ந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் தனது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு தலை நிமிர்ந்து போராடும் போதெல்லாம் அவர்களின் மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு அடக்கி ஒடுக்குவதும், ஆதிக்க சாதி வெறியர்கள் தனது குண்டர் படையை கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தி அடக்கி வைப்பதும் தொடர் நிகழ்ச்சியாக உள்ளது.

பீமா கோராகானில் பார்ப்பனியத்தை எதிர்த்து போராடி வீழ்த்திய தலித் மக்களின் வீர வரலாற்றை நினைவு கூறுகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றித்தூண் அருகில் டிசம்பர் 31, 2017 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள ஷானிவார் வாடா என்ற இடத்தில் எல்கர் பரிசத் மூலமாக வெற்றியை நினைவு கூறுகின்ற வகையில் பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள், இந்தியாவில் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள், எழுத்தாளர்கள், மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இந்த உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஆர்எஸ்எஸ்-சங்பரிவார கும்பலின் பினாமி அமைப்பான சமஸ்தா இந்து அகாடி என்ற அமைப்பும் ஷிவ் பிரதிஷ்தான் ஹிந்துஸ்தான் என்ற அமைப்பும் 1000க்கும் மேற்பட்ட குண்டர்களை ஒன்று திரட்டி காவி கொடியுடன் தலித்துகள் மீது வன்முறை வெறியாட்டத்தை நடத்தியது.

இந்த வெறியாட்டம் தொடர்பாக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வன்முறை வெறியாட்டத்தை தலைமையேற்று நடத்திய மிலிந்த் எக்போடே, மனோகர் குல்கர்னி என்கிற சாம்பாஜி பிடே போன்றவர்களின் மீது எந்த கடுமையான நடவடிக்கையும் இல்லை பெயரளவிற்கு கைது செய்து விடுதலை செய்து விட்டது.


இதையும் படியுங்கள்: பீமா –கோரேகான் சிறைப்பட்டோருக்கான விடுதலைக் குழுவின் ஊடக அறிக்கை


ஆனால் எல்கர் பரிஷத்தில் சமூக செயல்பாட்டாளர்கள் பேசியதன் விளைவாக தான் இந்த வன்முறை நடந்ததாக பொய்யாக புனை கதை ஒன்றை எழுதி அவ்வாறு பேசியவர்கள் மாவோயிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்றெல்லாம் கதை எழுதி 16 சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைத்துள்ளது பாசிச பாஜக அரசு.

சிறைக்கு உள்ளேயே ஸ்டேன் சாமி மரணம் அடைந்தார். கௌதம் நவல்கா மற்றும் வரவரராவ் போன்றவர்கள் தீவிரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டார்கள். இதில் ஓரிருவருக்கு பிணை கிடைத்திருந்தாலும் வழக்கு தீவிர தன்மையை அடைந்துள்ளது

எப்படியாவது இந்த வழக்கை பயன்படுத்தி இந்தியாவில் நக்சல் பாரி அரசியலை ஒடுக்கி விட வேண்டும் என்ற மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.
நக்சல் பாரி அரசியலை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமின்றி அதை ஆதரிப்பவர்கள், அவர்களுக்காக வழக்காடுபவர்கள் ஆகிய அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரித்து மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கு எல்கர் பரிஷத் வழக்கை பயன்படுத்திக் கொண்டுள்ளது.

ஆனால் அந்த வழக்குக்கும் வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த கணேஷ் மோர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தில் உள்ள கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜேன் பட்டேல் மற்றும் மகாராஷ்டிரா முன்னாள் தலைமைச் செயலாளர் சுமிதி முல்லிக் ஆகிய இருவர் முன்னிலையில் மோர் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார்.


இதையும் படியுங்கள் : பாதிரியார் ஸ்டேன் சாமி படுகொலை! உங்களுக்குள் ‘குற்றவாளி’ இல்லையா?


