கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் ஆகஸ்ட் 15 அதிகாலை வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, காட்டுக்குள் நான்கு பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று பேர் வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்; ஒருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வேட்டையாட வந்தவர்கள் என்றும், அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட வேட்டைக்கான பொருட்கள் இருந்ததாகவும், வனத்துறையினரை நோக்கி முதலில் அவர்கள் சுட்டதால் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் கர்நாடக அரசு கூறுகிறது.
ஆனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்தக் கூற்றை மறுத்து, அவர்கள் வேட்டையாடச் செல்லவில்லை என்றும், கால்நடைகளைத் தேடிக் காட்டுக்குள் சென்றவர்கள் என்றும் தெரிவிக்கின்றனர். இதனால், யார் முதலில் துப்பாக்கியால் சுட்டார்கள், வனத்துறையினர் உயிரைப் பறிக்கும் அளவுக்கு துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய அவசியம் உண்மையில் இருந்ததா என்ற கேள்விகள் எழுகிறது. சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை எப்படி நடக்கும் என்பது நாம் அறிந்ததே.
இச்சம்பவத்தை “தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்” என்ற கோணத்தில் பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அது நியாயமானதும்கூட. தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து கர்நாடக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைப் பதிவு செய்வதோடு, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம் மற்றொரு கொல்லப்பட்டவர்களின் சமூக வர்க்க நிலை அடிப்படையிலும் இதை பரிசீலிக்க வேண்டும்.
அவர்கள் உண்மையில் வேட்டையாடச் சென்றவர்களா என்பது விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது. அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும், அதற்கான தண்டனையை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்குத்தான் இருக்கிறது. ஒருவர் வேட்டையாடியதாகச் சந்தேகிக்கப்பட்டால் அவரைக் கைது செய்யலாம். ஆயுதங்களைப் பறிமுதல் செய்யலாம். வழக்குப் பதிவு செய்யலாம். நீதிமன்றத்தில் நிறுத்தலாம். அதற்குப் பதிலாக அவருடைய உயிரைப் பறிப்பது எப்போது சட்டபூர்வமானதாகிறது?
அங்கேதான் இந்தச் சம்பவத்தின் உண்மையான கேள்வி தொடங்குகிறது. “அவர்கள் முதலில் சுட்டார்கள்” அதை நாம் எப்படி நம்புவது? கர்நாடக அரசின் விளக்கம் தெளிவானது. காட்டுக்குள் சென்றவர்கள் ஆயுதங்களுடன் இருந்ததாகவும், வனத்துறையினரை நோக்கி முதலில் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் வனத்துறையினர் தற்காப்புக்காகச் சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அரசு கூறுகிறது.
வனத்துறையினரும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம் உண்டு. அவர்களுடைய உயிருக்கும் மதிப்பு உண்டு. உண்மையான ஆயுதத் தாக்குதல் நடந்திருந்தால், தங்கள் உயிரைக் காப்பாற்ற அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை இருக்கிறது.
ஆனால் ஒரு சாமானியனாக எனக்கு அடுத்த கேள்வி வருகிறது. அந்தத் தாக்குதலுக்கான ஆதாரம் என்ன இருக்கிறது. வனத்துறையினர் யாராவது சுடப்பட்டார்களா? யாராவது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்களா? அப்படி எந்த வனத்துறையினரும் பாதிக்கப்படவில்லை என்பதை செய்திகள் வாயிலாக பார்க்க முடிகிறது.
இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் “அவர்கள் முதலில் சுட்டார்கள்; எனவே நாங்கள் சுட்டோம்” என்று சொல்வது மட்டும் போதுமா? இது குற்றச்சாட்டு அல்ல. இது ஒரு சாமானியனின் கேள்வி.
அதிகாரத்தின் கையில் இருக்கும் துப்பாக்கி
ஒரு சாதாரண மனிதனின் கையில் துப்பாக்கி இருந்தால், அவன் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகலாம்.
ஆனால் ஒரு அரசு அதிகாரியின் கையில் அதே துப்பாக்கி இருக்கும்போது, அந்தத் துப்பாக்கியுடன் அரசின் அதிகாரமும் இருக்கிறது. அதிகாரியின் பின்னால் துறை இருக்கிறது. அரசு இருக்கிறது. சட்ட அமைப்பு இருக்கிறது. விசாரணை அமைப்புகள் இருக்கின்றன. அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
படிக்க:
♦ தூத்துக்குடி துப்பாக்கி சூடு – படுகொலைக்கு நீதி கேட்டு கலெக்டரிடம் மனு தந்த பொதுமக்கள்!
♦ கொலைகார காவல் துறையினருக்கு மரண தண்டனை: காவல்துறையின் அதிகார மமதையில் விழுந்த சம்மட்டி அடி!
சாதாரண மனிதனின் பின்னால் என்ன இருக்கிறது? அவனுடைய குடும்பம். அவனை எதிர்பார்த்து வீட்டில் காத்திருக்கும் மனைவி. அவன் சம்பாதிப்பதை நம்பி வாழும் குழந்தைகள். அவன் திரும்பி வருவான் என்று காத்திருக்கும் வயதான பெற்றோர். அதிகபட்சம் ஒரு வழக்கறிஞரை அந்த குடும்பத்தால் தேட முடியும் அவ்வளவு தான்.
