அகப்பட்டார் தலைமைத் தேர்தல் ஆணையர் திருட்டு ஞானேஷ்குமார்! உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும்!
சட்டமன்ற தேர்தல்கள் ஆனாலும் சரி; நாடாளுமன்ற தேர்தல்கள் ஆனாலும் சரி; RSS மோடி – அமித்ஷா கும்பல் தலைமை ஏற்ற பாஜக, 2014 முதல் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் சகல துறைகளிலும் நடத்தி வரக் கூடிய தில்லு முல்லு மோசடிகள் கொஞ்ச நஞ்சமல்ல!
குறிப்பாக அண்மைக்காலத்தில் அக்காவிக் கும்பல் ஓங்கி முழங்கும் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கல்விக் கொள்கை போன்ற கொள்கைகளை நடைமுறைப் படுத்திட – அதன் மூலம் இந்து ராஷ்ட்ராவை நிர்மாணித்திட – கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை நிலை நாட்டிட…. பாராளுமன்ற தேர்தல் வழி மூலமாகவே அரும்பாடு படுகிறது இந்த சர்வாதிகாரக் கும்பல்.
அப்படியானால் பாராளுமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக பாஜக அல்லது அதன் கூட்டாளி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கப்படல் வேண்டும். நாடெங்கும் காவி கும்பலின் சாதி- மதவெறி கொலை வெறித் தாண்டவத்தாலும், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் படுபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பது போன்ற காரணங்களாலும் காவிக் கும்பல் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் கடும் பிரச்சனை உள்ளது என்பதனை நன்றாகவே அது உணர்ந்திருந்தது.
எனவே அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் தக்க வைத்துக் கொள்வதற்கான சில சட்ட திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டது.
தேர்தல் சம்பந்தப்பட்ட விடயங்களில் மட்டும் என்னென்ன மோசடி சட்ட திருத்தங்களை பாஜக காவி அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது?
தேர்தல் ஆணையாளர்களை தேர்வு செய்யும் குழுவில் மூவர் (பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி) இருந்தனர் அல்லவா? இம்மூவரில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் கேபினட் அமைச்சர் இடம் பெறுவார். அந்த வகையில் தற்போது அக்குழுவில் அமித்ஷாவை நுழைத்துள்ளார் மோடி. ஆக தேர்தல் ஆணையாளர்களாக பாஜக – RSS கும்பல் விரும்பும் நபர்களே நியமனம் செய்யப்பட ஏதுவான சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் தான் அமித்ஷாவின் கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்தவரும், குஜராத்தைச் சேர்ந்தவரும் ஆன காவிச் சிந்தனை உடைய ஞானேஷ் குமார் 15-03-2024 முதல் 18-02-2025 வரை தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராகவும் 19-02-2025 முதல் இன்று வரை தலைமைத் தேர்தல் ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டு நீடிக்கிறார்.
தேர்தல் ஆணையாளர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டாலோ, ஓய்வு பெற்ற பிறகு குற்றங்கள் ஏதும் தென்பட்டாலோ அவற்றை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது தண்டனை வழங்கப்பட முடியாது என்ற ஒரு கேவலமான சட்ட திருத்தத்தை பாஜக காவி அரசு நிறைவேற்றி உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையாளருக்கு Z+ காவல் பாதுகாப்பு முன் எப்போதும் இல்லாத நடைமுறையை வழங்கி உள்ளது மோடி அரசு.
படிக்க: ஞானேஷ்குமார் இனியும் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் நீடிக்கக் கூடாது!
தலைமைத் தேர்தல் ஆணையகத்தில் இதற்கு முன் சாதாரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வருவது போன்ற சூழல் நிலவியது;தற்போது ஆணையகத்தைச் சுற்றிலும் பேரிக்காட் உட்பட பலவற்றை நிறுவி வேலி அமைத்துக் கொண்டார்கள். சாதாரணமாக வேறு எவரும் உள்ளே சென்று திரும்ப முடியாது.
தேர்தல் முடிந்தவுடன் CCTV Footage-களை 45 நாட்களில் அழித்து விடுவது; 3 மாதங்களில் EVM-ன் CU, VVPAT உட்பட அனைத்தையும் அழித்து விடுவது என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது (இதற்கு முன்பு ஒரு தேர்தல் முடிந்த பிறகு அடுத்த தேர்தல் வரும் வரை தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்; அந்நடைமுறை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது).
SIR பணிகளின் போது நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களை எவரும் பெற்றிட முடியாது. அடையாள அட்டைகளில் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறை தகர்க்கப் பட்டுள்ளது.
