“கிராமங்களில் அடித்தளத்தை கட்டுவது, கிராமப்புறங்களிலிருந்து முற்றுகையைத் தொடங்கி நகரங்களை சுற்றி வளைப்பது, இறுதியில் நகரங்களை கைப்பற்றுவது என்பதே சீனப் புரட்சியில் எங்களது அனுபவமாகும். எமது இந்த அனுபவம் முற்றாக உங்கள் நாடுகளுக்கு பொருந்துமா என்பது ஐயமே. எனினும் எமது அனுபவங்கள் உங்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தக்கூடும். எமது அனுபவங்களை அப்படியே நகலெடுத்து உங்கள் நாட்டில் நடைமுறைப் படுத்த வேண்டும் என்று தயவு செய்து நினைக்காதீர்கள். ஒரு நாட்டின் அனுபவம் மற்றொரு நாட்டிற்கு அப்படியே பொருந்தும் என்பது தவறு. உங்கள் நாடுகளின் தனிப்பட்ட தன்மைகள் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை அங்கே பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டை நீங்களும் பின்பற்ற வேண்டும்.”
– மாவோ.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்
ஒன்பதாவது மத்தியக் குழுவின்
முதலாவது பிளீனக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
ஏப்ரல்-28, 1969.
பாகம்-2.
நான் இந்த உதாரணத்தை கூறுவதற்கு காரணம் என்ன? புரட்சி இன்னும் முழுமையடையவில்லை என்று விளக்குவதற்கே. எனவே மத்தியக் குழு உறுப்பினர்கள்-மாற்று உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தயவு செய்து கவனியுங்கள். நீங்கள் மிகப் பரந்தபட்ட வேலையை செய்ய வேண்டியுள்ளது. மிகப் பரந்த அளவில் அதை செய்ய வேண்டியுள்ளது. மேலோட்டமாக செய்வது போதாது. அப்படி செய்வது அநேக நேரங்களில் தவறுகளில் தான் முடியும். பல இடங்களில் மிக அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தவறு. மிக அதிகமானோரை ஏன் கைது செய்ய வேண்டும். அவர்கள் கொலை, கலவரம், விஷம் வைப்பது போன்றவற்றில் ஈடுபட்டதில்லை. இது போன்ற குற்றங்களில் ஈடுபடாதவர்களை கைது செய்ய வேண்டியது இல்லை என நான் கூறியிருக்கின்றேன். முதலாளித்துவப் பாதையை தேர்ந்தெடுத்த தவறை செய்தவர்கள் இருந்தால் அவர்களை கைது செய்வது இன்னும் குறைவாகவே இருக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இருப்பவர்கள் நமது வேலையை செய்யவும் வெகுஜன இயக்கங்களில் பங்கு பெறவும் அனுமதிப்போம். தவறு செய்தவர்கள் கடந்த காலத்தில் தானே செய்தார்கள்! கோமிங்டாங்கில் சேர்ந்திருப்பார்கள். சில மோசமான வேலைகளை செய்திருப்பார்கள் அல்லது மிக சமீப காலத்தில் முதலாளித்துவ பாதையை தேர்ந்தெடுத்தது போன்ற தவறுகளை செய்திருப்பார்கள். ஆனாலும் கூட அவர்கள் மக்கள் திரளுடன் இணைந்து விட அனுமதிக்க வேண்டும். அவர்களை மக்கள் திரளுடன் இணைந்திட அனுமதி மறுப்பது தவறாகும்.
சிலர் ‘கால்நடை கொட்டகைகளில்’ இரண்டு வருடங்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். வெளியுலகில் என்ன நடக்கின்றது என்பது இவர்களுக்கு தெரியாது. அவர்கள் மீண்டு வந்து வெளியே உள்ள மக்களிடம் பேசும் போது அவர்களால் அர்த்தத்தோடு பேச முடியவில்லை. அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இருந்த மொழியிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையிலிருந்து இரண்டு வருடங்களுக்கு மணவிலக்கு செய்யப்பட்டு விட்டார்கள். இவர்களுக்கு நாம் கட்டாயமாக உதவி செய்ய வேண்டும். வகுப்புகள் நடத்தி வரலாறு பற்றி போதிக்க வேண்டும் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் மாபெரும் கலாச்சாரப் புரட்சி குறித்துப் பேச வேண்டும். அவர்கள் மெதுவாக விழித்தெழ உதவ வேண்டும்.
