விநாயகர் சதுர்த்தி: பக்தியின் பெயரில் திணிக்கப்பட்ட இந்துத்துவ அரசியல்!

வடநாட்டில் உருவான விநாயகருக்கு தமிழ்நாட்டில் உருவான முருகன் எப்படி தம்பியானான்? உண்மையில் பிள்ளையார் அல்லது விநாயகர் உருவாக்கப்பட்ட பகுதி வட மாநிலமான மகாராஷ்டிரா. இந்த உருவாக்கத்திற்கு அடிப்படை காரணம் சனாதனப் பார்ப்பனியம்.

0

இந்து மதவெறி கலவரங்களுக்காகப் பார்ப்பன சூழ்ச்சிக்காரர்களால் உருவாக்கப்பட்ட ‘விநாயகர் சதுர்த்தி விழா’ இந்த விஞ்ஞான யுகத்திலும் கொண்டாடப்படுவது அறிவுக்கு உகந்ததா?- 

“கழுதைக்கும் எருமைக்கும் 1000 வருஷங்களுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ அதே புத்தி தான் அவைகளுக்கு இன்றும் உள்ளது…மனிதனோ பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப் போல் பகுத்தறிவற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனது அறிவு வளர்ச்சியினைத் தடைப்படுத்தச் சாஸ்திரங் களையும், கடவுள்களையும், மதங்களையும், முன்னோர்கள் நடப்புக்களையும் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்…” 

–தந்தை பெரியார்.

 

‘மதம் மக்களுக்கு அபின் போன்றது’ என்றார் ஆசான் கார்ல் மார்க்ஸ்.

ஆக, ஆரம்ப கால காட்டுமிராண்டி மனிதன் எவை எவற்றை யெல்லாம் பார்த்துப் பயந்தானோ அதனைத் தெய்வமாகக் கருதி வழிபடத் துவங்கினான். தொடர்ந்து தத்தம் சமூகக் குழால் அல்லது குலம் சார்ந்த கூட்டத்திற்குத் தகுந்த நாட்டார் தெய்வங்களை உருவாக்கி குலசாமிகளாக பாவித்து வணங்க ஆரம்பித்தான்; அப்பழக்கம் இன்று வரையிலும் கூட ஒரு புறம் தடையின்றி  நீடிக்கவே செய்கிறது.

சமூகம் வர்க்கங்களாகப் பிளவு பட்ட பிறகு – சுரண்டுபவர்களாகவும், சுரண்டப்படுபவர் களாகவும் – ஒடுக்கப்பட்டவர்களாகவும், ஒடுக்குபவர்களாகவும் சமூகம் வர்க்கங்களாக பிளவுபட்ட பிறகு ஆளும் வர்க்கம் ஒடுக்கப்பட்டவர்களை அடக்கி ஆள்வதன் மூலம் மட்டுமே தமது சுரண்டல் சாம்ராஜ்யத்தைத்  தக்க வைத்துக் கொள்ள நினைக்க வில்லை; மாறாக தமது வறுமைக்கு – ஏழ்மைக்கு நமது தலையில் எழுதப்பட்ட ‘தலை எழுத்தே’ காரணம் எனத் தாமாக ஏற்றுக் கொள்ளச் செய்து, அதற்குப் பரிகாரமாக எண்ணற்ற மதங்களையும் அவை சார்ந்த கடவுள்களையும் உருவாக்கி அவற்றை வழிபடுவதன் மூலம் தமது துன்ப துயரங்கள் துடைக்கப்பட்டு விடும் என நம்பச் செய்தார்கள்.

சுரண்டும் தொழில் முதலாளி கூட இப்படிப்பட்ட பிற்போக்கு செயற்பாடுகளுக்கு நிதி கொடுத்து கோவில்களை எழுப்புவதற்கு உதவி புரிந்தார்கள்! விழாக்கள் எடுப்பதற்கும் நிதியினை அள்ளிக் கொட்டுகிறார்கள்! தொழிலாளிகளுக்குத் தான் போதிய கூலியையும் உரிமைகளையும் வழங்க மறுத்து ஒடுக்குகிறார்கள்.

காலப்போக்கில் மதம் மற்றும் கடவுள்களை வியாபார – பிழைப்புவாத நோக்கில் பலர் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் ‘கடவுள்களை’ நட்டு வைத்து அவற்றுக்கு விழா எடுப்பதும், பாமர மக்களிடம் வசூல் கொள்ளை இட்டு, நாள் கணக்கில் – மாதக்கணக்கில் ‘சாமி விழா’ என்ற பெயரில் ‘ஒலி பெருக்கி’களை சாலைகள் எங்கனும் அமைத்து இரவு பகல் என ஒலிச் சத்தத்தை அலற விடுகிறார்கள்; வீதிகளில் ‘சாமி ஊர்வலம்’ விடுகிறார்கள்; மக்களின் உறக்கத்தைக் கெடுக்கிறார்கள்; மாணவ மாணவியரின் படிப்புகளைக் கெடுக்கிறார்கள்.

