2026 தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிக இடங்களை கைப்பற்றியதும், அதன் பின்னர் ஏற்கனவே திமுக தலைமையில் கூட்டணியாக இருந்து செயல்பட்ட கட்சிகளின் உதவியுடன் அதிகாரத்தை கைப்பற்றியதும், ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டு தான் நடக்கிறது என்று புரிந்து கொண்டால் அதைவிட பாமரத்தனம் ஒன்றும் இருக்க முடியாது.

விஜய் கட்சித் துவங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்து முதலமைச்சராக உருவெடுப்பதற்கு அவரது கவர்ச்சிவாத அரசியல் மற்றும் அவரை ஆதரிக்கின்ற அரசியல் தற்குறிகள் மட்டும்தான் காரணம் என்று நம்பிக் கொண்டிருந்தால் விஜய் ஆட்சியில் நடக்கின்ற அவலங்களையும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளையும் எதிர்த்துப் போராட முடியாது.

விஜய் போன்றவர்களை அரசியலுக்கு கொண்டு வருவதிலும், அவர்கள் மூலமாக தாங்கள் விரும்புகின்ற வகையில் முதலீடுகளை குவிப்பதற்கும், அதன் மூலமாக தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுவது; குறைந்த கூலிக்கு துடிப்புமிக்க இளைஞர்களின் உழைப்பு சக்தியை உறிஞ்சிக் கொழுப்பது என்பதையெல்லாம் உள்ளடக்கிய மறுகாலனியாக்கத்தின் தீவிரத் தன்மை உருவாக்கியுள்ள கேடுகளில் ஒன்று தான் விஜய் அரசியல் பிரவேசம் மற்றும் அவரது வெற்றி.

இதற்கு முன்னர் இருந்த திமுகவிற்கும், அதற்கு முன்னர் இருந்த அதிமுகவிற்கும், தற்போது தமிழ்நாட்டை ஆளும் விஜய்க்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் கொள்கை, சித்தாந்தம் போன்ற தலைவலி எடுக்கின்ற வழிமுறைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, கவர்ச்சி வாதத்தையும், அரசியலற்ற அரசியலை முன்வைத்து பெரும்பான்மை இளைய சமூகத்தினரை ஒரு கட்டுக்குள் வைப்பதும்; தனது ஆட்சியின் கீழ் என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும்; எந்தவிதமான சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், அரசியல், பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதைப்பற்றி அதிகம் எதிர்ப்பு தெரிவிக்காத வகையில் சமாளிப்பது, மீறிப் போனால் கடுமையாக ஒடுக்குவது ஆகியவற்றை தெளிவாக கையாளுகின்ற கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம்.

இந்த அடிப்படையில் தான் இந்தியா ஒன்றியத்தை கார்ப்பரேட்டுகளின் பிடிக்கும் கொண்டு சென்று நாட்டை அந்நிய ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கீழ் மீண்டும் காலனியாக்குகின்ற, அதாவது மறு காலனியாக்குகின்ற அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடிக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் அதாவது பினாமி கும்பலாக பாசிச கோமாளி விஜய் அரசியல் உள்ளது என்று புதிய ஜனநாயகம் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது.

கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தில் பாசிச கோமாளி விஜய்!

“சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 67,000 கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் கொண்டுள்ளது” என செய்திகள் வெளியாகியுள்ளது.

அது மட்டுமல்ல, “ஜெர்மனி, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 67,452 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் தொழில் தொடங்கும் வகையிலும், 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

படிக்க:

 தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொண்டுவரும்  முதலீடுகள் தொழிலாளர் உரிமைகளை மதிக்குமா?

 முதலீட்டாளர்களை ஈர்க்க, தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் ஒன்றிய மாநில அரசுகள்! நாம் என்ன செய்யப் போகிறோம்

2030 ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்ல போவதாக தமிழகத்தின் தொழில் துறை அமைச்சரான கீர்த்தனா சாமியாடிக் கொண்டுள்ளார்.

2026 துவங்கிய முதல் காலாண்டில் இருந்ததைவிட பாசிச கோமாளி விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு அன்னிய முதலீடுகள் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்ற போதிலும், தான் ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து விட்டதாக பரபரப்பு செய்தியை ஊடகங்களின் வாயிலாகவும், தமது ரூட் மாபியா கும்பல் மூலமாகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது தமிழக வெற்றி கழகம்.

திமுக ஆட்சியில் அதிக முதலீடு ஈர்க்கப்பட்டதா அல்லது த.வெ.க ஆட்சியில் அதிக முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதா என்பதல்ல பிரச்சனை. இவ்வாறு முதலீடு செய்கின்ற அன்னிய ஏகபோகங்கள் அதாவது வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் ஒப்பந்தத்தின் போது தொழிலாளர் நலச் சட்டங்களை காலில் போட்டு மிதிக்கின்ற வகையிலும், குறைந்த கூலிக்கு சுரண்டுகின்ற வகையில் ஒப்பந்தங்களை போட்டுக் கொள்வதும் இதனை மனப்பூர்வமாக ஏற்கின்ற மாநில அரசுகள் மற்றும் இந்திய ஒன்றியத்தின் அங்கீகாரம் ஆகியவை அனைத்தையும் ஒருங்கிணைத்து புரிந்து கொள்வதும் போராடுவதும் தான் உண்மையான பிரச்சனை.

இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி முன்வைக்கின்ற 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக இருந்தாலும் சரி! ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட திமுக முன்வைத்த ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் ஆக இருந்தாலும் சரி! தற்போது பாசிச கோமாளி விஜய் முன்வைக்கின்ற 1.5 ட்ரில்லியன் பொருளாதாரமாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் நாட்டின் இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் குறைந்த கூலிக்கு சூறையாடிக் கொண்டு செல்வதை ஆதரிக்கின்ற ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைகளே ஆகும். 

இத்தகைய ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு நாட்டையும், மக்களையும் பாதுகாக்கின்ற சுயசார்பு பொருளாதாரம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

அதற்கு உடனடியாக அன்னிய முதலீடுகளை கட்டுப்படுத்துகின்ற, உள்நாட்டு தேசிய தொழில்களை ஊக்குவித்து வளர்ச்சியடைய செய்கின்ற, சிறு குறு தொழில்களின் உற்பத்தியை அதிகரித்து சுயசார்பு பொருளாதாரத்தை கட்டமைக்கின்ற வகையிலான ஒரு பொருளாதாரக் கொள்கையே அவசியமானது.

நிலவுகின்ற அரசு கட்டமைப்புக்குள் அல்லது ஆர்.எஸ்.எஸ் பாஜக முன்வைக்கின்ற ஏகாதிபத்திய அடிவருடி மறு காலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் இத்தகைய மாற்றங்களை ஒருபோதும் சாதிக்க முடியாது.

நாட்டின் வளர்ச்சி என்பது அன்னிய முதலீடுகளை பல லட்சம் கோடி ஈர்ப்பதில் இல்லை. நாட்டின் பெரும்பான்மை மக்களின் வேலை உத்தரவாதம், வாழ்க்கை உத்தரவாதம் மற்றும் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டிக் காக்கின்ற, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கின்ற வகையிலான பொருளாதாரக் கொள்கைதான் தேவை என்பதை படிப்படியாக பாட்டாளி வர்க்கத்திற்கும், பிற உழைக்கும் மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த ஒரு லட்சம் கோடி முதலீடு என்பது அறிவிக்கின்ற செய்தியாகும்.

கணேசன்

புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here