”போலீசு சட்டபூர்வ கிரிமினல் கும்பல்” என்றார் ஓய்வு பெற்ற நீதிபதியான வி. ஆர். கிருஷ்ணய்யர். இந்தியா போன்ற அரைக்காலனிய நாடுகளில் ஜனநாயகத்தை தாங்கி நிற்கின்ற நான்கு தூண்களில்,
1)🔹அதிகார வர்க்கம்.
2)🔹 போலீசு, இராணுவம், நீதித்துறை.
3)🔹நாடாளுமன்றம், சட்டமன்றம்.
4)🔹 ஊடகங்கள்
என்பவை தான் ஜனநாயகம் குலையாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற நான்கு முக்கிய தூண்கள் என்று முதலாளித்துவ அறிஞர்களாலும், ஆளும் வர்க்கத்தாலும் தொடர்ச்சியாக முன் வைக்கப்படுகிறது.

இந்த நான்கு உறுப்புகளும் ஒன்றையொன்று விமர்சித்துக் கொண்டாலும், ஒன்றின் மீது ஒன்று குற்றம் சுமத்திக் கொண்டாலும், ஒவ்வொன்றும் தன்னை உயர்த்திப் பிடிப்பதும் தன்னால் தான் ’ஜனநாயகம்’ உயிருடன் இருப்பதாகவும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்வதில் வல்லவர்களாக உள்ளனர். அதே சமயத்தில் பெரும்பான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படும் போது மட்டும் ஒன்றிணைந்து நிற்கிறார்கள்.

இராணுவத்தைப் பற்றியோ இராணுவத்தின் நடவடிக்கைகளைப் பற்றியோ, இராணுவத்திற்கு கொடுக்கக்கூடிய நிதி பற்றியோ அல்லது இராணுவத்தின் செயல்பாடுகள் குறித்தோ விமர்சிப்பது, ’தேசத் துரோகம்’ என்பது எழுதப்படாத விதிகளில் ஒன்றாக மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ளது. அதற்கு நிகராகவே போலீசு பற்றிய கண்ணோட்டங்களும், போலீசு மீதான அதீத விசுவாசம் கொண்ட நம்பிக்கைகளும் ஆளும் வர்க்கத்தால் தொடர்ச்சியாக ஊட்டப்படுகிறது. இதனாலையே, ’போலீசு உங்கள் நண்பன்’ என்று தொடர்ச்சியாக ஆளும் வர்க்கத்தின் அனுதாபிகள் முதல் அரசாங்கம் வரை ஊளையிடுகின்றனர்.

போலீசு எப்போதும் மக்களுக்கு நண்பர்களாக இருந்ததே கிடையாது. விதிவிலக்காக தனிப்பட்ட சிலர் அவ்வாறு இருப்பதை வைத்துக் கொண்டு போலீசு என்ற அரசு உறுப்பானது மக்களுக்கு நண்பராக இருப்பதைப் போல சித்தரிக்கின்றார்கள். ஆனால் போலீசு ஆளும் வர்க்கத்தின் அடியாள் படையாகவும், லத்திக் கம்பாகவும் உள்ளது மட்டுமின்றி பெரும்பான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக் கருவியாகவே உள்ளது என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே, ’போலீசை சீர்திருத்துவது என்பதெல்லாம் கற்பனையான தீர்வுகள் தானே ஒழிய, ’நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதைப் போல போலீசைத் திருத்த முடியாது’ என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இந்த உண்மையை தொடர்ச்சியாக போலீசு நிரூபித்துக் கொண்டேயுள்ளது. கடைசியாக மடப்புரம் அஜித்குமார் விவகாரத்தில் கூட போலீசு எந்தவிதமான தானே முன் வைக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்படாமல், முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டு, புகார் கொடுக்கப்பட்டவர்தான் குற்றவாளி என்று தானே தீர்மானித்து ஒரு உயிரை கொடூரமாக, மிருகத்தனமாக பறித்துள்ளது.

”காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை, அதற்கான சிசிடிவி காட்சிகள் இல்லை. ஆனால் காது, மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் தாக்கப்பட்டுள்ளார். அந்த ரத்தக்கறைகள் எங்கே? சாட்சியங்களை சேகரிக்காமல் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? வாய் மற்றும் பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவி இருக்கிறார்கள்.

கொலையாளி கூட இவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்க மாட்டார். காது மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் குமார் தாக்கப்பட்டுள்ளார் என்று நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர். அப்போது இந்த வழக்கை அரசியலாக்கப் பார்ப்பதாக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில், நீங்கள் எதிர் தரப்பாக இருந்தாலும் இதைத்தான் செய்வீர்கள் என்று பதில் அளித்த நீதிபதிகள், சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் வழக்கை யாரும் மறந்திட முடியாது”: என்று கேள்வியெழுப்புகின்றனர் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள்.

போலீசு இவ்வாறு நடந்து கொண்டதை தமிழகத்தின் முதல்வரான மு.க.ஸ்டாலின் கூட ஏற்றுக்கொண்டு, ”போலீசு தவறிழைத்துள்ளதாகவும், இதனை ஏற்கவே முடியாது என்றும், நீதிபதி உத்தரவிட்ட சிபிசிஐடி விசாரணையைக் காட்டிலும் அதிகபட்ச விசாரணை அமைப்பான சிபிஐ வசம் ஒப்படைக்கவும்” உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் திமுகவின் ஆதரவு யூ டியூபர்கள் மற்றும் ஊடக விசுவாசிகள், ’மன்னனை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக’ மாறி இந்த வழக்கில் புகார் கொடுத்த நிகிதா என்பவரைப் பற்றி ஆய்வு செய்வதும், அவர் ஒரு கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவர், பாஜகவுடன் தொடர்புடையவர், அதிகாரத் திமிர் பிடித்தவர் என்பதையெல்லாம் முன் வைப்பதன் மூலம் போலீசு செய்த அக்கிரமங்கள்; மூன்றாம்தர முறையில் ஒரு இளைஞனை பல்வேறு இடங்களில் தாக்கி பச்சைப் படுகொலை செய்ததையும், ஒரு கொலை செய்பவனை விட அதிகமாக வெறியுடன் தாக்கியது யெல்லாம் திசை திருப்பகின்ற வேலையைச் செய்து வருகின்றனர்.

போலீசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்ற வகையில், ஒருவேளை நிகிதா இதுபோன்று அதிகார வர்க்கத்தின் துணையுடன், தனக்கு உறவினரான மேலதிகாரியுடன் துணையுடன் நடந்துக் கொள்ளாமல் இருந்திருப்பாரானல் போலீசு இத்தகைய அட்டூழியங்களை நடத்தியிருக்காது என்பதைப் போல சித்தரிக்கின்ற கீழ்த்தரமான, மோசடியான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதற்கும் மேலே சென்று திமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக இந்த செயலை திட்டமிட்டு போலீசுத் துறையில் உள்ள ஆர்எஸ்எஸ் பாஜக ஆதரவாளர்கள் நடத்தியுள்ளதாக புதிதாக கதை கட்டுகின்றனர். ”திருப்பரங்குன்றம் செய்ய முடியாததை திருபுவனம் செய்யும்” என்றெல்லாம் உளறி வருகின்றனர்.

அஜித் குமார் கொலை வழக்கில் அம்பலமான பிறகு வேறு வழி இன்றி போலீசின் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதே ஒழிய, ஆதாரபூர்வமாக வீடியோ வெளியாவதற்கு முன்பு வரை, ’போலீசின் காவலில் இருந்து தப்பி ஓட முயற்சித்ததாகவும், அவ்வாறு ஓடும் போது வலிப்பு நோய் வந்து மரணம் அடைந்ததாகவும் தான்” முதலில் போலீசு தனது கதையை முன் வைத்தது.

