தமிழனின் வேர்களைத் தேடி…

அகழாய்வு மையங்களை நோக்கிய பயணம் – பகுதி 3 (நிறைவுப் பகுதி)

மதுரையை நோக்கிய நள்ளிரவுப் பயணம்

கீழடியை நோக்கிப் பயணம் என்றவுடன், எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி-கல்லூரிப் பருவத்து உற்சாகம் விழித்துக்கொண்டது. 12.08.2026 அதிகாலை 5:30 மணிக்குக் காட்பாடியில் தொடர்வண்டியைப் பிடிக்க வேண்டும். அதிகாலையில் கிளம்பினால் தாமதமாகி விடுமோ என்ற பதற்றத்தில், நள்ளிரவு 2 மணிக்கே வாலாஜாவிலிருந்து புறப்பட்டு 3 மணிக்கெல்லாம் காட்பாடி தொடர்வண்டி நிலையத்தை அடைந்துவிட்டேன். புத்தகங்களை நேசிக்கும் வாசிப்புப் பழக்கம் எனக்குள் இருந்ததால், அந்த அதிகாலைக் காத்திருப்பு ஒரு சுமையாகத் தெரியவில்லை.

பிற்பகல் 2 மணிக்கு மதுரை மண்ணில் காலடி வைத்தபோது வெயில் தகித்துக் கொண்டிருந்தது. வெயிலிலும் ஓயாத உழைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது மதுரை மாநகரம். அங்கிருந்து ஒரு நகரப் பேருந்தின் குலுங்கலில் பயணித்து மாட்டுத்தாவணியை அடைந்தேன். கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மதுரையின் அடையாளமான ஜிகர்தண்டாவைத் தொண்டையில் இறக்கிவிட்டு, உடன் வந்த நண்பரின் இருசக்கர வாகனத்தில் கீழடியை நோக்கிப் பயணமானோம்.

கீழடி: புதைந்து கிடந்த பூர்வகுடி நாகரிகம்

மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில், சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் வலதுபுறம் அடர்ந்த தென்னந்தோப்புகள் காட்சிளிக்கின்றன. அந்த அமைதியான தென்னந்தோப்புகளுக்குள் தான் தமிழர்களின் மாபெரும் நாகரிகம் — ஏன், இந்திய வரலாற்றின் திசையையே மாற்றிய வரலாறு புதைந்து கிடக்கிறது.

கீழடி அகழாய்வு மையத்தைச் சுற்றிப் பார்த்தபோது வியப்பில் உறைந்து போனேன். உரைகிணறு, சுடுமண் கலசங்கள் இருந்த அகழாய்வுக் குழியையும், மற்றொரு இடத்தில் அமைந்திருந்த பிரம்மாண்டமான தொழில் கூடத்தின் அமைப்பையும் பார்த்தபோது சிலிர்த்துப் போனது.

என்றோ புதைந்து போன கட்டட இடிபாடுகள் இன்று நம் கண்முன்னே நிமிர்ந்து நிற்கின்றன! என்றோ (முதுமக்கள்) தாழிக்குள் குமுங்கிப்போன நமது முன்னோர்கள் இன்று எழுந்து வந்து பேசுகிறார்கள்!

வடிகால் வசதியுடன் கூடிய நீண்ட செங்கல் சுவர்கள், நீர் தொட்டிகள் எனத் தமிழனின் நகரத் திட்டமிடலை நேரில் கண்டு திகைத்து நின்றேன். இந்த வரலாற்றுச் சொத்தைப் பாதுகாப்பதற்காக, முந்தைய திமுக அரசின் முன்னெடுப்பில் பெரிய தொழிற்சாலைகளில் அமைக்கப்படுவதைப் போன்ற பிரம்மாண்டமான கூரைகளை அமைத்து, மிக நேர்த்தியாகப் பராமரித்து வருகிறார்கள்.

அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தைப் பார்த்தோம். வெறும் பானை ஓடுகளையும், செங்கற்களையும் நேரில் பார்த்தாலும் சாமானியர்களுக்குப் புரியாத பல தகவல்களை, சங்க இலக்கியப் பாடல்களோடு ஒப்பிட்டு மிகச் சிறப்பாக விளக்கப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளனர். அங்குள்ள ஒவ்வொரு பொருளின் விளக்கத்தையும் முழுமையாக வாசித்து வெளியே வர ஒரு நாள் போதாது. நாங்கள் சென்றதோ பிற்பகல் 3 மணி என்பதால், மாலை ஆறு மணிவாக்கில் அங்கிருந்து அடுத்த அகழாய்வு மையத்தை நோக்கிப் புறப்பட்டோம்.

