நாகர்கோவில் கிளைச் சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர், பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி இவரது கடையில் தென்தாமரைக்குளம் போலீஸார் சோதனை நடத்தியபோது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்ததாக பறிமுதல் செய்யப்பட்டன. அவரைக் கைது செய்த போலீஸார், நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி காலை சிறையில் இருந்த சபரிவர்மன் இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சபரிவர்மனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன
இந்நிலையில் முதல்வர் விஜய்யின் நண்பரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஸ்குமார் ஆகியோர் சபரி வர்மனின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். சபரி வர்மனின் மரணத்திற்கான சந்தேகங்கள் அகலும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று அமைச்சர்களிடம் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். உடலை பெற்றுக் கொள்ள வலியுறுத்தி நிவாரணத்தொகை, இலவச வீட்டுமனை, குடும்பத்தில் ஒருவருக்கு தற்காலிக அரசு வேலை உள்ளிட்டக் கோப்புகளுடன் வந்திருந்தனர். இப்பிரச்சினையை எப்படியாவது ஊத்தி மூடிவிடலாம் என சென்ற அரசு தரப்பு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது.

சபரி வர்மன் செய்த ‘பெரிய’ குற்றம் என்ன?
தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிமுக, திமுக தற்போது தவெக என அனைவருடைய ஆட்சிக் காலத்திலும் சகஜமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக சிக்கிக் கொண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது தூயசக்தியின் தவெகவில் தான் ஐக்கியமாகி உள்ளார். எந்தெந்த கடைகளில் குட்கா விற்பனையாகிறது என்ற விவரம் அனைத்து காவல்நிலையத்திற்கும் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கையில் ஈத்தன்காடு கீழத்தெருவில் உள்ள சபரிவர்மனின் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் போலீஸார் கடையில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்களாம்.
படிக்க:
♦ லாக்கப் மரணம் – காவல்துறையின் அதிகாரத்திமிர்!
சபரிவர்மன் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதுடன், குட்கா பாக்கெட்டுகளை அவரே எடுத்து ஒப்படைத்துள்ளார். எவ்வளவு குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற விபரமும் எஃப்.ஐ.ஆரில் உள்ளது. தலா 15 கிராம் எடைகொண்ட புகையிலை – 11 பாக்கெட்டுகளும், தலா 12.6 கிராம் எடைக்கொண்ட கூL LIP – 4 பாக்கெட்டுகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு 192 ரூபாய் என அந்த எஃப்.ஐ.ஆரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 192 ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களுக்காக சபரி வர்மன் கைது செய்யப்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டுள்ளார்.
‘தூயசக்தி’யின் முன்னாள் பேச்சும், தற்போதைய அமைதியும்!
“லாக்கப் மரணங்கள் தொடர்ந்து நடப்பது மிகவும் வேதனையானது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் ஒரு நாகரிக சமூகத்தில் ஏற்க முடியாதவை; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம்-ஒழுங்கைக் காக்க வேண்டிய அமைப்புகள் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஒரு வருடத்திற்கு முன்பு இப்படி பேசியவர் வேறு யாருமில்லை ‘தூய சக்தி’ முதல்வர் விஜய்.
திமுக ஆட்சியின் போது காவல்துறை கொட்டடி மரணத்தில் அஜித்குமார் கொல்லப்பட்டபோது ஏற்கனவே காவல்துறையால் சிறை கொட்டடியில் கொல்லப்பட்ட 18 குடும்பங்களை அழைத்து ஒவ்வொருவராக பார்த்த விஜய் அதன் பின்னர் கொடுத்த செய்தி தான் மேலே நாம் பார்த்தது.
இவையல்லாமல் காவல்துறை கொட்டடி மரணத்திற்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஜய் பின்வருமாறு பேசி இருந்தார்.
படிக்க:
♦ தோழர் பசவராஜ் மீதான இராணுவ பயங்கரவாத படுகொலையும், ஆகாஷ் டெலிசன் மீதான போலீசு கொட்டடிக் கொலையும்!
♦ ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லையே, ஏன்?
“இது அரசியல் லாபத்திற்காக அல்ல; மக்களின் உயிர் மற்றும் நீதிக்கான போராட்டம். அஜித் குமார் காவலில் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. காவலில் இருப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசின் அடிப்படை பொறுப்பு அரசு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் வருத்தம் தெரிவிப்பது மட்டும் போதாது; குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜித் குமார் குடும்பம் மட்டுமல்லாமல், இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். தேவையான இழப்பீடு மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். காவல்துறை மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் பொறுப்பேற்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை இந்தக் கோரிக்கையை தொடர்ந்து முன்வைப்போம் என்றார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம்” என்று உறுதியளித்து ஸ்கிரிப்டை முழமையாக பேசி முடித்தார்.
ஆட்சி மாறினால் காவல்துறையின் இயல்பு மாறிவிடுமா?