போலீசின் மூன்றாம்தர, மிளகாய்ப் பொடி, இரும்பு கம்பி தாக்குதல் போன்றவற்றின் மூலம் கொடூரமாக சித்திரவதை செய்த முறைகளை கோவில் பணியாளரான சக்தீஸ்வரன் வீடியோ எடுத்து, ஒருவேளை அம்பலமாக்காமல் இருந்திருந்தால் இந்த கட்டுக்கதையை பரப்பி பிரச்சனையிலிருந்து போலீசு தப்பி இருக்கும்.

கடந்த நான்காண்டுகளில் 25க்கும் மேற்பட்ட லாக்கப் கொலைகளை நடத்தியுள்ள தமிழக போலீசு, சட்டத்திற்கு அப்பாற்பட்டு தானே தீர்ப்பு வழங்கும் உரிமையைக் கையிலெடுத்துக் கொண்டு என்கவுன்டர்களையும் நடத்தி வருகின்றது என்பதை ஏற்கனவே புதிய ஜனநாயகம் தினசரியில் அம்பலப்படுத்தி இருந்தோம்.

போலீசு என்ற கட்டமைப்பு, தமிழகத்தின் முதலமைச்சருக்கு கட்டுப்படாத வேறு எங்கோ ஒரு முனையில் இருந்து அதாவது பாஜகவின் தலைமை பீடமான ஆர்எஸ்எஸ் சங்பரிவார அமைப்புகளின் மூலமாக கொடுக்கப்படும் அசைன்மென்ட்களை நடைமுறைப்படுத்துகின்ற ஒரு நிறுவனமாக மாறியுள்ளது என்று சித்தரிப்பதன் மூலம் போலீசின் அட்டூழியங்களையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும், கிரிமினல் கும்பலாக நடந்து கொள்கின்ற அன்றாட நிகழ்வுகளையும் நியாயப்படுத்துகின்ற செயலை திமுக ஆதரவு யூ டியூபர்கள் நாணயமற்ற முறையில் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:

 வேப்பந்தட்டை பட்டியல் இன இளைஞர் படுகொலை! சாதிவெறியர்களுக்குத் துணை போன காவல்துறை!

♦ வேங்கைவயல் வழக்கு: திமுக அரசும் காவல்துறையும் அணுகும் விதமே விசாரணையின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது!

போலீசின் நடவடிக்கைகளின் மூலம் அதனை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்கும், அப்படிப்பட்ட நிறுவனம் மக்கள் விரோதமாக செயல்படுவதையும், ஆளும் வர்க்கத்தின் அடியாளாகவும், குண்டாந்தடியாகவும் செயல்படுவதை அம்பலப்படுத்தி களமிறங்கி போராட வேண்டும் என முன் வைப்பதற்கு பதிலாக வழக்கை முன்வைத்த நிகிதாவின் வாழ்க்கை பற்றி பல்வேறு கோணங்களில் புலன்விசாரணை செய்து அதனை முதன்மைப் படுத்துவதன் மூலம் போலீசின் மீதான மக்களின் கோபத்தை நீர்த்துப்போகச் செய்கின்ற கேடான செயலை செய்கின்றனர்.

போலீசின் கிரிமினல் குற்றச் செயல்களை தனிப்பட்ட போலீசின் நடவடிக்கையாக கருதி ஒவ்வொரு செயலிலும் ஈடுபடுகின்ற போலீசை தண்டிப்பது அல்லது அவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது என்று சால்ஜாப்புக் கூறி அவர்களை திருத்த முயற்சிப்பது; அவர்களுக்கு நல்லொழுக்க, நீதி போதனைகளை முன்வைத்து ’கருணை கொண்டவர்களாக’ நடக்க கோருவது; போக்சோ, விசாகா போல புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் கட்டுப்படுத்துவது போன்றவை அனைத்தும் ஏற்கனவே பலமுறை முன்வைக்கப்பட்டு தோல்வி அடைந்த வழிமுறைகள் தான்.

