கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், அவரைக் காண வந்த மக்கள் மூச்சு திணறி செத்துக் கொண்டிருந்தபோது பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் தெறித்து ஓடிய விஜய், அனுதாபத்தை ஓட்டாக மாற்றி, மெதுவாக நிதானமாக தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்று கரூர் இடைத்தேர்தலை கணக்கில் கொண்டு மீண்டும் கரூருக்கு வந்துள்ளார்.
திமுக ஆட்சியின் போது பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கிறார்கள்; இடம் கொடுக்க மறுக்கிறார்கள்; 5000 பேர் தான் கலந்து கொள்ள வேண்டும் என கெடுபிடி விதிக்கிறார்கள் என ரசிகர்களின் வெறியை தூண்டிய விஜய், தற்போது அவரது ஆட்சியில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து ஓட்டு வாங்குவதற்காக அனுதாப கூட்டம் நடத்தியுள்ளார். 5000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜய் கலந்துக் கொள்வதற்காக 6000 போலீஸ் பாதுகாப்பு கொடுத்ததும் இந்நிகழ்வில் தான்.
கரூர் கூட்டத்தில் பேசிய விஜய், தனக்கு ஒன்றுமே தெரியாது என்றும், போலீஸ் நடத்திய நாடகத்தின் மூலம் தான் கரூர் கூட்டத்திற்குள் நுழைந்ததாகவும், தனக்கும் அந்த நெரிசல் மரணத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பது போல் துளிகூட குற்ற உணர்ச்சி இல்லாமல் பேசி உள்ளார் நடிகரும் முதல்வருமான விஜய். மதியம் 12.30 க்கு மணிக்கு வரவேண்டிய கூட்டத்திற்கு ஏன் இரவு எட்டு 8.45 மணிக்கு வந்தீர்கள் என கேட்பதற்கு அவர் ரசிகர்களும் தொண்டர்களும் தயாராக இல்லை. விஜய்யை காண வந்து செத்தால் கூட கவலை இல்லை என்பதுதான் அவர்களின் மனநிலை.
முதல்வர் விஜயின் பேச்சு எப்போதும் போல இன்றும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது தான். ஒவ்வொரு வசனமும் பேசி முடித்த பின் கேப் விட்டு அதனை ரசிகர்கள் ரசித்து ஆரவாரம் எழுப்பிய பின்பு தான் அடுத்த வசனம் பேசுகிறார். முதலமைச்சரான பின்பு ஏன் நான் பொதுவெளியில் பேசுவதில்லை என்பதற்கு நேர்மையான பதிலை அளிக்காமல் ரசிகன் அளவுக்கூ தரம் தாழ்ந்து, கொளத்தூரில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் தோற்றதை சுட்டிக்காட்டி “ஐந்து நிமிடம் பேசியதற்கு மக்கள் கொத்து புரோட்டா போட்டு விட்டார்கள்” என வசனம் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.
படிக்க: கழுத்தில் கட்டிய கலயம் தற்போது அடையாள அட்டையில் அதிகாரப்பூர்வமாகிறது! பாசிசக் கோமாளி விஜய் ஆட்சியில்
தன்னுடைய ரசிகர் கூட்டத்தின் மத்தியில் விஜய்க்கு பேசுவதில் எந்த பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. ஹீரோவை காண வந்த ரசிகர் கூட்டம் அவர் என்ன பேசினாலும் ரசிக்கும், கைதட்டும். அதை தாண்டி விஜய் என்ன அரசியல் பேச போகிறார் என்று அவர்களுக்கு கவலையில்லை. கூட்டம் முடிந்து அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வெளியே போகும்போது பாலிமர் செய்தி சேனல் அவர்களை பேட்டி எடுக்கிறது. முதல்வர் என்ன பேசினார் என்று கேட்காமல் எப்படி பேசினார் என்று தெளிவாக கேள்வி எழுப்புகிறார் பாலிமர் ஊடகவியலாளர். அதாவது படம் எப்படியிருந்தது என்பது போல. அதற்கு பதில் அளித்த அவரது ரசிகைகள் செம ஸ்பீச், வேற லெவல்ல இருந்தது, நாங்க போன முறையும் கூட்டத்திற்கு வந்திருந்தோம். இந்த முறையும் வந்திருக்கிறோம் என்கிறார். இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் கரூருக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார் அது குறித்து என்ன பேசினார் என்று கேள்வி எழுப்பினால் ஒருவரும் பதில் அளித்திருக்க வாய்ப்பில்லை. அவர்களிடம் என்ன கேள்வி எழுப்பினாலும் செம ஸ்டைலாக இருந்தாருங்க, கியூட்டா சிரிச்சாருங்க, பாதிக்கப்பட்டவர்களை பார்த்து அழுதாருங்க என்று விஜய்யை வர்ணிப்பார்கள். இப்போது புதிதாக, விஜய்யின் ஆட்சியில் லஞ்சம் ஊழல் இல்லைங்க பெண்கள் எல்லாம் பாதுகாப்பா இருக்காங்க என பேசுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் பார்க்கும் செய்தி எல்லாமே இன்ஸ்டாகிராமில் தான்.
