இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்பதற்காக, “நாடாளுமன்ற வழிமுறைகளுக்கு வெளியில் மக்களைத் திரட்டி ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலம் தான் புரட்சியை சாதிக்க முடியும்” என்ற கொள்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த மாவோயிஸ்ட் அமைப்பை முற்றாக ஒழித்துக் கட்டுவது என்ற திட்டத்தில் இந்திய ஒன்றிய அரசாங்கம் பல்வேறு படுகொலைகளை நிகழ்த்தியது.
ஆபரேஷன் காகர் என்ற பெயரில் மாவோயிஸ்டுகளையும், மாவோயிஸ்டுகள் குவிந்து வேலை செய்த பழங்குடி மக்களையும் நரவேட்டையாடியதன் மூலம் மாவோயிச அமைப்பின் மீதும் நக்சல் பாரி அரசியலை கொண்டு செல்கின்ற அமைப்புகளின் மீதும் அடக்குமுறைகளை ஏவி வருகிறது இந்திய ஒன்றிய அரசு.
ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கட்டுப்பாடற்ற, வரம்பற்ற மூலதனச் சுரண்டலுக்கும், கொள்ளைக்கும் வழி வகுக்கின்ற காலனியாதிக்கத்தின் புதிய வழிமுறையான மறுகாலனியாக்கம் இந்தியாவில் தீவிர தன்மையை எட்டி உள்ளது என்பதன் துலக்கமான வெளிப்பாடுதான் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம்.
இந்தக் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து அரசியல் ரீதியாக போராடுகின்ற புரட்சிகர இயக்கங்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோர்கள் மீது ஒருங்கிணைந்த முறையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது இந்திய ஒன்றிய அரசாங்கமான ஆர்எஸ்எஸ் பாஜக அரசு. இதன் மூலம் நாட்டின் இறையாண்மையையும், மக்களின் விடுதலையையும் நேசிக்கின்ற ஒவ்வொருவரின் மீதும் இராணுவ பயங்கரவாத தாக்குதல்களையும், அடக்குமுறையையும் ஏவி விடுகின்றது ஆர்எஸ்எஸ் பாஜக.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய இந்தியப் பகுதியில் பல்வேறு படுகொலைகளை நிகழ்த்தியது. இந்த படுகொலைகளை நிகழ்த்திவிட்டு இவை அனைத்தும் இந்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதன் காரணமாகவும், அரசைக் கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு போராடியதற்காகவும் நடத்தப்படுகிறது என்று அதனை நியாயப்படுத்தினார்கள். அவர்களே முன்வைக்கின்ற சட்டபூர்வ வழிமுறைகள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு இராணுவ பயங்கரவாத படுகொலை நிகழ்த்துவது ஒன்றே தீர்வு என்பதை முன்வைத்து நிகழ்த்தியும் காட்டியுள்ளனர்.
மாவோயிச இயக்கத்தின் பொதுச்செயலாளரான தோழர் பசவராஜ் காரே குட்டா மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சுற்றி வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவ்வாறு படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி அவரது உடலை கூட அவரது ரத்த உறவுகளுக்கும், தோழர்களுக்கும் கொடுக்காமல் ரகசியமாக எரித்து வெறும் சாம்பலை மட்டுமே கொடுத்தனர்.
படிக்க:
♦ மாவோயிஸ்டுகள்- பழங்குடிகள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! ஜூன் 5 பொதுக்கூட்டம்
♦ தொடரும் நக்சல் வேட்டை; மாவோயிஸ்ட் தலைவர்கள் படுகொலை; இந்தியப் புரட்சிக்கு பின்னடைவா?
இந்தியாவில் உள்ள ‘ ஜனநாயகத்தை பேசுகின்ற அறிவு ஜீவிகள் சமூகம்’ இதனைக் கண்டு அனைத்து துவாரங்களையும் பொத்திக் கொண்டது. இவற்றையெல்லாம் பேசப் போய் தன் மீதும் அடக்குமுறை வந்து விடும் என்ற அச்சத்தில் பலரும் கள்ள மௌனம் சாதித்தனர் என்பதையும் வரலாறு பார்த்துக் கொண்டுதான் உள்ளது.
எனினும், புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளையும் அதன் மக்கள் மீதான பற்றினையும் ஒருபோதும் தடுக்க முடியாது என்பதற்கு சான்றாக மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து புதிதாக ஒரு இயக்கம் தோன்றியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
அரசுக்கு எதிராக போராடினால் இவ்வாறு படுகொலைகள் செய்யப்படுவீர்கள் என்று பெரும்பான்மை சமூகத்தின் மீது விடப்படுகின்ற பகிரங்கமான மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலில் ஒரு வடிவம் தான் தேடுதல் கொலை அல்லது அரசு எதிரான போர் புரிந்தார்கள் என்ற முத்திரைக் குத்தி படுகொலை நிகழ்த்துவது ஆகியவையாகும்.