படிக்க:
ஒரே லட்சியத்திற்காக நாம் ஒன்று சேர்வோம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்துவோம். ஒவ்வொரு தொழிற்சாலையிலும், கிராமத்திலும் அலுவலகத்திலும் பள்ளியிலும் இந்த பணி நடைபெறுவதை உறுதிப்படுத்துங்கள். தொடக்கத்திலேயே இதை மிக விரிவாக செய்திட நீங்கள் முயற்சிக்க வேண்டாம். நீங்கள் செய்யலாம். ஆனால் தொடங்கிவிட்டு அதன் பின் அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பது சரியல்ல. அரை வருடமோ அதற்கு அதிகமோ இந்த வேலையை செய்வது, அதன்பின் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பது இதுவும் சரியல்ல. ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு அமைப்பிலும் நேரிட்ட தனித்தனியான அனுபவங்களை பதிவு செய்யுங்கள். தோழர் லின் பியாவோவின் அறிக்கை ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு கூட்டுப் பண்ணையிலும் நாம் கண்ட அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஒவ்வொரு கட்சி கிளையிலும், கீழ்மட்டக் கிளையிலும் கண்ட அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும். ஒரு இளைஞர் சங்க கிளையில் பணிகளை முடித்துவிட்டு அடுத்த கிளைக்கு போவது, அதன் பின் ஒட்டுமொத்த இளைஞர் சங்கத்தையும் அணுகுவது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
மற்றுமொரு விஷயத்தைப் பற்றியும் நாம் முன்பு பேசியுள்ளோம். நாம் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்பது. நமது போருக்கான ஆயத்த நிலையை வருடா வருடம் தொடர்ந்து பராமரித்துக்கொண்டே இருக்க வேண்டும். “எதிரி வராமலே போனால்?” என மக்கள் கேட்க கூடும். வந்தாலும் சரி வராது போனாலும் சரி, ஒரு போரை எப்போது வேண்டுமானாலும் நாம் சந்திக்க ஆயத்தமாக இருப்போம். கையெறி குண்டுகளை தயாரிப்பதற்கான பொருட்களை மையம் தான் கொடுக்க வேண்டும் என எதிர்பாக்காதீர்கள். கையெறி குண்டுகளை எங்கே வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஒவ்வொரு மாகாணத்திலும் கூட தயாரிக்கலாம். துப்பாக்கிகளையும், இலகுரக ஆயுதங்களையும் கூட ஒவ்வொரு மாகாணமும் தயாரிக்க முடியும். இது ஆயுத தயாரிப்பை பொருத்த விஷயம். ஆனால் மிக முக்கியமானது என்னவெனில் மனரீதியாக தயாரிப்பு நிலையில் இருப்பது. மனரீதியாக ஆயத்தமாக இருப்பது என்பது என்ன? உணர்வுபூர்வமாக போரிட தயாராக இருப்பது. மத்தியக் குழுவில் இருக்கின்ற நாங்கள் மட்டும் மனரீதியாக தயாரிப்பு நிலையில் இருந்தால் போதாது. ஆகப்பெரும்பான்மையான மக்களும் கூட மனரீதியாக தயாரிப்பு நிலையில் இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
நான் சொல்கிற ஆகப்பெரும்பான்மையான மக்கள் திரளில் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், எதிர் புரட்சியாளர்கள், தீய சக்திகள் ஆகிய பாட்டாளி வர்க்க சர்வாதிகார எதிரிகள் அடங்க மாட்டார்கள். ஏனெனில் இந்தக் கும்பல் ஏகாதிபத்தியவாதிகளும், திரிபுவாதிகளும் நம்மை தாக்கும் போது குதூகலம் அடையும் கும்பலாகும். இந்த சக்திகள் நம்மை தாக்கினால் இந்த உலகமே தலைகீழாக திரும்பிவிடும் என்றும், தாங்கள் உச்சிக்கு வந்துவிடலாம் என்றும் இக்கும்பல் கணக்கு போடுகின்றது. இந்த திசையிலும் நாம் தயாராக இருக்க வேண்டும் சோசலிசப் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கும்போதே நாம் இந்த புரட்சியையும் நடத்த வேண்டும்.
– தொடரும்.
புதிய ஜனநாயகம் தினசரி