வழக்கு NIA விற்கு மாற்றப்பட்ட பிறகு எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்ற கோணத்திலேயே வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்கர் பரிஷத் வழக்கு மட்டுமல்ல தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட போலீசு 13 பேரை படுகொலை செய்தது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்க வரும் சிபிஐ போலீஸ் மீது எந்த குற்றமும் இல்லை என்பதைப் போல குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

எல்கர் பரிசுத்த வழக்கில் சமூக செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதை போல தூத்துக்குடி வழக்கில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஹரி ராகவன் போன்றவர்களின் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்தியாவில் இறையாண்மையை காப்பாற்றுவதற்கும், கனிம வளங்களையும், காட்டு வளங்களையும், காப்பாற்றுவதற்கும் கார்ப்பரேட் கொள்ளையை எதிர்த்துப் போராடுகின்ற கம்யூனிஸ்டுகள், ஜனநாயக சக்திகள் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியவர்களின் மீதும் கடுமையாக ஒடுக்குமுறை செலுத்துவதன் மூலம் கார்ப்பரேட்-காவி பாசிச கட்சுக்கு எதிராக போராடுபவர்களை நசுக்குவதற்கு பாசிச பாஜக முயற்சி செய்கிறது என்பதையே இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

உண்மையில் பீமா கோரா கானில் நடந்தது என்ன என்பதை ஏற்கனவே எமது இணையதளத்தில் எழுதி உள்ளோம். தற்போது அதை மீள் பதிவு செய்கிறோம்.

தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் நாடு முழுவதும் பீமா கோராக்கான் வெடிக்க வேண்டும். அதன் மூலம் கார்ப்பரேட்-காவி பாசிச பயங்கரவாத ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். இதுவே மக்களை பாதுகாக்கின்ற நேர்மையான வழிமுறையாகும்.

திருச்செங்கோடன்

னவரி , 2017 முதல் நாள், புனே மாநகரம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் திளைத்திருந்தது. அதே நேரத்தில் அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பீமா-கோரேகான் கிராமத்தில் இருக்கும் ஒரு நினைவுத்தூணருகே மகர் பிரிவு உள்ளிட்ட தலித் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடினர். மராத்தா பார்ப்பன பேஷ்வா அரச பரம்பரையின் ஆட்சி அதிகாரத்தைச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்த்தப்பட்டதை நினைவுகூறவே அங்கே அவர்கள் ஒன்றுகூடி இருந்தனர்.

bhima-Koregaon-pillar
பீமா – கோரேகான் வெற்றித்தூண்

மராத்தா பேஷ்வாக்களை வீழ்த்தியதில் துணை புரிந்து இறந்து போன மகர் சமூகத்தினரைப் பெருமைப்படுத்தும் விதமாக 1851 ஆம் ஆண்டில் பீமா-கோரேகான் கிராமத்தில் ஆங்கிலேயர்கள் அந்த நினைவுத்தூணை எழுப்பினர். பீமா-கோரேகான் நினைவுத்தூணில் இருக்கும் 49 வீரர்களின் பெயர்களில் 22 வீரர்கள் மகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஒன்றுகூடலுக்கு பீமா-கோரேகான் ரான்ஸ்டம்ப் சேவா சங் (BKRSS) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கோரேகான் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர்களும் மகராஷ்டிரா மாநிலம் முழுவதிலும் இருந்து 500 தன்னார்வலர்களும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மகர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய இராணுவ வீரர்கள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இந்து இந்தி இந்தியா அடிப்படையில் அகண்ட பாரதம் பேசும் பார்ப்பனிய பாசிஸ்டுகளுக்கு ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் தலித் மக்களின் ஒன்றுகூடல் வேப்பங்காயாய் கசக்கும் என்பதில் வியப்பொன்றுமில்லை.