அதேபோல சமூகத்தில் அரசுக்கு எதிராக போராடினாலும் அல்லது சிறு சிறு குற்றங்கள் என்று குற்றம் சுமத்தி கைது செய்து போலீஸ் தனது கொட்டடிக்கு கொண்டு சென்று கடுமையாக விசாரணை செய்வது உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள வழிகாட்டுதல்கள் அனைத்தையும் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு மூன்றாம் தர முறையில் கொடூரமாக சித்திரவதைகளை செய்வது; லாக்கப்பிலேயே அடித்து படுகொலை செய்வது போன்றவையும் இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது என்பது மட்டுமின்றி தமிழகத்திலும் அத்தகைய போக்குகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது அப்பா – மகன் இருவரையும் விசாரணை என்ற பெயரில் அறிவித்து சென்று லாக்கப்பில் வைத்து படுகொலை செய்தது தமிழகத்தின் பயங்கரவாத போலீசு.
படிக்க:
♦ கொலைகார காவல் துறையினருக்கு மரண தண்டனை: காவல்துறையின் அதிகார மமதையில் விழுந்த சம்மட்டி அடி!
♦ நரி வேட்டை: மனசாட்சி உள்ள ஒரு காவலன்!
“கொரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடி சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் கொல்லப்பட்டதும், அவர்களை காவல்துறையினர் சித்திரவதைக்கு உள்ளாக்கிய விதமும் போராட்டங்களுக்கு காரணமாக அமைந்தது.
அப்போதைய தமிழக முதல்வர் பழனிச்சாமி, காவல்துறை எழுதிக் கொடுத்ததை அப்படியே சட்டமன்றத்தில் வாசித்தார். காவலர்கள் மீது குற்றமில்லை என வாதிட்டார். பின்னர், போராட்டங்கள் காரணமாக சிபிஐ க்கு வழக்கு மாற்றப்பட்டு சாத்தான்குளம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். இது போன்ற காவல் கொட்டடிக் கொலை பிரச்சினைகளில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அதிமுக ஆட்சியாளர்களை கடுமையாக சாடியது. தேர்தல் சமயத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவல் நிலைய கொட்டடி மரணங்கள் நிகழாது என வாக்குறுதி அளித்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 12 கொட்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.” என்று ஜூலை 2022 புதிய ஜனநாயகம் இதழில் எழுதி இருந்தோம்.
அதே பாணியில் திமுக ஆட்சியில் இறுதி நாட்களின் போது ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரை அழைத்துச் சென்று லாக்கப்பில் வைத்து அடித்து படுகொலை செய்துள்ளது மானாமதுரை போலீசு.
“மானாமதுரையைச் சார்ந்த ஆகாஷ் டெலிசன் என்ற 26 வயது இளைஞர், மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டார சிறப்புப்படை போலீசால் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொட்டடிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர் ஆவார். கடந்த மார்ச் 5 அன்று ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆதிக்கச் சாதியினர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக ஆகாஷ் போலீசால் கைது செய்யப்பட்டார். ஆனால், போலீசால் கால் உடைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆகாஷ், மார்ச் 7 அன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.”
போலீசின் உருட்டல்கள், மிரட்டல்கள் மற்றும் பல்வேறு வகையான சமாதான முயற்சிகள் ஆகியவை எதையும் ஏற்க மறுத்த ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இந்த கொலை குற்றத்திற்கு அடிப்படையான காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகாஷ் டெலிசனின் உடலை கூட வாங்காமல் போராடி வந்தனர்.
உடற்கூராய்வு கிடங்கில் கிடத்தப்படும் பிணங்கள் கேட்பாரற்று போகும் போது போலீசே முன் நின்று அந்த பிணத்தை எரித்து விடுவது வழக்கம். அந்த வகையில் ஆகாஷ் டெலிசனின் உடலை போலீசே முன் நின்று எரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனை ஒட்டி நேற்று மதுரை தத்தனேரி சுடுகாட்டில் அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது.
