ந்தியாவில் இந்த ஆண்டு கோடைகாலம் என்பது வெறும் பருவநிலை மாற்றம் மட்டுமல்ல, அது உழைக்கும் வர்க்கத்தின் மீதான ஒரு நேரடித் தாக்குதலாக மாறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.

இந்த நெருப்புப் பிழம்புகளுக்கு நடுவே, தரைக்கடை வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள் போன்ற அமைப்புசாராத் தொழிலாளர்கள் தங்களின் அன்றாடப் பிழைப்பிற்காகத் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நவீன அடிமைத்தனமாக மாறியுள்ள கிக் (Gig) பொருளாதாரம்

கடந்த பத்து ஆண்டுகளில், முதலாளித்துவ நுகர்வுச் சந்தையின் வளர்ச்சியால் ஆன்லைன் வர்த்தகம் அசுர வேகத்தில் பெருகியுள்ளது. இன்று இந்தியாவில் சுமார் 1.2 கோடி கிக் தொழிலாளர்கள் உள்ளனர்; இது 2030-க்குள் 2.35 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் ‘கூட்டாளிகள்’ (Partners) என்று அழைக்கப்படுபவர்களே தவிர, அவர்களுக்கு எந்தவிதமான சட்டப்பூர்வப் பாதுகாப்போ, காப்பீடோ அல்லது முறையான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், இவர்களைத் தெருத்தெருவாக அலையவிட்டு உழைப்பைச் சுரண்டுகின்றன.

உணவு மற்றும் மளிகைப் பொருட்களைப் பத்து நிமிடங்களுக்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்ற நிறுவனங்களின் பிடிவாதம், தொழிலாளர்களை இரண்டு முனைத் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது. ஒருபுறம் கடும் வெப்ப அலை, மறுபுறம் சாலை விபத்துகளின் அச்சம். 45 டிகிரி வெப்பத்தில் ஒரு நிமிடம் கூட வெளியில் நிற்பது உடல்நலத்தைக் கெடுக்கும் சூழலில், இந்தத் தொழிலாளர்கள் 14 முதல் 15 மணிநேரம் வரை இடைவிடாது வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

வேகமாக டெலிவரி செய்யத் தவறினால் ஊதியம் குறைக்கப்படுவது மற்றும் ‘பெனால்டி’ விதிக்கப்படுவது போன்ற அல்காரிதம் (Algorithm) முறையிலான ஒடுக்குமுறைகள் இவர்களைக் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களின் போலி வாக்குறுதிகள்!

நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்குக் குளிர்ந்த நீர், ஓய்வெடுக்கும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதாகக் கூறுகின்றன. ஆனால், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. பல டெலிவரி மையங்களில் (Dark Stores) தொழிலாளர்கள் அமருவதற்கு ஒரு நாற்காலி கூட இருப்பதில்லை; குடிப்பதற்குத் தண்ணீர் கூடக் கிடைப்பதில்லை என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், தொழிலாளர்களின் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. உதாரணமாக, 8 மணிநேரம் வேலை செய்தும் ஒரு தொழிலாளியின் கையில் அனைத்துச் செலவுகளும் போக வெறும் 700 முதல் 800 ரூபாய் மட்டுமே எஞ்சுகிறது. இது அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே போதுமானதாக இல்லை.

முதலாளித்துவமும் சுற்றுச்சூழல் பேரழிவும், உடனடியான மாற்றங்களும்!

பூமியின் சமநிலை குலைந்து வெப்பம் அதிகரிப்பதற்குப் பிரதானக் காரணம், இயற்கையை லாபத்திற்காகச் சுரண்டும் முதலாளித்துவ முறையே ஆகும். காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் அதிக மழை மற்றும் அதீத வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், உழைக்கும் வர்க்கமுமே. இந்தியாவில் நிலவும் இந்த ‘வெப்பத் தீவு’ (Urban Heat Island) விளைவு, நகரங்களில் வாழும் ஏழைத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனைக் குறைப்பதோடு, அவர்களை நிரந்தர நோயாளிகளாகவும் மாற்றுகிறது.

படிக்க:

 முகம் காட்டாத முதலாளிகளின் கொடூர சுரண்டல் வடிவமே கிக் பொருளாதாரம்!

 ஆசியாவின் வெப்பநிலை அதிகரிக்கிறது? ஏகாதிபத்திய முதலாளித்துவம் மக்களுக்கு கொடுக்கும் மற்றொரு வகை தண்டனை!

இந்தியாவில் தகிக்கும் இந்த வெப்ப அலை என்பது வெறும் இயற்கை சீற்றம் மட்டுமல்ல; அது உழைக்கும் வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை ஆகும். பத்து நிமிட டெலிவரி என்ற பெயரில் உழைப்பாளர்கள் நெருப்புப் பிழம்புகளுக்கு நடுவே தள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும். உழைக்கும் மக்களின் நலனை உறுதி செய்யப் பின்வரும் மாற்றங்கள் உடனடியாகத் தேவை

வெப்ப அலை காலங்களில் வருமானம் இழக்கும் தொழிலாளர்களுக்கு சிறப்பு அலவன்ஸ்(allowance) வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்படும் ’10 நிமிட டெலிவரி’ போன்ற அல்காரிதம் முறையிலான அழுத்தங்களை நிறுவனங்கள் கைவிட வேண்டும்.

தங்குமிடம், குளிர்ந்த குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் என்பது நிறுவனங்களின் கருணை அல்ல; அது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. நிறுவனங்கள் தங்களின் ‘டார்க் ஸ்டோர்களில்’ (Dark stores) குளிரூட்டும் வசதிகளையும், ஓய்வு அறைகளையும் உண்மையாகவே ஏற்படுத்தியுள்ளனவா என்பதை அரசுத் துறை அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு எப்பேர்பட்ட பேரிடர்கள் வந்தாலும் அது வெயிலோ மழையோ உழைக்க வேண்டும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே உழைக்கும் மக்களின் எழுதப்படாத விதியாக உள்ளது. இந்த விதியை மாற்றி எழுத வேண்டாமா?

இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் ஒருசேரச் சுரண்டும் இந்த முதலாளித்துவக் கட்டமைப்பு, உழைக்கும் மக்களை வெறும் லாபம் ஈட்டும் கருவிகளாக மட்டுமே பார்க்கிறது. கிக் தொழிலாளர்களை முறையான தொழிலாளர்களாக அங்கீகரிப்பதும், அவர்களுக்குப் பாதுகாப்பான வேலைச் சூழலை உறுதி செய்வதும் காலத்தின் கட்டாயமாகும். லாபத்தை விட மனித உயிர்கள் முக்கியம் என்ற நிலையை நோக்கிப் போராடுவதே இன்றைய தேவையாக உள்ளது.

  • நலன்

ஆதாரம்: Thewire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here