பாரம்பரியமாக வனத்தில் வாழும் மக்கள் தாங்கள் கோரும் நிலத்தை 2005-க்கு முன்பு மூன்று தலைமுறைகளாக அனுபவித்திருக்க வேண்டும் என்றோ அல்லது அனைத்து வன நிலங்களிலும் வணிக நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டிருக்கிறது என்றோ வன உரிமைகள் சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை ஆயினும் நிர்வாகமும் நீதித்துறையும் இதனடிப்படையில் சட்ட நடைமுறைப்படுத்தலைத் தொடர்ந்து தடுத்துக்கொண்டே வருகிறது
அகத்தியமலை உயிர்க்கோள காப்பகத்தில் குறிப்பாக தேனியில், மலைச்சரிவுகளில் தீவிர கோபமும் அவநம்பிக்கைக் கண்ணீரும் சமீபத்தில் அலையடித்ததை பார்த்தோம் . கடந்த சில வாரங்களாக, வனத்துறை, வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி தமிழகப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வெளியேற்ற அறிவிப்புகளை வழங்கியுள்ளது.
மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (Central Empowered Comitee ) அறிதல் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம், காலக்கெடுவுக்குட்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றத் திட்டம், பொருத்தமான இடங்களில் மறுவாழ்வு, தீய நோக்கத்தில் அத்து மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மற்றும் வெளியேற்றத்திற்குப் பிந்தைய சூழலியல் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது.
’ஆக்கிரமிப்பாளர்’களாகக் கண்டறியப்பட்ட 118 அரசு ஊழியர்களுக்கு எதிரான கூடுதல் அபராதங்களையும் இது விதித்தது, மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட வனப் பகுதிகளுக்குள் உள்ள அனைத்துக் கட்டமைப்புகள், பயன்பாடுகள், தளவாட வசதிகள் போன்றவற்றை அகற்றுவதற்கும் உத்தரவிட்டது.
இறுதியாக, அனைத்து ’ஆக்கிரமிப்பு’களும் அகற்றப்படும் வரை அகத்தியமலை உயிர்கோள காப்பகத்துக்குள் வன நிலத்தைத் நிலை மாற்றுவதற்கோ அல்லது புதிய வனம்சாரா நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கோ நீதிமன்ற அமர்வு தடை விதித்தது.
இதேபோல், தீய நோக்கம் அல்லது தன்னிச்சையான நடவடிக்கை தொடர்பான வழக்குகளைத் தவிர, இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்கிரமிப்புகளை அளவிடுதல், எல்லை நிர்ணயம் செய்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அனைத்து வன, காவல், வருவாய் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் வழக்குத் தொடுப்பதில் இருந்து விலக்கு அளித்தது.
தமிழக அரசு நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறும் பட்சத்தில் துணைப் படையினரை நிலைநிறுத்துமாறு பரிந்துரைக்குமாறு Central Empowered Comitee -க்கு நீதிமன்றம் குறிப்பிடத்தக்க வகையில் உத்தரவிட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் பிற நிறுவனங்களின் பயன்பாடு, தக்கவைப்பு, இடமாற்றம் அல்லது அகற்றுவது குறித்தும் Central Empowered Comiteeயுடன் கலந்தாலோசித்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும்.
வனவாழ்மக்கள் எதிர்கொண்ட வரலாற்று இன்னல்களைத் துடைத்தெறிய நாடாளுமன்றம் 2006 இல் வன உரிமைகள் சட்டத்தை இயற்றியது. இது வனத்தில் வசிக்கும் பட்டியல் பழங்குடியினர் மற்றும் டிசம்பர் 13, 2005 க்கு முன்பு வன நிலத்தை அனுபவித்துவந்த பிற பாரம்பரிய வனவாசிகளுக்கு வன உரிமைகளை அங்கீகரித்து வழங்கியது.
இந்த நபர்கள் கிராம சபைகளால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டிய தங்களது தனிநபர் மற்றும் சமூக உரிமைகளைக் கோருவதற்கான ஒரு வெளிப்படையான செயல்முறையை வன உரிமைகள் சட்டம் வழங்கியது. வருவாய், பழங்குடியினர் மற்றும் வனத்துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஆறு பேர் கொண்ட துணைப் பிரிவு மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் – உரிமைகளைக் பரிசீலித்து பட்டங்களை வழங்க வேண்டும். வன உரிமைகள் சட்டத்தின் வரம்பிற்குள் வராத அந்த வன நில ஆக்கிரமிப்புகள் உண்மையான ஆக்கிரமிப்புகளாக மாறலாம்.