பட்டணமருதூர்: நெய்தல் நிலத்து உழைப்பும் ஆய்வாளர்களும்

அடுத்துப் பார்க்க வேண்டிய இடங்கள் மதுரைக்குத் தெற்கேயும் தென் கிழக்கேயும் இருந்ததால், அன்றிரவு தூத்துக்குடிக்குப் பயணமானோம். மறுநாள் காலை தூத்துக்குடிக்கு வடக்கே 15 கி.மீ தொலைவில் உள்ள பட்டணமருதூர் நோக்கி பயணித்தோம்.

சாலையின் இருமருங்கிலும் பரந்து விரிந்த உப்பளங்கள். நெல் வயல்களைப் போலப் பாத்திகளில் உப்புநீரைத் தேக்கி, அது ஆவியாகி உப்பாக மாறுவதைக் கண்டோம். நெல் வயல்களிலேயே புரண்டு வளர்ந்த எனக்கு இந்த உப்பள வயல்ககளைப் பார்த்த‌போது வியப்பாக இருந்தது. அந்த உப்புநீரைக் கொப்பளித்துப் பார்த்தபோது அடர்ந்த உவர்ப்புச் சுவை நாவில் தெரிந்தது. மக்சிம் கார்க்கியின் சிறுகதையில் வருவது போல உப்பளத் தொழிலாளர்கள் கால்களில் செருப்புக் கூட இன்றி, கொப்புளங்களோடு உப்பளங்களில் இறங்கி உப்பைச் சேர்க்கும் காட்சியைப் பார்த்தபோது உப்பளத் தொழிலாளர்களின் வேதனையான வாழ்க்கையே நினைவில் நிழலாடியது. அவர்கள் சிந்தும் வியர்வை தான் நம் உணவுக்குச் சுவையாகிறது என்பதை உணர்ந்தேன்.

படிக்க:

 தமிழனின் வேர்களைத் தேடி! (பகுதி 1) பயணக் கட்டுரை

 தமிழனின் வேர்களைத் தேடி…! (பகுதி – 2)

கடலை ஒட்டி, தாங்க முடியாத வெயிலில் கருகியிருந்த வேலிக்கருவ காடுகளுக்கு நடுவே, பட்டணமருதூரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. முந்தைய தி.மு.க  அரசின் முன்னெடுப்பில், மார்ச் 17, 2026-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், தோண்டப்பட்ட குழிகளில் பானை ஓடுகளும், மட்கலண்களும், எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகளும் கிடைத்தவண்ணம் உள்ளன. இங்குள்ள உரைகிணறும், கீழடியில் பார்த்த உரைகிணறும் வடிவத்திலும் அமைப்பிலும் ஒரே மாதிரியாக இருப்பதால், இதுவும் கீழடியின் சமகாலத்துத் துறைமுக நகரமாகவே இருக்கும் என நம்ப முடிகிறது.

சுட்டெரிக்கும் பொட்டல் வெயிலில் இரண்டு ஓலைக் குடிசைகள், ஒரு தார்ப்பாய் நிழல், ஒரு சிறிய மேசை — இதுதான் அங்கிருந்த ஆய்வாளர்களின் அலுவலகம்! தொல்லியல் படித்த ஒரு பெண் உட்பட நான்கு இளம் ஆய்வாளர்கள் அங்கே கடமை உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருந்தனர். அங்கே பணியாற்றும் உழைக்கும் பெண்கள், பூக்களை வருடுவதைப் போல மண்ணை மென்மையாக வருடிச் சலித்து, வரலாற்று ஆதாரங்களைச் சேகரிக்கிறார்கள். மறைந்துபோன நம் வரலாற்றை மீட்டெடுக்கும் உண்மையான காவலர்கள் இவர்கள்தான்!

“இது 200 மீட்டர் தொலைவில் கடல் கொண்ட ஒரு பழமையான துறைமுக நகரம். இந்த 200 ஏக்கர் நிலத்தையும் முழுமையாக ஆய்வு செய்தால், இந்திய வரலாற்றைத் தென்னகத்திலிருந்து திருத்தி எழுதுவதற்கான கூடுதல் தரவுகள் கிடைக்கும்” என்று அந்த இளம் ஆய்வாளர்கள் நம்பிக்கையோடு கூறினர்.

