டந்த வாரம் டிசம்பர் 9-ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டரின் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் (LAC – Line of Actual Control) இந்திய ராணுவமும் சீனாவின் ராணுவமும்  மோதிக்கொண்டதில் இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் சீன ஆத்திரமூட்டலுக்கு இந்தியப் படைகள் உறுதியுடன் பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் 12-12-2022 அன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அம்மாநில முதல்வர் பெமா காண்டு, “இது 1962 (சீன-இந்தியப் போர்) அல்ல. இந்திய எல்லையில் அத்து மீற முயற்சிக்கும் எவருக்கும் நமது துணிச்சலான வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று பெருமை பீற்றிக் கொண்டார்.

1962 போருடன் அருணாச்சலப் பிரதேசத்தில் LAC நிலவரத்தை முதல்வர் காண்டு ஒப்பிடுவது இது முதல் முறையல்ல. அக்டோபர் 2020 இல், சீன-இந்திய மோதலில் இறந்த ஒரு சிப்பாயின் நினைவு நிகழ்வில் பேசும்போதும், கடந்த மாதம் தவாங் போர் நினைவிடத்தில் போரின் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் போதும் பேசினார்.

குறிப்பாக, நவம்பர் 21 ஆம் தேதி தவாங் போர் நினைவிடத்தில் பேசும் போது, “1962-ல் நிலைமை மிகவும் மோசமாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. நமது உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக இருந்தது. எனினும், இந்திய ராணுவம் வீரத்துடன் போராடி ஆயிரக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்து நமது தாய்நாட்டை பாதுகாத்தது. ஆனால், தற்போதைய நிலைமை 1962-ல் இருந்த போல் இல்லை” என்று  காண்டு பேசி தேசிய வெறியினை தூண்டிய 20 நாட்களுக்குள் சீன ராணுவம் ஆத்திரமூட்டியதாகவும் இதனால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது என்று தகவல் வெளிவந்ததிலிருந்தே இந்த மோதலின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.


இதையும் படியுங்கள்: பாதுகாப்புத்துறை (DEFENCE) மீது கார்ப்பரேட்டுகளின் துல்லியத் தாக்குதல்!


அதேபோல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் நடந்த சம்பவத்தை பற்றி கூறும் போது, “சீன முயற்சியை எங்கள் துருப்புக்கள் மிக உறுதியான முறையில் எதிர்த்தன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலானது, இந்திய இராணுவம் ஒரு உடல் ரீதியான சண்டைக்கு வழிவகுத்தது, இதில் சீன மக்கள் விடுதலை இராணுவம்  எங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை இந்திய இராணுவம் தைரியமாகத் தடுத்து அவர்களை பின்வாங்கச் செய்தது” என்று கூறினார்.

சீனாவின் அத்துமீறல் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சீனாவிடம் மென்மைப் போக்கு கடைபிடிக்கப்பட்டது. தற்போது அவ்வாறு இருக்க முடியாது.” என்றார். உண்மைதான் 2014-15 ஆம் நிதியாண்டில் இந்தோ-சீன ஏற்றுமதி 1,193 கோடி டாலர். அதுவே 2021-22 ஆம் ஆண்டு 2,126 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2014-15 ஏற்றுமதி 6,401 கோடி டாலர், அதுவே 2021-22 ஆம் ஆண்டு 9457 கோடி டாலராக உயர்ந்துள்ளது. மென்மையான போக்கை கடை பிடிக்க முடியாது. கடுமையாக நடந்துக் கொள்வது என்பது இதுதான்.

இந்திய சீன மோதலை பற்றிப் பேசும் மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் இதனை நாடாளுமன்றத்தில்  விவாதிக்க உள்நோக்கத்துடன் மறுத்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும் என அமளியில் ஈடுபட்டும் விவாதிக்க மறுக்கிறது.