அப்போது வெறும் நடிகராக, தவெக தலைவராக இருந்து வசனங்களை பேசிய விஜய் இப்போது துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியில் அமர்ந்துள்ளார். அதற்காக தமிழ்நாட்டை தலைகீழாக புரட்டிவிட வேண்டும் என நாம் சொல்லவில்லை. ஸ்டாலினுக்கு பதிலாக விஜய் வந்திருக்கிறார். ஆனால், அரசு அடக்குமுறை இயந்திரம் இன்னும் மாறவில்லை. காவல்துறை, நீதித்துறை, சிறை எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. அதில் வேலைப்பார்க்கும் அதிகாரிகளும் இன்றும் அதிகாரிகளாகவே தொடர்கிறார்கள். துறைகள் வேண்டுமானால் மாற்றப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்களுடைய அதிகாரத்திமிர் மாறாது. மக்களை அவர்களுடைய அடிமைகளாகவே கருதுகிறார்கள். அதனால் தான் இன்றும் லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.
சபரி வர்மனின் கொலையில் அவரது மனைவி ஆனந்தவல்லி கொடுத்த புகாரின் அடிப்படையில் நேசமணி நகர் போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சபரி வர்மன் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. சிறை காவலர்கள் மட்டுமல்லாமல் கைதிகளும் சேர்ந்து தாக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இவையனைத்தும் அவரது குடும்பம் மற்றும் அப்பகுதி மக்களின் போராட்டத்தினால் நடந்ததேயொழிய தானாக நடக்கவில்லை.
அதை தொடர்ந்து நாகர்கோவில் கிளைச்சிறை தலைமை வார்டனான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்த திருமலைநம்பி, வார்டன்களான கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடத்தைச் சேர்ந்த சிவகுமார், தேங்காப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெகன் ஆகிய 3 பேரை. நேற்று முன்தினம் இரவில் போலீஸார் கைது செய்தனர்.
படிக்க:
♦ சிறை: அரசின் உண்மை முகத்தை மறைபொருளாக காட்டிய கண்ணாடி!
♦ மடப்புரம் அஜித் குமாரை கொன்ற போலீசின் மீதான கோபத்தை திசை திருப்பும் திமுக ஆதரவு யூ டியூபர்கள்!
சம்பந்தப்பட்ட போலீசை உடனே கைது செய்தது வரவேற்க கூடியதுதான். கைது செய்ததால் காவல்நிலைய மரணங்கள் நின்றுவிடுமா? காவலர்கள் பயந்து விடுவார்களா? அப்படியிருந்திருந்தால் சாத்தான்குளம் தந்தை மகன் கொட்டடி கொலையில் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு பிறகு எத்தனையோ கொலைகள் காவல்நிலையத்தில் நடத்திருக்கிறது. தொடர்ந்து இந்த படுகொலைகளை நடத்தும் காவல்துறையில், மிருக குணம் கொண்ட போலீசார் சிலரை கைது செய்வதன் மூலம் சிறை கொட்டடி கொலைகளை தடுத்துவிட முடியாது. ஏனென்றால் ஒட்டுமொத்த காவல்துறையும் அதிகார வெறிபிடித்து மிருக குணம் கொண்டதாய் மாறியுள்ளது.
காவல்துறையின் இயல்பான குணத்தை மறைத்து சிலர் மட்டுமே மோசமானவர்கள் என்ற கருத்தை உருவாக்க முயல்கிறார்கள். ஆனால் மக்கள் மனதில் காவல்துறையின் மீது எப்போது நன்மதிப்பு இல்லை. இதுபோன்ற குற்றங்கள் நடந்த பிறகு காவல்துறையினர் உதவி செய்வது போல் விளம்பரம் தயாரித்து மீடியாக்கள் மூலம் பரப்பி மக்களிடம் இருக்கும் கோபத்தை தணிக்க செய்வார்கள். ஆனால், நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
காவல்துறை கார்ப்பரேட்டுகளிடமும், பணம்படைத்தவர்களிடம் எப்போதுமே நன்றியுள்ளவனாக வாலட்டும். அடித்தட்டு உழைக்கும் மக்களை கடித்துக் குதறும். அதுதான் அவர்களுடைய இயல்பான குணம். எப்போதாவது குற்றமிழைத்த பணக்காரன் பாத்ரூமில் வழுக்கி விழுந்த செய்திகளை பார்த்ததுண்டா? குட்கா தயாரித்த முதலாளியோ அல்லது அதற்கு உதவிய அதிகார வர்க்கத்தினரோ கொட்டடி கொலையில் கொல்லப்பட்டதுண்டா? அதற்கு வாய்ப்பே இல்லை. அதற்காக காவல்துறை உருவாக்கப்படவும் இல்லை. இதுதான் வரலாறு.
ஆட்சிகள் மாறலாம். ஆனால் அதிகார வர்க்கம் மாறப்போவதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாய்சவடால் விட்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இந்த கொட்டடி கொலைக்கு பதில் சொல்ல வேண்டும். காவல்துறை அவரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மட்டுமல்ல இவர்களை கட்டிக்காப்பாற்றும் அரசும் குற்றவாளியே. இந்த அரசும் அதன் காவல்துறையும் நமக்கானது அல்ல.
- நலன்






