” டெல்லி, லக்கிம்பூர் கேரி விவசாயப் பேரணியில் சென்ற விவசாயிகள் 8 பேர் கொல்லப்பட்ட வழக்கு ” ; சட்ட இழுத்தடிப்பு, பாஜகவை சேர்ந்த கொலைகார ஆஷிஷ் மிஸ்ராவைக் காப்பாற்றவே !!


புதன்கிழமை, 11.1.2023 அன்று உச்சநீதிமன்றம் “லக்கிம்பூர் கேரி வன்முறைக் கொலைகள்” ( 2021 ) தொடர்பான விசாரணையில் ஆஷிஷ்மிஸ்ரா பிணைக் கோரிக்கை மீதான வாதங்களில் “விசாரணை இன்னமும் 5 ஆண்டு காலம் எடுக்கும்” என்று ‘ வழக்கு நிலை அறிக்கையை ‘ ( Status Report ) வெளியிட்டது.

நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் V. ராமசுப்ரமணியன் அடங்கிய ‘இரு நடுவர் ஆயம்’ பின்வருமாறு அறிவித்தது : “வழக்கு 5 ஆண்டுகள் காலம் எடுக்கும் ; 200 சாட்சிகளுக்கு மேல் விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளது, அதனால் காலம் தேவைப்படும்.”

வாதி (வழக்காடுபவர்) சார்பாக வாதிட்ட வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் விசாரணையை ” நாள்தோறும் வழக்காடும் முறையில் ” நடத்துமாறு கோரினார் ; மேலும் பார் & பெஞ்ச்.காம் (” Bar & Bench.com “) தன் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது போலவே வாதிகளுக்கு  “கொலைமிரட்டல்” வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது : “நேர்சாட்சிகள் பயமுறுத்தப்பட்டுள்ளனர், உடல்ரீதியாகக் காயப்படுத்தப் பட்டுள்ளார்கள். ” நாள்தோறும் வழக்காடும் முறையில்” முதலில் அவர்களிடம் விசாரிக்கவேண்டும். அவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் சொல்லியிருப்பது பயமுமுறுத்துவதுபோல இருக்கிறது. ”

” எங்களுக்குத் தெரியும் ” என்று நடுவர் ஆயம் பதில் கூறியது.

“மூன்றுபேருக்கு வன்முறைப் படுகாயம் ” என்று பூஷண் மீண்டும் அழுத்திக் கூறினார். ஆஷிஷ் மிஸ்ரா சார்பாக வாதாடிய சீனியர் வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி அவை பொய்யானவை என்று குறுக்கிட்டுப் பேசினார்.

கொலைகாரன் ஆசிஷ் மிஸ்ரா

” நாள்தோறும் வழக்காடும் முறை உங்களுக்கு உதவுமா, எதிராகப் பாதிப்பை உண்டாக்குமா என்று யோசித்துச் சொல்லுங்கள், ” என்று உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து சந்தேகங்களை எழுப்பியது.

” அன்றாடம் நடத்துங்கள். நேர்சாட்சிகளை முதலில் விசாரியுங்கள். ஓர் அமைச்சர் என்பதால் கையில் துப்பாக்கி எடுத்துவருவதைப் பற்றியா விசாரிக்கப் போகிறீர்கள்? வண்டியை விவசாயிகள்மீது ஓட்டி கொலைசெய்ததைப் பற்றியோ, சாட்சிகளைத் தாக்கித் துன்புறுத்துவதைப் பற்றியோ அவர்களிடமேவா விசாரிக்கப் போகிறீர்கள் ?

(நேர்சாட்சிகளை முதலில் விசாரியுங்கள்.)” — ஓங்கி அறைவதுபோல பூஷண் பதில் கொடுத்தார்.

மன்றம் , சனவரி 19 அன்று விசாரணை நடத்திவிடுவதென்றும், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ( AAG ) தன்தரப்பில் சோதித்து, குற்றஞ்சாட்டப்பட்டவர் அதுவரை ‘கஸ்டடியில்’ இருப்பார்களா என்று உறுதிப்படுத்துமாறும் கோரியது ; அடுத்த விசாரணை சனவரி 13 என்று அறிவிக்கப்பட்டது. (லைவ் லா, Live – Law செய்திகள் உட்பட 13.1 ஐ ஒட்டிய நிலவரம் எதுவும் தெரியவில்லை.) ஒன்று தெளிவாக இருந்தது, அந்த நடுவர்கள் வழக்கை இழுத்தடிக்க முடிவு செய்துவிட்டார்கள் என்பதே அது!

லக்கிம்பூர் கேரி வன்முறைத் தாக்குதல் !

அக்டோபர் 3, 2021 அன்று லக்கிம்பூர் கேரியில் போராடிவந்த விவசாயிகள்மீது காரைத் தாறுமாறாக வெறியோடு ஓட்டி வன்முறை ஆட்டம் போட்டு 8 விவசாயிகளின் உயிர்களைப் பலி வாங்கியதை நாம் மறக்கவேமுடியாது ; அப்படிப்பட்ட நாட்களில் “ஒரு நிகழ்வுக்காக இந்தப் பக்கம் போகிறேன் ‘ என்று பொய் சொல்லி வம்படி பண்ணுகிறார் உ.பி துணைமுதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா. இது சின்னக் குழந்தைக்குக் கூட புரியும். மௌனமாக அமைதிவழியிலேயே அவரை எதிர்த்தார்கள் விவசாயிகள். அவரைப் போலவே ஆஷிஷ் மிஸ்ரா தானே ஓட்டிவந்த சொந்த நான்கு சக்கர வாகனத்தை, விவசாயிகள்மீது ஏற்றிக் கொன்றார். இதை நாடே அறியும்.

