தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள்; கொலை வெறியாட்டங்கள் தலை விரித்தாட துவங்கியுள்ளது என்பதை நிரூபிக்கின்ற வகையில் விழுப்புரம் மாவட்டம் ஆயத்தூர் கிராமத்தில் நடந்துள்ள சாதி வெறியாட்டம் மற்றும் வக்கிரமான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது. இது நிகழ்ந்து பத்து நாட்களுக்குள் மதுரை தங்க மோதிர திட்டத்திற்காக பாசிச கோமாளி விஜய் சென்றபோது கருப்புக்கொடி காட்டி விடக்கூடாது என்பதற்காக வீட்டிலேயே சிறை வைக்கப்பட்ட ஆகாஷ் டெலிசன் குடும்பத்தின் மீதான போலீசின் அடக்குமுறைகளும், கவின் படுகொலையில் குற்றப்பத்திரிகை நீதிபதியாலேயே திரும்ப பெறப்பட்டுள்ளதும் அடுத்தடுத்த நிகழ்வுகளாக மாறியுள்ளன.

பாசிச கோமாளி விஜய் பாஜகவின் பினாமி கும்பல்களில் ஒருவர் என்பதையும், சனாதனத்தை ஒழிப்பது பற்றி எந்த கவலையும் இல்லாத அவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் குறளை முன்னிறுத்தியதால் மனக் கிளர்ச்சியடைந்த தன்னார்வக் குழுக்கள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல்களை வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டி வந்த எவிடன்ஸ் கதிர், பீப்பிள்ஸ் வாட்ச் ஹென்றி திபேன் போன்றவர்கள், முன்னர் மார்க்சிய லெனினிய அமைப்புகளில் செயல்பட்டு விஜய் கவர்ச்சி போதையில் மயங்கிய சில தற்குறிகள் ஆகியோர் விஜய்யின் ஆட்சி சமத்துவத்தை கொண்டு வரப் போவதாக நம்பிக் கொண்டுள்ளார்கள்.

வடமாவட்டங்களில் வன்னிய சாதி வெறியர்கள்; தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் கிழக்கு மாவட்டங்களில் கவுண்டர்கள், முத்தரையர்கள், மேற்கு மாவட்டங்களில் கொங்கு கவுண்டர்கள் என்று ஆதிக்க சாதிகள் நடத்தி வருகின்ற வெறியாட்டங்கள் அதிகரித்து வருகிறது. இத்தகைய வெறியாட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழகத்தில் காலூன்றி வரும் ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார கும்பலால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்ற சூழலில், பாசிச கோமாளி விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் இத்தகைய காட்டுமிராண்டி கும்பல் தலை விரித்தாட துவங்கியுள்ளது என்பதையே விழுப்புரம்- வீரசோழபுரம் நிகழ்ச்சி கண் முன்னே காட்டுகிறது.

கிராமப்புறங்களில் தனி சுடுகாடு, தனி தேநீர் குவளை, தனியே வழிபாட்டு முறை உள்ளிட்டு 70 வகையான தீண்டாமை வன்கொடுமைகள் நுட்பமான வகையில் நடக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. மாறாக ஆதிக்க சாதி வெறியர்கள் போலீசு துணையுடன் பட்டியல் சமூக மக்களின் மீது தாக்குதல்களை அதிகரித்துள்ளனர் என்பதுதான் அம்பலமாகி வருகிறது.

90களில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகள் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒரு வர்க்கமாக திரட்டி விடும் என்பதை புரிந்து கொண்ட ஆளும் வர்க்கங்களும், மறுகாலனியாக்கத்தை திணித்த ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்க சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அடிவருடிகள் மக்களை பிளவுபடுத்துவதற்கு வர்க்க அரசியலுக்கு மாற்றாக அடையாள அரசியல் என்ற பெயரில் சாதி சங்கங்களை ஊக்குவித்தனர்.

