’மண்’மோகன்சிங் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தப்படி, அமெரிக்காவின் போணியாகாத அணு உலைகளை வாங்கி, இந்தியாவில் அணுமின் நிலையம் அமைக்க களமிறங்கியுள்ளது மோடி அரசு. புதிதாக 21 அணுமின் நிலையங்களை அமைக்கப்போவதாக ஒன்றிய அரசின் அணுசக்தித்துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார். இது புவி வெப்பமயமாதலுக்கு காரணமான பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதற்கானது என கதையளக்கிறார்.

அணுசக்தித்துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங்

இது பசுமை இல்ல வாயுக் குறைப்பா!

இருக்கும் அனல்மின் நிலைய உற்பத்தியை குறைக்கவோ, நிறுத்தவோ மோடி அரசு தயாரில்லை. நெய்வேலியில் புதிதாக சுரங்க விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷெல் கேஸ், கச்சா எண்ணெய் என எதை வேண்டுமானாலும் அகழ்ந்தெடுக்க ஒரே அனுமதி என்று ஏலம்விட்டு வருகிறது பாசிச மோடி அரசு.

இதையெல்லாம் செய்துகொண்டே 2070 ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அடிமட்ட அளவுக்கு குறைக்கப் போவதாகவும் வாய்ச்சவடாலாக அறிவிக்கின்றனர்.  கூடங்குளம், கல்பாக்கம் போன்ற அணுமின்நிலையங்களில் சுற்றுச்சூழலை சீர்குலைக்காத பசுமை மின்சாரமா தயாராகிறது என்று பரிசீலிப்பது அவசியம்.

அணுமின்நிலையங்கள் உருவாக்கும் பேராபத்து!

அணு உலைகளில் இருந்து வரும் அணுக்கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் ஏகாதிபத்திய எஜமானர்களே முழிபிதுங்கி நிற்கிறார்கள். நம் நாட்டிலே கோலார் தங்க சுரங்கத்தில் கொட்டலாம், அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு என சொல்லி கொட்டலாம் என முயற்சித்து மக்களின் எதிர்ப்பால் முடியாமல் போனது. வேறுவழியின்றி கூடங்குளத்திலேயே குழிதோண்டி புதைக்கலாம் என முயற்சிக்கின்றனர்.

கடலிலிருந்து உறிஞ்சப்படும் நீரானது, அணு உலைகளுக்குள் சென்று அதில் பயன்படுத்தப்படும் கடின நீரின் வெப்பத்தை குளிர்விக்கும் ரேடியேட்டரில் இருந்து  கொதிநீராக வெளியேறுகிறது. இது நேரடியாக குழாய்கள் மூலம் கடலில்தான் கொட்டப்படுகிறது. இதனால் கடல்நீரின் வெப்பம் அதிகரிக்கிறது. அது பல்வேறு வகையில் பல்லுயிர் சுழற்சியை பாதிக்கிறது. கடல் வளத்தை சார்ந்து வாழும் மீனவர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். கதிர்வீச்சு காரணமாக கல்பாக்கம் பகுதியில் கடலில் பிடிக்கப்படும் மீன்களை விற்கமுடியாமல் கேரளாவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். கல்பாக்கம் மக்கள் சென்னை காசிமேட்டு மீன்களையே வாங்குகின்றனர் என்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரியண்ணன் அமெரிக்கா, புதிதாக அணு உலை கட்டுவதை எப்போதோ கைவிட்டுவிட்டார். ஆனால் நம்மை கட்டச்சொல்லி கைநாட்டு வாங்கிக்கொண்டு தனது பழைய காயலான்கடை சரக்கை திணிக்கிறார். இந்திய அரசைப்பொறுத்த வரை அமெரிக்காவின்றி ஓரணுவும் அசையாது. அதுவும் நம் பணத்தை கொட்டி அவர்கள் வாழவேண்டும் என்பதே, நம் ஆட்சியாளர்களின் வழிகாட்டுதலாக உள்ளது.

அணு உலைகளை பொதுத்துறைதான் கட்டப்போகிறதாம்!

அப்படித்தான் அறிவித்துள்ளார் இணையமைச்சர் ஜிதேந்திர் சிங். இருக்கும் பொதுத்துறைகளை நிர்வகிக்கவே துப்பின்றி கார்ப்பரேட்டுக்கு விற்றுவரும் பாசிஸ்ட்டுகள் நம் பணத்தில் அணுமின் நிலையம் கட்ட முயற்சிக்கின்றனர். தனியாரையும் இணைத்துக்கொண்டு 21 இடங்களில் கட்டியபின் மொத்தமாக அவர்களுக்கு தாரை வார்க்கவே விரும்புகின்றனர். அணுமின் நிலையம் பாதுகாப்பானது என அப்துல்கலாமே கூடங்குளத்தில் ‘ஆய்வு’ செய்து சொல்லியுள்ளதையும் கணக்கில் எடுக்க வேண்டுமல்லவா?

ஒன்றையாவது டெல்லியில் கட்டுவாரா? மோடி!

புதிதாக 21 உலைகள் கட்டப்போகிறார்கள். புதிய பாராளுமன்ற கட்டிடமும், மோடிக்கான சொகுசு அரண்மனையும் நம் வரிப்பணத்தில் ஏற்கனவே கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. அதன் அருகில் ஒரேஒரு அணு உலையை அமைக்க மோடி தயாரா?

கூடங்குளம்போல் தொலைவில் இல்லாதபடி   பணிபுரியும் அதிகாரிகளின் குடியிருப்பையும் டெல்லியில் அணு உலையை ஒட்டி கட்ட தயாரா? அல்லது குறைந்த பட்சம் அணு உலை அமையும் இடத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் குடும்பத்துடன் குடியேறத்தயாரா?

கார்ப்பரேட் சேவையில் ஊறித்திளைக்கும் காவி பாசிஸ்ட்டுகள் நாம் சாவதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். மாறாக, உடலில் புற்றுநோய் உள்ளதா? என்னிடம் சிகிச்சைக்கு வா! என கார்ப்பரேட் மருத்துவமனைகள், அதிலும் பணம் பறிக்க வழியேற்படுத்துவதையே பேரானந்தமாக செய்வார்கள். நாம் என்ன செய்யப்போகிறோம்? – கார்ப்பரேட் காவி பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவதைத்தவிர!

 

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here