ஊழலை ஒழிப்போம்’ என்ற முழக்கத்துக்கு அப்பால்: விஜய்யின் முதல் 100 நாட்களும் ஊழலின் சமூக அரசியலும்!

‘ஊழல் ஒழிப்பு’ குறித்த சமஸின் கட்டுரைக்கு ஒரு விமர்சனம்

தவெக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நம்மைச் சுற்றிப் பரபரக்கும் ரீல்ஸ்-கள் சில நேரங்களில் நம்மையே தடுமாற செய்யும். மக்களை எப்படி எளிதாக நம்ப வைப்பது என்பதை தவெக டிஜிட்டல் மீடியா நிர்வாகிகள் நன்றாக அறிந்துள்ளார்கள். அந்த அளவுக்கு Script வலுவாக எழுதப்படுகிறது.

சில உதாரணங்களை கூறுகிறேன். ஒருவர் ரேசன் கடைக்குச் சென்று பொருள் வாங்கிவிட்டு “அரிசி, பருப்பு எப்படி பளபளப்பாய் இருக்கு பாருங்க. இதெல்லாம் விஜய் ஆட்சியால் தான்” என்கிறார். இதை பார்க்கும் ரேசன் கடைக்கே செல்லாத so called peoples, ‘wow’ என்று like போட்டு ஷேர் செய்வார்கள். இந்த ரீல்ஸ் தீப்போல பரவுகிறது. அன்று உண்மை என்னவாக இருந்தது தெரியுமா? அந்த நேரத்தில் வழங்கப்பட்ட அரிசி திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டது. ரீல்ஸ் பார்ப்பவருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அதனால் எப்படி வேண்டுமானாலும் கதைக்கட்டலாம்.

ஆனால், இதே வேலையை so called journalist-களும் செய்கிறார்கள் எனும் போது வேடிக்கை பார்க்க முடியாது. “செம்மையான நிர்வாகத்தின் மீதான தன்னுடைய தேட்டத்தை (விருப்பத்தை) செயல்பாட்டுரீதியாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்” என்று புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ் தனது கட்டுரையில் எழுதுகிறார். விஜய்யின் முதல் நூறு நாட்களை பரிசீலிக்கும் அவரது கட்டுரை, ‘நல்ல நிர்வாகம்’ குறித்த சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் அந்தக் கேள்விகளுக்கான அவரது அணுகுமுறை, ஊழலை ஒரு தனிநபரின் ஒழுக்கப் பிரச்சினையாகவும், சில நிர்வாகச் சீர்திருத்தங்களால் தீர்க்கக்கூடிய ஒன்றாகவும் சுருக்கிவிடுகிறது.

இதுவே அவரது கட்டுரையின் அடிப்படைப் பிரச்சினை.

ஊழல் என்பது ஒரு தனி மனிதனின் பேராசையிலிருந்து மட்டும் உருவாவதில்லை. அது அரசு இயந்திரம், அரசியல் அதிகாரம், தேர்தல் செலவு, கட்சி நிதி, அதிகார வர்க்கம், கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்கள், நிர்வாக நடைமுறைகள், குடிமக்களின் உரிமைகள் ஆகியவற்றுக்கு இடையிலான உறவுகளுக்குள் உருவாகும் ஒரு சமூக உறவு. அந்த உறவைப் புரிந்துகொள்ளாமல் “ஊழலை ஒழிப்போம்” என்று சொல்வதையும், சில நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் மட்டுமே செம்மையான நிர்வாகத்தின் அடையாளமாகக் கொள்வது போதுமானதல்ல.

ஊழல் என்பது தனிநபரின் ஒழுக்கக் குறைபாடா?

சமஸ் குறிப்பிடும் முக்கியமான விஷயம் அரசு அலுவலகங்களில் நிலவும் தாமதமும் லஞ்சமும். ஒரு குடிமகன் தனக்குரிய சான்றிதழையோ சேவையையோ பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகும்போது, அரசின் மீதான நம்பிக்கை பாதிக்கப்படுகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் இங்கு ஒரு அடிப்படைக் கேள்வி எழுகிறது.

அந்த லஞ்ச உறவில் அதிகாரியும் குடிமகனும் சமமான நிலையில் இருக்கிறார்களா?

