அல் ஜசீரா தடை! பாசிச  பெஞ்சமின் நெதன்யாகு கும்பலின் வெறியாட்டம்!

இஸ்ரேல் நடத்துகின்ற பயங்கரவாத போர் பற்றிய விவரங்கள் இஸ்ரேலில் உள்ள மக்களுக்கும் தெரிந்து விடக்கூடாது வெளியிலும் வந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் அல் ஜசீராவை தடை செய்துள்ளது பாசிச  பெஞ்சமின் நெதன்யாகு கும்பல்.

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவின் மீது தொடர்ந்து இஸ்ரேல் தனது வெறித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது என்பதை சர்வதேச ஊடகங்களும் இந்தியாவில் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றனர். சமகாலத்தில் நடக்கின்ற பயங்கரவாத போர் காசாவில் நடக்கின்ற இஸ்ரேலின் இன அழிப்பு போராகும்.

இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை உடல் ஊனமானவர்களின் எண்ணிக்கை, வீடுகளை இழந்து வீதியில் தவிப்பவர்களின் எண்ணிக்கை, உண்ண உணவு, உடுத்த உடை, குடிப்பதற்கான நீர், மருத்துவ வசதிகள் போன்ற எதையும் பெற முடியாத கொடூரமான வாழ்க்கையில் நிமிடந்தோறும் செத்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை போன்றவை அனைத்தும் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் வெளியில் கொண்டு வந்துகொண்டிருக்கிறது கத்தார் நாட்டில் இருந்து இயங்குகின்ற அல் ஜசீரா செய்தி நிறுவனம்.

அல் ஜசீரா என்ற செய்தி நிறுவனம் கத்தார் நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் 1996 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் செயல்பட்டு வருகிறது. முதலில் செயற்கைக்கோள் செய்தி ஊடகமாக உருவாகி, அதன் பிறகு உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் பணியிடங்களை கொண்டு செயல்படுகின்ற செய்தி ஊடகமாக விரிவடைந்துள்ளது.

கடுமையான மத கோட்பாடுகள் நிறைந்த அரபு நாடுகளில் விதிவிலக்காக ஜனநாயக சிந்தனையுடன் செயல்படுவதற்கு அல் ஜசீரா துணிச்சலுடன் முடிவு செய்துள்ளது. கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற பல்வேறு போர்கள், அதன் பாதிப்புகள், அதற்கு எதிரான போராட்டங்கள், மக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அவலங்கள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்ததில் அல் ஜசீராவின் பங்கு முக்கியமானது.

தனது போர்க்குற்ற நடவடிக்கைகளினால் உலகம் முழுவதும் அம்பலமாகியுள்ள சூழலில் அல் ஜசீராவை முடக்குவது என்று இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின்  பெஞ்சமின் நெதன்யாகு முடிவு செய்துள்ளார். தனது சகபாடிகள் அனைவருடன் கலந்தாலோசித்து ஒரே கருத்தாக அல் ஜசீராவை தடை செய்வது என்று முடிவு செய்துள்ளதாக கொக்கரித்துக் கொண்டுள்ளார். 

அல் ஜசீராவை தடை செய்வதற்கு என்ன காரணம்?

கத்தார் நாட்டு செய்தி நிறுவனமான ‘அல் ஜசீராவை’ தடை செய்யும் நெறிமுறைகளுக்கு இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் செய்தி விவகாரங்கள் துறை அமைச்சர் ஷ்லோமோ கார்ஹி வெளியிட்டுள்ள பதிவில், ”இஸ்ரேல் அரசுக்கு எதிராகத் தூண்டும் பதிவுகளைப் பரப்பும் எவரும் இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பு செய்ய முடியாது” என அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை இப்படியும் கூறலாம், இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத போர் அது ஏற்படுத்தும் உள்நாட்டு வெளிநாட்டு பாதிப்புகள் எதைப் பற்றியும் செய்தி வெளியிடுவது இஸ்ரேல் அரசுக்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிடும் என்பதால் அதனை இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பும் உரிமையை தடை செய்கிறோம் என்பதுதான் இதன் பொருளாகும்.

பாசிசமும் கருத்துரிமையும் நேரெதிரானது!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு வந்தவுடன் கருத்து சுதந்திரத்தின் மீதான பேரழிவுமிக்க விளைவுகளை நாங்கள் கண்டோம். ஊடகங்கள் மீதான அவரது அணுகுமுறை படுமோசமானது. ஊடகங்கள் அரசின் எதிரிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர் அல்லது அவரது கூலிப்படையாக்கப்பட்டனர்,” என்று RSF (Reporters sans Frontières) இன் இயக்குனர் ரெபேக்கா வின்சென்ட் கூறினார்.  இதனால் அமெரிக்க பத்திரிகை சுதந்திர மதிப்பெண் 71.22 இலிருந்து 66.59 ஆக சரிந்தது. அதன் தரவரிசை 45 இலிருந்து 55 ஆக மோசமடைந்தது.

