சவுக்கு சங்கர் சமீபத்திய காணொளி ஒன்று தவெக-வின் விஜய் அரசாங்கமானது கோவையில் சத்தியபாலன் என்பவரை அரசு வழக்கறிஞராக நியமித்து அரசாணை வெளியிட்டிருப்பது குறித்து விமர்சித்துள்ளார். இக்கட்டுரையில் சவுக்கின் ‘விமர்சன’ கண்ணோட்டத்தைப் பரிசீலனைக்கு உட்படுத்துகிறோம்.
அதில் சவுக்கு தன்னை ஒரு ‘புலனாய்வு புலி’யாக முன்னிருத்தி ‘ஆய்வு’செய்து விமர்சனங்களையும் அடுக்கியுள்ளார். கூடுதலாக மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அமைப்புகளையும் இழுத்து வைத்து சேறடிக்க பார்த்துள்ளார். அது குறித்து பின்னர் பார்ப்போம். முதலில் அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து பார்த்து விடுவோம்.
சவுக்கின் வாய்க்கொழுப்பு!
தற்போது கோவையில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர் மாவோயிஸ்டுக்காக வாதாடியவராம். ஒருவர் மாவோயிஸ்ட்டுகளுக்காக வழக்கில் ஆஜர் ஆனதாலேயே அவரும் “மாவோயிஸ்ட்”டாம். ஆதாரம்: https://www.facebook.com/share/v/19FmKCJPAr/
சவுக்கு விடும் கரடியை எப்படி புரிந்து கொள்வது? அதாவது மும்பை தாக்குதலை நடத்திய அஜ்மல் கசாப்புக்காக யாராவது வாதாடிவிட்டால் அவரும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவரே. பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்டவருக்காக யாராவது ஆஜர் ஆகிவிட்டால் அவரும் காமவெறியர்களில் ஒருவரே. ஹவாலா மோசடி அல்லது நிதி முறைகேடு குற்றம் சாட்டப்பட்டோருக்காக யாராவது ஆஜர் ஆனால் அவரும் மோசடி பேர்வழிதான். தூத்துக்குடியின் ஸ்டெர்லைட்டுக்காக ஆஜரானால் அவரும் கூட்டுக்கிரிமினல் என்பதாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் சுருக்கமாக சொல்லியுள்ளார் சவுக்கு.
துரதிஷ்டவசமாக பிற நிகழ்வுகளில் சவுக்கு சங்கருக்கு இத்தகைய தெளிவும் மேதமையும் கை வரவில்லை. அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மட்டுமே இத்தகைய புத்திக் கூர்மை வெளிப்பட்டுள்ளது. புலனாய்வாளரின் மதிநுட்பத்தை நாமும் ’வரவேற்போம்’. சவுக்கின் ’தரத்தை’யும் சோதிப்போம்.
அரசு வழக்குரைஞராக எது தகுதி?
ஒவ்வொரு இந்திய குடிமகனும் பிரதமரின் தேர்வையே விமர்சிக்க முடியும் என்றால், திருவாளர் சவுக்கு மட்டும் அரசு வழக்கறிஞரின் தகுதியைக் குறித்துகூட பேச கூடாதா? தாராளமாக பேசலாம். ஆனால் அந்தப் பேச்சு நேர்மையானதாகவும், உண்மையானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும். அனைவருக்கும் பொருந்துவதாகவும் இருக்க வேண்டும்.
சவுக்கு சங்கர் எதிர்பார்ப்பது எதை? ஒருவர் வழக்கறிஞராக தொழில் செய்யும் காலத்தில் அதிகார வர்க்கத்தின் தவறுகளை கண்டிக்காமல் “சொம்படித்திருக்க” வேண்டும். அரசுத் துறைகளில் நடக்கும் அதிகார அத்துமீறல்களை எதிர்த்து “கேள்வி கேட்டிருக்கக் கூடாது”. எத்தகைய கேடி கிரிமினல்களுக்காக வேண்டுமானாலும் ஆஜராகலாம்; கோவை கலவர சங்கிகளின் வழக்குரைஞராகவும் தொழில் செய்திருக்கலாம். ஆனால் “உழைக்கும் மக்களுக்காக” குரல் கொடுக்கும் எந்த ஒரு இயக்கத்திற்காகவும் வழக்கை நடத்தி இருக்கக் கூடாது என்றுதான் எதிர்பார்க்கிறார் சவுக்கு.