ஒரு ஏழை தனது குடும்பத்துக்குத் தேவையான பட்டாவையோ சான்றிதழையையோ பெறுவதற்காக அலுவலகத்துக்குச் செல்கிறான். அதிகாரி அதைத் தாமதப்படுத்துகிறார். “இவ்வளவு கொடுத்தால் வேலை முடியும்” என்கிறார். அந்தக் ஏழை லஞ்சம் கொடுக்கிறார்.

இதை வெறுமனே “மக்களும் ஊழல் கலாச்சாரத்தில் பங்கேற்கிறார்கள்” என்று சொல்லிவிட முடியுமா? அவர் லஞ்சம் கொடுக்க விரும்பியதாலா கொடுத்தார்?

அல்லது தன்னுடைய உரிமையைப் பெறுவதற்கான அரச அதிகாரத்தின் கட்டாயத்தின் காரணமாகவா கொடுத்தார்?

இங்கேதான் ஊழலின் சமூகத் தன்மை புரிகிறது.

ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால் லஞ்சம் வாங்குபவரைத் தண்டிப்பது மட்டும் போதாது. குடிமகன் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்பதையும் ஆராய வேண்டும்.

“லஞ்சம் கேட்டால் புகார் செய்யுங்கள்” — அதன் மறுபக்கம் என்ன?

லஞ்சம் கேட்கும் அதிகாரியைப் பற்றி புகார் செய்தால் வெகுமதி வழங்கப்படும் என்ற அணுகுமுறை வெளிப்படையாகப் பார்க்கும்போது வரவேற்கத்தக்கதாகத் தோன்றலாம்.

ஆனால் இதையும் சமூக யதார்த்தத்தின் அடிப்படையில் கேள்வி கேட்க வேண்டும். ஒரு ஏழைக் குடிமகன் தன்னுடைய நாளைய வேலையைப் பாதிக்கும் அதிகாரிக்கு எதிராகப் புகார் கொடுக்கத் தயாராக இருப்பாரா?

படிக்க:

 தமிழகத்தில் ஊழல்- லஞ்சம் குறைந்து வருகிறதாம்! நம்புங்கள், “பரலோக சாம்ராஜ்யம்” சமீபத்தில் இருக்கிறது.

 ஊழல் ஒழிப்பு: இந்தியன் தாத்தாக்களின் புதிய அவதாரம்!

அவர் மீண்டும் அதே அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கலாம். அதே அதிகாரியின் கீழ் அவரது ஃபைல் இருக்கலாம். புகார் கொடுத்தால் பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சம் இருக்கலாம். புகார் விசாரணை முடியும்வரை தனது உரிமையைப் பெற முடியாமல் போகலாம். அப்படியிருக்கையில் “புகார் கொடுங்கள்; வெகுமதி பெறுங்கள்” என்ற திட்டம் மட்டும் ஊழலின் சமூக உறவை உடைத்துவிடுமா?

மேலும், எத்தனை புகார்கள் பெறப்பட்டன? எத்தனை புகார்கள் உண்மையானவை என்று நிரூபிக்கப்பட்டன? எத்தனை அதிகாரிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டன? எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்தது? எத்தனை பேருக்கு விஜய் அரசு அறிவித்த 1 லட்சம் வெகுமதி வழங்கப்பட்டது?

இந்தத் தரவுகள்தான் ஒரு ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையின் உண்மையான செயல்திறனை அளவிடும்.

“ஊழலை எதிர்க்கிறோம்” என்ற அறிவிப்பை விட அந்த அறிவிப்பு உருவாக்கிய அளவிடக்கூடிய விளைவுகள் முக்கியமானவை.  “அதிக வசதிகள் கொடுத்தால் ஊழல் குறையும்” என்ற வாதம.

சமஸ், “மாவட்ட ஆய்வுக்குச் செல்லும் அமைச்சர்களுக்கு அரசு சிறப்பு ஆய்வு நிதி ஒதுக்குவது உள்ளூர் பிரமுகர்களிடமும் நிறுவனங்களிடமும் உபசரிப்புக்காகக் கையேந்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும்” என்று குறிப்பிடுகிறார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு தேவையான சம்பளம், கார், உதவியாளர் போன்ற வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் கண்ணியத்தையும் நிர்வாகத் தூய்மையையும் பாதுகாக்க முடியும் என்கிறார். இதற்கு சிங்கப்பூரை உதாரணமாகவும் முன்வைக்கிறார்.

ஆனால் மனிதனின் ஊழலுக்கான உந்துதல் அவனுடைய தேவையால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறதா?

