இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் விமர்சித்து வந்துள்ளனர். தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ,SIR தொடர்பாக தன்னிச்சையாகவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்பதையும், இதன் மூலம் பாசிச மோடி அரசின் தேர்தல் வெற்றிக்கு துணை போயிருப்பதையும் ஞானேஸ் குமாருடன் உள்ள சக தேர்தல் ஆணையர்களின் கடிதம் அம்பலப்படுத்துகிறது.
டாக்டர் சுக்பீர் சிங் சாந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகிய இரு தேர்தல் ஆணையாளர்களும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மோடி அமித்ஷா பாசிச கும்பலை விடவா ஞானேஷ்குமாரின் பிரச்சினை தீவிரமானது? அதையும் பார்ப்போம்.
பாசிசத்தின் எந்த பிரிவு அதிக ஆபத்தானது?
ஆர் எஸ் எஸ் ஆல் உருவாக்கப்பட்ட பாஜக கட்சியானது நாட்டு மக்கள் முன் வெளிப்படையாக தெரிகிறது. மோடி அமித்ஷா யோகி கும்பல் பகிரங்கமாகவே மக்கள் முன் நின்று தமது பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறார்கள்.
இவர்களால் உருவாக்கப்பட்ட வானரப்படைகள் புல்டோசர்களுடன் சென்று மசூதிகளையும், மதச் சிறுபான்மையினரின் வீடுகளையும் இடித்துத் தள்ளுகின்றன. பிள்ளையார் சிலைகளை தூக்கிக்கொண்டு கையில் வாள் மற்றும் சூலாயுதத்தை ஏந்தி சென்று தெருவில் வம்பு இழுக்கின்றன. இந்த பிரிவு ஆபத்தானது என்றாலும் அது மக்களின் பார்வைக்கு பளிச்சென்று தெரிகிறது.
மக்களின் பார்வைக்கு வராத ஒரு பிரிவும் உள்ளது. அதுதான் அரசின் பல்வேறு துறைகளில் உயர் மட்டங்களில் ஊடுருவியுள்ள அதிகார வர்க்க சங்கிகள். அத்தகைய கேடுகெட்ட அதிகார வர்க்க சங்கிகளில் ஒருவராகத்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திகழ்கிறார். அவரிடம் வெளிப்பட்டு இருப்பது வெறும் அதிகாரவர்க்கத்திமிர் அல்ல; அது பாசிச சர்வாதிகாரம்.
பாசிஸ்டுகளின் இயல்பு எது?
ஜெயலலிதாவை வகை மாதிரிக்கு எடுத்துப் பார்ப்போம். அவர் முதலமைச்சராக இருந்தபோது அவரின் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் வெறும் ரோமங்கள் தான். வெறும் பூஜ்ஜியங்கள் மட்டும்தான். இதை அவரே பகிரங்கமாகவும் சொல்லியுள்ளார். ரோமத்துக்கு உடம்பில் இருக்கும் வரை தான் மதிப்பு; பூஜ்ஜியங்களுக்கு எண்களுடன் சேர்ந்து இருக்கும் வரை தான் மதிப்பு.
படிக்க:
♦ ஞானேஷ்குமார் இனியும் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் நீடிக்கக் கூடாது!
♦ ஞானேஷ்குமார்: தேர்தல் ஆணைய வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளி…!
அதிமுகவை பொருத்தவரை அமைச்சர்கள் வெறும் தலையாட்டி பொம்மைகள் தான். அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக ஜெயாவே எடுப்பார். அதற்கு தலையாட்டுவதும், அந்த முடிவை விசுவாசமாக அமல்படுத்துவது மட்டும்தான் அதிமுக அமைச்சரவையின் கடமை. இன்றைய எடப்பாடி, செங்கோட்டையனும் கூட ஜெயாவுடன் இருந்த ரோமங்களும் பூஜ்ஜியங்களும் தான்.
மோடியை எடுத்துக் கொண்டாலும் அதே அணுகுமுறைதான். அனைத்து முடிவுகளையும் துறை சார்ந்த அமைச்சர்களோ, அமைச்சகங்களோ எடுப்பதற்கு விடாமல், அனைத்தையும் பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டார் மோடி. சிங்கிள் விண்டோ சிஸ்டம் என்று சர்வ அதிகாரத்தையும் தனது கரங்களில் குவித்துக் கொண்டு மற்றவர்களை தலையாட்டிகளாகவே (பூஜ்ஜியம் அல்லது ரோமங்களைப் போலவே) வைத்திருக்கிறார்.
