“ இயக்குனர் சசி ஆக்கத்திறனும் அறிவுக்கூர்மையும் கொண்ட
ஆய்வுக்காகவேஅறியப்படுகிறார் ; இந்தியச்சமூகத்தைப் பீடித்திருக்கிற முரண்பாடுகள் என்ற ஆழமான நோயை அவர் அலசி ஆராய்ந்தார்……”
திரைப்பட இயக்குநர் K.P. சசி, அவரே தன்னைப்பற்றி கூறிக்கொண்டதுபோல முதன்மையாக சமூக – அரசியல் செயற்பாட்டாளர் ; அப்புறம்தான் ஆவணப்பட, கதைப்பட இயக்குநர், கேலிச்சித்திரக்காரர், கட்டுரைக்காரர் , “கவுன்டர் கரண்ட்ஸ் வலைத்தள “த் துணைப் பொறுப்பு, எல்லாம் . நீண்டநாள் கேரள திருச்சூர் மருத்துவமனையில் கடுமையான காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டார், மருந்துகள் எடுத்துவந்தார். குணம் அடையாமல் டிசம்பர் 25 – அன்று இறந்துவிட்டார்.
இந்திய வணிகப்படங்களுக்கு வேறான ” மாற்றுச் சினிமா ” இயக்கத்தில் ஆழமாக ஈடுபட்டுவந்தார் சசி. வெளியுலகில் போற்றப்பட்டு வரும் பிரபல ஸ்டார் இயக்குனர் அல்ல. நாம் அறிந்த வகையில் ” இந்துமதவெறிப் பாசிசத்தை அதன் அடிவேர் வரை சென்று கெல்லியெடுக்கும் ” ஆவணப்பட இயக்குநரும் போராளியுமான ஆனந்த் பட்வர்தன் போன்ற செயற்பாட்டாளர் என்று சொல்லமுடியும்.
ஆரம்ப நாட்களில் கார்ட்டூன் ஓவியராகத் தொடங்கிய அந்த நாட்களில் ;மாணவராகத் தொடங்கி இளைஞராக வளர்ந்து- கடைசி வரை இடதுசாரி இயக்கங்களோடு நெருக்கமாக இருந்தார் ; அண்மைக்காலத்தில் நடந்த டெல்லி விவசாயிகள் போராட்டம்வரை அவர் அக் கருவியைக் கைவிடவில்லை. மொத்தமாக — சில முழுநீளப் படங்கள், இசை — ஒளிப்பேழைகள், நிறைவான அளவு ஆவணப்படங்கள் ஆகியவை அவர் சமூகத்துக்குக் கொடுத்த போராட்டக் கருவிகள். இந்திய அளவில் பட்டியலிடப்படும் மொத்தம் 71 ஆவணப்பட இயக்குனர்களில் ஒருவர்.
அவரது ஆவணப்படங்கள் சமூகப் பிரச்சினைகளை, பலதரப்பட்ட சமூகக் கருப் பொருள்களை மையமாகக் கொண்டவை. சசி பெங்களூரில் வாழ்ந்தாலும், மக்கள் இயக்கங்கள் எங்கெல்லாம் அரும்பி மலர்ந்து பெருகிவளர்ந்தனவோ அங்கெல்லாம் நாடுமுழுதும் பயணம் செய்து ஆவணப்படுத்தினார் ; இதுவே மக்கள் வரலாறு என்று தெளிவும்கொண்டிருந்தார்; பழங்குடிமக்களின் போராட்டங்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பலப்பல காரணம் காட்டி வாழ்விடங்களிலிருந்து வன்முறை கொண்டு பலவந்தமாகத் துரத்தப்படும் உழைக்கும் மக்கள், ஒரிஸா கந்தமாலில் , ஆர்எஸ்எஸ் வெறியர்கள் கிறித்தவர்கள்மீது நடத்திய தாக்குதல்கள் — ஆகியவை சசியின் ஆவணப்படக் கருப்பொருள்கள்.
பணத்திற்காக மக்கள் சுரண்டப்படுவதை, காசு – பண உறவுகளில் உள்ள முரண்பாடுகளின் மோதல்களை அவர் காட்சிப்படுத்திக் கொண்டுவந்தார் ; ‘ நாட்டின் வளர்ச்சி ‘ என்ற போர்வையில் நடக்கும் சுரண்டல்கொடுமைகளை ஒன்று விடாமல் அலசி ஆராய்ந்து தன் படக் காட்சிகளோடு இணைக்கத் தவறவில்லை.