தான் தமிழகத்தின் ஆட்சியை பிடிப்பதற்கு எந்த எல்லைக்கும் பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் செல்லும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. தொடர்ச்சியாக இது போன்ற பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கலவரங்களையும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் முயற்சிப்பார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் குறிப்பான சம்பவத்தில் போலீசின கொடூரமான தாக்குதல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்கு பதில் பொதுமைப்படுத்துவது, வேறொரு கதையை முன்னிறுத்துவது போன்றவை எந்த வகையிலும் போலீசின் கிரிமினல் குற்றச் செயல்களை தடுக்காது.

நாடு முழுவதும் பாசிச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்ற இன்றைய சூழலில் போலீசு மற்றும் ராணுவத்திற்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கியிருப்பதன் மூலம் அனைத்திற்கும் மேலான சர்வ அதிகாரங்களையும் கொண்ட கொலை பாதக அமைப்பாக, விசாரணைகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக இவை முழுமையாக மாற்றப்பட்டுள்ளது என்பது நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் நிரூபணமாகி கொண்டேயுள்ளது.

”போலீசு என்ற அடக்குமுறை எந்திரத்தை முற்றாக கலைக்க வேண்டும்; அதற்கு மாற்றாக மக்கள் கையில் அதிகாரத்தை கொடுக்கின்ற வகையில் மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்துகின்ற உரிமையை சட்டபூர்வமாக வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அதிகார கமிட்டிக்கு சட்டம் ஒழுங்கு உட்பட அனைத்து அதிகாரங்களையும், நிர்வாக முறையையும் தீர்மானிக்கின்ற புதிய வகையிலான அரசு கட்டமைப்பு ஒன்றை ஜனநாயகக் கூட்டரசு மூலம் உருவாக்க வேண்டும் என முன்வைத்துப் போராட வேண்டும்.

இதெல்லாம் உடனடியாக சாத்தியமில்லை என்று காரியவாதியாக பேசுபவர்கள் அறிந்தோ, அறியாமலேயோ ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாய்களான போலீசு-இராணுவத்திற்கு சேவை செய்கின்ற கருத்து பிரச்சாரகர்களாக மாறுகிறார்கள் என்பதையும் உணர்த்த வேண்டும்.

மருது பாண்டியன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

3 COMMENTS

  1. நியாயமான கண்ணோட்டத்தில் மடப்புரம் அஜித் குமார் படுகொலை தொடர்பாக காவல்துறையை முதன்மைப்படுத்தி அம்பலப்படுத்துவதே சரியானது என்பதனையும், பிரச்சனையின் தோற்றுவாயளரான நிகிதா-வின் குற்றப் பின்னணிகள் இரண்டாம் பட்சமாக தான் கருதப்படல் வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் படைக்கப்பட்டுள்ள இக்கட்டுரை சிறப்பானது. தோழர் மருது பாண்டியன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!வாழ்த்துக்கள்!

