“கடந்த ஆகஸ்ட் 28 ந்தேதி 8 சீன இராணுவ போர்க்கப்பல்களும், 23 இராணுவ விமானங்களும், ஆகஸ்ட் 29-ந்தேதி 8 சீன இராணுவ போர்க்கப்பல்களும், 37 இராணுவ விமானங்களும் தங்கள் நாட்டுக்குள் வருவதும் போவதுமாக இருந்தது” என தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது. இது அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் தாய்வான் நீரிணையை கடந்த போது நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பைடன் அதிபரானதில் இருந்து இந்த நீரிணை வழியாக அமெரிக்கா போர்கப்பல்களை மாதந்தோறும் அனுப்பி வருகிறது. இந்த முறை சீனா அதனை எதிர்க்கும்விதமாக போர்க்கப்பல்களையும், போர்விமானங்களையும் பயன்படுத்தி உள்ளது. சீனா-தைவான் இடையே போர்ச் சூழல் உருவாகி வருவதையே இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
இதன் தொடக்கம், அமெரிக்க சபைத் தலைவர் நான்சி பெலோசி தைவான் வந்து போனதாகும். அதற்கு எதிர்வினையாக தாய்வானைச் சுற்றி சீனா தனது இராணுவ அணிவகுப்பை நடத்தி உள்ளது. நான்சி பட்ரிசியா பெலோசி இந்த பயணத் திட்டத்தை ஆரம்பத்திலேயே எதிர்த்த சீன அதிபர் நேரடியாக அமெரிக்க அதிபருக்கு தொலைபேசி மூலம் தன் எதிர்ப்பை பதிவு செய்தார்; “நெருப்புடன் விளையாடும் முயற்சி” என எச்சரித்தார். அதையும் மீறி நான்சி பெலோசியின் தைவான் நாட்டுப் பயணம் திட்டமிட்டபடி நடந்தது. அதுவும் ஒரு போர் விமானத்தின் துணையுடன் தைவான் வந்திறங்கினார் நான்சி பெலோசி. இந்த செயலை ‘ஒரு போர் நடவடிக்கை’ என சீன பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன. நான்சி பெலோசி தைவானில் இருந்து கிளம்பிய மறுநாள் நூற்றுக்கும் மேற்பட்ட போர்விமானங்களைக் கொண்டு தைவான் நாட்டை முழுவதுமாக சுற்றி வளைத்து மிரட்டியது சீனா. பதிலுக்கு தைவானும் சீனாவின் ட்ரோன்களை சுட்டுத் தள்ளி எச்சரித்துள்ளது.
********
முன்னாள் சோவியத் நாடான உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் முயற்சியின் மூலம் ரஷ்யா-உக்ரைன் போரைத் தூண்டியது அமெரிக்கா. ரஷ்யா-உக்ரைன் போர் உலகை பல்வேறு வகைகளிலும் பாதித்து வரும் நிலையில், சீனா-தைவான் இடையில் போரைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அமெரிக்கா. உக்ரைனுக்கு நேட்டோ மூலமும், தனிநாடாகவும் பல்வேறு ராணுவ உதவிகளை வழங்கி போரை நடத்துவது போலவே தைவானுக்கும் அதிகளவிலான ராணுவ தளவாடங்களை வழங்க திட்டமிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். தனது உலக மேலாதிக்கத்தை பாதுகாத்துக்கொள்ள உலகின் ஒவ்வொரு மூலையிலும் போர்களைத் தூண்டுகிறது அமெரிக்கா. அதன் ஒரு பகுதியாகவே சீனா-தைவான் பிரச்சினையை பார்க்க வேண்டியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான உறவை போன்றே நீண்டதொரு வரலாற்று உறவை கொண்டது சீனா-தைவான். 17ஆம் நூற்றாண்டில் குயிங் வம்சத்தினர் ஆட்சியில் முதன்முதலாக சீன ஆட்சியாளர்களின் முழுகட்டுப்பாட்டில் வந்த தைவான் 1895யில் நடந்த சீனா-ஜப்பான் யுத்தத்தின் போது ஜப்பான் அரசின் கட்டுப்பாட்டிற்கு தரப்பட்டது. அது முதல் 1945 ஆம் ஆண்டு ஜப்பான் சீன மக்களால் தோற்கடிக்கப்பட்ட வரை தைவான் ஜப்பான் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