ஆதிக்க சாதி வெறியர்கள் சங்கங்களை துவக்கி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு இந்த வாய்ப்பை மிக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர் என்ற நிலையில் தன்னை தற்காத்துக் கொள்வதற்கும், தன் மீதான ஆதிக்கத்தை உடைத்தெறிவதற்கும் பட்டியலின சமூக மக்களும், பழங்குடிகளும் தனது அடையாளத்தின் கீழ் ஒன்றிணையத் துவங்கினர்.

எனினும், இத்தகைய அடையாள அரசியலை பயன்படுத்திக் கொண்டு தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்ட பட்டியலின சமூகத்தின் தலைவர்கள் மக்கள் மீது நடத்தப் படுகின்ற தாக்குதல்கள், வெறியாட்டங்களை எதிர்த்து போராடுவதிலிருந்து படிப்படியாக பின்வாங்கி ஆதிக்க சக்திகளுடன் சமரசமாகி போகின்றனர்.

திமுக ஆட்சியில் வேங்கை வயல் கொடூரத்திற்கு எதிர்த்துப் போராடாத விடுதலை சிறுத்தைகள், தற்போது திமுக அணியில் இருந்து மாறி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு இத்தகைய கொடூரமான தாக்குதல்களை எதிர்த்து போராடுவதில் பின்தங்கி வருகிறது. தனிப்பட்ட முறையில் சிந்தனைச்செல்வன், ரவிக்குமார் போன்றவர்கள் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுகிறார்கள் என்பது உண்மைதான் என்ற போதிலும் அமைப்பு ரீதியாக சமரசம் அடைந்துள்ளனர் என்பதைத்தான் அவர்களின் போக்கு காட்டுகிறது.

படிக்க: 

♦ என்றுதான் மடியும்… ஆணவப் படுகொலைகளும்? ஆதிக்க சாதிவெறிக் கொழுப்பும்?

♦ ஆதிக்க சாதிவெறி சங்கங்கள், அதை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை தடை செய்!

இத்தகைய போக்கு திடீரென்று உருவானது அல்ல. அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்கள் நிறுவனமயமாகி தலித்துகளை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த துவங்கினார்கள் என்பதை ஆனந்த் தெல்தும் டே பல ஆண்டுக்கு முன்னரே அம்பலப்படுத்தி உள்ளார்.  விளைவு ஆதிக்க சாதி வெறியாட்டங்களில் பாதிக்கப்படுகின்ற பட்டியலின சமூக மக்கள் நிர்கதியாக நிற்கிறார்கள்.

ஏற்கனவே நிலவுடமை ஆதிக்கத்திற்கு எதிராக செங்கொடியின் கீழ் திரண்டு போராடிய மக்களிடையே அடையாள அரசியல் அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அரசியலே வேண்டாம் என்று விஜய் போன்ற தற்குறிகள் பின்னால் திரள்வது; விநாயகர் ஊர்வலங்களில் முன்னிலையில் நின்று குத்தாட்டம் போடுவது; விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மார்வாடி சேட்டுகள் கொடுக்கின்ற காசை வாங்கிக் கொண்டு வெறி கூச்சல் போட்டுக்கொண்டு அலப்பறை செய்வது என்பது போன்ற செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் பார்ப்பன (இந்து) மதத்தைப் பற்றி அம்பலப்படுத்தி எழுதிய நூல்களைப் படிப்பது; கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டுப் போராடுவது என்ற திசையில் இருந்து விலகிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், இதற்கு நேர் மாறாக ஆதிக்க சாதி வெறியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மனிதனை சக மனிதனாக மதிக்காமல் முகத்தில் சிறுநீர் கழிப்பது; பெண்களை திருமணம் செய்து கொண்டால் படுகொலை செய்வது; அதற்கும் கௌரவமாக ஆணவக் கொலை என்று பெயர் சூட்டுவது; சாதி மாறி திருமணம் செய்து கொண்டால் அவர்களை ஊரை விட்டும் புறக்கணிப்பது; பொருளாதார ரீதியாக அவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களின் மீது தாக்குதல் தொடுத்து மீண்டும் பராரிகளாக்குவது போன்ற வகைகளில் மீண்டு எழ முடியாத அளவிற்கு கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