மேற்குறிப்பிட்டபடி அரசுக்கும், ஆளும் வர்க்கத்துக்கும் ‘பக்குவமாக’ செயல்பட்டவர் தான் அரசு வழக்கறிஞராக வரவேண்டுமாம். தூத்துக்குடியில் என்ன நடந்தது என்பதை ஆராயாமல், நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு அரசுக்கு முட்டுக் கொடுத்து வீடியோ போட்ட சவுக்கைப்போல் இருக்க வேண்டுமாம். திட்டமிட்ட அரச படுகொலைதான் என்பதை பின்னர் வீடியோ ஆதாரங்களுடன் முகிலன் அம்பலப்படுத்திய போதும் தேள் கொட்டு வாங்கிய திருடனாக வாயை பொத்திக்கொண்டிருக்க வேண்டும் போலும்.
திருவாளர் சவுக்குவின் பார்வையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி செய்திருந்தால்தான் ஒருவர் அரசு வழக்குரைஞர் ஆவதற்கு தகுதி பெறுகிறார். ஆனால் எதார்த்தம் வேறாக இருக்கிறது. விஜய் ஒரு தவறானவரை நியமித்துவிட்டார் என கொதிக்கிறார் சவுக்கு.
விஜய் அரசின் தவறா?
விஜய் அரசாங்கமானது ஒரு மாவோயிஸ்ட்டை அல்லது மாவோயிஸ்டுகளுக்காக வழக்குகளில் ஆஜராகி இருப்பவரை எப்படி அரசு வழக்கறிஞர் ஆக்கலாம் என்று குதிக்கிறார் சவுக்கு. விஜய்யின் கட்சிக்குள்ளும் மாவோயிஸ்ட்டுகள் பலர் ஊடுருவியுள்ளார்களாம். இப்பொழுது சவுக்கு புலனாய்வு புலியாகிவிட்டார். பனையூரில் நடப்பதையும் மோப்பம் பிடிக்கிறார் போலும். ஆனால் இதையெல்லாம் இவரா செய்ய வேண்டும்? அரசின் உளவுத்துறை, கியூ பிராஞ்ச், ஸ்பெசல் பிராஞ்ச், இண்டெலிஜென்ஸ் பியூரோ போன்றவையெல்லாம் செயலிழந்து விட்டதா மிஸ்டர் சவுக்கு?
படிக்க:
♦ சவுக்கு சங்கர் கைதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா..? -சாவித்திரி கண்ணன்
♦ தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தற்செயலாக நடந்தது சவுக்கு சங்கர் பித்தலாட்டம்!
குறிப்பாக எதை சுட்டுகிறார் என்று சற்றுத் தெளிவாகவே பார்க்கலாம். பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தான் சத்தியபாலன் என்கிறார் சவுக்கு. தீவிரவாத இயக்கங்கள் இப்படித்தான் செயல்படுகிறதாம். போலீசு பல பெயர்களில் செயல்படலாம். ராணுவம் பல பெயர்களில் செயல்படலாம். சங்கிகள் பல பெயர்களில் செயல்படலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட பல பெயரில் செயல்படலாம். மக்களுக்காக இருப்பவர்களுக்கு மட்டும் பல அமைப்புகள் இருக்க கூடாது என்கிறார் சவுக்கு.
சத்தியபாலன் மாவோயிஸ்டா இல்லையா என்பது அவரின் சொந்தத் தேர்வு. அது குறித்து வழக்குரைஞரே மறுப்பு தெரிவித்துக் கொள்ளட்டும். நாம் சவுக்குவின் விமர்சனத்தை தான் கணக்கில் எடுத்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. சவுக்கு தான் முன்வைக்கும் அளவுகோலை அனைவருக்கும் பொருத்துகிறாரா என்றால் இல்லை.
சவுக்கின் உண்மை முகம்!
