைகளை “நக்பா” என்று பெருமையோடு அழைத்துக்கொள்ளும் யூத வெறியர்கள் தற்போது நடத்தப்படும் தாக்குதல் “இரண்டாம் நக்பாவாக” இருக்க வேண்டும் என்று வெறிகொண்டு அறிவிக்கின்றனர்.

UNICEF வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி கடந்த அக்டோபர் 7 முதல் 31 வரை மொத்தம் 8525 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 3,542 பேர் அதாவது 41% குழந்தைகள் என்றும் 2187 பேர் பெண்கள் எனவும்  கூறுகிறது. ஏறக்குறைய 6000 குழந்தைகள் காயமடைந்திருப்பதாகவும் 900 குழந்தைகள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும் UNICEF கூறுகிறது.  தினமும் சுமார் 100 குழந்தைகள் கொல்லப்படுவதாகவும்  ஒட்டுமொத்தமாக 400 குழந்தைகள் தாக்குதலில்  பாதிக்கப்படுவதாகவும் அதன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. DFCI (Defence for Children International) வெளியிட்டுள்ள அறிக்கை ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு பாலஸ்தீனக் குழந்தை கொல்லப்படுகிறது என்கிறது. பாலஸ்தீனத்தில் 17 வயதுடைய ஒரு குழந்தை அதன் வாழ்வில் 2008, 2012, 2014, 2021, மற்றும் தற்போது நடந்துவரும் 2023 என்று ஐந்து போர்களை அனுபவித்திருக்கும் என்பது ஒரு நிதர்சனமான உண்மை.

இஸ்ரேலிய யூதவெறியர்களின் தாக்குதலால் குழந்தைகள் கொல்லப்படுவது ஒருபுறம் என்றால் மறுபுறம் தப்பிப்பிழைக்கும் குழந்தைகளும் பயம், பதட்டம், தொடர் அழுகை, இறுக்கம், வன்முறையுணர்வு, படுக்கையில் சிறுநீர்கழிப்பது போன்ற மனரீதியான பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கின்றனர்.பெரும்பாலான பள்ளிகள் இஸ்ரேலின் தாக்குதலில் இடிக்கப்பட்டுவிட்டதால் பள்ளிப்படிப்பும் தடைபட்டுள்ளது. குடிநீரைம், மனிதாபிமான உதவிகளையும் யூதவெறியர்கள் நிறுத்திவைத்துள்ளதால் குழந்தைகளும், பாலூட்டும் தாய்மார்களும் போதுமான உணவு இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

யூத ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக பாலஸ்தீனக் குழந்தைகளும் அவ்வப்போது போராடுவதால், குழந்தைகளைக்கூட தீவிரவாதிகளாக, 10 வயதுள்ள குழந்தையை 10 வயதுள்ள மனிதன் என்று வகைப்படுத்தி வருடந்தோறும் 700 பாலஸ்தீனக் குழந்தைகளை இஸ்ரேலிய போலீஸ் மற்றும் இராணுவம் கைது செய்து சிறையிலடைக்கிறது.

இதைப்போன்று பாலஸ்தீனக் குழந்தைகளை பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்கள் நம்மை கண்கலங்க செய்தாலும் “ஜனநாயக பாடம்” எடுக்கும் “அமைதியை விரும்பும்” “நவநாகரீக” ஐரோப்பிய அமெரிக்க கோமகன்களுக்கோ, சீமாட்டிகளுக்கோ, உதவாக்கரை மன்றங்களுக்கோ சியோனிச வெறியர்களின் கொடும் போர்குற்றங்களோ, பாலஸ்தீன குழந்தைகளின் அழுகுரலோ, கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்படும் சக மனிதர்கள் மீதோ இரக்கம் வரவில்லை. உக்ரைன்-ரஷ்யப் போரின்போது வரிந்து கட்டிக்கொண்டு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்த ஐரோப்பிய யூனியன், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், பெண்கள், குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு சுண்டுவிரலைக் கூட நீட்ட வக்கில்லாமல் கள்ளமௌனம் காக்கிறது.

இதையும் படியுங்கள்:

 யார் வீழ்த்தப்பட வேண்டும்! ஹமாஸா? இஸ்ரேல் ஜியோனிசமா?

 பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எப்போதுமே ஆதரிக்கும் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும்!

ஐ.நா.-வில் நிறைவேற்றப்பட்ட போர்நிறுத்தத் தீர்மானத்தை மயிரளவுக்குக் கூட மதிக்காத இஸ்ரேலைக் கண்டித்து உடனடியாக படைகளை அனுப்பி போர் நிறுத்தத் தீர்மானத்தை அமல்படுத்த எந்த முயற்சியும் ஐ.நா. இதுவரை செய்யவில்லை.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, செக் குடியரசு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் ஆதரிக்கும் தைரியத்தில்தான் இத்தகைய வெளிப்படையான போர்க்குற்றங்களை நிகழ்த்துகிறது சியோனிச இஸ்ரேல். அது மட்டுமல்லாமல்  பாலஸ்தீனத்தை சுற்றி இருக்கும் சிரியா, லெபனான், ஜோர்டான், சவுதி அரேபியா, எகிப்து முதலான நாடுகளின் அரசாங்கங்கள், ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் கைப்பாவைகளாக இருப்பதால் இனம், மதம், மொழியால் ஒன்றாக இருந்தாலும் தம்முடைய சுயநலத்துக்காக பாலஸ்தீன மக்களை கைவிட்டுள்ளன. எல்லைகளை திறந்து மனிதாபிமான உதவிகளும், அடைக்கலமும் கொடுக்காமல் எஜமான விசுவாசத்தில் வேடிக்கை பார்க்கின்றன.

அதே சமயத்தில் உலகெங்கிலும் உள்ள மக்கள் பாலஸ்தீனத்தை ஆதரித்துப் பேரணிகளையும், இஸ்ரேலுக்கு ஆதரவைத்தரும் தங்கள் நாட்டு அரசாங்கத்தைக் கண்டித்துப் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.  இஸ்ரேலுக்கு உள்ளேயும், வெளியேயும் யூதமக்கள் நடத்தும் போராட்டங்களும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகத்தின் அழுத்தமாகமாறி இஸ்ரேலைத் தனிமைப்படுத்தும் ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும்.

  • ஜூலியஸ்

ஆதாரம்: aljazeera.com, thewire.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here