இரண்டு காரணங்களுக்காகவே நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வர மறுக்கிறது பாசிச பாஜக. ஒன்று, விவாதம் நடத்தினால் மோதலின் உண்மைத் தன்மை வெளிப்பட்டு விடும். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்தது பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கையறு நிலையில் நிற்க வேண்டியிருக்கும். மற்றொன்று, இந்த மோதலை நாடாளுமன்றத்தில் விவாதித்து அம்பலமாவதை விட மக்களிடம் பெருமை பேசி தேச வெறி, போர் வெறியைத் தூண்டி 2024 பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுக்களாக மாற்றுவது மட்டுமே பாஜகவின் தேவை.

சீனாவின் அத்துமீறலும்!
56 இன்ச் கையறு நிலையும்!

சொல்லில் சோசலிசமும், செயலில் உலக மேலாதிக்க வெறியும் கொண்ட நவீன சமூக ஏகாதிபத்தியமாக சீனா மாறிவிட்டது. இதனால் மேல்நிலை வல்லரசுக் கனவில் தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. கடந்த 2002-லிருந்து 2011 வரையிலான காலத்தில் சீனா தனது ராணுவச் செலவை 170 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2017-ல் மட்டும் 228 பில்லியன் டாலர் (22,800 கோடி டாலர்) அளவுக்கு ராணுவத்துக்கு செலவிட்டுள்ளது. ஆனால் அதே ஆண்டில் இந்தியா 63.9 பில்லியன் டாலர் (6390 கோடி டாலர்)  ராணுவத்துக்காக செலவிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அடுத்து ராணுவத்துக்கு அதிகம் செலவிட்டு இரண்டாவது இடத்தில் உள்ள நாடு சீனா என்று அனைத்து உலக அமைதி ஆராய்ச்சி நிறுவனம்  தெரிவித்துள்ளது. சீனா வெளியிட்ட ராணுவம் குறித்த வெள்ளை அறிக்கை சீன ராணுவம் பிராந்திய தற்காப்பு என்ற நிலையிலிருந்து பிராந்தியம் கடந்து இயங்கும் நிலையை நோக்கிச் செல்வதாகவும் தொலைதூர நடவடிக்கைகள், திடீர் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு ராணுவமும், விமானப்படையும் ஒருங்கிணைந்த முறையில் பயிற்றுவிக்கப்படுவதாகவும், சர்வதேச கடற்பிராந்தியத்தில் தேவைப்படுகின்ற தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் அணு ஆயுத எதிர் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு  இராணுவம் தயார்படுத்தப் படுவதாகவும் கூறியுள்ளது.

மேற்கண்ட திட்டத்தின் படியே சீனா இந்திய எல்லையில் அடிக்கடி பிரச்சினையை உருவாக்குகிறது. பாசிச பாஜக அரசோ, சீனாவின் ராணுவ அத்து மீறல்களைக் காட்டி ஓட்டுப் பொறுக்கவும் மக்களிடையே தேசிய வெறியைத் தூண்டவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது. ஆக்கப்பூர்வமான எதையும் செய்ய வக்கற்று நிற்கிறது. ஆனால், தாங்கள் மிகவும் வலிமையானவர்கள், 56 இன்ச் மார்பளவு கொண்ட மோடி இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளை அடக்கி ஒடுக்கி விடுவார் என பெருமை பட்டுக் கொள்கிறது. சங்கிகள் தங்களைத் தாங்களே தட்டிக் கொடுத்துக் கொள்கிறார்கள்.

சீனாவின் அத்துமீறலை பாசிச மோடி அரசு மட்டுமல்ல, வேற எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும்  நிரந்தரமாக தடுக்க முடியாது. உலகச் சந்தையை விரிவுபடுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவம் நீடிக்கும் வரை போர்களும் நீடிக்கும். போர்கள் நீடிக்கும் வரை ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் அத்துமீறல்களும் சண்டையும் நீடிக்கும். இந்தியாவை பொருத்தவரை அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் ஜனநாயக கூட்டரசு ஒன்றே தற்போதைக்கு மாற்றாக அமையும்.

வேதநாயகம்

புதிய ஜனநாயகம் (மா.லெ)
டிசம்பர் – ஜனவரி மாத இதழ்

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here