அதிகார வர்க்க சங்கி!
ஜெயா, மோடியின் அணுகுமுறைகளையே தான் அதிகார வர்க்கத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் சங்கிகளும் அமல்படுத்துகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் தலைமை தேர்தல் ஆணையரான ஞானேஷ்குமார்.
தேர்தல் ஆணையத்தில் திருவாளர் ஞானேஷ் குமாருடன் உள்ள இரு சக தேர்தல் ஆணையர்கள் 14 முறை கடிதம் தந்துள்ளனர். அதில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் குறித்தும் முடிவுகள் குறித்தும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளனர். சங்கி ஞானேஷ்குமாரின் அதிகார வர்க்க செயல்பாடுகளை தடுக்க இது துளி கூட உதவவில்லை.
தான் சட்டத்தை மீறுகிறோம் என்பதையோ, சக ஆணையர்களின் ஒப்புதலைப் பெற தவறுகிறோம் என்பதையோ, தன் ஒருவனின் முடிவையே சர்வாதிகாரமாக கீழே அமல்படுத்துகிறோம் என்பதையோ அறியாமல் செய்யவில்லை திருவாளர் ஞானஷ்குமார் அவர்கள்.
தன்னுடன் உள்ள சக தேர்தல் ஆணையர்களை பூஜ்ஜியங்களாகவோ, ரோமங்களாகவோ கருதும் பண்பு ஞானேஷ் குமாருக்கு எங்கிருந்து வருகிறது? அதுதான் பாசிஸ்டுகளுக்கே உரிய இயல்பு. தலைமைத் தேர்தல் ஆணையர் இப்படி சட்டத்தை மதிக்காமல், சக ஆணையர்களான தங்களையும் மதிக்காமல், திமிர் எடுத்து சர்வாதிகாரமாக உத்தரவுகளை பிறப்பித்து அமல்படுத்தும் போது, மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கும் கோபம் வந்திருக்க வேண்டும்.
இவர்கள் இருவரும் உண்மையிலேயே சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவர்களாக இருக்கும் பட்சத்தில், மக்களின் வரிப்பணத்தில் இருந்து மாத ஊதியம் பெறுகிறோம் என்ற புரிதல் இருக்கும் பட்சத்தில், தலைமை தேர்தல் ஆணையரை எதிர்த்து களம் கண்டிருக்க வேண்டும். ஆனால் அது வெறும் கடிதத்துடன் முடிந்தது ஏன்? யாரைக் கண்டு அல்லது எதை கண்டு அச்சம்?
பாசிஸ்டுகளை எதிர்த்து துணிந்து நில்லுங்கள்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக சக நீதிபதிகள் போர்க்கொடி தூக்கினர். இந்திய உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு (Dipak Misra) எதிராக, அவருக்கு அடுத்தபடியாக இருந்த நான்கு மூத்த நீதிபதிகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அது போல் தலைமை தேர்தல் ஆணையர்கள் இருவரும் மீடியாக்கள் முன் வந்திருக்க வேண்டும்.
படிக்க:
♦ தொழிற்சங்கங்களின் மீது வெறுப்பை உமிழும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
♦ உள் அரங்கிலும் பேசாதே: தடை போட்ட தேர்தல் ஆணையம்! பாசிச மயமாகும் அரசு கட்டமைப்பு!
பாசிசம் வெறியாட்டம் போடும்போது சுற்றி இருப்பவர்களின் மௌனம் தான் பாசிசம் மேலும் வெறியாட்டம் போடுவதற்கான எரிபொருள் ஆகிறது. அதிகார வர்க்கத்தில் சுமார் 10 சதவீதம் பேர் பாசிஸ்ட்டுகளாகவோ, காவிக் கும்பலின் கையாட்களாகவோ செயல்படும் போது, பெரும்பான்மையாக உள்ள 90 சதவீதம் பேரின் மௌனமே அவர்களை மேலும் முன்னேறிச் செல்ல தூண்டுகிறது.
பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்றால் வெறும் கடிதங்கள் போதாது. வெறும் கருத்தோ, கண்டனக் குரல்கள் மட்டுமோ போதாது. பாசிசத்துக்கு எதிராக ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒவ்வொரு அதிகார மட்டத்திலும் நேருக்கு நேர் நின்று மோதி ஆக வேண்டும்.