ஆக விஜய் என்ன செய்தாலும் ஆதரிக்க, விசில் அடிக்க, கைத்தட்ட ஒரு பெரும் கூட்டம் உள்ளது. தலைவனுக்கு எவ்வாறு அரசியல் தெரியாதோ அதுபோல் தொண்டர்களுக்கும் அது தெரிந்திருக்க அவசியம் இல்லை என்று தவெக தலைவர் விஜய் கருதுகிறார். கத்தி படத்தின் கம்யூனிசம் குறித்த இட்லி விளக்க கதை அளவுக்கு கூட அவர்களுக்கு தெரிய தேவை இல்லை என்பதை விஜய்யை இயக்குபவர்களின் கருத்தும்.
படிக்க: கொல்லூர் ‘ஸ்ரீமூகாம்பிகை’யும் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் கும்பல் கூத்துக்களும்!
கள்ளக்குறிச்சியில் அரசின் அவலத்தால் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது சென்ற திமுக அரசு. அப்போதே அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அது எப்படி கள்ளச்சாராயம் குடித்து செத்துப்போனவன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கலாம் என்ற அதே கும்பல், இன்று நடிகனை பார்க்க வந்த செத்துப்போன ரசிகர்களுக்கும் அப்பாவி மக்களுக்கும் அரசு வேலை வழங்குவதை ஆதரிக்கிறது. தன் தலைவன் என்ன செய்தாலும் முட்டுக் கொடுக்கிறது.
இதனை சரியென நியாயப்படுத்துபவர்கள் கரூர் சம்பவத்தில் மட்டுமல்லாமல் தவெக-வின் கடந்த கால கூட்டங்களில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு ஏன் இது போல் உதவி செய்ய முன்வரவில்லை என்ற கேள்வியை எழுப்பவில்லை. எழுப்பவும் மாட்டார்கள். ஏனென்றால் தன் தலைவன் எதை செய்ய விரும்புகிறானோ அதையே ஆதரிக்க தொண்டர்களும் விரும்புகிறார்கள். உண்மையாக மாற்றத்தை விரும்பும் மக்களாக இருந்திருப்பார்களானால், கடந்த ஆட்சியில் திமுக செயல்படுத்திய தனியார்மய நடவடிக்கைகளை எதிர்த்து நின்றிருப்பார்கள். முதல்வரை விஜய்யிடம் தனியார் மயம் வேண்டாம் என கோரிக்கை வைத்திருப்பார்கள்.
“பாருங்க எந்த தலைவனாவது லஞ்சம் ஊழல் செய்தால் நடப்பது விஜய் ஆட்சினு சொல்லுங்க, என சொல்லுவார்களா? அண்ணன் மேடையிலேயே லஞ்சம் ஊழலுக்கு எதிராக பேசுகிறார் பாருங்கள்” என்கிறார்கள். ஆனால் மோடியைப் போல் பேச்சு மட்டும் தான். செயல் வேறொன்றாக உள்ளது. எதார்த்தம் களத்தில் வேறாக உள்ளது. இணைய கூலிப்படை கும்பலால் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை உண்மை என நம்புகிறார்கள் அவரது தொண்டர்கள்(ரசிகர்கள்).
படிக்க: ஹத்ராஸ் சம்பவத்தை நினைவூட்டும் நடிகர் விஜய்யின் ஆட்சி!
வரும் 5 வருடங்களுக்கு விஜய்க்கு அவரது தொண்டர்களால் (ரசிகர்கள்) பெரிதாக பிரச்சினை ஒன்றும் இருக்கப் போவதில்லை.. சட்டமன்றத்தில் ஒரு ஆக்சன். நடந்துப் போறப்ப க்யூட் லுக் இதுபோதும். இதைவைத்து தமிழ்நாடு முதல்வர் விஜய் காவி கும்பல் கைகாட்டும் திட்டங்களை செயல்படுத்தப் போகிறார். தனியார் மய நடவடிக்கைகளை துரிதப்படுத்த போகிறார். “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” என்று எழுதி வைத்தாலும் அதை குடிக்க என்று ஒரு கூட்டம் எப்போதுமே இருந்து கொண்டிருக்கும் அது போல தான் நடிகர் விஜய் கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளின் ஏஜென்ட் என்று சொன்னாலும் அவரை ஆதரிக்க ஒரு கூட்டம் இருக்கிறது, இருக்கும்.
- நலன்