சிவகளை & ஆதிச்சநல்லூர்: இரும்புக் காலமும் ஈமக்காடுகளும்

துறைமுகம் என்றால் படகுகள் இல்லாமல் இருக்குமா? அதனால் தருவைக்குளம் என்ற ஊரில் இருந்த படகு கட்டும் தளத்திற்குச் சென்றோம். நவீனத் தொழில்நுட்பத்தில் மரங்கள், பிளைவுட்,  ‘கிளாஸ் ஃபைபர்’ மற்றும் ரெசின்களைக் கொண்டு இன்று படகுகளை உருவாக்குவதைப் பார்த்தபோது, எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத ஆதிகாலத்தில் நம் தமிழன் எப்படி மாபெரும் படகுகளைக் கட்டியிருப்பான் என்று எண்ணி வியந்தேன்.

அங்கிருந்து சிவகளைக்குச் சென்றோம். அது மேடான பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான ஈமக்காடு. எண்ணற்ற முதுமக்கள் தாழிகள்! 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புச் சான்றுகள்  கிடைத்த இடம் இதுதான். (கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் கிடைத்த இரும்பு சான்றுகளும் இதே காலத்வை) ஈமக்காடே இவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தால், இவர்கள் வாழ்ந்த ஊரை அகழாய்வு செய்தால் இன்னும் என்னென்ன கிடைக்கும்? இந்த ஈமக்காடு இடத்தை அகழாய்வு செய்யச் சிவகளை வரலாற்று ஆசிரியர் தோழர் மாணிக்கம் போன்றோர் எடுத்த பெருமுயற்சியை நினைத்துப் பார்த்தபோது சிரம் தாழ்ந்து வணங்கத் தோன்றியது.

படிக்க:

 வேத நாகரிகத்தைத் துரத்தும் கீழடி!

 கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல் | பகுதி 2

அடுத்து, தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூருக்குச் சென்றோம். இது இரண்டு மேடான நிலப்பரப்புகளில் அமைந்த ஈமக்காடு. 1876 வாக்கில் ஜெர்மன் இனவியல் அறிஞர் ஃபெடரிக் ஜாகோர் (Dr. Friedrich Jagor) என்பவரால் முதன்முதலில் இங்கு அகழாய்வு செய்யப்பட்டு, பொருட்கள் ஜெர்மனியின் பெர்லின் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் 1902-இல் ஆங்கிலேய தொல்லியலாளர் அலெக்சாண்டர் ரியா (Alexander Rea) இங்கு ஆய்வு செய்தார். நூறாண்டுகளுக்குப் பிறகு இப்போது மத்திய தொல்லியல் துறையால் கண்ணாடி மூடிகளுடன் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.

பொருநை அருங்காட்சியகம்: 2,500 ஆண்டு வரலாற்றின் வெளிச்சம்

கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர், பட்டணமருதூர் ஆகியவற்றின் தரவுகளை முழுமையாகப் புரிந்து கொள்ள நெல்லையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை அருங்காட்சியகத்திற்கு’ வந்தடைந்தோம்.

நெல்லை – கன்னியாகுமரி புறவழிச்சாலையில் இரு குன்றுகளுக்கு நடுவே, இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் நிலப்பரப்பமைப்போடு (Landscape) இந்த அருங்காட்சியகம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரமாகிவிட்டதால், அங்குள்ள 7D காட்சிப் கூடத்திற்கு முதன்முதலாகச் சென்றோம்.

அந்த 7D திரையிடல் நம்மை அப்படியே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழ் நிலத்திற்கு படகில் அழைத்துச் செல்கிறது! ஐவகை நிலங்கள், கொட்டும் அருவிகள், காடுகள், வனவிலங்குகள், கடல் ஆழத்தில் முத்து குளிக்கும் காட்சிகள் என அனைத்தும் நம் கண்முன்னே இயல்பாக நடப்பது போல் தத்ரூபமாக இருந்தது. ஆற்று நீரில் பயணித்து அருவியின் அருகே செல்லும்போது, நிஜமாகவே நம் முகத்தில் நீர் தெரித்தபோது உண்மையாகவே அறிவியன் அருகில் இருப்பது போன்று உணர முடிந்தது.

அப்போது என்னை அறியாமலேயே என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. உடன் வந்த தோழருக்கும் இதே உணர்வுதான். ஹைதராபாத், பெங்களூரு அருங்காட்சியகங்களை விட இது பல மடங்கு சிறந்தது பொருநை அருங்காட்சியகம். ஏனெனில், மற்ற அருங்காட்சியகங்கள் எழுதப்பட்ட வரலாற்றைப் பேசுகின்றன; பொருநை அருங்காட்சியகமோ இதுவரை எழுதப்படாத 2,500 ஆண்டுப் பழமையான தமிழனின் உண்மையான வரலாற்றைப் பேசுகிறது!