1945ஆம் ஆண்டுக்குப் பிறகு, சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கோமிண்டாங் கட்சிக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்தது. 1949ஆம் ஆண்டில் புரட்சிகரப் போரில் வென்ற மாசே துங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்கள் குடியரசை நிறுவியது. போரில் தோற்ற கோமிண்டாங் கட்சி தைவானில் அடைக்களமாக புகுந்து, அங்கு தனது ஆட்சியை நிறுவிக் கொண்டது. அதனை ‘சீனக் குடியரசு’ என அழைத்துக் கொண்டது. அப்போதே தைவானில் நிறுவப்பட்ட ‘சீனக் குடியரசை’ அங்கீகரித்தது அமெரிக்கா. 1971 வரை இந்த ‘சீனக் குடியரசே’ ஐக்கிய நாடுகள் சபையில் தற்போதைய சீனாவுக்கு பதிலாக சீனாவின் பெயரில் உறுப்பு நாடாக இருந்தது.
1971 ஆம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசு அந்த இடத்தைப் பெற்றது. இருப்பினும், கடந்த 40 ஆண்டுகளில் சீனா- தைவான் தங்களுக்கிடையே நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டன. இன்னொருபுறம், 1979ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் தலைமையிலான அமெரிக்க அரசு “ஒற்றை சீனா” என்பதை அங்கீகரிக்கத் தொடங்கியது.
மறுபுறம் சீனாவின் சோசலிச பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக 20 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் தைவான் சந்தைப் பொருளாதாரத்தை உயர்த்தி பிடித்து, விரைவான பொருளாதாரம் என்ற ஒன்றை முன் வைத்தது. ஆசியாவின் புலிகள் எனற அடைமொழியுடன், ‘நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிய’ தனியார்மயத்தின் சொர்க்கபுரிகளான ஹாங்காங், தைவான், தென் கொரியா, மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் தைவானும் ஒன்றாகும்.
இதையும் படியுங்கள் : அமெரிக்க, ரசிய அரசுகளின் உலக மேலாதிக்க வெறிக்கு உக்ரைன் மக்கள் பலிகிடா!
அமெரிக்காவின் புவிசார் கொள்கைகளுக்கு உதவியாக தைவானுடனான தனது பொருளாதார, இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா பராமரித்து வந்தது. அவ்வப்போது இராணுவ தளவாடங்களை தைவானுக்கு விற்று வந்துள்ளது. அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களுக்கு தேவையான சிப்புகளை அதிக அளவில் தைவான் செமிகண்டக்டர் உற்பத்திக்கூடம் (TSMC) தயாரித்து அனுப்பி வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு டிரம்ப் ஆட்சியில் இது அதிகமானது. மேலும், “ஒற்றை சீனா” கொள்கையை கைவிடத் தொடங்கியது அமெரிக்க அரசு. அதன் தொடர்ச்சியாகவே தற்போதுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசும் தைவானுடன் நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலமாக சீனாவை சீண்டியுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், “அடுத்த சில வாரங்களில், தைவான் நீரிணை வழியாக அதிக அளவிலான போர்கப்பல்களையும், போர்விமானங்களையும் அனுப்புவது, 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு வழங்குவது, தைவான் நாட்டை நேட்டோவுக்கு வெளியில் உள்ள நேட்டோ கூட்டாளி (‘A Major Non-NATO Ally’) என்று அறிவிப்பது” என்ற நோக்கத்துடன் தைவான் கொள்கை ஒன்றை நிறைவேற்ற உள்ளது அமெரிக்க அரசு. (Frontline, Sep.9,2022)
வொலோடிமிர் ஜெலன்ஸ்கி என்ற நாஜிசக் கோமாளி தலைமையிலான உக்ரைன் அரசு தன் நாட்டு மக்களின் உயிரையும் உடைமையையும் அமெரிக்க எஜமானனுக்காக பலிகொடுத்து வருகிறது. தைவான் அதிபர் ட்சாய்-இங்-வென்னும் அத்தகைய பலிகொடுத்தலுக்கு தயாராகி வருகிறார்.
அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் – உலகை ஒற்றைத்துருவ மேலாதிக்கம் செய்து வரும் அமெரிக்கா 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இன்னொருபுறம், 1990களில் தனக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துக்கொண்ட ரஷ்யாவும், உலகின் மிகப்பெரும் ‘தொழிற்கூடமாக’ மாறியுள்ள, பொருளாதார ரீதியாக உலகின் இரண்டாம் நிலைக்கு வளர்ந்துள்ள சீனாவும் அமெரிக்காவின் ஒற்றைத்துருவ மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. இதனை விரும்பாத அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனையும், சீனாவுக்கு எதிராக தைவானையும் பகடைக்காயாக்கியுள்ளது.
சீனாவும் ரஷ்யாவும் கூட இதுவரை அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கான தலையீடுகளை ‘சாதாரணமாக’ எடுத்துக் கொள்வதிலிருந்து மாறியுள்ளன. அமெரிக்காவின் தலையீடுகளை பயன்படுத்திக் கொண்டு ரஷ்யா, சீனா இரண்டும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கைகொள்ளத் தொடங்கியுள்ளன. உக்ரைன் – ரஷ்யா போர் நடந்துகொண்டிருக்கும் தருவாயிலேயே சீனா-ரஷ்யா கிழக்கு -2022 என்ற பெயரில் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரிடுவதற்கு முழு ஆதரவை அளித்து வருகிறது சீனா.
சீனா தனது ’உளவு கப்பலான’ யுவான் வாங்-5 கப்பலை இலங்கையின் ஹம்பந்தோட்டா ஆழ்கடல் துறைமுகத்தில் நிறுத்தியதன் மூலம் இலங்கையின் மீதான தனது ஆதிக்கத்தை உறுதிபடுத்திக்கொண்டுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை துறைமுகத்தில் யுவான் வாங்-5 யை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசை எச்சரித்த போதும், கப்பல் துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டதே அதற்கு சான்று.
இதையும் படியுங்கள் : ரஷ்யா உக்ரைன் மோதல் 2014-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது!
சீனா ஒருபுறம் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரை வைத்துக்கொண்டு, “சீன பாணியிலான சோசலிசம்” என்ற பெயரில் பல்வேறு ஆப்ரிக்க, ஆசிய நாடுகளை தனது அரசியல் பொருளாதார ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வருவது, தெற்காசிய நாடுகளை அரசியல், பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல், இராணுவ ரீதியிலும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது என நவீன சமூக ஏகாதிபத்திய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதன் மூலம் உலக மக்களின் எதிரிகள் வரிசையில் இணைந்துள்ளது.
அமெரிக்கா- சீனா, ஆகிய இரு பெரும் பொருளாதாரங்களுக்கு இடையில் நடக்கும் இந்த உலக மேலாதிக்கப்போட்டி உலகின் ஒவ்வொரு திசையிலும் போர்களை தோற்றுவிக்கும் அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா அதன் ஊற்றுமூலமாக செயல்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட நாடுகளும், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களும் ஏகாதிபத்திய உலக கட்டமைப்பை தகர்க்க ஒன்றிணைவதே ஆக்கிரமிப்புப் போர்களையும், உலக மேலாதிக்கத்திற்கான போட்டியையும் முடிவுக்கு கொண்டு வரும். போர் தளவாடங்கள் தேவைப்படாத, அகதிகளைத் தோற்றுவிக்காத கனவுலகு சாத்தியப்படும்.
- பைசல் அப்துல்லா
புதிய ஜனநாயகம்
செப்டம்பர் மாத இதழ்.
படியுங்கள்
பரப்புங்கள்!