டக்கவுள்ள 2026 தமிழ்நாடு புதுவை சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மக்கள் அதிகாரம் சார்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒரு கருத்தரங்கம் 05.04.2026ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 05 மார்ச் 2026 அன்று நிகழ்ச்சி நடக்க இருந்த நாளில் தேர்தல் ஆணையம் தனது அதிகாரிகளின் மூலம் கடும் நெருக்கடியை தந்து பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகளை அச்சுறுத்தியது. நிகழ்ச்சியை நடத்துவதற்கான தயாரிப்பில் இருந்த மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கு அனுமதி மறுத்து கூட்டத்தை ரத்து செய்ய வைத்துள்ளது. தன்னிடம் அனுமதி வாங்காமல் பேசுகிறார்கள் என்ற ஒரு அம்சம் மட்டும் இதற்கு பின்னிருக்கும் காரணம் அல்ல.

தேர்தல் ஆணையத்தின் நிறம் காவி!

இதன் மூலம் தேர்தல் ஆணையம் எதைச் சொல்ல விரும்புகிறது? தேர்தலைப் பற்றி யார் எந்த கருத்தை பேசுவதாக இருந்தாலும் முதலில் எங்களின் அனுமதியை வாங்க வேண்டும் என்கிறது.

சுவாசிக்க வேண்டுமா? தாகத்திற்கு தண்ணீர் குடிக்க வேண்டுமா? தும்மல் வருகிறதா? எதை செய்வதாக இருந்தாலும் என்னிடம் அனுமதி வாங்கு என்று சொன்னால் அது எவ்வளவு கேலிக்கூத்தோ அதைப் போன்றது தான் நடக்கின்ற அரசியல் நிகழ்வுகள் குறித்து ஒரு அமைப்பு தனது கருத்தை முன்வைப்பதை தடுப்பதும்.

மக்கள் அதிகாரம் முன் வைத்துள்ள தேர்தல் நிலைப்பாடு என்பது நேரடியாக பாசிச பாஜகவையும் அதன் அடிமை அதிமுகவையும் அம்பலப்படுத்தி தாக்குகிறது. அதே நேரம், பாஜக – அதிமுக கூட்டணிக்கு எதிராக களமாடும் திமுகவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவும் மறுக்கிறது. அவர்கள் முன்வைக்காத, அல்லது அவர்கள் செல்ல தயங்கும் மாற்று பாதையை முன்வைத்து, அந்த திசையில் அவர்களை நிர்பந்திக்க வேண்டும் என்கிறது. திமுக தலைமையிலான கூட்டணிக்கு அந்த நிர்பந்தத்துடன் கூடிய ஆதரவை தர வேண்டும் என்கிறது. அதாவது மக்கள் அதிகாரத்தின் முழக்கமானது பாஜகவுக்கும் சரி, திமுகவுக்கும் சரி உவப்பானதாக இருக்காது தான்.

அரங்க கூட்டத்தை நடத்த விடவே கூடாது; மேற்கண்ட கருத்தை பேசவே அனுமதிக்க கூடாது; என பதற வேண்டிய தேவை பாசிச பாஜகவிற்கும் அதன் அடிவருடிகளுக்கும் தான் உள்ளது. அவர்களின் திட்டப்படி ஒரு புகார் அனுப்பப்பட்டு, அந்த புகாரையே முகாந்திரமாக வைத்து தேர்தல் ஆணையம் தனது சாட்டையை சுழற்றுகிறது. மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கு ஏன் அரங்கை தருகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகளை கண்டிக்கிறது.

எந்த அமைப்பினருக்கு அரங்கை வாடகைக்கு விட வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? மக்கள் அதிகாரம் தனது கருத்தை தானே முன்வைக்க போகிறது. மக்கள் அதிகாரம் சில கட்சிகளை விமர்சிக்கிறது என்றால் அதற்கு பிற கட்சியினர் பதில் தந்துவிட்டு போகலாம் தானே. இதை கணக்கில் எடுக்காமல் ஒருதரப்பின் பிரதிநிதியாக மூக்கை நுழைக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் தேர்தலை நேர்மையாக நடத்தும் என்று நம்ப முடிகிறதா?

தமது செயல்பாடுகள் சட்டவிரோதமானவை என்பதால் மொன்னையாக ஒரு தீர்வை முன் வைக்கிறது. அதாவது, அவர்களிடம் அனுமதியை வாங்கிய பின் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாமாம். அந்த அனுமதியை தீவிரமாக குறுக்கிட்டும், தொடர்ந்து அச்சுறுத்தியும் பிரச்சினை செய்தற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை அன்றே தந்து தொலைத்திருக்க வேண்டியதுதானே.

