ழக்கம்போல் இந்த ஆண்டிலும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. பக்தர்களைப் பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி முடிந்திருந்தாலும், தெருவுக்கு தெரு வைக்கப்பட்டு இருக்கும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிள்ளையாரை கரைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை.

ஒவ்வொரு பகுதிக்கும் நாள் குறிக்கப்பட்டு, கரைக்கப்பட வேண்டிய இடம் குறிக்கப்பட்டு, மேள தாளங்களுடன் ஊர்வலம் சென்று உடைபட்டபடி, மூழ்கடிக்கப்பட்டபடி இருக்கின்றன பிள்ளையார் சிலைகள்.

பிள்ளையார் குறிப்பிட்ட ஒரு சாதி கடவுள் அல்ல; அவர் பொதுவானவர். முச்சந்தியில் அரசமரத்தடியில் வீற்றிருப்பவர்.

அந்த வகையில் கீழ் சாதி – மேல் சாதி, ஊர் தெரு – சேரி என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல், தெருவுக்கு ஒன்று இரண்டு பிள்ளையார்களை ஸ்பான்சர் செய்திருக்கிறார்கள் காவிகளும், காவிகளின் எஜமானர்களான கார்ப்பரேட்டுகளும்.

கிழிந்து தொங்கும் இந்து முகமூடி!

“நாமெல்லாம் இந்து” என்று இந்து ஒற்றுமையை வாய்கிழிய பேசும் சங்கி கும்பல், ஊருக்குள் நுழைந்தவுடன் “நீ இந்த சாதி, நீ அந்த சாதி” என்று நால்வர்ணத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

எந்த சாதியை ஆதரித்தால் தனது வாக்கு வங்கியை உயர்த்திக் கொள்ள முடியுமோ, குறிப்பிட்ட ஒரு பகுதியில் செல்வாக்கை நிலை நாட்ட முடியுமோ, அதற்கு ஏற்பவே தனது சார்பை தேர்வு செய்கிறது ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல்.

அதாவது கட்சி தலைமை பொறுப்புகளுக்கு குறிப்பிட்ட சாதியையும், அடியாள் மற்றும் கிரிமினல் வேலைகளுக்கு குறிப்பிட்ட சாதியையும் சேர்ந்தவர்கள் தான் தேவை என்று திட்டமிட்டு ஆள் தேர்வை செய்கின்றனர்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி அமைப்பை உருவாக்கி கொடுத்து அர்ஜுன் சம்பத் போன்றவர்களை திருப்திப்படுத்தியும் விடுகின்றனர். அதே பாணியில் தான் ஊர் தெருவுக்கு தனி பிள்ளையாரையும், சேரிக்கு தனி பிள்ளையாரின் தந்து பிள்ளையாரையும் கூட தீட்டுப் பிள்ளையாராக உருவாக்கி இருக்கிறார்கள்.

சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் பழங்குடியின மக்களால் வைக்கப்பட்ட பிள்ளையார் ஊர் வழியாக செல்ல முடியாமல் சாலையில் 3 மணி நேரமாக தர்ணாவில் இறங்கினார்.

இந்து ஒற்றுமை சங்கிகளுக்கு தேவையில்லை; சாதி வேற்றுமை தான் அவர்களுக்கு தேவை. சேரிப் பிள்ளையாரை ஊர் வழியாக எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பதும், அதை கண்டித்து மறியல் செய்வதுமாக மீண்டும் சாதிவெறியை விசிறி விட்டுள்ளனர் பிள்ளையார்களை ஸ்பான்சர் செய்யும் காவி கூட்டத்தினர்.

சேரி பிணத்துக்கு மட்டுமல்ல; சேரிப் பிள்ளையாருக்கும் கூட ஊர் தெருவில் அனுமதி இல்லை என்று கொக்கரிக்கிறது ஆதிக்க சாதி கூட்டம். “ஆஹா அடித்துக் கொள்ளுங்கள்; நான் ஆதாயம் அடைகிறேன்” என்று பார்த்து ரசிக்கிறது ஆர்.எஸ்.எஸ் கூட்டம்.

பிள்ளையார் ஊர்வலத்தில் ஆள் தேர்வு!

பாஜக தனது ஐடி விங்குக்கு ஆள் எடுப்பது என்றால் அதற்கு தனியாக தேர்வுகளை நடத்தி, பரிசோதனைகளை முடித்து பொறுக்கி எடுப்பார்கள். அதே நேரம் அடியாட்களுக்கு ஆட்களை எடுக்க வேண்டும் என்றால் இது போன்ற கலவர பிள்ளையார்களை தெருவுக்கு தெரு ஸ்பான்சர் செய்து, யார் அதன் பின்னால் சுற்றுகிறார்கள், வெறிகொண்டு கத்துகிறார்கள், ஆடி பாடி குதிக்கிறார்கள் என்று பார்த்து ஆள் எடுக்கிறார்கள்.

படிக்க: விநாயகர் சதுர்த்தி: பக்தியின் பெயரில் திணிக்கப்பட்ட இந்துத்துவ அரசியல்!

