ன்னமும் குளிரு போகல்லே அப்பு ! ” — இன்று கூட காலை மாலை இருநேரங்களிலும் தமிழ்நாட்டு மக்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

” மகாசிவராத்திரியோட குளிரு சிவசிவான்னு ஓடிப் போயிடும் ! ” என்ற பட்டபிறகும் மாறாத ஒரு மூடநம்பிக்கையும் இங்கே உண்டு, அது உங்களுக்குத் தெரியும். ஆனால் வடக்கே டெல்லி — காஷ்மீர் வரை ஆட்டம் போடும் கடுங் குளிரை இங்கிருக்கும் நாம் கற்பனைகூடச் செய்யமுடியாது. எடுத்துக் காட்டாக, டிசம் – சனவரியில் 2 டிகிரிக்குக் கீழே போய்விடுகிறது அதாவது 0 டிகிரியில் மொத்தமும் பனிக்கட்டியாகிவிடுமே அந்தக் குளிருக்கு ரொம்பவும் பக்கம் என்று புரிந்துகொள்ளவேண்டும். சிலர் பிப்ரவரி 2வது வாரத்தில் 0 டிகிரிக்கும் கீழே போய் மைனஸ் 2 டிகிரிக்கு இறங்கிவிடும் என்று எச்சரிக்கைகூடச் செய்கிறார்கள்.

எந்தவருசமும் இல்லாத கடுமையோடு குளிர்காலம் என்ன காரணத்தால் இப்படி மாறி இருக்கிறது? பலருக்குப் புரியவில்லை. வாழ்க்கை எட்டிப் போய்க்கொண்டே இருக்கிறது.

காரணம் உலகச் சுற்றுச்சூழல் நாசம் ! கார்ப்பரேட் முதலாளிகள் அழித்துக்கொண்டே இருப்பதுதான் காரணம் என்று சிலருக்குப் புரிந்து மற்றவருக்கும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பலருக்கு இன்னமும்கூட ஏதும் தெரியவில்லை.

டெல்லி டிசம்பர் குளிர் எப்படி இருக்கும் ? டெல்லிக் குடிசைவாசிகளை, குழந்தைகளைக் கேளுங்கள், அனுபவித்துப் புரிந்துகொள்ளச் சொல்வார்கள். ஆமாம், அது அப்படித்தான்.

கிழிந்த, சிதைந்த டிஜிட்டல் பேனர்களால் உருவான ‘ குடிசை ‘க்குள்ளே வீட்டுப் பொருள்களைப் போட்டுவைக்கிறார்கள் ; ஒன்றுக்கு , இரண்டுக்கு எல்லாம் கொட்டிக்கிடக்கிற பிரபஞ்ச வெளியில்தான். ஆதார நீரை விலங்குகள்போல தேடிக் கண்டுபிடித்துக் கொள்கிறார்கள். ஊண், உறக்கம் எல்லாம் அருகே உள்ள ரோட்டோரப் பிளாட்ஃபாரங்களில்தான்.

டெல்லியில் வீடு அற்றவர்கள் 1.5 லட்சம் பேர் என்று ஒரு குத்துமதிப்பாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் அத்தனைப் பேரும் தினமும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். மருத்துவர் ஒருவர் வேதனையோடு சொன்னதுபோல இந்தப் பனிக் குளிர் தோல், தசை மட்டுமல்ல, எலும்புக்குள்ளும் ஊடுருவித் தாக்கி கடும் வலி பிய்த்தெடுத்துவிடும். இது கத்தியால் குத்திக் கிழிப்பதுபோல உச்சபட்சக் கொடுமையாக இருக்கும் என்றார் அவர்.

நவம்பர், டிசம்பர், சனவரிக் குளிர் மற்றும் பனிப்புயலின் கொடூரத்தை, கோரத்தை
‘ குடிசை ‘வாசிகள் பிரித்துச் சொல்கிறார்கள். இயற்கைக் கடுமை என்பது அவர்கள் மோதி மோதிப் புரிந்துகொண்டது — அதைக் கொடுமை என்கிறார்கள் ; அரசு , உதவியே செய்யாமல் தவிக்கவிட்டதே, இன்றும் தவிக்கவிடுகிறதே அதைமட்டுமே கோரம் என்கிறார்கள்! கார்ப்பரேட் கவிச்சி வீசும் கொலைகாரப் பணத்தை அரசாங்கத்தோடு பங்குபோட்டுப் பிழைப்பு நடத்தும் வேர்மட்ட “தன் ஆர்வத் தொண்டு ” என்று சொல்லிப் பிழைப்பு நடத்தும் என்ஜிஓக்கள், மற்றும் அரசு இருவரையும்தான் கோரம் என்கிறார்கள்.

குளிர், பனிப்புயல் இரண்டிலும் செத்தவர்கள் 106 பேர் மட்டுமே என்று பாஜக ஒன்றிய அரசு திமிரோடு சொல்ல, இல்லை 160 பேர் என்று என்ஜிஓக்கள் கொடுத்த பட்டியலோடு மற்ற கட்சிகள் வாய்பேச லாவணிக் கச்சேரி நடக்கிறது ; ஆயிரக் கணக்கில் வந்த சாவுகளை யார் கணக்குப் பார்த்தார்கள் ? சொரணை, வெட்கம் இரண்டுங் கெட்டவர்கள் ! எங்கே புதைப்பது என்று தவித்த மக்களுக்குத்தான் தெளிவான கணக்கு தெரியும் !