சமீபத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் விதிமுறைகளை மீறி உத்தரவுகளை பிறப்பித்து பரபரப்பாக அடிபட்டார் ஒரு நீதிபதி. அந்த நீதிபதி தனது பின்னணி குறித்து சுயதம்பட்டமும் அடித்து வருகிறார். தான் ஒரு பிராமணர் என்றும், சனாதன தர்மத்தை பின்பற்றுகிறேன் என்றும், அதன்படி பிராமணர்களை நெருக்கடி, ஆபத்துகளில் இருந்து, குற்றமிருத்த போதும் சட்டத்தின்படியான தண்டனைகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறேன் என்றும் பகிரங்கமாகவே பேசிய காணொளிகளும் வைரல் ஆகியுள்ளது.
ஒரு அரசு வழக்குரைஞர் ஆவதற்கே பிற அமைப்புகளில் – அதாவது சவுக்குவின் பார்வையில் பிரச்சனைக்குரிய அமைப்புகளில் செயல்பட்டு இருக்கக் கூடாது என்றால், ஜி ஆர் எஸ் எப்படி நீதிபதியாகவே ஆகி உள்ளார்? இதற்கு சவுக்கு கொதித்தெழுந்து போர் முழக்கம் செய்திருக்க வேண்டாமா? ஆனால் இவ்விசயத்திலும் பச்சையாக சங்கிகளின் பக்கம் நின்று, சங்கி நீதிபதியின் பக்கம் நின்று திமுக அரசைத்தான் சாடினார்.
படிக்க:
♦ பாசிசமா பாயாசமா! பாசிசம் உள்ள பூந்திடும் என்று நக்கலடித்த அரசியல் அறிவிலிகளுக்கு!
♦ நடுநிலை போல நடிக்கும் அறம் சாவித்திரி கண்ணன் எந்தப் பக்கம்?
சத்தியபாலனுக்கு பொருத்தும் அளவுகோலை ஏன் சங்கியாக செயல்பட்டு அரசு வழக்கறிஞராகவும், அல்லது உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியாகளாகவும் பதவியில் அமர்ந்தவர்களுக்கு பொருத்தவோ, விமர்சிக்கவோ மறுக்கிறீர் சவுக்கு?
தற்போதுள்ள அரசு வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் எவ்வித இயக்கத்தையும் சாராதவர்களா? அல்லது நீதிமன்றத்தால் தண்டிக்கவும், கண்டிக்கவும் படாத புனிதமான அமைப்பைச் சேர்ந்தவர்களா?
இந்தக் கேள்விக்கு நாம் ‘நேர்மையின்’ திரு உருவான சவுக்கிடம் எவ்வித பதிலையும் எதிர்பார்க்க முடியாது. சவுக்கை பொருத்தவரை நாட்டில் காவி பயங்கரவாதம் இருக்கலாம். அதிகார வர்க்கத்தின் காவல்துறையின் ஒடுக்கு முறைகள் நடக்கலாம். இதையெல்லாம் கேள்வி கேட்க்கும் சிவப்பைத்தான் அனுமதிக்கவே கூடாது என்கிறார். அதனால்தான் மக்கள் கலை இலக்கியக் கழகத்தையும், மக்கள் அதிகாரத்தையும் வம்புக்கு இழுக்கிறார்.
மோடி அரசின் சொம்பாக சவுக்கு!
சத்தியபாலன் மிகவும் நைச்சியமாக தவெக கட்சிக்குள் நுழைந்துள்ளாராம். அவரை அரசு வழக்கறிஞர் ஆக்கினால் அதை மோடி அரசு வேடிக்கை பார்க்குமா? என்று கேள்வி எழுப்புகிறார் சவுக்கு. மோடி அமித்ஷா கும்பல் மாவோயிஸ்டுகளையும், பழங்குடிகளையும் நர வேட்டையாடி வருவதையும் போற்றி புகழ்கிறார்.
மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடி வரும் மத்திய அரசோ, தமிழ்நாட்டிற்கு என்றே மோடி அமித்ஷா கும்பலால் தேர்வு செய்யப்பட்டு, தனிச்சிறப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளுநரோ இந்த வழக்கறிஞர் நியமனத்தை எப்படி பார்ப்பார்கள்? “வழக்குரைஞராக அரசு பதவியில் நீடிக்க விட்டுவிட மாட்டார்கள்” என்கிறார் சவுக்கு. மேலும், “கொள்ளிக்கட்டை எடுத்து தலையை சொரிந்து கொள்ள வேண்டாம்” என்று முதல்வர் விஜய்க்கும் ஆலோசனை தருகிறார்.
சங்கி சவுக்கை போலீஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்து விரட்டிய போதும் “போலீசின் புத்தி” கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருக்கிறது. ஒருவேளை டிபார்ட்மெண்டில் இருந்து வெளியேற்றப்பட்டவராக அனுதாபம்தேடி அவ்வப்போது அரசை விமர்சிப்பதுகூட அரசின் அண்டெர் கவர் ஆபரேசனா சவுக்கு?
உள்நாட்டு பாதுகாப்பு என்பது விளையாட்டல்லவாம்!
மாவோயிச சித்தாந்தத்தை ஆதரிப்பவர்கள் அல்லது பின்பற்றுவோர்களை அரசு வழக்கறிஞராக போடுவது உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தை உருவாக்குமாம். மாவோயிஸ்ட்டுகளையோ, கம்யூனிஸ்ட்டுகளையோ கண்டு உழைக்கும் மக்கள் அஞ்சியதில்லை. நாட்டை சுரண்டும் கூட்டத்துக்குத்தான் குலை நடுங்கும். உங்களுக்கு ஏன் நடுங்குகிறது சவுக்கு?
இந்தியாவெங்கும் சாதிவெறி, மதவெறிக் கலவரங்களையும், கும்பல் படுகொலைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் தொடர்ந்து செய்து வருகிறது காவி பாசிச கும்பல். கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காகவே பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, மக்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள். இத்தகைய கனிம வளக் கொள்ளையை, சுற்றுச்சூழல் அழிப்பை எதிர்த்து நிற்பவர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். இதை முட்டுக் கொடுத்து ஆதரிப்பவர்களைத்தான் அரசின் பல்வேறு துறைகளின் அடிமட்டம் இருந்து தலைமைப் பொறுப்பு வரை நிரப்பியும் வருகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறையில் குப்பை கொட்டிய உங்களுக்கு இதுவெல்லாம் தெரிந்தும் கூட மவுனம் ஏன் சவுக்கு?
சனாதனத்தின் பெயரால், ஹிந்துராஷ்ட்டிரத்தின் பெயரால், வளர்ச்சி முன்னேற்றத்தின் பெயரால் இதையெல்லாம் செய்பவர்கள்தான் ஒன்றியத்திலும் பல மாநிலங்களிலும் நேரடியாக ஆட்சி செய்கிறார்கள்; மோடி அமித்ஷா கும்பல்கள் சில மாநிலங்களில் தமது B – டீம்கள் மூலம் ஆட்டிப் படைக்கிறார்கள். இத்தகைய கும்பலால் இந்திய நாட்டிற்கு வராத அச்சுறுத்தலா ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வந்து விடப் போகிறது?
அரசின் ஊதுகுழலாக சவுக்கு!
மோடி அமித்ஷா அரசுக்கு மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களிலேயே பல ஊதுகுழல்கள் இருக்கின்றன. நடுநிலையாளர்களைப் போல வேஷம் போடும் ஊடக மாமாக்களும் உருவெடுத்து இருக்கிறார்கள். துணிச்சலாக உண்மையை எழுதி மோடி அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்கிறார்கள் பலர். இதில் நீங்கள் எந்த தரப்பு மிஸ்டர் சவுக்கு?
அரசும், அரசின் காவல்துறையும், உளவுத்துறையும் மக்களுக்காக போராடுகின்ற இயக்கங்கள் அமைப்புகள் குறித்து எதை – எப்படி பரப்ப வேண்டும் என நினைக்கிறதோ அதையே முழு விசுவாசத்துடன் நீங்கள் செய்கிறீர்கள். முழுப் பொய்களையும், அவதூறுகளையும் உண்மை போலவே அடித்து பேசி சாதிக்க நினைக்கிறீர்.