ஆனால் கடந்த காலங்களில், மாநில அரசுகள், CEC, வனத்துறைகள் மற்றும் உச்ச நீதிமன்றம் கூட இந்த அடிப்படைச் சட்ட உண்மையைப் புறக்கணித்துள்ளன. வன உரிமைகள் சட்டம் இரண்டு தசாப்தங்களாகச் செயல்பட்டு வந்த போதிலும், வன உரிமைகள் சட்டத்தின் வரம்பிற்கு வெளியே உள்ள வன நில ஆக்கிரமிப்பு குறித்த தரவுகளை எந்த அதிகாரியும் கேட்கவில்லை அல்லது அத்தகைய தகவல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை – இதனால் எந்தவொரு மன்றத்திலும் ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த வழங்கப்பட்ட தரவுகள் சந்தேகத்திற்குரியதாகின்றன.
சமீபத்திய விசாரணைகளில், வன உரிமை சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தாத பிடிவாதமான மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் விசாரித்திருக்க வேண்டும்.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புத் துறையான பழங்குடியினர் நலத்துறையும் இந்தக் குறைபாடுகள் குறித்து சிக்கலான வகையில் மௌனமாகவே இருந்துள்ளது.
வன நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நபர்களை ’’
நில அங்கீகாரம் மற்றும் சரிபார்ப்பு நடைமுறை முடியும் வரை மக்களை வெளியேற்ற முயலக்கூடாது என்று வன உரிமைகள் சட்டம் அதிகாரிகளுக்கு தடை போட்டிருக்கிறது
இந்த வன உரிமைகளை மீறுவது 2016 முதல் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 இன் கீழ் ஒரு வன்கொடுமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . ஆயினும் இதை எதையும் கருத்தில்ம் கொள்லாமல் நீதிமன்றங்களும் அதிகாரிகளும் தொடர்ந்து இந்த சரத்துகளை மீறியே வந்துள்ளனர்.
மற்ற பாரம்பரிய வனவாழ்மக்கள் தாங்கள் கோரும் நிலத்தை 2005-க்கு முந்தைய மூன்று தலைமுறைகளுக்கு (75 ஆண்டுகள்) அனுபவித்திருக்க வேண்டும் என்ற தேவையை வன உரிமைகள் சட்டம் எங்குமே குறிப்பிடவில்லை. மேலும் இச்சட்டம் அனைத்து வன நிலங்களிலும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அல்லது வணிகப் பயிர்களைப் பயிரிடவோ தடைசெய்யவில்லை. உண்மையில், வன உரிமைகள் சட்டம் உண்மையான வாழ்வாதாரத் தேவைகள்என்பதை அத்தகைய உரிமைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் உபரி விளைபொருட்களை விற்பது என்று வரையறுக்கிறது. இது அனைத்து வன நிலங்களிலும் மேய்ச்சலையும் வெளிப்படையாக அனுமதிக்கிறது. ஆயினும் நிர்வாகமும் நீதித்துறையும் இந்தச் சந்தேகத்திற்கிடமான காரணங்களின் அடிப்படையில் வன உரிமைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்துள்ளன.
CEC-இன்அறிதல்கள்
அகத்தியமலை உயிர்க்கோள காப்பகம் கேரளா (பத்தனம்திட்டா, கொல்லம், இடுக்கி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகள் உட்பட) மற்றும் தமிழ்நாடு (திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல்) முழுவதும் 3,500 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம், நெல்லை வனவிலங்கு சரணாலயம் மற்றும் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியது. கேரளாவில், இது பெரியார் புலிகள் காப்பகம் மற்றும் செந்துருணி வனவிலங்கு சரணாலயத்தை உள்ளடக்கியது.
மார்ச் 2025 இல், முழு அகத்தியமலை நிலப்பரப்பையும் விரிவான ஆய்வு செய்து, வனப் பாதுகாப்பு சட்டம் 1980 மற்றும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 இன் மீறலான வனச்சாரா நடவடிக்கைகள் குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் CEC-க்கு உத்தரவிட்டது.
வனத்துறைகளின் உள்ளீடுகள், களப்பயணங்கள் மற்றும் மேகமலை தொடர்பான முந்தைய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், CEC தனது இடைக்கால அறிக்கையை ஜூலை 10, 2025 அன்றும், இறுதி அறிக்கையை ஜனவரி 16, 2026 அன்றும் சமர்ப்பித்தது. நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகள் இந்த அறிக்கைகளின் உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதன் ஐந்து அறிதல்( findings ) பின்வருமாறு:
(i) களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம்: 2020 ஆம் ஆண்டு பதிவுகளின்படி, வருசநாடு, மேகமலை, கந்தமனுப்பூர் மற்றும் சின்னமனூர் முழுவதும் சுமார் 4,595 நபர்கள் 5,071.2 ஹெக்டேர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளனர்.