அதனால்தான் அதிகாரத்தின் துப்பாக்கி சுடும்போது அதற்கான பொறுப்பு சாதாரண துப்பாக்கியைவிட அதிகமாக இருக்க வேண்டும். கர்நாடகா அரசு சொல்வது படி “அவர்கள் வேட்டைக்காரர்கள்” என்றால், அவர்கள் ‘வேட்டையாடச் சென்றவர்கள்’ என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் குற்றம் செய்திருக்கலாம். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்திருக்கலாம். காட்டு விலங்குகளை வேட்டையாடியிருக்கலாம்.
அப்படியானால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குற்றவாளி என்ற சந்தேகத்தின் காரணமாக அவருக்கு நீதிமன்றம் வழங்க வேண்டிய வாய்ப்பை பறித்துவிட முடியாது.
ஒரு காலத்தில் பிரபலமான நடிகர் சல்மான்கான் மீது வனவிலங்கு வேட்டை வழக்கு நடந்தது. அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடைபெற்றது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அங்கே சட்டம் தனது வழியில் சென்றது. அப்படியானால் இந்தச் சம்பவத்தில் மட்டும் ஏன் சட்டத்தின் அந்தப் பாதை உயிருடன் இருக்கும் மூன்று மனிதர்களை அடையவில்லை என்ற கேள்வி எழுகிறது.
அவர்கள் ஏழைகள். அவர்கள் அதிகாரம் இல்லாதவர்கள். அவர்கள் பெரிய வழக்கறிஞர்களை வைத்திருக்கக்கூடியவர்கள் அல்ல. அவர்கள் சமூகத்தில் செல்வாக்கு கொண்டவர்கள் அல்ல. அதனால் அவர்களுடைய உயிரின் மதிப்பு குறைந்து விடுகிறதா? இப்படி இருக்கும்போது அவர்களுக்கான நீதி எப்படி கிடைக்கும்.
சரி. “விசாரணை நடக்கும்” என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு சாமானியனுக்கு விசாரணை என்ற வார்த்தை மட்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால் அதிகாரி மீது குற்றச்சாட்டு இருக்கும்போது, அதே அதிகார அமைப்புக்குள் நடைபெறும் விசாரணையைப் பார்த்து பாதிக்கப்பட்ட குடும்பம் எப்படி முழுமையான நம்பிக்கை கொள்ள முடியும்? நிச்சயமாக இது நேர்மையான விசாரணையாக இருக்கும் வாய்ப்பு மிகக்குறேவே.
இப்பிரச்சினையில் தமிழக அரசின் மெத்தனமான செயல்பாடு வனத்துறையினருக்கே சாதகமாக அமையும். இங்கே கர்நாடக அரசை மட்டும் கேள்வி கேட்பது போதாது. தமிழக அரசையும் கேட்க வேண்டியிருக்கிறது. அண்டை மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று சாமானியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ‘கையில் துப்பாக்கி’ இருந்திருந்தாலும் கூட, அவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள்.
தமிழக அரசு வழக்கில் போதிய தீவிரம் காட்டவில்லை. வெறும் கண்டனம் போதுமா?இழப்பீடு மட்டும் போதுமா? கொல்லப்பட்டவர்களின் குடும்பம் சொல்வதை காதுகொடுத்து கேட்டு அவர்கள் பக்கம் உள்ள உண்மையை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை திரட்ட வேண்டியது தமிழக அரசின் முக்கியமான கடமை. அப்படி நடப்பதாக தெரியவில்லை. இந்த இடத்தில் தான் நமக்கு சந்தேகம் தோன்றுகிறது. அதிகார வர்க்கத்திற்கு ஏது எல்லை? கர்நாடகா தமிழ்நாடு என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை அதிகார வர்க்கத்திற்கு அனைத்தும் ஒன்று தான்.
தமிழகமும் கர்நாடகமும் மொழி, நீர், எல்லை என அரசியல் ரீதியாக பல விஷயங்களில் மோதிக்கொள்ளலாம். ஆனால் அதிகார அமைப்புகள் ஒன்றையொன்று எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில், அவற்றுக்குள் ஒரு இயல்பான பாதுகாப்பு உணர்வு உருவாகிறது. “நம்ம ஆளுங்கள நாமதான் காப்பாத்தனும்”. ஆனால் மக்களிடம் அந்த ஒற்றுமை உணர்வு இல்லை. அவர்களை பிரித்தாள உருவாக்கப்பட்ட அமைப்பு கொல்லப்பட்டவன் என்ன மதம் அடுத்து என்ன சாதி என்று பார்க்க வைக்கிறது. சொந்த சாதிக்காரனாகவே இருந்தாலும் பொருளாதார பின்புலத்தை பார்க்கிறது. இதுதான் அதிகார வர்க்கத்தின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது.
அதனால் தான் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்ட அன்று அங்கு ஒரு சிலரே நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். குறைந்தபட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற உணர்வு தமிழக மக்களுக்கு ஏற்படாதவாறு உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. இதிலிருந்து தமிழக மக்கள் மீளாதவரை தீர்ப்பு அதிகாரத்தின் பக்கம் தான் இருக்கும்.
- நந்தன்