SIR பணி மேற்கொள்கின்ற பொழுது இதுவரை பின்பற்றப்படாத வகையில் ,வாக்காளர்களுக்கே விண்ணப்பம் அளித்து அதில் வில்லங்கமான வினாக்களை எழுப்பி பதிலளிக்கச் செய்து தத்தம் வாக்குரிமையை நிலைநாட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
EVM வாக்கு இயந்திரங்களில் நம்பகத் தன்மை குலைந்து போய்விட்டதால், பல்வேறு தரப்பினரும் பழைய வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்தக் கோரியும் அக்கோரிக்கைகள் புறம் தள்ளப்பட்டது.
எதிர்க்கட்சிகள் இன்ன பிற ஜனநாயக சக்திகள் எழுப்பும் எண்ணற்ற தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் யாவற்றையும் மோடி அரசு, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் அனைத்தும் ஒட்டடையைப் போல ஒதுக்கி விட்டன.
இவை போன்ற சட்டத்திற்கும் புறம்பான இழிவான நடவடிக்கைகளை பாஜகவின் மோடி அரசாங்கமும் அதன் கைப்பாவையான தலைமை தேர்தல் ஆணையாளரும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டத்தை மீறிய தலைமை தேர்தல் ஆணையர்!
டாக்டர் சுக்பீர் சிங் சாந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி இரு தேர்தல் ஆணையாளர்களும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
படிக்க: ஞானேஷ்குமார்: தேர்தல் ஆணைய வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளி!
கடந்த 10 மாதங்களில் 14 முறை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது தங்களது கடுமையான ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ளதாக கூறும் அவர்கள் பட்டியலிடும் குற்றச்சாட்டுகள் இதோ:
தங்களுக்குத் தெரியாமலேயே தங்களது ஒப்புதல் அல்லது ஆலோசனையை பெறாமல் ஒட்டுமொத்த தேர்தல் ஆணையத்தின் பெயரால் முக்கிய முடிவுகளும் ஞானேஷ் குமாரால் தன்னிச்சையாக எடுக்கப் படுகின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தம் முறைகேடு (SIR):
பீகார் மற்றும் இதர மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளில் தன்னிச்சையான மற்றும் விதிகளை மீறிய வழிமுறைகள் பெருமளவில் கையாளப்பட்டுள்ளன.
படிவம் 6-ல் சட்டவிரோத மாற்றம்:
புதிய வாக்காளர்களை சேர்க்கும் படிவம் 6-ல் (Form 6) தங்களுக்குத் தெரியாமல் புதிய கேள்விகள் சேர்க்கப்பட்டதானது அதிகாரப் பூர்வமற்றது; சட்ட விரோதமானது.
தரவுப் பாதுகாப்பு மற்றும் மையப்படுத்தல்:
வாக்காளர் தரவு தளங்களை முழுமையாக ஒரு குறிப்பிட்ட மையத்தின் கீழ் கொண்டு வந்து அணுகுவது மற்றும் வாக்காளர் பெயர்களை நீக்குதல்/மீட்டமைத்தல் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை அறவே இல்லை.
அன்றே சொன்னோம்! இப்பொழுதுதான் எதிர்க்கட்சிகள் குய்யோ முறையோ என்று கதறுகின்றன!
நம்மைப் பொறுத்த மட்டில் இந்த பாராளுமன்ற சரணடைவுப் பாதையின் மூலமாக இந்திய நாட்டின் அறுதிப் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தந்து விட முடியும் என்ற மயக்கம் நமக்கு என்றும் இருந்ததில்லை. முழு அதிகாரங்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கம் வளைத்து வைத்துக் கொண்டிருக்க கூடிய சூழலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் குறைந்தபட்ச வரம்பிற்கு உட்பட்டே சிற்சில காரியங்களில் ஈடுபட முடியும். அதுவும் தற்போது முதலாளித்துவ நலன் சார்ந்த அரசியல் கட்சிகளே அந்த இடத்தையும் பிடித்துக் கொள்கின்றன. எனினும் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தி ஹிட்லர் பாணியில் சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த பாசிச காவி கும்பல் நான்கு கால் பாய்ச்சலில் வெறி யாட்டம் போடுகின்ற சூழலில் நாமும் சிலவற்றில் களமாட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
ஞானேஷ் குமார் தவிர்த்த மற்ற இரண்டு தேர்தல் ஆணையாளர்கள் இப்போதுதான் குற்றங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் பாஜக ஆட்சிக் கட்டிலில் ஏறிய பின் தேர்தல் நடைபெறும் விதங்கள், தில்லுமுல்லு மோசடிகள், சட்டத்திருத்தங்கள் யாவற்றைப் பற்றியும் இதே தளத்தில் இதற்கு முன் நாம் பல கட்டுரைகளைப் படைத்திருக்கிறோம். முழுமையாக அம்பலப்படுத்தியிருக்கிறோம்.
