அமெரிக்க – ரஷ்ய மேலாதிக்க போட்டியில் பலியாக்கப்பட்டுள்ள உக்ரேனில் ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. அரை நூற்றாண்டை கடந்து விட்டுள்ள இஸ்ரேல் – பாலஸ்தீன போரும் தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்காவின் தலைமையில் ஏமன் மீதும் தாக்குதலை தொடங்கியுள்ளன மேற்குலக ஏகாதிபத்தியங்கள்.
ஏமனில் செயல்படும் ஹீத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது அப்போது தாக்குதல் தொடுப்பதும், சிறைபிடிப்பதும் பதிலுக்கு அமெரிக்கா பதில் தாக்குதல் தொடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் இவர்களை அழித்தொழிக்க முடியாதபடி புவியியல் அம்சங்களை சாதகமாக்கி தப்பியும் விடுகின்றனர்.
கடந்த வாரம், செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழுவினர் ஏமனில் இருந்து குறிவைப்பதால், பிரிட்டன் உள்ளிட்ட 14 நாடுகளுக்குத் தொடர்புடைய கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை உதவியதாக அமெரிக்க ராணுவம் கூறியது.
அக்டோபர் மாதம் முதல் செங்கடலில் சர்வதேச கடல்வழித் தடத்தில் சென்ற 27 கப்பல்களை ஹூத்திகளை தாக்கியுள்ளன என்றும் இதனால் 55 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரண்டு கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டன, ஆனால் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் அமெரிக்க ராணுவம் கடந்த காரம் கூறியது. ஆனால், ஹூத்தி ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் இரண்டு இஸ்ரேலிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறினார்.
ஆனால், அந்தக் கப்பல்களுக்கும் இஸ்ரேலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது. இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக்குழுவினர் 2014இல் நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்த்ததில் இருந்து ஏமனின் சில பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இது உள்நாட்டுப் போரைத் தூண்டியது.
காஸாவில் இரான் ஆதரவுடைய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுடன் சண்டையிட்டு வருவதால், ஹூத்திகள் செங்கடலில் உள்ள இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்களை சமீபகாலமாகக் குறிவைத்து வருகின்றனர் என்கிறது BBC.
தற்போது, அமைதிக்காவின் தலைமையில் இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, டென்மார்க், பஹ்ரைன், தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகள் இணைந்து யேமான் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது!
சைப்ரஸில் இருந்து பறந்த, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் நான்கு டைஃபூன் ஜெட் விமானங்கள் இரண்டு ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசின.
இந்தத் தாக்குதல்கள் ஏமனின் தலைநகர் சனா, செங்கடலில் உள்ள ஏமனின் துறைமுகம் ஹுதயா, தமர் நகரம், சாதா நகரம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. ஜனவரி 11ஆம் தேதி காலை 2.30 மணியளவில் அமெரிக்க போர்க்கப்பல் தோமாஹாக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஜெட் விமானங்கள் 12க்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து தாக்கின என்று தாக்குதல்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் செல்லும் அனைத்து கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகும்! எங்களை யாரும் தடுக்க முடியாது!- என ஏமன் அறிவித்துள்ளது.
அமெரிக்க – பிரிட்டன் போர்க்கப்பல்கள் ஏமனை தாக்க தயாரானதைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது ரஷ்யா!
ஈரானின் பதிலடி!
பல நாட்கள் முன்பு ஈரான் நாட்டுக்கு சொந்தமான கப்பல் ஒன்றை அமெரிக்கா திருடி எடுத்துச் சென்று அதில் இருந்த 1.45 லட்சம் டன் கச்சா எண்ணையோடு டெக்சாஸ்-க்கு கொண்டு சென்றது அமெரிக்க கடற்படை.
ஏன் கைப்பற்றுகிறாய் என கேட்டதற்கு ஈரான் மீது பொருளாதார தடை இருப்பதால் இதை பறிமுதல் செய்கிறோம் என கூறியுள்ளனர்.
இதன் பின் விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இப்படி கண்டித்த பிறகும் அதை கேட்காமல், அத்தனை எண்ணெய் பீப்பாய்களையும் டெக்சாசில் இறக்கி உள்ளது அமெரிக்கா! இது மட்டும் இன்றி, அந்த கப்பலுக்கு வேறு பெயர் வைத்து பயன்படுத்தியும் வந்துள்ளது.
அமெரிக்க கடற்படையால் கப்பல் களவு போன வழக்கை தனது தலைநகர் டெஹ்ரானில் நடத்தி அந்த கப்பலை பறிமுதல் செய்ய நீதிமன்ற உத்தரவை பெற்றது ஈரான் அரசு.
ஜனவரி 11 காலையில் அந்த கப்பலை ஓமன் கடல் எல்லையில் வைத்து பறிமுதல் செய்தும் உள்ளது ஈரான் கடற்படை. அதில் 1 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பது குறிப்பிடத்தக்கது!
இதையும் படியுங்கள்:
- யார் வீழ்த்தப்பட வேண்டும்! ஹமாஸா? இஸ்ரேல் ஜியோனிசமா?
- அமெரிக்காவின் பதிலிப் போர் உத்தி! ரஷ்யாவுக்கு உக்ரைன்; சீனாவுக்கு தைவான்!
மீட்கப்பட்ட தனது கப்பலை பந்தர் இஜாஸ்க் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளது ஈரான்.
இது உலக மேலாதிக்க வெறிபிடித்தலையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கடும் கோபத்தை கிளறி விட்டுள்ளது. இது ஈரானை குறிவைத்து மற்றுமொரு போர்முனையை திறக்கவும் வாய்ப்புள்ளது.
ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்க வெறிக்கு, கார்ப்பரேட் சூறையாடலுக்கு பலியிடப்படுகிறது வளைகுடா நாடுகள். ஈராக், ஆப்கன் அனுவத்திலிருந்து தான் மட்டும் தனித்து போய் சிக்கிக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை. அதன் தேர்ச்சக்கரத்தில் பிற நாடுகளையும் பிணைக்கவே விரும்புகிறது.
- இளமாறன்.