உழைக்கும் மக்கள் பாசத்தை எதிர்த்து களத்தில் நிற்கின்றனர்.அதிகார வர்க்கத்தில் எத்தனை பேர் இதற்கு துணிவீர்கள்? வெளிப்படையாகத் தெரியும் பாஜக அரசாங்கங்களை விடவும் ஆபத்தானது அரசின் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை கைப்பற்றி இருக்கும் அதிகார வர்க்க சங்கிகளின் செயல்பாடுகள்தான். அதை வெளியே கொண்டு வருவது அந்த துறைகளில் உள்ள மனசாட்சி உள்ள, மக்களுக்கு நேர்மையாக செயல்பட விருப்பம் உள்ள அதிகார வர்க்கத்தினரின், அரசு ஊழியர்களின் கடமையாகும்.
தூங்குபவனைத் தான் எழுப்ப முடியும்; நடிப்பவனை அல்ல!
டெங்கு தாக்கியுள்ளது என்பதை ரத்தப் பரிசோதனையில் கண்டறிந்து சிகிச்சை தருவது தான் பொருத்தமானது. டெத் சர்டிபிகேட்டை வைத்து நிரூபிப்பதால் பலன் இல்லை. எங்கே பாசிசம் அல்லது பாயாசம் என்று கேட்பவர்களை எழுப்பவோ, திருத்தவோ முடியாது.
பாசிசம் என்பது தேர்தல் கட்சிகள் உருவாக்கும் அரசாங்கங்களில் மட்டும் ஊடுருவி இருக்க வில்லை; இந்திய அரசின் பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்புகள் வரை ஊடுருவியுள்ளது. எனவே அதிகாரவர்க்க காவி கிரிமினல்களை தேர்தல்களின் மூலம் மாற்ற முடியாது. அவர்களை மாற்ற வேண்டும் என்றால் சட்டத்தின் துணை வேண்டும். சட்டத்தை வரையறை செய்து தந்துள்ள அரசியலமைப்பு சட்டத்தின் துணை வேண்டும். அதாவது கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கு துணை செய்யவும் அரசியல் அமைப்புச்சட்டம் தூக்கி எறியப்பட்டு, நாட்டு மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் உதவக்கூடிய புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
அதை சரியாக அமல்படுத்துவதன் மூலம் தான் அதிகார மட்டத்தில் ஊடுருவியுள்ள காவி பாசிஸ்டுகளை களையெடுக்க முடியும்.
ஞானேஷ்குமார் ஒரு வகை மாதிரி தான். பாசிசம் அரசின் பல்வேறு உறுப்புகளில் ஊடுருவியுள்ளது. அரசாங்கங்களில், சட்டமன்றம் – நாடாளுமன்றங்களில் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டது என்பதை உணர்ந்து இப்பொழுதே சிகிச்சைக்கு நாட்டை உட்படுத்துவோம்.
“பாசிசம் எங்கே இருக்கிறது?” என்று அறிவாளித்தனமாக கேட்டுக் கொண்டிருந்தால், பெயரளவுக்கான ஜனநாயகமும் புதைகுழிக்குள் போய்விடும் . டெங்குவால் மரணம் என்று இறப்புச் சான்றிதழ் வரும் போது எதையும் செய்ய முடியாது என்பது போல், பாசிசத்தால் நாடு அழிந்தது என்று வரலாற்றில் பதிவு செய்யப்படுவதால் எதையும் தடுக்க முடியாது.
இந்த நாட்டில் இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ, கடவுள் மறுப்பாளர்களோ, கம்யூனிஸ்டுகளோ, முற்றாக அழிக்கப்பட்ட பின் ஆமாம் இந்தியாவில் பாசிசம் தான் இருக்கிறது என்று கல்லறைகளின் மீது நின்று ஒப்புதல் வாக்குமூலம் தருவதால் ஒரு பயனும் ஏற்படாது.
எனவே இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் அரசு துறையின் பல்வேறு மட்டங்களில் உள்ள ஊழியர்கள் அனைவரும், அதிகார வர்க்கத்தில் மனசாட்சி உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ்கள் உள்ளிட்ட அனைவரும் பாசிசத்துக்கு எதிராக களம் காண வேண்டியது அவசியம். கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்புக் களம் அழைக்கிறது. வாருங்கள் கரம் கோர்ப்போம்.
- இளமாறன்






