இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், நாட்டின் பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட்-15, 1947 இந்தியா சுதந்திரம் பெற்றதாக கூறிக்கொண்டாலும் இன்று வரை நாட்டின் பொருளாதாரத்தின் மீது அன்னிய ஏக போகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒரு வழியும் இல்லை.
சொல்லிக் கொள்ளப்படும் இறையாண்மையை காவு கொடுத்த காங்கிரஸ் மற்றும் பாஜக.
இந்தியாவை 1947க்கு பிறகு ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் மற்றும் தற்போதைய பாசிச பாஜக ஆகிய கட்சிகள் இரண்டுமே பெரும்பானமை மக்கள் சார்ந்துள்ள விவசாயத்தையும், வேளாண்மைப் பொருளாதாரத்தையும் பாதுகாப்பது என்ற குறிக்கோளை படிப்படியாக கைவிட்டு, விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டியடிப்பது; நகரத்தை நோக்கி ஓட வைப்பது; அந்நியக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு முதலாளிகளின் நிறுவனங்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்யக்கூடிய கூலி அடிமைகளாக மாற்றுவது என்பதை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.
90-களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைகள் காங்கிரஸ் கட்சியால் அமல்படுத்தப்பட்ட காலத்தில் மறுகாலனியாக்கம் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது. அதில் காங்கிரஸ் முழு வேகத்தில் செய்யவில்லை என்பதற்காகவே அதை தூக்கி எறிந்து விட்டு ஆர்எஸ்எஸ்-பாஜகவை கொண்டு வந்தது அமெரிக்க மேல்நிலை வல்லரசு தலைமையிலான ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்.
தற்போது ஒன்றிய அரசாங்கத்தை ஆண்டு வருகின்ற பாசிச பாஜக கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கையை தீவிரப்படுத்தி வருகிறது என்பது மட்டுமின்றி நாட்டை மறுகாலனியாக்கும் திசையில் வேகமாக கொண்டுச் செல்கிறது.
இதனால் பெரும்பான்மை மக்கள் சார்ந்துள்ள விவசாயம் படிப்படியாக கார்ப்பரேட்டுகளுக்கு வாரி கொடுக்கப்பட்டு விவசாய நிலங்களை தொழில் தொடங்குவது அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் கபளீகரம் செய்வது அல்லது நகரமயமாக்கம் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் குடியிருப்புகளாக மாற்றுவது என்று விவசாய நிலப்பரப்பு படிப்படியாக சுருங்கி வருகிறது.
எல் நினோ போன்ற இயற்கை பேரிடர்கள் விவசாயத்தை நாசமாக்குகின்ற வகையில் இருப்பதை பிரதானப்படுத்தி முதலாளித்துவ ஊடகங்கள் மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் கிளப்பி வருகின்றனர். ஆனால் பொருளாதாரக் கொள்கைக்காக விளை நிலங்கள் நாசமாக்கப்படுவது பற்றி வாயை திறப்பதில்லை.
செயற்கையாக பஞ்சத்தை உருவாக்க உள்ள பருவ நிலை மாற்றம்!
தற்போது ஏகாதிபத்திய முதலாளித்துவ ஊடகவாதிகளாலும், சூழலியல் அறிஞர்களாலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘எல் நினோ’ இந்தியாவின் பொருளாதாரத்தின் மீதும், விவசாய உற்பத்தி, நீராதாரம், உணவு உற்பத்தி ஆகியவற்றின் மீது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கப் போகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
எல் நினோ’ போன்றவை ஏற்படுத்தி வரும் வறட்சி மற்றும் பருவநிலை மாற்றங்கள் ஆகியவை இந்தியாவின் பொருளாதாரத்தை தலைகீழாக கவிழ்த்து போட போகிறது என்ற அச்சத்தை சூழலியல் வல்லுனர்கள் முன்வைக்கின்றனர்.
படிக்க:
♦ எரியும் இந்தியா: தகிக்கும் வெயிலில் தவிக்கும் தொழிலாளர்கள்”
அமெரிக்காவைச் சேர்ந்த ‘தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்’ (NOAA)-வின் தகவலின்படி, பசிபிக் பெருங்கடலில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வு ஒன்று உருவாகி வருகிறது; இது 1950-க்குப் பிறகு பதிவான எந்தவொரு நிகழ்வையும் விட வலுவானதாக இருக்க 69 சதவீத வாய்ப்புள்ளது.
1951-ம் ஆண்டுக்கு பிறகு இதுபோன்ற மிக வலுவான ‘எல் நினோ’ நிகழ்வு 6 முறை மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வு நடப்பு ஆண்டு முழுவதும் மேலும் வலுப்பெற்று, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் உச்சத்தை எட்டி, அடுத்தாண்டு மார்ச் வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடுகள் இந்திய ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளன என நைச்சியமாக பேச துவங்கியுள்ளனர். இந்த ஆண்டு காரிஃப் பருவம் உச்சத்தை அடைவதற்கு முன்பாக, குறிப்பாக எல் நினோ ஏற்படுத்த உள்ள பாதிப்புகளை சமாளிக்கின்ற வகையில் அவசரகாலத் திட்டங்களைத் திருத்தியமைக்குமாறு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR), மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் துறைகளை இந்திய ஒன்றியத்தின் வேளாண் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு ஒட்டுமொத்த மழையளவு, நீண்டகால சராசரியில் வெறும் 90 சதவீதமாக மட்டுமே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது உண்மையானால், கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் மிக பலவீனமான பருவமழை ஆண்டாக இது அமையும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஜூன் 4-ந் தேதி கேரளாவில் தொடங்கிய பருவமழை கடந்த 15-ந் தேதி 32 சதவீத மழை பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது. இந்த வறட்சி நிலை அடுத்த மாதமும் நீடித்தால் விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.