பீமா-கோரேகான் யுத்தம்

மராத்திய அரசர் பேஷ்வா பாஜிராவ்-II யை ஆங்கிலேயர்கள் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மகர் சமூகத்தினர் மராத்திய அரசிற்குச் சேவை செய்து கொண்டிருந்தனர். ஆனால் மகர் சமூகத்தினரை பேஷ்வா நிராகரித்துவிட்டதால் அவர்கள் ஆங்கிலேயர்கள் பக்கம் திரும்பி விட்டனர். இந்த நிராகரிப்பு என்பது நூற்றாண்டுகளாக தொடரும் பார்ப்பனக் கொடுங்கோன்மையின் அங்கம். 21-ம் நூற்றாண்டிலேயே கயர்லாஞ்சிக் கொடுமைகள் பகிரங்கமாக நடக்கும் போது 19-ம் நூற்றாண்டில் தலித் மக்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்த வரலாற்று வெஞ்சினம்தான் பார்ப்பனியத்தின் பிரதிநிதிகளான பேஷ்வாக்கை முறியடுக்குமாறு மகர் மக்களை ஆங்கிலேயரின் படையில் இணையச் செய்தது.

1818, ஜனவரி முதல் நாள் ஆங்கிலேயப் படைத்தளபதி எப்.எப்.ஸ்டாண்டன் தலைமையில் கிழக்கிந்திய நிறுவனத்தின் பாம்பே காலாட்படை அணியின் 500 வீரர்கள் பீமா ஆற்றைக் கடந்து 25,000 வீரர்களைக் கொண்ட மராத்தியப் பெரும்படையை பீமா-கோரேகான் கிராமத்தில் எதிர்கொண்டனர்.

பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தலித் மக்களின் விடுதலைக்கான ஓர் இன்றியமையாத திருப்பமாக இந்தப் போரை தலித் ஆர்வலர்களில் பலர் கருதுகின்றனர். இந்தப் போரில் 12 ஆங்கிலேய அதிகாரிகளும் மகர் வீரர்கள் உள்ளிட்டு 834 வீரர்களும் பங்கேற்றனர்.

books
விழாவில் வைக்கப்பட்ட புத்தக கண்காட்சியில்…

மகர் படையின் எண்ணிக்கையை 500 அல்ல 900 என்றும் பேஷ்வா படையினரின் எண்ணிக்கையை 25000 அல்ல 20000 என்றும் சமகாலத்திய ஆங்கிலேயர்களின் தகவல்கள் சில கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பேஷ்வாக்கள் ஆங்கிலேயர்களிடம் தோற்றுப் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் கிழக்கிந்திய நிறுவனம் பேஷ்வாக்களின் தலைநகரான புனேவையும் கைப்பற்றியிருந்தது.

புள்ளிவிவரங்கள் எதுவாக இருப்பினும் இந்தப் போரானது அதுவரை வழக்கத்தில் இல்லாத புதுமையில் திகழ்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

“மராத்திய அரசர் சிவாஜியின் பழம்பெரும் வெற்றிகளில் மகர் சமூகத்தினர் இன்றியமையாத அங்கமாக இருந்து வந்தனர். அவுரங்கசிப்பால் கொல்லப்பட்ட மராத்தா அரசர் சாம்பாஜியின் உடலை மகர் சமூகத்தினர் மீட்டு வந்ததை மக்கள் மறந்து விட்டனர். பேஷ்வா படைகளுடன் சேர்ந்து பானிபட் மற்றும் கர்டா உள்ளிட்ட இடங்களில் அவுரங்கசிப்பிறகு எதிரான போர்களில் மகர் சமூகத்தினர் பங்கேற்றனர். ஆனால் வரலாறு பெரும்பாலும் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்படுவதால் உண்மைகளில் குழப்பம் நேர்ந்து விடுகிறது” என்று BKRSS அமைப்பின் துணைத்தலைவரான கட்லக் கூறுகிறார். ஏனெனில் வரலாறு என்றுமே பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பக்கங்கள் பூஜ்ஜியம் தான். சிவாஜியின் காலத்திற்கு பிறகு ஆட்சியைப் பற்றிய பேஷ்வாக்கள் எனப்படும் சித்பவன பார்ப்பனர்கள் தமது ஆட்சியில் வருணாசிரம் கொடுங்கோன்மையை உறுதிப்படுத்தினர். இது மகர் மக்களை கோபத்தில் ஆழ்த்தியது.