பிரச்சனை அனுமதி தொடர்பானது அல்ல; கூட்டம் நடத்தவே விடக்கூடாது; பாசிச பாஜகவை அம்பலப்படுத்தி பேசவிடக் கூடாது என்பதில்தான் அடங்கியுள்ளது.

படிக்க: நாடாளுமன்றத்தை பயன்படுத்திக் கொண்டே அரங்கேறும் காவிப் பாசிசம்! வக்ஃப் சட்டத்திருத்தம் – மேலும் ஒரு எடுத்துக்காட்டு!

ஒரு அமைப்பு தனது கருத்தை பேசுகிறது என்றால், அது வெளியில் உள்ள ஒரு ‘தேசப்’பற்றாளனுக்கோ, கொள்கைப்பற்றாளனுக்கோ கசக்கிறது என்றால், தேர்தல் ஆணையம் காவல்துறையை வைத்து சட்டம் ஒழுங்கை பராமரித்து கூட்டம் நடத்துவதைத்தான் உத்தரவாதம் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு ஒற்றை நபரின் புகாரை கணக்கில் எடுத்துக் கொண்டு உள்ளரங்க நிகழ்ச்சியை தடுக்கிறது என்றால், அந்தப் புகாரின் சாராம்சத்தோடு தடை போடும் அதிகாரிகளும் உடன்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

தேர்தல் ஆணையத்தின் புனிதப் பணி!

தேர்தலில் போட்டியிடும் கூட்டணியையோ, கட்சியையோ, வேட்பாளர்களையோ நாயே, பேயே என்று திட்டி பேசலாம். தேர்தல் ஆணையத்திற்கு அதுவெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட கட்சியோ, தனிநபரோ மான நஷ்ட வழக்கு தொடுத்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அலட்சியமாக கடந்து சென்று விடுகிறது.

ஆனால் அரசியல் ரீதியாக கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளின் கூட்டணியை, செயல்பாடுகளை அம்பலப்படுத்துவதும், காவிகளின் பிடியில் நிறம் மாறி வரும் அரசு கட்டமைப்பை பற்றி அம்பலப்படுத்துவதும், அதற்கு ஒரு மாற்றை முன் வைப்பதும்தான் தேர்தல் ஆணையத்தை குலைநடுங்க வைக்கிறது. அல்லது தேர்தல் ஆணைய அதிகாரிகளை பின்னிருந்து இயக்கும் கட்சிகளுக்கு குலை நடுக்கத்தை தருகிறது.

பிரஸ் கிளப்பில் மக்கள் அதிகாரம் மற்றும் அவர்களுடன் இணைந்துள்ள அமைப்புகளின் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட அனுமதிக்க மாட்டார்களாம். கடுமையாக போராடியே பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளது மக்கள் அதிகாரம்.

தடிக்கு நோகாமல் பாம்பை அடிப்பது!

காவி இருளானது நீதி, நிர்வாகத்துறையில் மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்திலும் பரவுகிறது என்பதையே நடப்பு நிகழ்வுகள் காட்டுகின்றன. எத்தகைய சர்வாதிகாரப் போக்குடன் காவிகளுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் களத்தில் நிற்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

படிக்க: நீதிமன்றங்கள் புத்தகங்களுக்கு தடை விதிக்க முடியுமா?

தன்னை ஜனநாயகத்தின் காவலர்கள் என்று முன்னிறுத்திக் கொள்ளும் நபர்களுக்கு, ஊடகங்களுக்கு இத்தகைய தாக்குதல்கள் கண்ணிலேயே படாது தான். நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் குறித்து தலைப்பிடப்பட்டு ஒரு நூல் வெளி வருவதாக கீழைக்காற்று பதிப்பகத்தின் முகநூலில் பிரச்சாரம் செய்யப்பட்டபோது உயர்நீதிமன்றம் அதற்கு தடை போட்டது. அப்போதும் “கருத்து தந்தசாமி”களில் பலரும் கண்ணை மூடிக்கொண்டனர். இப்பொழுதும் அவர்கள் உறக்கத்தில் தான் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு முட்டுக் கொடுக்கும் அறிவாளிகள் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் கிலோ என்ன விலை என்று கேட்டுச் சொல்வார்களா? அல்லது “இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கணும்” என்று கடந்து சல்வார்களா?

உள்அரங்க கூட்டம் தடை செய்யப்பட்ட நாளில் கூட சிலர் ‘தீவிரமாக’ அரசியல் பேசி உள்ளனர். அரங்கை பிடித்து ஆட்களை திரட்டி வளைகுடா போர் பற்றியோ, தனிநபர் தாக்குதல்களாக தேர்தல் களத்தில் ஒருவருக்கொருவர் வசைப்பாடிக் கொள்ளும் இலக்கற்ற அக்கப்போர்களை தீவிரமானதாக எடுத்து மணிக்கணக்கில் வீடியோ பேசுவதன் மூலமோ, கூர்மையாக அரசியல் களத்தில் நடத்த வேண்டிய விவாதத்தை மடை மாற்றுகின்றனர் சில ‘இடதுசாரி’ செயற்பாட்டாளர்கள்.