இந்தியாவில் மராத்வாடா, வட கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட சுமார் 150 முதல் 200 மாவட்டங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் தெலங்கானாவின் சில பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் சில கடலோரப் பகுதிகளைத் தவிர, ஏறக்குறைய நாடு முழுவதும் ஓரளவிற்குப் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
மக்களை பலியிடும் முதலாளித்துவம்! மாற்று சோசலிசம் மட்டுமே!
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பருவநிலை மாற்றம் என்பது இயற்கையினால் ஏற்பட்டது அல்ல. மாறாக ஏகாதிபத்திய முதலாளிகள் தனது லாப வேட்டைக்காக சூழலியல் சமநிலையை ஒழித்துக் கட்டுவது; புவி வெப்பமயமாவதற்கு என்னென்ன காரணங்கள் உள்ளதோ அவை அனைத்தையும் சட்டவிரோதமான முறையில் நிறைவேற்றுவது என்று செயல்பட்டு வருவதால் பூமி தனது இயற்கையான வெப்பநிலையை காட்டிலும் கூடுதலாக இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக மனித குலத்தை பாதுகாத்து வந்த இயற்கை பேரரண் முதலாளித்துவம் தோன்றிய இரண்டு நூற்றாண்டுகளிலேயே இயற்கையை படிப்படியாக அழிக்க துவங்கி தற்போது அந்த அழிவுகள் பேரழிவாக மாறியுள்ளது என்பதன் விளைவு தான் எல் நினோ தோன்றுவது ஆகும்.
இத்தகைய பருவ கால மாற்றங்கள் ஏற்படும் போது திடீரென்று உருவாகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பஞ்சம் ஆகியவை பெரும்பான்மை உழைக்கும் மக்களின் மீது பெரும் தாக்கத்தை உருவாக்கி கொத்துக் கொத்தாக மரணத்தை நோக்கித் தள்ளும் என்பதில் ஐயமில்லை.
இதற்கு நேர் மாறாக சோசலிசத்தை முன்வைத்து முன்னேறிய பொருளாதரங்கள் நாட்டின் இறையாண்மையையும், சுயசார்பு பொருளாதாரத்தையும் பாதுகாத்துக் கொண்டே படிப்படியாக வளர்ச்சி பெற்றது என்பது தான் ரஷ்ய மற்றும் சீனாவின் அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.
தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் ரஷ்யாவும், தோழர் மாவோ மறைவுக்கு பிறகு சீனாவும் தான் அமல்படுத்தி வந்த சோசலிசத்தை நோக்கிய பொருளாதாரக் கட்டமைப்பை கைவிட்டு விட்டு முதலாளித்துவ பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கத் துவங்கியதன் விளைவு தற்போது அந்த நாடுகள் சோசலிசத்திற்கு நேரெதிரான ஏகாதிபத்திய முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்துகின்றன.
மனித குலத்தின் அச்சுறுத்தலான ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசு அமெரிக்காவுக்கு போட்டியாக, ‘சிவப்பு போர்வையில்’ ஒளிந்துக் கொண்டுள்ள ரஷ்ய-சீன கூட்டணியானது மனிதகுலத்தை அச்சுறுத்த துவங்கியுள்ளது.
இவற்றை முறியடித்து இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை சுயசார்பு கொண்டதாக மாற்றுவதற்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. மாறாக தற்போது நிலவி வரும் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தை முறியடிப்பதும், அதற்கு மாற்றாக சுயசார்பு பொருளாதாரத்தை முன்வைக்கின்ற ஜனநாயக கூட்டரசை உருவாக்குவதும், அதிலிருந்து படிப்படியாக சோசலிசத்தை லட்சியமாக கொண்டு புதிய ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவது, நாட்டை வழி நடத்துவது என்பதுதான் பொருளாதாரத்தையும், எதிர்வரும் உணவு பஞ்சத்தையும், பொருளாதார நெருக்கடிகளையும் பாதுகாக்கின்ற மாற்று வழியாகும்.
ஆனால் இதைப் பற்றி அக்கறை செலுத்துவதை விட மக்களின் உடனடித் தேவைகளின் மீது அக்கறை செலுத்துவது, அதன் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்வது என்பதையே ‘சொல்லிக் கொள்ளப்படும்’ கம்யூனிச இயக்கங்களும் கட்சிகளும், தனது நடைமுறையாக கொண்டுள்ளது.
இவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டு செயல்படுகின்ற உழைக்கும் மக்களின் முன் சுயசார்பு பொருளாதாரத்தின் தேவையையும், அவசியத்தையும் முன்வைத்து ஓர் அணியின் கீழ் கொண்டு வருவது தான் தற்போதைய காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
◾மாசாணம்
புதிய ஜனநாயகம் தினசரி