அதே நேரத்தில் ஆங்கிலேயர்கள் பொருளாதார – அரசியல் ரீதியாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் நோக்கில் இந்திய மக்களைக் கொடுமைப்படுத்தினர். தமது அரசு – இராணுவ எந்திரத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் தேவைப்பட்டனர் என்பதால் அவர்கள் சாதி பார்க்காமல் இராணுவத்தில் தலித் மக்களை சேர்த்துக் கொண்டனர்.

ஆனால் பார்ப்பனர்கள் மகர் சமூகத்தினரை மனிதர்களாகவே நடத்தவில்லை. பார்ப்பனர்களின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆட்பட்ட மகர் சமூக மக்களுக்கு வெள்ளையர்கள் வாராது வந்த மாமணிகள் போல் தெரிந்ததில் வியப்பொன்றுமில்லை. அகண்ட பாரதத்தின் காலாச்சாரப் பெருமைகளைச் மொகலாயர்கள் அழித்துவிட்டதாகப் புலம்பித் தீர்க்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இதயத்தை குத்தும் முள்ளாக, வரலாற்றின் அழியாத சின்னமாய் பீமா-கோரேகான் நினைவுத்தூண் அமைந்துவிட்டது.

people-at-feastival
நினைவுத்தூணருகே ஒன்றுக்கூடிய மகர் உள்ளிட்ட தலித் மக்கள்

மகர் சமூகத்தினர் பேஷ்வாக்களை எதிர்க்கக் காரணம் என்ன?

மராத்தி மொழி பேசும் மண்ணின் மைந்தர்களான மகர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைக் கொண்டு கட்டமைத்த கொரில்லா படைகள் தான் சிவாஜியின் மராத்திய சாம்ராஜ்ஜியத்திற்கு அடிகோலின. மராத்தா அரசின் அமைச்சர்களாக இருந்த பேஷ்வா பார்ப்பனர்கள் சிவாஜியின் காலத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

பேஷ்வாக்களின் கீழ் மகர் சமூகத்தினர் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர். மகர் சமூகத்தினரிடையே அவர்கள் தாம் அனுபவித்த கொடுமைகளைப் பற்றிய இலக்கியங்கள், நாட்டார் வழக்குகள், செவி வழிக் கதைகள் இன்றும் தொடர்கின்றன.

இடுப்பில் கட்டியத் துடைப்பத்துடனும் கழுத்தில் தொங்கவிடப்பட்ட பானையுடனும் தான் பார்ப்பனர்கள் வாழும் நகரத்திற்குள் மகர் சமூகத்தினர் நுழைய முடியும். அவர்களது கால்களால் தீண்டப்பட்ட தரையைத் துடைப்பத்தைக் கொண்டு துடைத்துக் கொண்டும் எச்சிலை பானையில் துப்பிக் கொண்டும் நகரத்தினுள் அலைந்து திரிய வேண்டும் என்பது தான் பார்ப்பனர்கள் விதித்த மனுதர்மம். மகர் சமூகத்தினர் தங்களது சாதியையும் யாரிடமும் மறைக்கக்கூடாது. மற்றும் அவர்களுக்கு படிப்பறிவும் ஆயுதங்களைத் தூக்கும் உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான தண்டனைகள் என விலங்குகளை விட மோசமாக மகர் சமூகத்தினர் நடத்தப்பட்டனர்.

சித்பவன பார்ப்பனர்களின் தலைவர்களான பேஷ்வாக்களின் இந்த மனிதத்தன்மையற்ற செயல்கள் தான் மகர் சமூகத்தினரை ஆங்கிலேயர்களின் பக்கம் சேரத் தூண்டியது. நூற்றாண்டுகள் பல அடக்கியொடுக்கப்பட்ட மகர்களின் சுயமரியாதை வித்தானது பார்ப்பனியத்தை முட்டி மோதி முளைத்தெழுந்தது. பார்ப்பன பேஷ்வாக்களுக்கு எதிரான தங்களது வீரஞ்செறிந்த போரினால் ஆங்கிலேயர்களுக்கு மகர் வீரர்கள் வெற்றியைத் தேடித் தந்தனர்.