உள்நாட்டுக் கார்ப்பரேட்டுக்காக ஜார்கண்ட் ” ஆதிவாசிக்கிராம “நிலங்கள் பிடுங்கப்பட்டபோது ” காவ் (ன்) சோடப் நஹி ” ( எங்கள் கிராமத்தைவிட்டு ப் போகமாட்டோம்! ) என்ற படம் ; ” அமெரிக்கா அமெரிக்கா “, அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மக்களை ஒடுக்குவதுபற்றிய ஆவணப்படம் . இப்படம் 6.8.2005 அன்று ஹிரோஷிமா அழிப்பு நினைவு நாளன்று வெளியிடப்பட்டது ; ” சாக மறுக்கும் பள்ளத்தாக்கு ” ( A Valley Refuses to Die ), நர்மதா பள்ளத்தாக்கின் நெடிய போராட்டம் பற்றியது ;
” வரலாற்றை உருவாக்குகிறோம் ” ( We Who Make History ) ; ” பயத்தில் வாழ்கிறோம் ” ( Living in Fear ); ” அழிவிலிருந்து பல குரல்கள் ” ( Voices from the Ruins ) ஒரிசா கந்தமாலில் ஆர்.எஸ்.எஸ். கிறித்தவர் மீது தொடுத்த பயங்கரவாதத் தாக்குதல் ( 56000 மக்கள் வெளியேற்றப்பட்டது, 350 சர்ச்சுகள் உடைத்து நொறுக்கப்பட்டது, 6500 வீடுகள் அழிக்கப்பட்டது, 93 பேர் படுகொலை செய்யப்பட்டது, 40 பெண்கள் கற்பழிக்கப்பட்டது — இப்படிப்பட்டது அந்த இன அழிப்புத் தாக்குதல் ) பற்றிய படம் ; சுனாமிக்குப் பிறகு, 2005 ( மலையாளம் )…ஆகியவை அவர் உருவாக்கிய சில ஆவணப்படங்கள்.
சசியின் ” இலையும் முள்ளும் ” என்ற முழுநீள மலையாளத் திரைப்படம் கேரளப் பெண்கள் மீது நடத்தப்படும் சமூக, உளவியல் சார்ந்த வன்முறைகளின் சித்தரிப்பு; ” அது ஒரு வித்தியாசமான பருவகாலம் ” ( A Different Season ), 2003 – ல் சசி இயக்கிய இந்தித் திரைப்படம் HIV / AIDS நோயாளிமக்கள்களின் துன்பதுயர வேதனைகளை விவாதித்தது; மக்களின் உரிமை பற்றியபல போராட்டங்களோடு தன் திரைப் பணி பிணைந்த ஒன்று என்பதை சீக்கிரம் உணர்ந்துகொண்டார்.மதவெறி எதிர்ப்பில் இறங்கியபோது , மதானிமீது பொய்வழக்கு போடப்பட்ட கட்டத்தில் ” Fabricated ” என்ற படத்தை துணிவோடு எடுத்தார்.
இப்போது மதானி மறக்காமல் தன் அஞ்சலிக்குறிப்பில் அதைக் குறிப்பிட்டு, தன்மீதான பொய்வழக்கை எதிர்த்து வாதாட படம் பெரிதும் உதவியது என்றார்; அரச பயங்கரம் எந்த வடிவத்தில் உலவினாலும் சசி எதிர்த்துக் குரல் கொடுத்தார் ; விவசாயிகள் , தொழிலாளர்கள் , மீனவமக்கள் போராட்டங்களில் அவரது எழுத்து, படம், நேரடிப் பங்கேற்பு ஆகிய மூன்றில் ஒன்று நிச்சயமாக ஆஜராகியிருந்தது. மக்களிடம் அவர் கொண்ட பிணைப்பும் நெருக்கமுமே அரசபயங்கரத்தின் தாக்குதலிலிருந்து அவரைக்காப்பாற்றியது. அதையும் தாண்டி, மக்கள்மீது எப்படி பொய்வழக்குகள் போடப்பட்டு அவர்களை அலைக்கழித்தனவோ அப்படி அவர்மீதும் வீசப்பட்டன ; சமரசங்களில் தடுமாறாமல் அவர் தாக்குப் பிடித்தார், மீறிச் செயல்பட்டார்.
சசி என்று போராடும் தோழர்கள் அழைக்கிறார்கள் ; கே.தாமோதரன் என்ற கேரளத்து சிபிஐ (இ.க.க.) நிறுவன உறுப்பினரும் மலையாள எழுத்தாளருமானவர் வீட்டில் மகனாகப் பிறந்து, முற்போக்கு அரசியல் சூழலில் வளர்க்கப்பட்ட சசி ஊரார் அனைவருக்குமே ” சசியேட்டா ” தான் ; கலையுலகத்தின் போராளியான ஆனந்த் பட்வர்தன் டிசம்பர் 26 அன்று முற்போக்குக் கலைஞன் சசியின் மறைவுபற்றி ” அவர் உடலால் நம்மோடு இல்லை ; நம் இதயங்களைவிட்டு அவர் என்றும் நீங்காமல் இருப்பார் ” என்று கூறியது மிகவும் பொருந்தும்.
ஆதாரம் :
கவுரி லங்கேஷ் நியூஸ்.காம்
www.film companion.in
www.the newsminute.com
மற்றும்
countercurrents.org கருவூலம்.
ஆக்கம் : பீட்டர்










