மிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பொங்கல் பண்டிகை வருவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்ட கூடாது என்ற வகையிலும் பொங்கலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை தொடரலாம் என்று அரசு ஏற்றுக்கொண்டு உள்ளதாலும் தங்களது வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

காலிப் பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவது, பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசத் தொடங்குவது, பணியில் இருக்கும் பொழுது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுடன் பேச்சு வார்த்தையை நடத்தியது போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு. அதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது சரியா? அல்லது தமிழக அரசின் செயல்பாடு சரியா? என்பதை அறிந்து கொள்வதற்கு ஆறு கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதில் ஒரு கோரிக்கையை மட்டும் பரிசீலித்தால் கூட யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்த போக்குவரத்து தொழிலாளர்கள்” மற்ற ஐந்து கோரிக்கைகளை பிறகு பேசிக்கொள்ளலாம். தற்பொழுது உடனடியாக ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பஞ்சப்படியை அதாவது அவர்களுக்கு கொடுக்காமல் நிலுவை வைத்துள்ள(தமிழக அரசு தொழிலாளர்களிடம் வைத்துள்ள கடன்) தொகையையாவது கொடுங்கள்” என்று தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டது. ஆனால் அதையும் கூட தற்பொழுது கொடுக்க முடியாது என்றும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்றும் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக தமிழக அரசு பதில் கூறியது. இதனால் வேறு வழியற்ற நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக பஞ்சப்படி வழங்கப்படவில்லை. இந்த வகையில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படாமல் உள்ளது. இப்படி 96 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 6 ஆயிரம் ரூபாய் வழங்காமல் இருப்பது என்பது எவ்வளவு பெரிய தொகை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதை எப்படி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்? தொழிலாளிக்கு கொடுக்க வேண்டிய ஓய்வூதியத்தில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு மீதியை மட்டுமே அவர் கையில் கொடுக்கிறார்கள். 6 ஆயிரம் ரூபாயை இவர்கள் (தமிழக அரசு) இஷ்டத்திற்கு செலவு செய்து கொண்டு “நாங்கள் பிறகு கொடுக்கிறோம்” என்று கூறுகிறார்கள். இந்த வகையில் ஒரு தொழிலாளிக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக கொடுத்தே தீர வேண்டிய தொகை ரூ.4,32,000. ஆனால் கொடுக்காமல் நிலுவையில் இருக்கக்கூடிய இதை கொடுக்க வேண்டும் என்று போராடுவதை யாராவது தவறு என்று கூற முடியுமா?

இந்த வகையில் சுமார் 2,000 கோடி ரூபாயை 96 ஆராயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் அதிமுக மற்றும் திமுக அரசுகள் வஞ்சித்து வருகின்றன. இது தொழிலாளர்களுக்கு வழங்கி இருக்க வேண்டிய ஓய்வூதியத்தொகை. அதை கொடுக்காமல் அதை எடுத்து வேறு செலவு செய்து கொண்டிருப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்காமல் நிலுவை வைத்துள்ள அந்த 2,000 கோடியை கூட பிறகு பேசிக் கொள்ளலாம் ஆனால் நடைமுறையில் இந்த மாதத்தில் இருந்தாவது அவர்களுக்கும் கொடுக்க வேண்டிய பஞ்சபடியை மாதாமாதம் முறையாக கொடுங்கள் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை வைத்தது. அதையும் தமிழக அரசு மறுத்துவிட்டது. திமுக அரசு தான் இப்படி நடந்து கொள்கிறது அதிமுக அரசு அதிமுக அப்படி அல்ல என்று யாரும் நினைத்து விட வேண்டாம் அதிமுகவின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த கொடுமை பெருமளவு நடந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது பதவியில் உள்ள திமுக அரசும் அதே வழியில் இப்பிரச்சனையை இழுத்தடிக்க முயல்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே எட்டு வருடங்களாக கொடுக்க வேண்டிய தொகையையும் கொடுக்க மாட்டோம் அதேபோலத்தான் இனிமேலும் மாத மாதம் கொடுக்க வேண்டிய பஞ்சப்படியை (நிலுவையின்றி முழுமையாக) கொடுக்க மாட்டோம் என்றும் அது பற்றி இப்பொழுது பேச முடியாது; பிறகு பேசிக் கொள்ளலாம் என்றும் அடாவடியாக தெரிவித்தது தமிழக அரசு.

இதையும் படியுங்கள்:

இந்த நிலையில் தான் வேறு வழியின்றி வேலை நிறுத்தத்தில் இறங்கிய போக்குவரத்து தொழிலாளர்கள் தற்பொழுது தங்களது வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளனர்

தமிழக அரசு தற்பொழுது நிதிச் சுமையில் இருக்கிறது எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்று கூறுவதற்கு தமிழக அரசிற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. அப்படி அரசின் நிதிச் சுமையை குறைக்க வேண்டும் என்று கருதினால் தமிழக அரசு அதிகாரிகளின் (ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து அல்ல) ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்தும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர், ஆளுநர் போன்றோரின் ஊதியத்தில் ஒரு பகுதியை பிடித்தம் செய்தும் தமிழக அரசின் நிதிச் சுமையை குறைக்க முயற்சி செய்யட்டும். தமிழக அரசின் நிதி நிலையை சரி செய்த பிறகு அவர்களுக்கு , அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகையை திரும்ப செலுத்திக் கொள்ளட்டும்.

தமிழக அரசின் அதிகாரிகளே, அரசியல்வாதிகளே போக்குவரத்து தொழிலாளர்களின் வருமானத்தில் கை வைக்காதீர்; அவர்களின் வயிற்றில் அடிக்காதீர்.

தமிழக மக்களே,
தங்களின் நியாயமான உரிமைக்காக போராடும் போக்குவரத்து தொழிலாளர்களை ஆதரித்து நிற்க வேண்டியதை தங்கள் தார்மீகக் கடமை என்பதை உணருங்கள்.

பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here