இதற்கு நன்றிக் கடனாகத் தான் போரில் இறந்த மகர் சமூக வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக வெற்றித்தூணை எழுப்பி அவர்களை வெள்ளையர்கள் பெருமைப்படுத்தினார்கள். அதன் பிறகுத் தொடர்ச்சியாக வெள்ளையர்கள் அவர்களை தங்களது படைக்குத் தேர்வு செய்தனர்.

சமத்துவப் படை

மகர் சமூகத்தினருக்கு நீண்ட இராணுவ வரலாறு இருந்த போதிலும் ஆங்கிலேய அரசு 1893 ஆம் ஆண்டு அவர்களைத் தங்களது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை. 1857 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிப்பாய் கலகம் (Indian Rebellion -1857) இதற்கு இன்றியமையாதக் காரணியாக இருந்தது. பிறகு முதல் உலகப்போரில் ஆங்கிலேய அரசு அவர்களைப் படைக்கு அமர்த்தி இருந்தாலும் போருக்கு பிறகு படையில் இருந்து நீக்கிவிட்டது. கடைசியாக 1945 ஆம் ஆண்டு மகர் படைவகுப்பு (Mahar Regiment) நிரந்தரமாக உருவாக்கப்பட்டது.

ambethkar
மகர் படையுடன் அம்பேத்கர்

அதே நேரம் பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இராணுவமயமாக்கிக் கொண்டிருந்தார்கள். இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருப்பதாக அம்பேத்கர் கருதினார். எனவே அதனை எதிர்கொள்ள சமத்துவப்படை (Samata Sainik Dal) என்ற துணை அமைப்பை 1926 ஆம் ஆண்டு நவம்பரில் அம்பேத்கர் தொடங்கினார். இது பின்னர் 1955 ஆண்டு அம்பேத்கர் உருவாக்கிய இந்தியப் புத்த சமூகத்தில்(Buddhist Society of India) இணைக்கப்பட்டது. பார்ப்பனர்களின் கொடுமைகளில் இருந்து தலித் மக்களைப் பாதுகாக்க அஃது உதவும் என்று அம்பேத்கர் கருதினார்.

1927, ஜனவரி முதல் நாள் பீமா-கோரேகான் கிராமத்திற்கு வெளியே இருக்கும் நினைவுச்சின்னத்தின் அருகே நடைபெற்ற ஒருக்கூட்டத்தில் அம்பேத்கர் தலைமையுரை ஆற்றினார். அதன் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நினைவுச்சின்னம் இருக்குமிடத்தில் மகர் சமூகத்தினர் ஒன்றுகூடி மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

நவீனத் தீண்டாமை

தீண்டாமை மனிதநேயமற்ற செயலும் பெருங்குற்றமுமாகும் என்று பள்ளிக்கூட ஏடுகளில் கூட இன்று நாம் காண்கிறோம். ஆயினும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேஷ்வாக்களின் வாரிசுகளால் தீண்டாமை இன்று நவீன முறையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. புத்தாண்டு அன்று பீமா-கோரேகான் நினைவுத்தூண் இருக்கும் பாதையில் நடக்கக்கூடாது என்பது தான் அந்த நினைவுத்தூணைப் பற்றி புனேவில் இருக்கும் ஆதிக்கச்சாதி இந்துக்களின் இன்றையக் கருத்தாக இருக்கிறது என்று புனே பல்கலைகழகத்தின் வரலாற்றாசிரியரான சாரதா கும்போஜ்கார் கூறியுள்ளார்.

“அந்த நினைவுத்தூணை அடுக்கடுக்கான பல நினைவுகள் சூழ்ந்து உள்ளன. கோரேகான் போர்க்களம் பின்னர் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு 1927 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அங்கு வருகை தந்தார். அவரது வருகைக்குப் பிறகு புனிதத்தளத்திற்கான சிறப்பை அது பெற்றுவிட்டது. அவரது மறைவுக்குப் பிறகு இந்து காலாச்சாரத்திற்கு மாற்றுக் காலச்சாரம் உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தளம் மாறிவிட்டது” என்று கூறினார் சாரதா.