ஆஷிஷ் மிஸ்ரா அப்போது கைது செய்யப்பட்டார் ; உ.பி காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு ( S I T ) 5000 பக்க குற்றப் பத்திரிக்கையைஉள்ளூர் கோர்ட்டில் முன்வைத்தது, ஆஷிஷ் முதல் குற்றவாளி என்றும் அறிவித்தது. அதே 2021 நவம்பரில் விசாரணை நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணைமனு ஒன்றைத் தள்ளுபடி செய்தது ; மிஸ்ரா உயர்நீதிமன்றத்துக்கு ஓடினார்.

பிப்ரவரி 10, 2022–ல் உயர்நீதிமன்றம் மிஸ்ராவுக்குப் பிணை கொடுத்தது ; ” போராடிய விவசாயிகள்மீது வண்டியை ஏற்றிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்ட ‘ டிரைவர்’

இதையும் படியுங்கள்: லக்கிம்பூர் விவசாயி படுகொலை ஓவியம்!

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்து தப்பித்திருக்க வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது ” என்று அத்தீர்ப்பில் நேரடியாகவே உண்மையை மறைத்தது உயர் நீதிமன்றம் .

ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உயர்நீதிமன்றம் பிணை கொடுத்தபிறகு, கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் ; அந்தப் பிணையை ரத்துசெய்யக் கோரினர். உபி அரசாங்கம் பிணைத்தீர்ப்பை எதிர்த்து தன் சார்பில் எந்த முறையீட்டையுமே வைக்கவில்லை, இது விசித்திரமாகவே இருந்தது என்று ஊரே காறித் துப்பியது. ஆனால், ஆஷிஷ் பாஜக தலைவரின் மகன், அவர் கைது செய்யப்படக் கூடாது, எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று எல்லாவிதங்களிலும் பலர் மும்முரமாக முயற்சி செய்தார்கள்.

ஏப்ரல் 22 அன்று உச்சநீதிமன்றம், மிஸ்ராவுக்குத் தரப்பட்ட உயர்நீதிமன்றப் பிணையை ரத்துசெய்து தீர்ப்பு வழங்கியது;

மறுபடி புதிய சான்றுகளைத்திரட்டி விசாரணை செய்வதற்காக, மிஸ்ராவைக் காவலில் வைக்க உயர்நீதி மன்றத்திற்கே திருப்பி அனுப்பியது. ஜூலை 26, 2022 அன்று உயர்நீதிமன்றம் மிஸ்ராவுக்கான பிணையை மறுத்தது ; பிறகு மிஸ்ரா உச்சநீதிமன்றம் ஓடி நிலைமையை சரிசெய்ய ஆரம்பித்தார். அதன்பிறகே வழக்கு உச்சநீதிமன்றத்தில் விவாதத்துக்கு நகர்ந்து வந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே உச்சநீதிமன்றம் அரசாங்கத்தின் பதிலைக் கோரி கடிதம் அனுப்பியது. ‘ இரு நடுவர் ஆணையம் ‘ கடந்த விசாரணையில் ” குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வளவு காலம் சிறையில் வைக்கப்படவேண்டும் ? அரசாங்கம் என்ன கருதுகிறது ? ” என்று கேட்டிருந்தது . அதற்காகத்தான் 5 ஆண்டு காலம் பிடிக்கும் என்று உச்சநீதிமன்றம் ” நிலைஅறிக்கை ” கொடுத்தது. எல்லோரும் சந்தேகப்பட்டதுபோலவே இது தீர்ப்பைத் தள்ளிப் போடுவதற்காகத்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஆர்.எஸ்.எஸ் தொடங்கி பாஜக தலைமை, ஒன்றிய ஆட்சி, உ.பி ஆட்சி, குற்றக் கும்பல் உட்பட மண்டைகளை முட்டி உரசிக் கொண்டு ஆலோசனை நடத்துகிறார்கள் என்று தெரிகிறது, அதாவது சதிஆலோசனை நடத்துகிறார்கள் என்று தெரிகிறது கொலைகாரர்களுக்குக் கருணையை வாரிவழங்க திரைமறைவுச் சதி நடக்கிறதா ?

ஜனநாயகத்துக்காக ஒவ்வொரு கணந்தோறும் போராடத் துடிக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளின், தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் கார்ப்பரேட் – காவிப் பாசிச எதிர்ப்பில் உடனே முனைப்போடு இறங்க வேண்டியது அவசர அவசியம் ஆகும். இதுவே மேலே குறிப்பிட்ட சதிகளையும் சேர்த்து முறியடிக்கும் !

ஆதாரம் : கவுரி லங்கேஷ் செய்திப் பிரிவு, 11.1.2023.

ஆக்கம் : இராசவேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here