‘விநாயகர்’ வரலாறு இன்னும் மக்களுக்கு அசிங்கமானதாகப் படவில்லையே, ஏன்?

சிவன் வெளியில் சென்று இருந்த நேரத்தில் மனைவி பார்வதி குளிக்கச் சென்றாளாம்; தனது குளியலறை கதவு பாதுகாப்பானதாக இல்லை எனக் கருதினாளோ என்னவோ நொடியில் தமது உடம்பில் உள்ள அழுக்கைத் திரட்டி (எவ்வளவு தூய்மையான கடவுள் பாருங்கள்!) ‘பிள்ளையாரை’ப் பிடித்து வைத்து காவலுக்கு நிறுத்திச் சென்றாளாம். இடைப்பட்ட நேரத்தில் சிவன் வந்துவிடவே, குளியல் அறைக்குள் நுழைய முயன்றவனை பிள்ளையார், ‘எனது அம்மா குளிக்கின்றாள்; உள்ளே செல்லாதீர்கள்’ எனத் தடுத்தானாம்; கோபமுற்ற சிவன் பிள்ளையாரின் தலையை துண்டாக்கி வீசினானாம்.

வெளியில் வந்து பார்த்து செய்தி அறிந்த பார்வதி துடி துடித்துப் போய், தனது புருஷன் சிவன் மீது தீரா கோபம் கொண்டு சண்டையிட, பிறகு உண்மை அறிந்து தமது வேலையாட்களை அனுப்பி வடக்கு நோக்கிச் சென்று எதிரில் வரும் எந்த ஒரு உயிரினத்தின் தலையையாவது வெட்டிக் கொண்டு வருமாறு ஆணையிட, அவ்வாறே அவர்கள் வடக்கு நோக்கிச் செல்கையில் முதலில் தென்பட்ட யானையின் கழுத்தை வெட்டி சிவனிடம் ஒப்படைக்க, சிவன் தலையின்றி இருந்த பிள்ளையார் கழுத்தோடு யானையின் தலையைப் பொருத்தி உயிர்வரச் செய்தானாம்; (இதைத்தான் – இந்த விஞ்ஞான யுகத்திலும், பார்ப்பனக் கும்பல் அக்காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரியை சிவன் நடைமுறைப்படுத்தி விட்டதாகப் புரூடா விடுகிறார்கள்!?) பார்வதியும் மனம் குளிர்ந்து போனாளாம். அந்தப் பிள்ளையாரே நாளடைவில் விநாயகர் ஆனாராம். அவரது வாகனம் மூஞ்சுறு என்ற ‘எலி’யாம். இது ஒரு பிரதானக் கட்டுக்கதை; விநாயகர் குறித்தான இன்னும் சில கேவலமான கதைகளை எடுத்தெழுதி விவரிப்பின் மிகவும் ஆபாசமானதாக இருக்கும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.

பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் குறிப்பாக மகாராஷ்டிராவில் அசோக மன்னன் தயவில் ‘விநாயகர்’ பிரபலமானான்! இதற்குப் பின்புலமாக அக்காலத்தில் துளிர் விட்டிருந்த இந்து மத அடிப்படைவாதிகள் காரணமாக இருந்தார்கள். வளர்ச்சிப் போக்கில் சுதந்திரப் ‘போராட்டத் தீரன்’ என்று முடி சூட்டிக்கொண்ட பார்ப்பனன் திலகர் விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் கலவரத்தன்மையில் இந்து மதவெறி புகட்டும் வகையில் விழா எடுத்துக் கொண்டாட வழிவகை செய்தான்.

1893 காலக்கட்டத்தில் வட இந்தியாவில் பிளேக் நோய் மக்களைக் கடுமையாகப் பாதித்து கொத்துக்கொத்தாக செத்து மடிந்து கொண்டிருந்த சூழலில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பிளேக் நோய்க்கு அடிப்படை காரணமான எலிகளை கொன்றொழிக்க ஆணை பிறப்பித்தார்கள். இந்த நயவஞ்சக சூழ்ச்சிக்காரப் பார்ப்பனக் கும்பல், ‘எலிகள் எங்களது விநாயகர் வாகனம்; அவற்றைக் கொல்லக் கூடாது…’ என்று பிரிட்டிஷாருக்குஎதிராக மக்களைத் திரட்டி தலைமை தாங்கி போராட்டம் நடத்தி பிரிட்டிஷாரை இந்த விடயத்தில் பின்வாங்கச் செய்தவன் RSS முன்னோடித் தலைவர்களில் ஒருவனான திலகர். எவ்வளவு பெரும் கொடுமை இது?இந்த ஆபாசக் கூத்துக்கள் – அறிவியலுக்கு எதிரான மடமைகளை எவ்வளவு காலம் தான் நாம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

1953-ம் வருடத்தில் தந்தை பெரியார் களிமண் பிள்ளையார் சிலையை வீதியில் தூக்கிப் போட்டு உடைத்தது ஏன்?