அப்பாவி இந்து பெற்றோர்கள் தன் பிள்ளை பிள்ளையார் பின்னால் தான் சுற்றுகிறான் என்று தவறாக நினைத்தால், நாளை அவன் காவி பாசிஸ்ட்டாக மாற்றம் பெறுவதையும், கலவரக்காரனாவதையும், பாலியல் வல்லுறவுகளை செய்து படுகொலைகளை செய்பவனாகவும்தான் மாறி நிற்பான்.

ஆபத்து புரியாமல் பிள்ளையார் சிலையை வைத்து விசில் அடித்து ஆடும் விடலை பையன்களை பிள்ளையார் எல்லாம் வந்து தடுக்க மாட்டார். எனவே இந்துக்கள்தான், இந்துக்களாக பிள்ளைகளைப் பெற்று பக்தனாக செல்வதாக நம்பி ஏமாறும் பெற்றோர்கள்தான் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

பிரியாணி கடையில் விநாயகர்!

“கொழுக்கட்டைக்கு அப்புறம் நம்ம ஊர்ல பிள்ளையாருக்கும் பிடிச்ச ஒரே சுவை… நம்ம பிரியாணி மட்டும்தான் என்று விநாயகர் பிரியாணி சமைப்பது போல டிஜிட்டல் பேனர் வைத்துள்ளான் ஒரு இந்து.

முஸ்லீம் பாய்தான் இந்த வேலையை பார்த்து உள்ளார் என்று விஷத்தை பரப்பினர் சங்கிகள். இந்து முன்னணியினர் கடை முன் சென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரியாணி கடை உரிமையாளரான கேடிசி நகரைச் சோ்ந்த முருகையா மகன் ஜெயந்த் (30) என்பவரை கைது செய்துள்ளனர்.

பிள்ளையாரை எடுத்துக்கொண்டு மசூதி பக்கம் செல்வது, சர்ச் முன்னால் செல்வது, வம்பிழுக்கும் முழக்கங்களை எழுப்புவது என்பது வழக்கம் போல் தொடரத்தான் செய்கிறது. இந்த விநாயகர் ஊர்வலத்துக்கும், தலையில் கொட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபடும் பிள்ளையார் பக்தர்களுக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை.

தெருக்கு தெரு பிள்ளையார் கோயில்கள் இருக்கும் பொழுது திடீர் பிள்ளையார் எதற்கு என்று பக்தர்களும் கேள்வி கேட்பதில்லை; அரசும் கேட்பதில்லை. தெருவில் திடீரென்று முளைக்கும் பிள்ளையாரின் பக்தர்கள் ஒரு வார கூத்தடிப்புக்கு பின் நிரந்தர பிள்ளையார் கோயில் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லையே ஏன்?என்று நாம்தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பெற்றோர்கள் தமது குழந்தை பொம்மை கேட்டு அழுதால், “அது 100 ரூபாய் ஆகிறது. வாங்கித் தந்தால் பத்தே நாளில் உடைத்து விடுவாய்” என்று கண்டிக்கிறார்கள். அதே நேரம் தெருவில் பத்தாயிரம் ஐம்பதாயிரம் என செலவு செய்து வைக்கப்படும் பொம்மைகள் இரண்டொரு நாளில் அடித்து உடைத்து கரைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பாமல் தன் பிள்ளைகளையும் பலியாடாக அனுப்புகிறார்கள் என்பதுதான் வேதனையானது.

த.வெ.க. ஆட்சியா? பாஜக ஆட்சியா?

ஈரோட்டில் பெரியாரின் பிறந்த நாள் ஊர்வலத்துக்கு தடை போடும் த.வெ.க. அரசு பிள்ளையார்கள் பெருகுவதை அனுமதித்து ரசித்துப் பார்க்கிறது. அவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுக்கு ஒத்துழைப்பும் தருகிறது.

படிக்க: விநாயகர் சதுர்த்தி வசூல் வேட்டையில், திருப்பூரில், அடித்து நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை!

“கொள்கை எதிரி என்றெல்லாம் ஒன்றுமில்லை; எனக்கு ஒரே எதிரி தான் திமுக தான்” என்று பாஜகவின் நிலைப்பாட்டிலேயே ஊன்றி நிற்கிறது விஜய் அரசு. அப்படி நிற்க வைத்துள்ளனர் நிர்மல்குமாரும் ஆதவ் அர்ஜுனாவும்.

பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்கள் பெருகுவதையோ தெருவில் பிள்ளையாரை வைத்து ஆடும் விடலை பையன்களின் எண்ணிக்கை கூடுவதையோ, முற்போக்காளர்களோ ஜனநாயகவாதிகளோ கம்யூனிஸ்டுகளோ திராவிடர் கழகத்தினரோ வெறுமனே வேடிக்கை பார்க்க முடியாது.

எனவே பரவி வரும் பாசிசத்தை தடுக்க வேண்டும் என்றால் தேவைப்படுவது ஓர் ஐக்கிய முன்னணி. காவிக்கும்பலை களத்தில் முறியடிக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவைப்படுவது மக்கள் முன்னணி. ஒரு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிக்கு உழைக்கும் மக்கள் தயாராவோம். பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கு கட்சிகளும் இயக்கங்களும் தயாராகட்டும்.

  •  இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here