தேனி மாவட்ட மாஜிஸ்திரேட் 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் 5,072.6 ஹெக்டேர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்தார்.
சேவையில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற 118 அரசு ஊழியர்கள் 15 ஹெக்டேர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளதாகவும் CEC பதிவு செய்துள்ளது.
(ii) களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம்: வாடியா குழுமத்தைச் சேர்ந்த பர்மா ட்ரேடிங் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட 3,388.6 ஹெக்டேர் நிலத்தில், தோராயமாக 3,300 ஹெக்டேர் நிலம் மே 2025 இல் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
படிக்க:
♦ புதிய ஜனநாயகம் | ஆகஸ்ட் 2026 | அச்சு இதழ்
♦ ஆரவல்லி மலைத்தொடரை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் பாஜக அரசு! எதிர்த்து நிற்கும் மக்கள்!
மீதமுள்ள 89.6 ஹெக்டேர் நிலத்தில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பள்ளிகள், கடைகளுடன் கூடிய பொது இடங்கள், எடை பாலங்கள் போன்றவை இருந்தன. அவைகளை அகற்றும் பணி விரைவில் முடிக்கப்பட இருந்தது. 1942 இல் பாபநாசம் மேல் மற்றும் கீழ் அணைகளைக் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் 99 குடும்பங்களால் மேலும் 10.1 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
(iii) கன்னியாகுமரி வனப் பிரிவு: சுமார் 427.4 ஹெக்டேர் நிலம் 553 நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, இதில் 237 ஹெக்டேர் நிலத்தை 47 நபர்கள் நீதிமன்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர்.
(iv) பெரியார் புலிகள் காப்பகம்: சுமார் 700 பழங்குடியினர் அல்லாத குடிமக்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து மையப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வசித்து வருகின்றனர்.
(v) செந்துருணி வனவிலங்கு சரணாலயம்: கட்டில்பாறை மற்றும் ரோஸ்மலை குடியிருப்புகளில் பழங்குடியின மக்களால் 1.3 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள்
மஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் வன உரிமைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் வெளியேற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பான மனுதாரர்களின் கோரிக்கைகளை மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவுகள் தொடர்புடையவை.
தோட்டம் அமைந்துள்ள ABR அகத்தியமலை உயிர்கோள காப்பகத்தையும் உள்ளடக்கும் வகையில் நீதிமன்றம் பின்னர் வழக்கின் வரம்பை விரிவுபடுத்தியது.
பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்ட 3,388.7 ஹெக்டேர் நிலத்தின் குத்தகை 2028 இல் முடிவடைய இருந்தது. இந்த நிலத்தை 2007 ஆம் ஆண்டில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் முக்கிய புலிகள் வாழ்விடத்தின் ஒரு பகுதி என்று தமிழக அரசு அறிவித்தது, 2018 இல் காப்புக்காடாக அறிவித்தது மற்றும் 2023 இல் வெளியேற்ற அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் தனது தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தைத் தொடங்கியது.
இந்தத் தொழிலாளர்கள் இத்திட்டத்தையும் அரசின் நடவடிக்கைகளையும் எதிர்த்து பல பொதுநல வழக்குகளையும் ரிட் மனுக்களையும் தாக்கல் செய்தனர், ஆனால் சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அவற்றை 2024 மற்றும் 2025 இல் தள்ளுபடி செய்தன.
1929 ஆம் ஆண்டில் தோட்டம் அமைக்கப்பட்டது என்றும், இப்பகுதியில் மூன்று தலைமுறைகளாக வசிக்கும் தகுதியைப் பெற்றுள்ளதால் தொழிலாளர்கள் வன உரிமைகள் சட்டத்தின் கீழ் “மற்ற பாரம்பரிய வனவாசிகளாக” வன உரிமைக் கோரிக்கைகளுக்குப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு மனு வாதிட்டிருந்தது. ஆனால் உயர் நீதிமன்றம் இந்தத் தொழிலாளர்களை வனவாசிகள் அல்ல, தோட்ட ஊழியர்கள் என்று அறிவித்தது மற்றும் வன உரிமைகள் சட்டத்தின் வரம்பிற்குள் இருந்து அவர்களை விலக்கியது.
இவ்வாறு, வரலாற்று இன்னல் இன்னும் தொடர்கிறது.
முகநூல் பதிவு
சி. ஆர். பிஜாய் ( C.R Bijoy ) எழுதி இன்றைய research gateல் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் தமிழக்கம் : Lakshmanan Rangasamy






