2019 ஆம் ஆண்டு புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகத்தின் செயலற்ற தன்மையே காரணம் என்று தான் பிரதமர் மோடியிடம் தெரிவித்த போது இது குறித்து பேச வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்  கூறியதாக தி வயர்  இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

2014 – 2019 மோடியின் ஐந்து ஆண்டு கால ஆட்சி இந்திய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு வலுவான காரணமும் உண்டு. மோடி ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதில் முக்கியமானது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை. இதை நம்பி வாக்களித்த இளைஞர்கள் ஏராளம் அந்த அளவுக்கு இந்தியாவில் வேலையின்மை தலைவிரித்தாடியது.

சொல்லாததை செய்த மோடி

சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்து மக்களை நடுத்தெருவில் நிறுத்திய நிகழ்வு தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை. சிறுக சிறுக சேமித்த பணம் செல்லாது என்ற அறிவிப்பு உழைக்கும் மக்களின் தலையில் இடியை இறக்கியது. இதனால் வேலையிழந்தவர்கள் ஏராளம் என்றால், வரிசையில் கால் கடுக்க காத்திருந்து உயிரை விட்டவர்கள் பலர். இதனால் மோடியின் நண்பர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் குறுந்தொழில்கள் அழிவுக்கு சென்றன. பல்லாயிரம் சிறுகுறு நிறுவனங்கள் மூடப்பட்டன. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் சூரத்தில் மிகப்பெரிய போராட்டமும் மோடிக்கு எதிராக நடைபெற்றது.

அடுத்து ஜி.எஸ்.டி இந்த நடவடிக்கையும் சிறுகுறு தொழிலுக்கு கல்லறைக் கட்டியது என்றால் மிகையாகாது. இது குறித்து திருப்பூர் தொழிலாளர்களிடம், சிறு முதலாளிகளிடமும் கேட்டால் இன்றும் மறக்காமல் தாங்கள் அனுபவித்த துன்பங்களை கூறுவார்கள். பல சிறு முதலாளிகள் ஜி.எஸ்.டியால் தொழிலாளர்களாக மாறிய பெருமை மோடியையே சாரும். அதனால் தான் 2019 சங்பரிவார் கும்பல் பலகாலம் கள வேலை செய்தும் தேர்தலில் திருப்பூரில் மண்ணைக் கவ்வியது.

இதையும் படியுங்கள்:

 JNU இடதுசாரி மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!

♥ இஸ்லாமியர்கள் மீது அதிகரித்துவரும் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் தாக்குதல்கள்!

இப்படி மோடியால் மக்கள் பட்ட வேதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வேதனைக்கு மோடி கொடுத்த தேச பக்தி மருந்து தான் புல்வாமா தாக்குதல்!. பாகிஸ்தான் தீவிரவாதி, பாரத் மாதாஹி செய் என்று மத வெறியையும், தேசபக்தி வேடத்தையும் அணிந்துக் கொண்டு தாக்குதலில் பலியான 40 இராணுவ வீரர்களின் உடலை வைத்து வெளிப்படையாகவே பல மாநிலங்களில் ஓட்டுப் பொறுக்கியது பாசிச பாஜக கும்பல்.

நம் நாட்டு மக்கள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வென்றாலே ஏதோ உலகப்போரிலே வென்றது போல கொண்டாடுவார்கள், இது போதாதா பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு. தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று போலி தேசபக்தியை உருவாக்கி தேர்தலில் வெற்றியும் பெற்றது.

இந்த தாக்குதல் குறித்து அன்று விலகாத மர்மங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. எப்படி பாகிஸ்தானில் இருந்து இவ்வளவு RDXஉடன் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்தார்கள்? இந்திய  இராணுவமும், உளவுத்துறையும் எப்படி பார்க்காமல் விட்டது? காஷ்மீர் ஏற்கனவே பதட்டமான பகுதி என்பது அனைவரும் அறிந்ததே. சாதாரணமாக வெளிமாநிலத்தில் இருந்து யாரும் உள்ளே நுழையமுடியாது. அப்படி இருக்கும் பொழுது தீவிரவாதிகளால் எப்படி உள்ளே நுழைய முடிந்தது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. சில நாட்களுக்கு முன் ஜம்முகாஷ்மீரின் அப்போதைய  ஆளுநர் சத்யபால் மாலிக் தி வயர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் சில விடைகள் கிடைத்துள்ளது.

புல்வாமா தாக்குதலும், பாசிஸ்டுகளின் தந்திரமும்

பிப்ரவரி 14, 2019 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் மோதியதில், அவர்களில் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. சமீபத்திய காலங்களில் இந்திய இராணுவத்தின் மீது நடந்த மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதல் குறித்த தி வயர் கரண் தாப்பரின் நேர்காணலில் பதிலளித்த காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்  ராஜ்நாத்சிங் தலைமையிலான உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் என்றார்.