 அதேபோல, ”இந்தியாவில் தற்போதைய தேர்தல் சூழல் மிகவும் முக்கியமானது. ஒருவிதமான பொய் செய்திகள் வெகுஜன மக்களிடம் பரப்பப்படுகிறது. சுதந்திர ஊடகங்களின் கருத்துரிமையை தடை செய்யும், அரசாங்கத்தின் ஊதுகுழலாக மாற்ற முயற்சிக்கும் நாடுகளில் நிலவும் கொடுமைகளில் இதுவும் ஒன்று என்று நான் நினைக்கிறேன், ”என்று ரெபேக்கா வின்சென்ட், லண்டனில் வெளிநாட்டு செய்தியாளர் சங்கம் ஏற்பாடு செய்த மாநாட்டில் கூறியுள்ளார். 

உலகப் பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் மதிப்பெண் கடந்த ஆண்டில் 36.62 இலிருந்து 31.28 ஆகக் குறைந்துள்ளது என்று எல்லைகளற்ற நிருபர்கள் (RSF for Reporters sans Frontières) தெரிவித்துள்ளது, இது 180 நாடுகளில் உள்ள பத்திரிகை சுதந்திரம் அனுபவிக்கும்  நிலைமையின் வருடாந்திர குறியீட்டை ஒன்றிணைக்கிறது. இதன்படி இந்தியாவின் தரவரிசை 2023 இல் 161 இல் இருந்து 2024 இல் 159 ஆக மேம்பட்டது, இதற்கு காரணம் இந்திய அரசாங்கத்தின் நேர்மை அல்ல! வேறு சில நாடுகளின் பின்னடைவு காராணமாகவே இந்த மேம்பாடு நடந்துள்ளது.

இந்தியாவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து பாசிச பாஜகவின் ஆதரவு கோடி மீடியாக்கள் தொடர்ந்து பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனர். உலக செய்திகளை கூகுள் வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மை இந்தியர்கள் கோடி மீடியாக்கள் நடத்துகின்ற பிரச்சார தாக்குதல்களுக்கு பலியாகி கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இஸ்ரேல் நடத்துகின்ற பயங்கரவாத போர் பற்றிய விவரங்கள் இஸ்ரேலில் உள்ள மக்களுக்கும் தெரிந்து விடக்கூடாது வெளியிலும் வந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் அல் ஜசீராவை தடை செய்துள்ளது பாசிச  பெஞ்சமின் நெதன்யாகு கும்பல். ஆனால் இஸ்ரேலில் பிரதமர்  பெஞ்சமின் நெதன்யாகு முன்வைக்கின்ற பொய் பிரச்சாரங்களையும், இஸ்ரேலின் பாதுகாப்புக்காகவே அனைத்தும் நடக்கின்றது என்ற பித்தலாட்டங்களையும் இஸ்ரேலில் உள்ள 52 சதவீத மக்கள் நிராகரித்துள்ளனர் என்பது தான் நிலைமை. 

’சீப்பை ஒளித்து வைப்பதால் திருமணம் நின்று போகும்’ என்று சிந்திக்கின்ற முட்டாள்களைப் போன்றது தான் அல் ஜசீரா மீதான தடையாகும். பாலஸ்தீனத்தில் போர்க்களத்தில் உள்ள ஒவ்வொருவரும் செய்தியாளர்களாக மாறியுள்ளனர். வாட்ஸப் மற்றும் முகநூல் பக்கங்களில் மூலம் தனக்கு அக்கம் பக்கம் நடக்கின்ற கொடூரமான சூழலை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்திக் கொண்டே உள்ளனர்.

சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக உரிமைகளையும், கருத்துரிமைகளையும், சுதந்திரமான வாழ்க்கையையும் அடியோடு ஒழித்துக் கட்டுவது தான் பாசிச பயங்கரவாதிகளின் முதற்பணியாகும். இதனை புரிந்து கொண்டு எதிர்வினையாற்றாமல் இருப்பது  நிரந்தரமான அடிமைத்தனத்திற்குள் ஆழ்த்திவிடும்.. அல் ஜசீரா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் தடைகளுக்கு எதிராக போராடுவோம்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here