காவியையோ, கார்ப்பரேட்டுகளையோ கேள்வி கேட்டால் காவிகளின் கைத்தடிகளுக்கும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. நீ எப்படி நாட்டுபற்றாளனாக இருக்கலாம்? நீ எப்படி உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கலாம்? நீ ஏன் பத்தினியாக இருக்கிறாய்? என்பதற்கு சமம்தான் இது.
அரசின் அதிகார வர்க்கத்தின் சொம்பாக இல்லாமல், மக்களுக்காக போராடும் இயக்கங்களை எப்படி சவுக்கால் சகிக்க முடியும். அதனால்தான் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்டவற்றை அவதூறு செய்கிறார் திருவாளர் சவுக்கு.
ஒரு காவலராக உங்களுக்கு தரப்பட்ட பயிற்சியை, அரசின் வேட்டை விலங்காக குடிமக்களின் மீது பாய்ந்து குதறுவதை விசுவாசத்துடன் பின்பற்றுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கும், காவிகளுக்கும் தொண்டு ஊழியம் செய்வதற்காக உங்களை நீங்களே நேர்ந்து விட்டுக் கொள்ளவும் உங்களுக்கு உரிமை உள்ளது. உங்களைத் தவிர மற்ற யாரும், நீங்கள் செயல்பட விரும்பாத இயக்கங்களிலோ, அமைப்புகளிலோ கட்சியிலோ இருப்பதையோ, நீங்கள் ஏற்று செயல்படும் சித்தாந்தத்திற்கு மாற்றாக உள்ள எதிலும் ஈடுபடுவதையோ நீங்கள் தடுக்க முடியாது Mr. சவுக்கு.
சவுக்கை சுழற்றும் எஜமானர்கள் யார்?
ஆச்சிமுத்து சங்கரின் (சவுக்கின்) வாழ்க்கை வசதிகளுக்கும், ஊடகத் தொழில் முதலீடுகளுக்குமான சோர்ஸ் எது என்பதை வெளிப்படையாக சொல்வாரா? ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக வழக்கில் சிக்கியது எப்படி என்று சொல்லியுள்ளாரா? அனைத்தும் ‘அவாளுக்கு‘ தான் வெளிச்சம். பெண்காவலர்கள் பதவி பெறுவது குறித்து மட்டமாக விமர்சித்து கைதாகி வெளிவந்து ஓராண்டில் கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியது எப்படி சவுக்கு? இது பற்றி ஞான பிரகாஷ் சில ஆதாரங்களை முன்வைத்தும் மவுனம் ஏன்? (செய்தி ஆதாரம்: YouTurn )
சவுக்கின் மூன்று நூல்களை ‘அவாளின் ‘ கிழக்குப் பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது. இதனால் சவுக்கும் கூட ஊடகவியலாளர் என்ற பெயரில் ரகசியமாக உலவி வரும் ஒரு சங்கி என சொல்லலாம் அல்லவா? இவருக்கு வழக்குரைஞரின் பின்னணியை கிண்டிப் பார்ப்பதற்கு என்ன தகுதி உள்ளது? கம்யூனிசமும், திராவிடமும் சங்கிகளுக்குக்தான் கசக்கிறது. அது உங்களுக்கும் ஏன் கசக்க வேண்டும் சவுக்கு?
நீங்கள் ஊடகவியலாளர் என்ற போர்வையில் அதிகார வர்க்கத்தின் ஊடக அடியாளாக, ஒன்றிய உளவுப்பிரிவின் சொம்பாகவே தாராளமாக இருந்து விட்டு போங்க சவுக்கு. அதற்காக மக்கள் நலனில் இருந்து செயல்படுபவர்களை சீண்டிப் பார்க்காதீர்கள். மூடிய அறைக்குள் கழிவில் புரளும் பன்றியாக வாழ உங்களுக்கு உரிமை உண்டு தான்; அதற்காக தெருவில் நின்று மற்றவர்கள் மீது சேறடிக்காதீர்கள்.
- இளமாறன்