அப்படியானால் மிகப்பெரிய ஊழல்கள் எதற்காக உருவாகின்றன? ஏற்கெனவே கோடிக்கணக்கில் சொத்துகளை வைத்திருப்பவர்கள் ஏன் மேலும் கோடிகளைச் சேர்க்கிறார்கள்?

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலம், நிறுவனங்கள், ஒப்பந்தங்கள், பங்குகள் என செல்வத்தைப் பெருக்குவதற்கான முயற்சிகள் ஏன் தொடர்கின்றன?

இன்னும் அதிகமான செல்வத்தைத் தேடி வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கும் அளவுக்குச் செல்வக் குவிப்பு ஏன் நிகழ்கிறது?

ஊழலின் காரணம் “எனக்கு போதுமான சம்பளம் இல்லை” என்ற அளவுக்கு எளிமையானதல்ல. அது அதிகாரத்தின் மூலம் செல்வம் உருவாக்கக்கூடிய ஒரு கட்டமைப்புடன் தொடர்புடையது.

எனவே மக்கள் பிரதிநிதிகளுக்குச் சம்பளம் கொடுக்கக் கூடாது என்பதல்ல வாதம். மாறாக, நல்ல சம்பளம் ஊழலைக் குறைப்பதற்கான ஒரு நிபந்தனையாக இருக்கலாம்; ஆனால் அது ஊழல் ஒழிப்புக்கான உத்தரவாதமல்ல.

இதற்குத் தேவையானது வெளிப்படையான சொத்துக் கணக்கு, அரசியல் நிதியின் வெளிப்படைத்தன்மை, அரசு ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை, சுதந்திமான கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவை.

“சிங்கப்பூர்” என்ற ஒரே உதாரணத்தால் முடியுமா?

சிங்கப்பூர் ஊழல் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இருப்பது உண்மை. ஆனால் அதன் நிர்வாக மாதிரியில் இருந்து “அதிக சம்பளம் கொடுத்தால் ஊழல் குறையும்” என்ற ஒரு காரணத்தை மட்டும் பிரித்தெடுத்து இந்தியா போன்ற மிகப் பெரிய சமூக ஏற்றத்தாழ்வை கொண்ட ஒருநாட்டிற்கு பொருத்த முடியுமா?

படிக்க:

 நடுநிலை போல நடிக்கும் அறம் சாவித்திரி கண்ணன் எந்தப் பக்கம்?

 சவுக்கு சங்கர் கைதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா..? -சாவித்திரி கண்ணன்

ஒரு நாட்டின் ஊழல் அளவை அதன் அதிகாரிகளின் சம்பளத்தால் மட்டும் தீர்மானிக்க முடியாது. அங்கு அரசியல் நிதி எவ்வாறு இயங்குகிறது? அரசு நிறுவனங்களின் கண்காணிப்பு எப்படி? அரசு ஒப்பந்தங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன? அதிகார வர்க்கத்தின் மீது எந்த அளவுக்கு பொது கண்காணிப்பு உள்ளது?

நீதித்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரமா செயற்பாடுகள் என்ன? இவை அனைத்தும் சேர்ந்து ஒரு ஊழல் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குகின்றன.

“அறிவிப்புக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளி”

சமஸ் குறிப்பிடும் “21 நாள் காலக்கெடு, அரசு சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கல், கோயில் நில ஆவணங்களின் டிஜிட்டல் பதிவு, வாட்ஸ்அப் புகார் எண்கள்” போன்றவை நல்ல நிர்வாகத்தின் கருவிகளாக இருக்கலாம். ஆனால் இவை ஊழல் ஒழிக்கப்பட்டதற்கான சான்றுகள் அல்ல.

ஒரு சான்றிதழுக்கு 21 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கும், அந்தச் சான்றிதழ் உண்மையில் 21 நாட்களுக்குள் லஞ்சமின்றி வழங்கப்படுகிறது என்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

ஒரு புகார் எண் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கும், அந்தப் புகாரின் மீது சுயாதீனமான விசாரணை நடந்து குற்றவாளி தண்டிக்கப்படுகிறார் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு ஆவணம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது என்பதற்கும், நில அபகரிப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

எனவே நிர்வாகக் கருவியை சாதனையாகவும், அதன் விளைவை(கற்பனையை) நிரூபிக்கப்பட்ட உண்மையாகவும் குழப்பக்கூடாது. கட்சிக்குள் ஊழல் என்ற கேள்வி எங்கே?