பாசிச கோமாளி விஜய் ஆட்சியில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதாலேயும், சிலர் அமைச்சர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதாலேயும் இத்தகைய கொடுமைகள் குறைந்து வருகின்றன என்று கருதுவதற்கு அடிப்படையில்லை.

படிக்க:

♦ சாதிவெறி கொலைகாரனை கொண்டாடுவதற்கு வெட்கமாக இல்லையா?  

♦ வேங்கைவயல் வழக்கு: திமுக அரசும் காவல்துறையும் அணுகும் விதமே விசாரணையின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது!

பட்டியலின் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இதன் மீதான எதிர்வினைகள் குறைந்து வருவதற்கும், இத்தகைய தாக்குதல் குறித்து மௌனம் செலுத்துகின்ற பலரின் சிந்தனை முறையை தோலுரித்துக் காட்டுவதற்கும், வர்க்கங்களுக்கும் சாதிக்கும் உள்ள உறவு பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ள கருத்து ஆழமாக பரிசீலனைக்குரியதாகும்.

“இந்துக்கள் பலதரப்பட்ட சாதியினராக பிரிக்கப்பட்டு இருப்பது போலவே, சாதிகளும், பல வகைப்பட்ட வர்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்து எனப்படுபவர் சாதி உணர்வுள்ளவராகவே இருக்கின்றார். அதோடு வர்க்க உணர்வும் அவருக்கு உண்டு. அவர் சாதி உணர்வு உள்ளவரா அல்லது அவர் வர்க்க உணர்வு உள்ளவரா என்பது அவரை எதிர்க்கின்ற சாதியை பொறுத்து வெளிப்படுகிறது. அவர் எதிர்ப்புக்கு பாத்திரமாகும் சாதி அவர் சார்ந்திருக்கும், அவர் வர்க்கத்தை சேர்ந்த சாதியாக இருந்தால் அவர் சாதி உணர்வு உள்ளவராக இருக்கிறார். அவ்வாறின்றி அந்த சாதி அவரது வர்க்கத்தை சாராததாக இருந்தால் அவர் வர்க்க உணர்வு உள்ளவராக இருக்கிறார்” என்று தோலுரிக்கிறார்.

சாதி தீண்டாமை வன்கொடுமைகளில் இருந்து பெரும்பான்மை உழைக்கும் மக்களை பாதுகாப்பதற்கு தற்போது நிலவுகின்ற பாசிசமயமாகியுள்ள அரசு கட்டமைப்புக்குள் எந்த விதமான தீர்வும் கிடையாது. அதிகார வர்க்கத்தினரும், ஆதிக்க சாதியினரும் கூட்டு சேர்ந்து நடத்துகின்ற இத்தகைய சாதி வெறியாட்டங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால் கிராமங்கள் தோறும் சமூக நல்லிணக்க குழுக்களை உருவாக்குவதும், பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கும், திருப்பியடிப்பதற்கும் பொருத்தமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை முன்வைத்து போராட வேண்டும்.

இதனைக் கொள்கையாகவும், செயல் திட்டமாகவும் கொண்ட ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை உருவாக்கும் திசையில் முன்னேறிச் செல்வதும், சாதி- தீண்டாமை மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்பதில் துவங்கி சட்டரீதியாக போராடுவது மட்டுமின்றி சட்டத்துக்கு வெளியில் சமூக நீதியை நிலைநாட்டும் பாசிச எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பது வரையிலான வேலை முறைகள் தான் காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

  • தமிழ்ச் செல்வன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here