அந்த நினைவிடத்தைக் கடந்து நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழியைத் தவிர்க்க நகரத்து நடுத்தர மக்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள். “கோரேகானில் இருக்கும் அவர்களது இடத்தில் அந்த (தலித்) மக்கள் கும்பலாக இருப்பார்கள்” என்று தங்களுக்குள் எச்சரிக்கைச் செய்து கொள்கிறார்கள் என்று சாரதா கூறினார்.

இருந்தபோதிலும் பார்ப்பனியச் சாதிக்கொடுமைக்கு எதிரான மகர் சமூகவீரர்களின் போராட்டத்தை இது நலிவடையச் செய்துவிடாது.

“நான் ஒரு புத்த பிக்கு. அமைதியில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்த சமூகத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று புத்த பிக்கு பூர்ணிமா கூறினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து இவர் வந்திருந்தார்.

வெள்ளையர்களிடம் பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் கூழைக்கும்பிடு போட்டதுதான் பார்ப்பனர்களின் வரலாறு. சுயமரியாதைக்காக பார்ப்பனர்களின் செருக்கை அதே வெள்ளையருடன் சேர்ந்து அழித்தொழித்தது தாழ்த்தப்பட்ட மகர் சமூகத்தின் வரலாறு. முன்னது பாரத் மாதா என்றும் ஜனகனமன என்றும் தேசபக்தி வேடம் போட்டுக்கொள்கிறது. பின்னது சுயமரியாதைக்கான வரலாற்றுச் சின்னமாக பீமா-கோரேகான் கிராமத்தில் இன்றும் நிலைத்துள்ளது.

இதை  வைத்துக் கொண்டு மகர் சாதி தலித் மக்களை தேச துரோகிகள் என்று கூறுவதற்கு ஆர்.எஸ்.எஸ் தயாரா? அப்படிக் கூறினால் உனா போராட்டத்தின் தொடர்ச்சியாக செத்த மாட்டின் உடல்களை வீசினார்களே குஜராத் தலித் மக்கள், அது போன்று மராட்டிய தலித் மக்களும் அகண்ட பாரத அடையாளங்களை எரிப்பது உறுதி.

தேசபக்தி என்பது பாரதமாதா போன்ற பட்டு உடை போர்த்திய மாமி படங்களை பூஜிப்பதால் வருவதில்லை என்பதை இந்த வரலாற்றுத் தூண் கூறுகிறது. ஆங்கிலேயர்களை அண்டிப் பிழைத்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் தலைவர்களும் சரி, காங்கிரசை இந்துமயமாக்கிய திலகர் போன்ற தலைவர்களும் சரி அனைவரும் பேஷ்வாக்களைப் போன்று சித்பவன பார்ப்பனர்கள் என்பது இந்த வரலாற்றுத் தூணின் கதையை உறுதிப்படுத்திகிறது.

பேஷ்வாக்கள் ஆட்சியில் தமது பார்ப்பன சாம்ராஜ்ஜியம் பறிபோனதாலேயே சித்பவன பார்ப்பனர்கள் காங்கிரசிலும், ஆர்.எஸ்.எஸ் – இந்து மகா சபாவிலும் சேர்ந்தார்கள். இதன் காரணம் தேசபக்தி அல்ல. இழந்து போன பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை மீட்பதே. ஆனால் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து பேஷ்வாக்களை எதிர்த்த மகர்களின் நோக்கம் தமது அடிமைத்தனத்தை ஒழிப்பதே. இப்போது சொல்லுங்கள் தேச பக்தர்கள் யார் என்று!

செய்தி ஆதாரம்:
Why lakhs of Indians celebrate the British victory over the Maratha Peshwas every New Year
When Mahars fought on home turf, and helped Britain win

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here