படிக்க: இந்திய நாட்டைக் கெடுக்கும் பாஜகவும் – தமிழ்நாட்டைக் கெடுக்கும் தவெகவும்!
இரண்டு தேர்தல் ஆணையாளர்கள் தேர்தல் திருட்டு தொடர்பாக ஞானேஷ் குமார் மீது குற்றம் சுமத்திய பின்னர் ராகுல், வாக்குத் திருட்டு (Vote chori) என்றும் தேசத் துரோகச் செயல் என்றும் அங்கலாய்க்கிறார். உத்தம் தாக்கரே, மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் போன்றோர் ஞானேஷ் குமார் செய்துள்ள குற்றச் செயல்களுக்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பரிக் கின்றனர். ஸ்டாலின், கார்கே போன்றோர்
ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இடதுசாரிகள், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி, ஜெய் ராம் ரமேஷ், ஓய்வு பெற்ற முன்னாள் தேர்தல் ஆணையாளர்கள் உட்பட பலரும் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பலத்த குரல் எழுப்புகின்றனர். இவர்கள் யாவரும் தலைமைத் தேர்தல் ஆணையாளரின் மோசடித்தனங்களுக்கு எதிராக – திருட்டுத்தனங்களுக்கு எதிராக – ஜனநாயகப் படுகொலை செய்தமைக்கு எதிராகக் கடும் கண்டனங்களை பல்வேறு வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
ஆனால் இதற்கு முன் நடைபெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் இவ்வித மோசடிகள் தொடர்ந்து நடைபெறுவதால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உட்பட பாஜக-வை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள் இவை யாவும் மக்களை திரட்டி வீதிப் போராட்டங்களில் ஈடுபட்டு தேர்தல் ஆணையாளர்களை மாற்றுவது மட்டுமின்றி வாக்கு முறையில் வெளிப்படைத் தன்மைகளை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெறா விட்டால், பாஜகவை எக்காலத்திலும் வீழ்த்த முடியாது என்று கூறியிருந்தோம். அதற்கான வீதிப் போராட்டங்களில் ஈடுபட எவரும் முன்வரவில்லை.
ஞானேஷ் குமார் உடனடியாக கைது செய்யப்படல் வேண்டும்! பாராளுமன்றமும் சட்டமன்றங்களும் கலைக்கப்படல் வேண்டும்!
பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் தில்லுமுல்லு மோசடிகள் மூலமாகவே தேர்தல்களில் வெற்றியை ஈட்டி வருகின்றன என்பது தற்போது ஊர்ஜிதம் ஆகிவிட்டது.
இவை யாவற்றுக்கும் முதன்மைக் காரணம் பாஜகவும் அவர்கள் சொல் கேட்டு செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையாளர் திருட்டு ஞானேஷ் குமாருமே காரணம் ஆவர். இவர்களின் குற்ற செயல் என்பது சாதாரணமானதல்ல. பீகார், தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இத்தகைய மோசடிகள் மூலமாகவே தேர்தல் அறுவடைகளை செய்து கொண்டார்கள். SIR-ல் பெருமளவு பல லட்சம் வாக்காளர்களை நீக்கம் செய்து மோசடி செய்திருக்கிறார்கள். எனவே தலைமை தேர்தல் ஆணையாளர் திருட்டு ஞானேஷ் குமாரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். பொறுப்பான அறிவு ஜீவிகளும், சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்களும் பங்கேற்கும் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து அனைத்துத் தேர்தல் மோசடிகளுக்கும் பகிரங்க விசாரணை நடத்தப்படல் வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படல் வேண்டும்.
மோசடித் தேர்தல்கள் மூலமாகவே ஒன்றிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் தேர்தல்களை அறுவடை செய்து கொண்டு இருப்பதால் அனைத்தையும் கலைத்துவிட்டு மறு தேர்தல், வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்றி வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்படல் வேண்டும்.
இக்கோரிக்கைகளுக்காக அனைத்து எதிர்க் கட்சிகள், மாணவர் – இளைஞர் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், ஜனநாயக மற்றும் புரட்சிகர இயக்கங்கள், கரப்பான்பூச்சி இயக்கம் உட்பட அனைவரும் ஒருங்கிணைந்து வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்! குறைந்தபட்ச ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும்! ஞானேஷ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படல் வேண்டும்! கடும்
தண்டனைக்கு உள்ளாக்கப்படல் வேண்டும்! வெற்றிகளைக் குவிக்க வேண்டும்!
எழில்மாறன்