“பெரிய கான்வாய்கள் சாலையில் பயணிப்பதில்லை. அதனால், சி.ஆர்.பி.எஃப் தங்கள் வீரர்களை அழைத்துச் செல்ல விமானம் கேட்டது. அவர்களுக்கு ஐந்து விமானங்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் அந்த விமானங்களை தர மறுத்துவிட்டது. உள்துறை அமைச்சகம் விமானங்களை வழங்கியிருந்தால், இது நடந்திருக்காது. பிறகு, நம்முடைய தவறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்தது. இதைபற்றி அன்று மாலையே பிரதமர் மோடியிடம் கூறினேன். ஆனால் பிரதமர் மோடி, அதுப் பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார்” என்றார். இதேபோல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் யாரிடமும் கூறாமல் அமைதியாக இருக்குமாறு கூறினார் என்றும் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 300கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து 10-15 நாட்களாக காரில் காஷ்மீரின் வீதிகளில் சுற்றிவந்துள்ளதை வைத்து பார்த்தால், எந்தளவிற்கு நம்முடைய உளவுத்துறை செயலாற்றியுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம் என சத்யபால் மாலிக் கூறியிருந்தார்.

இந்த தாக்குதல் நடந்த நேரத்தில்  ‘ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில்’ டிஸ்கவரி சேனல் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த மோடி, நிதானமாக ஷூட்டிங் முடித்து விட்டு வந்து தான் இந்த பதிலை சத்யபால் மாலிக்கிடம் கூறியுள்ளார். பாசிஸ்ட்டுகள் போலி தேசபக்தர்கள் மட்டுமல்ல, தன்னுடைய சுயநலனுக்காக சொந்த நாட்டு மக்களை கொலை செய்யவும் துணிந்த பாசிஸ்டுகளுக்கு அன்று பலியான 40 வீரர்கள் தான் 2019 தேர்தலுக்கான  முதலீடு.

பாசிஸ்டுகளின் தேசபக்தி வேடம்

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பேச்சு குறித்து பெரிய அளவில் விவாதங்கள் எழாமல் மோடியின் மீடியாக்கள் பார்த்துக் கொள்ளும். அதனால் பாசிஸ்டுகள் இந்த பேச்சு குறித்து பெரிய அளவில் கவலை கொள்ள போவதில்லை. ஆனால் அவர்களின் போலி தேசபக்தியை அம்பலப்படுத்த வேண்டியது ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் கடமை.

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்

மோடி மீதோ அல்லது பாஜக அரசின் மீதோ விமர்சனங்கள் எழும் போதெல்லாம் அதனை சமாளிக்க அவர்கள் எடுக்கும் ஆயுதம் தான் தேசபக்தி. குறிப்பாக எல்லையில் இராணுவ வீரர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் விலைவாசி உயர்வை பொறுத்துக் கொள்ள முடியாதா என்றெல்லாம் ஏக வசனம் பேசும் இந்த கும்பல் தான் சரியான உணவை இராணுவ வீரர்களுக்கு கொடுக்காமல் பட்டினி போட்டது.

இது குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் பதிவிட்ட இராணுவ வீரரின் பதவி அடுத்த மூன்று மாதத்தில் பறிக்கப்பட்ட அவலமும் அரங்கேறியது. அதோடு விடவில்லை, அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு அவரது மகன் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டான்.

அதுமட்டுமில்லை இராணுவத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பான்மை தளவாடங்களுக்காகவே ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்து இராணுவத்திலும் காண்டிராக்ட் முறையை புகுத்தியது. பணிக்காலம் 4 ஆண்டு முடிந்த பின்பு 100 பேரில் 25 பேருக்கு தான் வேலை கிடைக்கும். கிட்டத்தட்ட இராணுவ வீரர்களை தனியார் நிறுவன தொழிலாளர்களை போல பயன்படுத்தி தூக்கியெறிகிறது ஒன்றிய அரசு. இது தான் பாசிஸ்டுகளின் தேசபக்தி.

பாசிஸ்டுகளுக்கு கொல்லப்பட்ட 40 இராணுவ வீரர்களும் வெறும் எண்ணிக்கையாகவும், ஓட்டுக்காகவும் பயன்படுத்தினார்களேயொழிய வீரர்களாய் பார்க்கவில்லை. இராணுவ வீரர்களின் மீது உண்மையாகவே மதிப்பிருந்தால் சரியான உணவு கொடுக்காமலும், கேள்விக் கேட்டவர்களை வேலையில் இருந்து துரத்தாமலும் இருந்திருப்பார்கள். பாசிஸ்டுகளிடம் கருணையை எதிர்பார்க்கக் கூடாது என்பதை மக்கள் உணர வேண்டும்.

புல்வாமா தாக்குதல் மட்டுமல்லாமல் காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, ஆட்சி கலைப்பு, மோடியின் ஊழல் உள்ளிட்டு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் சத்யபால் மாலிக்.இது அனைத்தும் பாசிச மோடி அரசை அம்பலபடுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலில் அரசியல் உள்ளது குறித்து அன்றே முற்போக்கு அமைப்புகள் கேள்வி எழுப்பின. ஆனால் தேசவெறியை கிளறிவிட்டு கோடி (Godi) மீடியாக்கள் மக்களை திசை திருப்பி விட்டன.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் தன்னுடைய வேலைத்திட்டத்தை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போகும் என்பதற்கு நம் கண்முன்னே உள்ள உதாரணம் தான் புல்வாமா தாக்குதலும் அதன் பின்னே உள்ள அரசியலும். பாசிஸ்டுகள் ஓட்டுக்காக கார்ப்பரேட் – காவி கும்பலின் நலனுக்கு சேவை செய்யக் கூடியவர்களையே பலி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். உழைக்கும் மக்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!. நாம் இப்போதும் உணராவிட்டால் பாசிஸ்டுகளுக்கு பலியாவதை தடுக்க முடியாது.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here