2023 ஆகஸ்டு மாதம், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை தன்னுடன் பயின்ற ஆதிக்க சாதி மாணவர்களின் கொடூரமான அரிவாள் வெட்டுக்கு ஆளாகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு தமிழக அரசின் குறிப்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் நேரடி பார்வை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பள்ளியின் கண்காணிப்பு ஆகியவற்றின் காரணமாக அவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 600 க்கு 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்ற செய்தி தமிழகத்தில் அனைத்து சமூக ஊடகங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

உண்மைதான் சாதி தீண்டாமை கொடுமைகளை அரசு தீவிரமாக கண்காணித்து ஒடுக்குபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்பதும் என்ற கடமையை முறையாக செய்கின்ற போது பல சின்னதுரைகள் உருவாவார்கள் என்பது உண்மைதான்.

ஆனால் இது விதிவிலக்காக நடைபெறுகின்ற சம்பவம். அதை வைத்துக் கொண்டு தமிழகத்தின் பொது போக்கு இவ்வாறு மாறிவிட்டதாக நாம் பெருமையடைய முடியாது என்பதை தான் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவர் அஜித் குமார் தற்கொலை செய்து கொண்ட கொடுமை நிரூபிக்கிறது.

தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு படிக்கச் சென்ற பண்ருட்டி அருகில் உள்ள பாபுகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் அஜித் குமார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளார். இந்த தற்கொலைக்கு மருத்துவக் கல்லூரியின் டீன் பாலாஜி நாதன் முதல் கல்லூரியின் விடுதி காப்பாளர் முருகேசன் வரை அனைவரும் காரணம் என்று அவருடன் பயின்ற மாணவர்கள் போலீசில் புகார் கொடுத்த பின்பும், கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தை ஆண்டு வரும் ’சமூக நீதி’ ஆட்சி அதற்கு எதிராக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.

நீட் தேர்வு எதிர்ப்பு, அனிதாவின் நினைவு தினத்தை தொடர்ச்சியாக நினைவு கூர்வது போன்ற காரணங்களை காட்டி ’நீ எல்லாம் படித்து என்ன கிழிக்கப் போகிறாய்’ என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காட்டிய விடுதிக்காப்பாளரும், கல்லூரி பேராசிரியரும், இதனை அனுமதித்து வந்த மருத்துவக் கல்லூரி டீனும், மாணவர் அஜித் குமார் இறந்த பின்பு எந்த குற்ற உணர்ச்சிக்கும் இதுவரை ஆளாகவில்லை.

மாறாக மாணவரின் சடலத்தை வாங்க பெற்றோர்கள் சென்ற போது, ”எதுவானாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். வழக்கு என்று செல்லாதீர்கள்” என்று பேசுவதற்கு மட்டும் துணிச்சல் வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களாக இதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பது இந்த துணிச்சலுக்கான காரணத்தை நமக்கு புட்டுக்காட்டுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது என்ற புள்ளிவிவரத்துடன் அம்பலப்படுத்தினால் திமுகவின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்! பாசிசத்தை எதிர்த்து போராடுவதற்கு நம்முடன் வருகின்ற திமுகவை நாமே நம்பிக்கை இழக்க வைப்பதா? என்று குழம்புகின்றனர் முற்போக்கு பேசும் சிலர்.

இதையும் படியுங்கள்: நாங்குநேரிகளுக்கு தீர்வு காண்பது எப்படி?

”கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பினாமி ஆட்சி தான் நடந்து வந்தது, அதில் அதிகார வர்க்கம் குறிப்பிட்ட அளவிற்கு இந்து பாசிச உளவியலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அவர்களை உடனடியாக மாற்ற முடியவில்லை” என்று சமாதானப்படுத்துகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவலின்படி, தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்கள், பட்டியலினத்தோருக்கு வன்கொடுமைகள் நடக்க வாய்ப்புள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களின் அளவு, பண்பு ரீதியான மாற்றத்தை எட்டியுள்ளது. பட்டியலின சமூகத்தில் முன்னணி பாத்திரம் வகிக்கின்ற படித்த இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக பிற சாதிகளில் திருமணம் செய்து கொள்கின்ற பட்டியலின இளைஞர்களின் பெரும்பான்மையானோர் நன்றாக படித்து வேலை பார்ப்பவர்களாகவே உள்ளனர். இவ்வாறு நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு கிடந்த மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் படிப்படியாக முன்னேறி தனக்கு சமமாக நடமாடுவதா என்ற ஆதிக்க சாதியின் வெறித்தனமான, கீழ்த்தரமான சிந்தனை முறை ஏதாவது ஒரு வகையில் ஒடுக்குமுறையாக வெளிப்படுகிறது.