அறிவுக்குப் பொருந்தாத கற்பனையான பிள்ளையார் உருவாக்கத்திற்கு எதிராகவும், சாதியப் படிநிலைகளை உருவாக்கி அதனை நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ளும் பார்ப்பன சூழ்ச்சிகளுக்கு எதிராகவும், இந்த விநாயகரை வைத்து இந்து மத வெறி புகட்டவும், சிறுபான்மையினரை நசுக்கவுமான

நயவஞ்சகத்திற்கு எதிராகவும் தந்தை பெரியார் தீவிரமாகக் களமாடினார். அதன் ஒரு பகுதியாக 1953 மே 27 அன்று திருச்சியில் டவுன்ஹால் மைதானத்தில் களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலையை பொதுக் கூட்டத்தில் போட்டுடைத்துப் போராட்டத்தைத் தொடங்கினார்.

எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையாரை வழிபடும் மூடப் பழக்கம் நிலவுவதால், சமூக மாற்றத்திற்கான தனது போராட்டத்திற்கு பிள்ளையார் சிலையை வீதியில் போட்டு  உடைப்பதில் இருந்தே தொடங்குவதாக அறிவித்தார் பெரியார்.

மேலும் படிக்க: தெருவுக்கு தெரு விநாயகர் சிலை பின்னணி என்ன?

இந்நிகழ்வுக்காக பெரியாருக்கு எதிராக பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். “நாங்கள் கடவுளை உடைக்க வில்லை; மாறாக பார்ப்பனர்களின் கற்பனையையும், எங்களைத் தாழ்ந்த சாதிகளாக சித்தரிக்கும் புராணக் கதைகளையும் தான் உடைத்தோம்…” என்று பெரியார் விளக்கம் அளித்தார். பெரியாரின் விளக்கத்தை ஏற்று நீதிமன்றம் பார்ப்பனர்கள் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தலைதூக்கி இருக்கின்ற பொழுது, ‘விநாயகர் சதுர்த்தி’ என்ற பெயரில் இவ்வளவு பொருள் விரையமா?

மனுதர்மம் கூறுவது போல் நான்கு வர்ணம் 4000 சாதியை உருவாக்கி உழைக்கும் மக்களை நாலாந்தர மக்களாக உருமாற்றி சூத்திரன் – பஞ்சமன் – தீண்டத்தகாதவன் என்பதற்கு அடிகோலிட்ட இந்து மதம் சார்ந்த ‘விநாயகரை’ பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் கொண்டாடுவதில் துளி அளவேனும் நியாயம் இருக்க முடியுமா?

விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளை கொண்டாடுவதன் மூலம் – அதற்குப் பந்தல் அமைத்தல், பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள், ஒலி ஒளி ஏற்பாடுகள் செய்வதன் மூலமும் மக்களின் அறிவும், செல்வமும், நேரமும், உழைப்பும் வீணாகப் பாழாகுவதை எவ்வளவு காலம் அறிவிழந்து தொடர்ந்து பின்பற்றப் போகிறோம்?

உலகத்தில் மதம் சார்ந்த கடவுள் வழிபாடுகள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் மக்களை சாதியப் படிநிலைகளில் நிலைநிறுத்தி தீண்டத்தகாதோராய் மாற்றி அமைத்து அதற்கு கடவுள்களை துணைக்கு அழைத்துக் கொண்டு களியாட்டம் போடுகின்ற கேவலம் சனாதன பார்ப்பனியம் நிலவும் இந்து மத வெறியர்கள் தலைமை தாங்கும் இந்திய நாட்டிலன்றி வேறு எங்கும் காண முடியாது.

வடநாட்டில் உருவான விநாயகருக்கு தமிழ்நாட்டில் உருவான முருகன் எப்படி தம்பியானான்? உண்மையில் பிள்ளையார் அல்லது விநாயகர் உருவாக்கப்பட்ட பகுதி வட மாநிலமான மகாராஷ்டிரா. இந்த உருவாக்கத்திற்கு அடிப்படை காரணம் சனாதனப் பார்ப்பனியம். அவர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகள் மூலமாகவே பிள்ளையார் உருவாக்கப்பட்டுத் தொலைந்தான்.

முருகக் கடவுள் என்பது அறுபடை வீடு கொண்ட தமிழ் கடவுள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. அந்த முருகனை எப்படி விநாயகரின் தம்பி ஆக்கினார்கள் என்பது அவர்களின் மோசடி செயற்பாடுகளில் ஒன்று என்பதையும், முருகன் பெயரை ஸ்கந்தன் என்றும், சுப்பிரமணியன் என்றும் எப்படி நயவஞ்சகமாக மாற்றி பார்ப்பன கும்பல் தமிழ் கடவுளையும் அபகரித்துக் கொண்டது என்பதையும் உழைக்கும் மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் உணரத் தலைப்படல் வேண்டும்.

எனவே அறிவியலை மூலதனமாகக் கொண்டு மென்மேலும் சமூக வளர்ச்சியுற முற்படுவோம்! விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளை இன்னும் கொண்டாடும் மூடநம்பிக்கைகளுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்போம்!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here