இங்கேதான் சமஸின் கட்டுரையில் மிகப் பெரிய ஓட்டை இருக்கிறது.

ஒரு அரசாங்கம் ஊழலை ஒழிக்கப்போகிறது என்றால், முதலில் நாம் கேட்க வேண்டிய கேள்வி:

அந்த அரசியல் அமைப்பு தன்னுடைய உள்கட்டமைப்பில் ஊழலை எப்படி எதிர்கொள்கிறது?

விஜய்யின் கட்சியில் செங்கோட்டையன் இணைக்கப்பட்டிருப்பது இதற்கு ஒரு முக்கியமான அரசியல் கேள்வியை எழுப்புகிறது. அவருடைய கடந்தகால ஊழல் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் விவாதங்கள் உள்ள நிலையில், அவரை கட்சியில் இணைத்துக்கொள்ளும் முடிவை ஊழல் எதிர்ப்பு அரசியலுடன் எவ்வாறு ஒத்துப்போகிறார்கள் என்பதற்கு விளக்கம் தேவை.

இங்கு கேள்வி செங்கோட்டையன் என்ற ஒரே நபரைப் பற்றியது அல்ல. “ஊழலுக்கு எதிரான கட்சி” என்று தன்னை முன்வைக்கும் ஒரு கட்சிக்கு அரசியல் நெறிமுறைகளுக்கான அளவுகோல் என்ன? ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர்களை அரசியல் தேவைக்காக ஏற்றுக்கொள்வதா? அல்லது கட்சிக்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் வெளிப்படையான நெறிமுறை அளவுகோல் இருக்குமா?

இந்தக் கேள்வியை எழுப்பாமல் ஊழல் எதிர்ப்பு அரசியலைப் பற்றி எழுதுவது முழுமையான விமர்சனமாக இருக்க முடியாது.

அரசியல் கட்சி எங்கிருந்து பணம் பெறுகிறது?

ஊழல் பற்றி பேசும்போது நாம் பெரும்பாலும் லஞ்சம் வாங்கும் ஒரு கீழ்நிலை அரசு ஊழியரை மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அரசியல் ஊழலின் மிகப் பெரிய பரிமாணம் பணம் அரசியலுக்குள் நுழையும் இடத்தில்தான் இருக்கிறது.

ஒரு கட்சிக்கு தேர்தல் நடத்த பணம் தேவை. வேட்பாளர்களுக்கு பணம் தேவை. பிரசாரம் செய்ய பணம் தேவை. ஊடகங்களுக்குப் பணம் செலுத்த வேண்டும். கூட்டங்களை நடத்த வேண்டும். கட்சி அமைப்பை இயக்க வேண்டும். இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நலன்கள் என்ன?

அவர்கள் நாளை அந்த அரசிடம் ஒப்பந்தம் பெறுகிறார்களா? அரசின் கொள்கை முடிவுகளில் அவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படுகிறதா? கட்சிக்கு நிதி கொடுப்பவர்களின் அடையாளமும் தொகையும் முழுமையாக வெளிப்படுகிறதா?

படிக்க: 

 தேர்தல் ‌ பத்திரம்: பாஜக வெட்டிய தங்கச் சுரங்கத்திலிருந்து வெளிவரத் துவங்கி இருக்கும் பூதம்!

 ரூ.12,000 கோடி ஊழல்: இந்தியர்களின் தலையில் நிலக்கரியை அரைத்த அதானி

இந்தக் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு அரசு அலுவலகத்தில் ₹500 லஞ்சம் வாங்கும் அதிகாரியை மட்டும் ஊழலின் பிரதிநிதியாக காட்டுவது, ஊழலின் அரசியல் பொருளாதாரத்தை மிகச் சிறிய அளவுக்குச் சுருக்கிவிடுகிறது.

தேர்தல் அரசியலின் பண குவிப்பை வெளிச்சத்துக்குக் கொண்டுவராமல் ஊழல் எதிர்ப்பு முழக்கம் முழுமை பெறாது.

“நல்ல நிர்வாகம்” மட்டும் போதுமா?

சமஸ் தனது கட்டுரையின் இறுதியில் “செம்மையான நிர்வாகத்தின் மீதான தேட்டத்தை” விஜய் செயல்பாட்டில் வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்.

அவருடைய இந்த கருத்துருவாக்கத்தில் குறிப்பிட்ட வர்க்கத்தின் நலன் அடங்கியுள்ளது.