  2. திமுக ஆதரவு யூடியூபர்கள் அரசு கட்டுமானத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் நேர்காணல்களையும் கருத்துப் பதிவுகளையும் மேற்கொள்கிறார்கள் என சுட்டிக் காண்பித்து இருப்பது என்பது மிகச் சரியே. நான் கூட சில நேரங்களில் அப்படிப்பட்ட ஊசலாட்டத்திற்கு இரையானேன். பொதுவாக ‘ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவது இல்லை’
    என்பதற்கிணங்க ‘எந்த ஆட்சி வந்தாலும், போனாலும் நிரந்தரமாக இருப்பது நாங்களே’ என்று நெஞ்சு நிமிர்த்து நிற்கக்கூடிய அதிகார வர்க்கமே உண்மையான அரசாக நிலவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி எனில் வரம்பற்ற அதிகாரம் கொண்ட இந்த காக்கிச்சட்டை போலீஸ் ரவுடிகள் ஆனாலும் சரி; இராணுவ கூட்டமானாலும் சரி இவர்கள் எந்த வகையிலும் மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல; தலைவர் மாவோ சொன்னது போல
    ‘மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகிறோம் எனில் உழைக்கும் மக்களை தான் ‘. எனவே, இந்த வரம்பற்ற அதிகாரம் கொண்ட அடியாள் படையான இக்கூட்டங்கள் உழைக்கும் மக்கள் என்றால் கடுமையாக பதம் பார்க்கும் ; அதே நேர்வில் கொள்ளைக்கார பணக்கார கூட்டம் எனில் பல்லிலிக்கும். ஆக, கீழ்மட்ட காக்கிச் சட்டையினரே மடப்புரம் அஜித் குமார் போன்றோரை, சாத்தான்குளம் பெனிக்ஸ்- ஜெயராஜ் போன்றோரை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கி கொலை செய்கிறார்கள் என்றால் உத்தரவிடும் மேல்மட்ட அதிகாரிகளை பற்றி சொல்லவும் வேண்டுமோ? எனவே, ஆசான் லெனின் குறிப்பிட்டது போல வர்க்கங்களாக பிளவுபட்ட சமூக அமைப்பில் ‘அரசு’ என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க முடியாது. அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்கள் கமிட்டிகளுக்கே என்ற புரட்சிகர சமூக மாற்றம் வரும் வரை உழைக்கும் மக்களுக்கு விடியல் என்பது கிட்டாது. கொலையுண்ட மேற்கண்டோர் பட்ட பாட்டினை தான் தொடர்ந்து பட வேண்டி வரும். அந்த உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் திமுக சார்பு யூடியூபர்கள் கருத்துக்களை பரப்பிட முனைவதில்லை.
    ஒருவேளை ஒப்பிட்ட அளவில் எடப்பாடியை விட ஸ்டாலின் தேவலாம் என்பதல்ல பிரச்சினை; மக்களால் வாக்குகளைப் பெற்று அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பவர்களை விட நிரந்தர அமைப்புகளான ஐஏஎஸ் ஐபிஎஸ் முப்படை போலீஸ் நீதிமன்றம் இப்படிப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரங்களை குவி மயப்படுத்தி கொண்டிருக்க கூடிய நிரந்தர அதிகார வர்க்கத்திடமே மக்களை ஆளுகின்ற பொறுப்புக்கள் அடங்கி கிடக்கின்றன. உண்மையான ‘அரசு’ அதுவே; என்பதுதான் ஆசான் லெனின் வெளிப்படுத்துவது. அந்தக் கண்ணோட்டத்தை உணர்த்துகின்ற வகையில் தான் இக்கட்டுரை படைக்கப்பட்டுள்ளது என்பதாக உணர்கிறேன்.

  3. சிவகங்கை மடப்புரம் அஜித் குமார் காவலாளி காவல்துறையால் லாக்கப் கொலை செய்யப்பட்டது அதை திமுக யூடியூபர்கள் நிகிதாவை குற்றவாளியாக்கி அவருடைய பின்னணியை வெளிப்படுத்தி வழக்கை திசை திருப்பும் நோக்கிலும் போலீசை பாதுகாப்பது நோக்கிலும் செல்வது இந்த அரசு கட்டமைப்பை பாதுகாப்பது ஆர் எஸ் எஸ் பிஜேபியின் செயலுக்கு துணை போவதாக அமையும் ஆகவே குறிப்பான விஷயத்தில் குறிப்பான காவல்துறையை அம்பலப்படுத்தி அதை தண்டிப்பதற்கு என்ன தீர்வு அதைத்தான் திமுக உடைய யூடியூப் பேச வேண்டும் என்று பச்சை மரத்தில் ஆணி அடித்தால் போல் இந்த கட்டுரை உணர்த்தியுள்ளது கட்டுரை ஆசிரியர் தோழர் மருது பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here