தலைநகர் சென்னையில் ஒரு நாளில் பல கூட்டங்கள் நடக்கிறது. அதில் எல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு எவ்வித தடையும் இல்லை. பத்திரிக்கையாளர் மன்றத்திலும் கூட தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் எல்லாம் தேர்தல் ஆணையம் இப்படி தலையிட்டது இல்லை. ஏனென்றால் அத்தகைய கூட்டங்கள் எதிரிகளுக்கு எத்தகைய அச்சத்தையும் உருவாக்கவில்லை. எனவே அதற்கு எதிராக எந்த எதிர்வினையும் நடக்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம் தான்

படிக்க: காவிக் கூட்டத்தின் கைத்தடி ED-க்கு எதிராக மம்தா கொடுத்த செருப்படி!

தேர்தல் ஆணையத்தின் அல்லது தேர்தல் ஆணையத்தை பின்னின்று இயக்கும் கட்சியின் மனம் கோணாமல் அரசியல் செய்யும் அறிவாளிகளாக தமிழகத்தில் பலர் உள்ளனர். ‘இத்தகைய கலையில் ‘  நிபுணத்துவம் பெறாமல்தான் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் தடைகளை சந்திக்கின்றனர்.

நாம் கடந்து போகலாமா?

பாஜக அதிமுக கூட்டணியை விமர்சித்து தலைப்பு வைத்து ஒரு கருத்தரங்கத்தைக் கூட நடத்த முடியாது என்ற எதார்த்தத்தை நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் புறக்கணிக்க கூடாது. விமர்சனத்தைக் கண்டு, அதாவது கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளாகவே பாசிஸ்டுகள் எப்போதுமே இருந்து வருகிறார்கள். அதற்கு ஏற்பவே அரசின் உறுப்புகளை ஏவி ஜனநாயகத்தின் குரல்வளையில் மிதிக்கிறார்கள். அல்லது தமது குண்டர் படையை ஏவி படுகொலைகளை செய்கிறார்கள்.

இத்தகைய சூழலில் அச்சப்படுபவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள்; காரியவாதிகள் தடிக்கு நோகாமல் பாம்பை அடிக்கிறார்கள். துணிந்தவர்கள் எதிர்த்து களமாடுகிறார்கள். நாம் யார் என்பதை களத்தில் நிரூபிப்போம்.

இளமாறன்

3 COMMENTS

  1. உள் அரங்கிலும் பேசாதே ! தடை போட்ட தேர்தல் ஆணையம் ! பாசிசமயமாகும் அரச கட்டமைப்பு !

    தோழர் இளமாறன் கட்டுரை சிறப்பு.

  2. உள் அரங்கிலும் பேசாதே ! தடை போட்ட தேர்தல் ஆணையம் ! பாசிசமயமாகும் அரச கட்டமைப்பு !

    மக்கள் அதிகாரம் கருத்துக்கு எதிர்வினை ஆற்ற முடியாமல் கோழைகளாக ஆர் எஸ் எஸ் பிஜேபி பாசிஸ்டுகள் தேர்தல் அதிகாரிகள் காவல் துறை இரண்டையும் தனது கை பாவையாக பயன்படுத்தி மக்கள் அதிகாரம் கூட்டத்தை முடக்கியது ஒரு இன செயல் தேர்தல் களத்தில் மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.

    தோழர் இளமாறன் கட்டுரை சிறப்பு.

  3. /உள்அரங்க கூட்டம் தடை செய்யப்பட்ட நாளில் கூட சிலர் ‘தீவிரமாக’ அரசியல் பேசி உள்ளனர். அரங்கை பிடித்து ஆட்களை திரட்டி வளைகுடா போர் பற்றியோ, தனிநபர் தாக்குதல்களாக தேர்தல் களத்தில் ஒருவருக்கொருவர் வசைப்பாடிக் கொள்ளும் இலக்கற்ற அக்கப்போர்களை தீவிரமானதாக எடுத்து மணிக்கணக்கில் வீடியோ பேசுவதன் மூலமோ, கூர்மையாக அரசியல் களத்தில் நடத்த வேண்டிய விவாதத்தை மடை மாற்றுகின்றனர் சில ‘இடதுசாரி’ செயற்பாட்டாளர்கள்./

    இடதுசாரி செயற்பாட்டாளர்கள் என்று யாரை குறிப்பிடுகிறிர்கள்?
    மருதையன் மற்றும் நாதன் அவர்களையா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here