டிசம்பரில் டெல்லிக் குளிர் எப்படியென்று மேலே சொன்ன ‘ குடிசைவாசிகள் ‘ தவிர
மோடியை எதிர்த்துப் போராடிய விவசாயிகளுக்கு நிச்சயமாகத் தெரியும் ; இயற்கையை நொந்துகொண்டும் முனகிக்கொண்டும் அவர்கள் போராடியதாக அறிக்கைவிட எதிரிகளுக்குக்கூடத் துணிச்சல் வந்ததில்லை. ஓரிரு நாட்களா? மாத மா? முழுதாக ஓராண்டு போராட்டம் நடத்தினார்கள். இயற்கையோடு சிறுசிறு சண்டைகள் போட்டுக்கொண்டே பாரம்பரியமாகத் தொடரும் வர்க்கப் போரை அவர்கள் நடத்தினார்கள் ! லக்கிம்பூர் கேரியில் கோழை அவதாரம் எடுத்த பாஜக — விவசாயிகளின் ஊர்வலத்தின்மீது வண்டியை ஏற்றியது, வீரமிக்க விவசாயிகள் இன்னுயிரைக் கொடுத்தார்கள், போராட்டம் தொடர்ந்தார்கள் குளிர் பனியைத் தடைகளாகப் பார்க்கவே இல்லை. குளிர், பனி இரண்டையும் உடம்பின் அங்கம் போல உணர்ந்தவர்கள் அவர்களும் தான் !

கைக் குழந்தைகளும் பிள்ளைகளும் வயசானவர்களும் டெல்லிக் குளிரில் பனிக்காற்றில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருசில தன்னார்வக் குழுக்கள்மட்டும் வழக்கம்போல கம்பளிப் போர்வைகளைச் சுமந்த வேன்களில் வந்து பேருக்கு விநியோக நாடகம் நடத்திவிட்டுப் போகிறார்கள்.


இதையும் படியுங்கள்: லக்கிம்பூர் கேரி கொலை வழக்கு இழுத்தடிப்பு பாஜகவை சேர்ந்த கொலைகார ஆஷிஷ் மிஸ்ராவைக் காப்பாற்றவே !!


குடிசைப்பகுதி வரிசைகளில் நிற்கும் மக்கள் மெல்லிய அழுக்குச் சட்டை, கிழிந்த ஸ்வெட்டர், போர்வையோடு நடுங்கிக் கொண்டேதான் போடப்படும் கௌரவப் ‘ பிச்சையை ‘ வாங்குகிறார்கள். அடுத்து ரொட்டி, அதையடுத்து கிடைக்கின்ற வேலை தேடுகையில் நடக்கும் கழுத்தறுப்பு போட்டியில் யுத்தம்,இதனிடையே ஓயா து குதறிக்கொண்டேயிருக்கும் நோய்கள் போக்கும் மருந்துக்காக அலைச்சல்கள் — இதுதான் அவர்கள் வாழ்க்கை!

குளிர், பனி என்றால் கண் மறைக்கும் மூட்டம், போக்குவரத்து ஸ்தம்பிதம், விமானங்கள் ரத்து என்றுமட்டுமே பேப்பர் செய்தி, டி.வி செய்திகள் வருகின்றன. இப்படித்தான் டெல்லி நிர்வாகம் பிரச்சினையைப் பார்க்கிறது ; ஆனால் டெல்லியில் நிரந்தரப் பிரச்சினையாக உள்ள காற்று மாசுபாடும் சேர்ந்து நிலைமையை இன்னமும் மோசமாக்கியுள்ளது. அதாவது, இந்த மாதங்களில் பனிக்காற்றானது மாசுகளைத்தாண்டி காற்றுமண்டலத்துக்கும் மேலே போகாமல் தரையிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள்ளேயே உறைந்து தேங்கித் தங்கிவிடுகிறது. இக்காரணத்தால்தான் பனிமூட்டம் பார்வையை மறைக்கும் திரைபோல நிற்பதைப் பார்க்கிறோம்.

முழுமையாக இப்பிரச்சினைகளை ஒவ்வோராண்டும் வரும் பேரிடர் என்று அறிவோடு அணுகும் பார்வையே அரசாங்கத்துக்கு இல்லை. உழைப்பாளிகள் இந்த நிலைமையோடு போராடிய பிறகுதான் முதலாளிகளுக்கு உழைத்துக் கொடுக்கிறார்கள். முதலாளிகளைப் பொறுத்தவரை உபரி — லாபம் கிடைத்தால் போதும். அரசும் சரி, அரசாங்கமும் சரி, ஓட்டுக்கட்சிகளும் சரி மொத்தச் சிக்கலையும் வெத்துச் சடங்காக மட்டுமே பார்த்து ஜீவனற்று மரத்துப் போய்விட்டார்கள்.

சருகுக் குப்பைபோலச் சுருண்டுகிடக்கும் சாலையோரக் குழந்தைகளைப் பாருங்கள் !உண்மை பனியையும் ஊடுருவிக் கொதிக்கிறது !!

செய்திகள் ஆதாரம் :
டைம்ஸ் ஆஃப் இந்தியா,
நவம் – டிசம் 2022, சனவரி 2023 மற்றும்
‘ அவுட்லுக் ‘ டிசம் 2022.

ஆக்கம் : இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here