அரசு பயங்கரவாத ஒடுக்கு முறைகளில் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி தான் பாசிச பயங்கரவாத ஒடுக்குமுறையாகும். இரண்டும் கொடூரமான முறையில் மக்களின் மீது தாக்குதல்களை தொடுக்கிறது என்ற போதிலும் அரசு பயங்கரவாதத்திற்கும், பாசிசத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது என்பதை புதிய ஜனநாயகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
சொல்லிக் கொள்ளப்படும் சட்ட வழிமுறைகளை ஒருபோதும் மதிக்காமல், தான் விரும்புகின்ற வகையில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பெரும்பான்மை சமூகத்தின் மீது ஏறி மிதிக்கின்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு வகை தான் பாசிச பயங்கரவாதம்.
படிக்க:
♦ கையை உடை! காலை உடை! பல்லை உடை! சட்டப் பூர்வ கிரிமினல் கும்பல் போலீசு ஆட்சி!
♦ லாக்கப் மரணம் – காவல்துறையின் அதிகாரத்திமிர்!
நாடு முழுவதும் பற்றிப் படர்ந்து வரும் பாசிச பயங்கரவாதத்தின் பரிணாம வளர்ச்சியானது தமிழகத்திலும் ஊடுருவியுள்ளது என்பதன் துலக்கமான எடுத்துக்காட்டுதான் ஆகாஷ் டெலிசனின் உடலை போலீசே முன் நின்று எரித்தது, அதற்கு நீதிமன்றமும் துணை நின்றது ஆகியவையாகும்.
தமிழகத்தில் பாசிச கோமாளி விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என்பது மட்டுமின்றி போலீசுக்கு முழு அதிகாரம் கொடுக்கின்ற போலீஸ் ராஜ்ஜியமாக தமிழ்நாடு மாற்றப்பட்டு வருகிறது என்பதும்; சட்டம் ஒழுங்கு, கிரிமினல் குற்றச் செயல்கள், பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பது, ரவுடிகள் பொறுக்கிகள் தலை விரித்தாடுவது ஆகியவை அனைத்துக்கும் தீர்வு போலீஸ் கையில் முழு அதிகாரத்தையும் வழங்குவது தான் என்று பல்வேறு முற்போக்கு பிற்போக்கு கும்பல் சாமியாட துவங்கி விட்டது.
இதனால் துணிச்சல் பெற்றுள்ள பாசிச கோமாளி விஜய் அரசாங்கமானது போலீசுக்கு அதிகாரத்தை வழங்குகின்ற திசையில் முன்னேறிக் கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள், உச்சநீதிமன்றமும் வழங்கியுள்ள தீர்ப்புகள் அனைத்துக்கும் எதிராக சிறப்பு சட்டங்கள் மூலம் போலீஸ் ராஜ்ஜியத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு வழிகோலுகிறது இத்தகைய நடவடிக்கைகள்.
ஆகாஷ் டெலிசன் உடலை நியாயம் கிடைக்கும் வரை புதைக்க மாட்டோம் என்று நெஞ்சுரத்துடன் முன் நின்ற ஆகாஷ் டெலிசனின் பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள். அதற்கு துணை நின்ற ஜனநாயக சக்திகள் அனைவரும் பாசிசத்தை எதிர்கொண்டு போராடுவதற்கு ஓர் அணியில் திரள வேண்டும் என்ற அனுபவத்தை கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் இராணுவ பயங்கரவாத தாக்குதலின் மூலம் படுகொலை செய்யப்பட்டு போலீசு, இராணுவத்தினால் எரித்து சாம்பலாக்கப்பட்ட மாவோயிச இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு நிகழ்ந்த கொடூரமும், தமிழகத்தில் ஆகாஷ் டெலிசன் மீது நிகழ்த்தப்பட்ட கொட்டடி கொலை மற்றும் அதன் பிறகு தற்போது எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ள கொடூரமும் நமக்கு உணர்த்துகின்ற உண்மை இதுதான்.
இந்தியாவில் இன்னமும் போலி ஜனநாயக அரசு கட்டமைப்பு அதிகாரத்தில் இல்லை. மாறாக பாசிச உள்ளடக்கம் கொண்ட அரசு கட்டமைப்பு அதிகாரத்திற்கு வந்துள்ளது என்பதும், பாசிச பயங்கரவாத ஆட்சி நாடு முழுவதும் பரவலாகி வருகிறது என்பதும், அதனை எதிர்த்து முறியடிப்பதற்கு பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி நிறுவப்பட வேண்டும் என்பதும், நாட்டு மக்களின் பொது எதிரியாக மாறியுள்ள கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத கும்பலின் ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறிந்து அதற்கு மாற்றாக ஜனநாயகக் கூட்டரசு உடனடியாக நிறுவப்பட வேண்டும் என்பதுதான் அந்த உண்மை
- தமிழ்ச்செல்வன்.
புதிய ஜனநாயகம் தினசரி







