எம்எல்ஏக்களுக்கு இனோவா! மக்களுக்கு திருவோடு!
“கஜானா காலி” பாசிச கோமாளி விஜய் ஆட்சி!
தற்போது தமிழகத்தை ஆண்டு வருகின்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகள் (அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்டு விடாதீர்கள்) மற்றும் கோமாளித்தனமான ஆட்சி முறை ஆகியவற்றின் மீது விமர்சனத்தை முன் வைத்தால் அதனை நேர்மையாக எதிர்கொள்வதற்கு பதிலாக திமுகவை ஆதரிக்கிறார்கள்; இவர்கள் ஏற்கனவே திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர்கள் என்பதால் கண்மூடித்தனமாக விஜய் ஆட்சியின் மீது விமர்சனத்தை முன் வைக்கிறார்கள் என்று தான் சமாளிக்கிறார்கள்.
தான் பதவியேற்ற தினத்தன்று ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட திமுக கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாகவும், தான் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்கள் எதையும் அமல்படுத்த முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி கழுத்தை நெரிப்பதாகவும், கடன் சுமை மிக மோசமான அளவில் இருப்பதாகவும் உச்ச ஸ்தாதியில் கூச்சலிட்டார் பாசிச கோமாளி விஜய்.
அரசின் நலத்திட்டங்களை ஏற்கனவே இருந்த ஆட்சி அறிவித்த போதும் சரி! அமல்படுத்திய போதும் சரி! “சொந்த பணத்திலிருந்து செலவு செய்யுங்கள், ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க” என்றெல்லாம் டயலாக் விட்ட திருவாளர் விஜய் தனது ஆட்சியில் எம்எல்ஏக்களுக்கு புதிதாக மகிழுந்து(கார்) வாங்கி தருவதாக அறிவித்துள்ளது அருவருப்பான செயலாக உள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் எம்எல்ஏக்கள், எம்பிகள் மட்டுமின்றி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கம் ஆகியவை இந்தியாவின் பொருளாதாரத்திலும், தமிழகத்தின் பொருளாதாரத்திலும் கணிசமான அளவிற்கு வருவாயை உறிஞ்சிக் கொழுத்து வருகின்றனர். அதாவது மக்களை நேரடியாக சுரண்டுகின்ற முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் போலவே இரண்டாவது பெரிய மலைப் பாம்பாக உழைக்கும் மக்களின் வரி மற்றும் வருமானங்களை சுரண்டி கொழுத்து வருகிறார்கள்.
இந்த மறைக்க முடியாத உண்மையை இந்தியாவிலேயே முதல்முறையாக அதிகார வர்க்கம் என்ற வெள்ளை யானை மக்களின் வரிப்பணத்தை முழுங்குகிறது என்பதை முன் வைத்தது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
ஒருபுறம் அதிகார வர்க்க வெள்ளை யானை மக்களின் வரிப்பணத்தை உறிஞ்சி கொழுத்து வருவதைப் போலவே மற்றொருபுறம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எம்எல்ஏக்கள் என்ற பெயரில் மக்களின் வரி வருவாய்களை, உல்லாச ஊதாரி தனத்திற்காகவும், ஆடம்பர வக்கிர வாழ்க்கைக்காகவும் சூறையாடி வருகின்றனர் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
பாசிச கோமாளி விஜய் ஆட்சியில் எம்எல்ஏக்களுக்கு பல்வேறு படிகளுடன் கூடிய சம்பளம் 1,08,8000 ரூபாயிலிருந்து 1,80,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. புதிதாக சொகுசு கார் வாங்குவதற்கு 58 கோடி ரூபாயிலிருந்து 60 கோடி ரூபாய் செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படியே கடந்த 2025 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் பணியாற்றுகின்ற மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லக்கூடிய எம்பிக்கள் 62 நாட்கள் மட்டுமே செயல்பட்டு உள்ளனர் அதிலும் பெரும்பான்மை நாட்கள் கூச்சலிட்டு விட்டு வெளியில் செல்கிறோம் வெளிநடப்பு என்ற பெயரில் நாடாளுமன்ற கேண்டீனில் அமர்ந்து தின்று கொழுத்தனர்.
படிக்க:
♦ சந்தேகமே இல்லை! விஜய் தற்குறிதான்! தலைக்கனமேறிய அசல் சங்கிதான்!
♦ விஜய் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழி
அதற்கு சற்றும் சளைக்காத வகையில் தமிழக சட்டமன்றம் 2025 ஆம் ஆண்டு வெறும் 32 நாட்கள் மட்டுமே கூடியது என்பதுதான் அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் ஆகும். இவ்வாறு ஒரு ஆண்டில் ஏறக்குறைய ஒரு மாத காலம் மட்டுமே செயல்படுகின்ற எம்எல்ஏக்களுக்கு மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்குவது அயோக்கியத்தனமாகும்.
“சிறிய மீனை போட்டு, பெரிய மீனை பிடிப்பதுதான் தேர்தல் அரசியல்” என்று தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறோம். அதனை நிரூபிக்கின்ற வகையில் பல கோடிகளை செலவு செய்த எம்எல்ஏக்கள் தான் வெற்றி பெற்ற பிறகு ஒவ்வொரு அரசு திட்ட பணிகளிலும் அறிவிக்கப்படாத அளவிற்கு பெரும் கமிஷன் தொகையை பெறுவதும், பல்வேறு வகைகளில் மக்களின் வரிப்பணத்தை பேரம் பேசி கொள்ளையடிப்பதும் நடந்து கொண்டுதான் உள்ளது.
சட்டவிரோதமான முறையில் இவ்வாறு நடந்து கொண்டு வரும் எம்எல்ஏக்கள் இனி சட்டபூர்வமாகவே மக்களின் வரிப்பணத்தை உறிஞ்சி கொழுக்கப் போகிறார்கள் என்பதுதான் பாசிச கோமாளி விஜய் முன் வைத்துள்ள எம்எல்ஏக்களின் சம்பள உயர்வு நிரூபித்துள்ள உண்மையாகும்.
தேர்தல் அரசியலை கடுமையாக விமர்சித்த புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று அறிவித்த காரணத்தினாலேயே தற்போது நிலவுகின்ற நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உள்ள மக்கள் விரோத தன்மைகளை அம்பலப்படுத்த மாட்டோம் என்று பொருள் ஆகாது.
“வைத்தால் குடுமி! சிரைத்தால் மொட்டை” என்ற கொள்கை எமக்கு எப்போதும் உவப்பானது அல்ல. மாறாக அனைத்து போராட்ட வடிவங்களையும் போலவே தேர்தல் வடிவத்தையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துகின்றோம் என்ற போதிலும் அனைத்து போராட்டங்களிலும் உள்ள தவறான அம்சங்களை விமர்சிப்பது போலவே தேர்தல் ஜனநாயகத்திலும் உள்ள மக்கள் விரோத தன்மைகளை அம்பலப்படுத்துவோம்.
இதன் மூலமாக இந்த நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்பு முறையின் மூலமாக கார்ப்பரேட் காவி பாசத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. மாறாக குறைந்தபட்ச செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியின் தலைமையிலான ஜனநாயக கூட்டரசு ஒன்றுதான் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், மக்களின் வரிப்பணத்தை தனது சொந்த நலனுக்கு பயன்படுத்தாத வகையில் கையாள்வதற்கும் பொருத்தமான கூட்டரசாக அமையும் என்பதையும் அறிவித்தே செயல்படுகின்றோம்.
- கரட்டுப்பட்டியான்
புதிய ஜனநாயகம் தினசரி