பயணம் உணர்த்திய அரசியலும் வரலாற்று முழக்கமும்!

வரும் 22-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள “தமிழ் மக்கள் இசை விழா” தொடர்பானத் தரவுகளைத் தேடியபோதுதான் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அந்த இசை விழாவின் முதன்மை முழக்கமான “கீழடியை உயர்த்திப் பிடி!” என்பதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை எனக்கு இப்போது முழுமையாகப் புரிந்தது.வேத நாகரிகத்தைத் துரத்தியடி!: ஆயிரம் ஆண்டுகள் பிந்தைய, இல்லாத ஒரு ‘சரஸ்வதி நாகரிகத்தை’ சிந்துவெளி நாகரிகத்தோடு முடிச்சுப்போட்டு, அதுவே இந்தியாவின் ஆதி நாகரிகம், வேத நாகரிகம் எனப் பொய்யான வரலாற்றுப் புனைவை உருவாக்கும் சனாதன சக்திகளுக்கு, கீழடியும் பொருநை நாகரிகமும் துரத்தி அடித்துள்ளன.

படிக்க:

 கீழடி: ஆரியம் செரித்து விட முழுங்கும் இரும்புக் கடப்பாறை! | Documentary | EZHUGA

 கீழடி நகர நாகரிகம் | தோழர் கோவன் பேட்டி

இந்திய வரலாற்றைத் தென்னகத்திலிருந்து திருத்தி எழுதும் போர் முழக்கம்!: இந்திய வரலாறு இனி கங்கைச் சமவெளியில் இருந்தல்ல, பாலாறும், தென்பெண்ணையும், காவிரியும், வைகையும், பொருநையும் (தாமிரபரணி) பாயும் தமிழ் நிலத்திலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான கதிரியக்கக் கார்பன் அறிவியல் சான்றுகள் (Carbon Dating) கைவசம் உள்ளன.

இந்த முழக்கங்கள் வெறுமனே இனப் பெருமிதம் பேசுபவை அல்ல! ஒரு காலத்தில் சாதியற்ற, வர்ணங்களற்ற, சமத்துவச் சமூகமாக வாழ்ந்த மக்களைத் வர்ண தர்மங்களின் பெயரால் பிளவுபடுத்திய சனாதனக் கோட்பாடுகளை வீழ்த்துவதற்கு நமக்குக் கிடைத்துள்ள வரலாற்றுச் சம்மட்டிகளே கீழடியும் சிவகளையும் ஆதிச்சநல்லூரும்!

நன்றியும் வேண்டுகோளும்!

தமிழனின் வேர்களைத் தொட்டு உணர்ந்த இந்த உணர்வுப்பூர்வமான பயணம் எனக்குள் ஆழமான வரலாற்றுப் படிப்பினையைக் கொடுத்துள்ளது.

இந்த பிரம்மாண்டமான அருங்காட்சியகங்களையும் அகழாய்வுகளையும் சாத்தியப்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும், முன்னெடுத்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் களத்தில் நின்று உழைக்கும் தொல்லியல் துறை அதிகாரிகள், இளம் ஆய்வாளர்கள், களப்பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழ்ச் சமூகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.

அன்பார்ந்த தோழர்களே!

நீங்கள் கோயில்களுக்கோ சுற்றுலா தலங்களுக்கோ செல்லுங்கள், அது உங்கள் விருப்பம். ஆனால், வாழ்நாளில் ஒருமுறையாவது பொருநை அருங்காட்சியகத்திற்கும் கீழடிக்கும் சென்று வாருங்கள். இல்லையேல் இந்த மண்ணில் நாம் வாழ்வதற்குக் காரணமான பண்பாட்டு முகவரியை நாம் அறியாமலேயே போய்விடுவோம்.

இசை விழா வேலை மற்றும் நேரக் காரணங்களால் எனது பயணக் கட்டுரையை இத்துடன் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். இந்த அனுபவங்களின் விரிவான அரசியலை வரும் ஆகஸ்ட் 22 தஞ்சை “தமிழ் மக்கள் இசை விழாவில்” உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அனைவரும் தஞ்சை நோக்கி வாருங்கள்! வர இயலாத தோழர்கள் நிதி உதவி அளித்து இந்த வரலாற்றுப் பண்பாட்டுப் போரில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழனின் வேர்களைத் கண்டுவிட்டோம். இனி வேருக்கு நீர் பாய்ச்சுவோம்! தமிழ் பண்பாட்டைக் காப்போம்!

  • தமிழ்மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here