ஒரு அரசாங்கத்தின் முதல் நூறு நாட்களில் சில ‘நல்ல நிர்வாக நடைமுறைகள்’ தொடங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து, அந்த அரசாங்கம் ஊழல் எதிர்ப்பு அரசியல் அமைப்பை உருவாக்கத் தொடங்கிவிட்டது என்று முடிவு செய்வது சமஸ் சார்ந்த வர்க்கத்தின் தேவையாக இருக்கலாம். ஆனால் அதில் துளியும் உண்மை இல்லை.

ஊழலை ஒழிப்பதாக அறிவிப்பது எளிது. புகார் எண் உருவாக்குவதும் எளிது. காலக்கெடு அறிவிப்பதும் எளிது. அமைச்சர்களுக்கு ஆய்வு நிதி ஒதுக்குவதும் எளிது.

கடினமானது என்ன?

அரசியல் அதிகாரத்திற்கும் பெரும் பண குவிப்பிற்கும் இடையிலான உறவை வெளிப்படையாக்குவது.

கட்சி நிதியை வெளிப்படையாக்குவது. அரசியல் கட்சிகளுக்கு நிதி தரும் நிறுவனங்களின் சுயநலத்தை வெளிக்கொண்டு வருவது தனது சொந்தக் கட்சியிலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஒரே அளவுகோலைப் பயன்படுத்துவது.

அதிகார வர்க்கத்தின் மீது சுதந்திரமான மக்கள் கண்காணிப்பை ஏற்படுத்துவது. லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து ஏழை மக்களை விடுவிப்பது. இதுவே உண்மையான சவால்.

சமஸின் கட்டுரை முன்வைக்கும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் அனைத்தையும் ஊழலை ஒழிக்காது. அரசு சேவைகளுக்குக் காலக்கெடு நிர்ணயிப்பதும், டிஜிட்டல் மயமாக்குவதும், புகார் அளிக்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும், மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படைச் செயல்பாட்டுத் தேவைகளை அரசு வழங்குவதும் மேம்போக்கான நடவடிக்கைகள் மட்டுமே.

இதே நிர்வாக சீர்திருத்தத்தை கடந்த ஆட்சியாளர்களும் செய்திருக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் “லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம், லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க தொலைபேசி எண்ணை ஒட்டியது, இதுபோல பல அறிவிப்புகளை விஜய்க்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் விஜய் பேசுவது தற்போது சமஸ்-க்கு புதியதாக தெரிகிறது

ஊழல் என்பது ஒரு அதிகாரியின் பேராசை மட்டுமல்ல. அது ஒரு சமூக உறவு. அது அரசுக்கும் குடிமகனுக்கும் இடையிலான அதிகார உறவு. அது அரசியலுக்கும் பணத்திற்கும் இடையிலான உறவு.

அது கட்சிக்கும் பெருநிறுவனத்திற்கும் இடையிலான உறவு. அது தேர்தலுக்கும் பணத்திற்கும் இடையிலான உறவு. அது அதிகாரத்திற்கும் செல்வக் குவிப்பிற்கும் இடையிலான உறவு.

இந்த உறவுகளைத் தொடாமல் “ஊழலை ஒழிப்போம்” என்று சொல்வது அரசியல் ஏமாற்று முழக்கம் மட்டுமே; ஊழல் எதிர்ப்பு அரசியலாக இருக்காது.

விஜய் அரசு உண்மையில் ஊழலை எதிர்க்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால், அடுத்த நூறு நாட்களில் புதிய புகார் எண்களையும் புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவதைவிட, தன் சொந்த அரசியல் அமைப்பின் நிதி வெளிப்படைத்தன்மை, கட்சிக்குள் நெறிமுறை, அரசியல்–முதலாளித்துவ உறவுகள், அரசு ஒப்பந்தங்களின் வெளிப்படைத்தன்மை, ஊழல் புகார்களின் நடவடிக்கைத் தரவுகள் ஆகியவற்றை மக்களின் முன் வைக்க வேண்டும்.

அப்போதுதான் “ஊழலை ஒழிப்போம்” என்ற முழக்கம் ஒரு அரசியல் அறிக்கையிலிருந்து ஒரு சமூக மாற்றத்தின் திட்டமாக மாறத் தொடங்கும். அதுவரை, சமஸ் பாராட்டும் இந்த “நம்பிக்கையளிக்கும் தொடக்கம்” ஒரு கற்பனையாகவே கரைந்து போகும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here