கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ?
பொதுவாகவே காலநிலையில் நிலை தன்மை இல்லாத போது காய்ச்சல் பரவுவது இயல்பானது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவும் காய்ச்சல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குழந்தைகளிடையே பரவுவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு கையாளவில்லை என்பது அனைவரின் குற்றச்சாட்டு!
அமைச்சரின் கருத்து:
தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறும் போது “எச்1 என்1 இன்புளுயன்சா காய்ச்சல் என்பது பருவகாலங்களில் வழக்கமாக வரக்கூடியது. தமிழகம் முழுவதும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை 1044 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 3 அல்லது 4நாட்களில் குணமாகி விடும். காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். அதற்காக பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் தலைவர்களின் பேட்டிகள் அறிக்கைகளைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்”.
அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் பதிவானவை மட்டுமே. அதைத்தாண்டி பல குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்கள். இது வெளியில் எப்படி தெரியும்? இப்போது இருக்கும் நிலைமையில் குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தாலே அது அனைவரையும் தொற்றிக் கொள்கிறது இப்படி இருக்கும் நிலைமையில் வீட்டில் இருந்தால் காய்ச்சல் பரவாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது அறிவியலுக்கு பறம்பானது இல்லையா!?
குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க குறைந்தபட்சம் புதுச்சேரியில் அறிவித்தது போல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.
இன்புளுயன்சா காய்ச்சல்:
1918 ல் உலகப்போர் சமயத்தில் பரவிய இன்புளுயன்சா அப்போது லட்சக்கணக்கான உயிர்களை பறித்தது. கொரோனாவை போலவே இது உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்தியது.(Influenza pandemic-இன்புளூயன்சா பேன்டமிக்).ஸ்பானிஷ் ஃப்ளூ,என்று கூறப்படும் இக்காய்ச்சல்,கொரோனாவைப் போலவே,அன்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள் கொரோனா தடுப்பூசியின் பின்னே ஒளிந்திருக்கும் உண்மைகள்!
அதன் பிறகு ஃப்ளு தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக நோய் வீரியம் குறைந்தது. அதன் பின் சீசன் காய்ச்சல் போல் மாறியது. அதாவது உலகம் முழுக்கப்பரவி இனி அழிக்கவே முடியாது, அதேசமயம் பெரிய அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தாதது என்று சொல்லும் அளவிற்கு உருமாற்றம் அடைந்தது.இதைதான் ‘குளோபல் எபிடெமிக்’ (global epidemic) என்று கூறுவார்கள். இது உலகம் முழுக்க இயல்பாக இருக்கும்,காய்ச்சல் தான், சீசனுக்கு சீசன் பரவும் நோயாக மாறியது.
தற்போது பரவும் காரணம் என்ன?
இந்தியாவில், தட்பவெப்ப நிலை காரணமாக ஜூலை மாதத்தில் தொடங்கும் இந்த காய்ச்சல் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்கிறார்கள் காய்ச்சல் உயிரிழப்பை ஏற்படுத்தாது என்றாலும் அதற்கேற்றார் போல் சுகாதாரக் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் குறிப்பிட்ட சில மாதங்கள் இந்த காய்ச்சல் பரவும் என்று தெரிந்த பின்னரும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கையாளவில்லை. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இந்த மெத்தனப் போக்கு தான் மக்கள் அச்சம் அடைய காரணமாக இருக்கிறது தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக மழை, வெயில் என தட்பவெப்ப நிலை நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மழையால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பதும், இதனால் டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவுவதும் ஒரு காரணம் தான் மாநகராட்சி பகுதிகளிலேயே கொசு ஒழிப்புக்கான நடவடிக்கைகள் இல்லை, கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்!
மக்கள் பீதி அடைவதற்கான காரணம்:
இதுவரை பரவிய வைரஸ்களிலேயே மிகப்பெரிய தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது கொரோனா தான் இதனால் மக்கள் உயிரிழப்பையும் பொருளாதார இழப்பையும் சந்தித்தார்கள். அந்த பயம் இன்றும் மக்கள் மனதில் இருந்து விலகவில்லை. அதனாலேயே வைரஸ் காய்ச்சல் வந்தாலே பீதிக்கு ஆளாகிறார்கள். குழந்தைகளை அதிகம் பாதிப்பதால் அதிக பயம் தொற்றிக் கொள்கிறது.
மக்களின் பயத்தை லாபமாக அறுவடை செய்கின்ற தனியார் மருத்துவமனைகள். அரசு மருத்துவமனைகள் இருந்தாலும் குழந்தைகள் என்பதால் பணத்தை பார்க்காமல் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கிறார்கள் ஏற்கனவே வருமானம் இல்லாத மக்களுக்கு இது ஒரு பெரும் சுமை தான்.
இதனை உணராமல், அரசு மக்களின் பயத்தை போக்காமல், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தாமல் வாய்ஜாலத்தின் மூலம் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள பார்ப்பது ஆபத்தானது. இனியும் தாமதிக்காமல் சுகாதாரத் துறையை மக்களை சந்திக்க அனுப்ப வேண்டும். அதிகம் காய்ச்சல் பரவும் பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். வருமுன் காப்பதே இழப்பை தடுக்கும்.
- மாரிமுத்து