பத்திரிகைகளிலோ அல்லது செய்தி ஊடகங்களிலோ சில செய்திகள் வெளி வந்த பிறகு தான் இந்த பிரச்சனை பற்றி நாம் பேச துவங்குகிறோம். ஆனால் சமுதாயத்தில் புரையோடி கிடக்கின்ற சாதிய கட்டமைப்பை உடைத்தெறிவதற்கு தொடர்ச்சியான பிரச்சாரம், போராட்டம் என்ற முறையில் வேலைகள் நடப்பதில்லை.

”தீண்டாமை குற்றம் புரிகின்ற ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்!” என்று தென் மாவட்டங்களில் நடந்த சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிரான இயக்கம் நடத்திய போது எமது அமைப்பு முன் வைத்தது. அப்போது இட ஒதுக்கீட்டை ரத்து செய் என்பது பார்ப்பன கும்பலின் குரலாகும் என்று அவதூறு பிரச்சாரம் செய்தனர் பிற்படுத்தப்பட்ட, மேல் சாதி கும்பல்.

ஆனால் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு ரத்தாகிறது என்ற செய்தியை எமது அமைப்பு தோழர்கள் கிராமப்புறங்களில் பிரச்சாரம் செய்த போது முதலில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு ரத்தாகிறதா? அப்படியென்றால் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று கூட்டம் முடிக்கின்ற வரையில் கூட அமராமல் சந்தோஷமாக எழுந்து சென்றனர் பிற்படுத்தப்பட்ட மேல் சாதிகள்.

இதையும் படியுங்கள்: சம உரிமை ; இட ஒதுக்கீடு=பார்ப்பன மேலாதிக்கம்!

இத்தகைய கொடூரமான மனோபாவம் தான் சாதிய அடக்குமுறைக்கும், தீண்டாமை குற்றங்களுக்கும் காரணமாக உள்ளது. வர்க்க வாழ்க்கையில் இருவரும் ஒரே வேலையை செய்து வந்தாலும் பட்டியலின மக்களை விட நாங்கள் மேலானவர்கள் என்ற சிந்தனையும், அவர்களுடன் எங்களால் ஒத்துப் போக முடியாது என்ற மனப்பான்மையும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பட்டியலின மக்களின் மீதான ஒடுக்கு முறைக்கு காரணமாக அமைகிறது.

இதற்கு அடிப்படையாக, கடந்த 10 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஆதிக்க சாதிகளை வட மாவட்டங்களில் வன்னியர், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர், மத்திய மாவட்டங்களில் முத்தரையர், கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சாதிகளை தொடர்ச்சியாக சந்திப்பதும், ஆதிக்க சாதியின் பெருமிதத்தை ஊக்குவிப்பதும், சாதி ரீதியான பண்பாடுகள் மற்றும் திருவிழாக்களுக்கு கணிசமான நிதியுதவி செய்வதும், ஆதிக்க சாதிகளுக்கு சாதி பெருமிதத்தையும், சமூகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமை குற்றம் புரிவதை பெருமையாக கருதுகின்ற திமிர்த்தனமும் அதிகரிக்க காரணமாக உள்ளது என்பது மறக்க முடியாத உண்மையாகும்.

சாதி தீண்டாமை கொடுமைகளை ஆய்வு செய்து தொடர்ந்து அதற்கு எதிராக போராடுவதில் புரட்சிகர, ஜனநாயக இயக்கங்கள் பலவீனமாக உள்ளது என்பது சுய பரிசீலனைக்குரிய அம்சமாகும். அரசியல் அதிகாரத்தில் உள்ள கட்சிகள் நேர்மையாக செயல்பட்டால் குறிப்பிட்ட அளவிற்கு சாதி தீண்டாமை கொடுமைகளை கட்டுப்படுத்த முடியும் என்பது மட்டுமின்றி ஒடுக்கு முறைக்கு உள்ளாகின்ற மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முடியும் என்பதை தான் சின்னதுரையின் அனுபவம் நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் இதற்கு நேர் மாறாக பண்ருட்டி மருத்துவ மாணவர் அஜித்குமாரின் அனுபவமோ சாதி தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளை கட்டிக் காக்கின்ற சமூக அமைப்பை முழுமையாக தகர்த்தெறியாமல், அதற்கு பொருத்தமான போராட்ட முறைகளை கையிலெடுக்காமல் தீர்வு காண முடியாது என்பதை தான் சுட்டிக்காட்டுகிறது.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here