
“பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிதியுதவி கேட்டு வரும் சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜசேகரன், வாராகி உள்ளிட்டோர் ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அதில், “ குழந்தைகள் நல ஆர்வலர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதலில் இந்த வழக்கைப் பதிவு செய்தார்கள். ஆனால் புல விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண முடியவில்லை என்றும், இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய முடியவில்லை என்றும் கூறி, இந்த வழக்கை முடித்து வைத்துச் சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்கள்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் யோக்கியதையைப் பற்றி நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.
.கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெம் கிரானைட் கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்ற, கனிம வளங்களை கொள்ளையடித்து வரும் கிரிமினல் கும்பல்களில் ஒருவரான வீரமணி என்பவர் உதவி கேட்டு வரும் ஏழை, எளிய மக்களின் குடும்பங்களைச் சார்ந்த சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், ஏறக்குறைய 25 ஆண்டுகள் இந்த கேடுகெட்ட பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த செய்திகள் வெளியானவுடன் ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட திமுக ஆட்சியில் இந்த கிரிமினலை தப்ப வைத்து விட்டதாகவும், தங்கள் ஆட்சியில் தான் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் பாசிச கோமாளி விஜய் குதியாட்டம் போட்டு வருகிறார்.
கிரானைட் கொள்ளைக்காரனும், பாலியல் பொறுக்கியுமான வீரமணியை இன்னமும் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், ‘தொழிலதிபர்’ என்று வாஞ்சையுடன் குறிப்பிடுவது தற்செயலான நிகழ்வு அல்ல.
அதிமுக காலத்திலிருந்து அதன் பிறகு திமுக தற்போது தவெக ஆகிய ஆட்சிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை வாரி வழங்கி உள்ள இந்த கிரிமினல் குற்றப் பேர்வழி, அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து நடத்திய கொள்ளை ஊழல் முறைகேடுகள் மற்றும் பாலியல் பொறுக்கித்தனங்கள் ஆகியவற்றுக்கு அரசியல் கட்சிகள் உடந்தையாக இருந்துள்ளது என்ற போதிலும் இதில் அதிகார வர்க்கம் முக்கிய பங்காற்றியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பிரதிநிதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை இழப்பதும் அல்லது மீண்டும் ஆட்சிக்கு வருவதும் ஒரு போக்காக உள்ளபோது மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கம் 20, 30 ஆண்டுகளுக்கு ஒரே இடத்திலோ அல்லது ஒரே பதவியிலோ அமர்ந்து கொண்டு மேற்கண்ட கிரிமினல் குற்றவாளிகளை தப்புவிப்பதற்கு அனைத்து வகையிலும் கற்றுக் கொடுக்கின்றனர்.
அதனால் தான் இந்தியாவில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது என்று மார்க்சிய லெனினிய அமைப்புகள் முன்வைக்கின்றது. இந்த இரட்டை ஆட்சி தன்மையை பற்றி எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் சமீபத்தில் திருப்பூர் குணா எழுதிய புத்தகத்திலிருந்து கீழ்க்கண்ட விவரங்களை சுட்டிக்காட்டுகின்றோம்.
“இந்தியாவில் நிரந்தர நிர்வாக முறையும் – அதிகாரவர்க்கமும் (Bureaucracy)!
இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் ஆட்சி நிர்வாகத்திற்கு IAS, சட்டம் ஒழுங்கிற்கு IPS, நிதி உள்ளிட்ட அனைத்துப் பொருளாதாரத்திற்கும் IRS மற்றும் IA&AS, சர்வதேச உறவு சம்பந்தமாக IFS, கார்ப்பரேட் மேலாண்மைக்கு ICLS உள்ளிட்ட 21-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கான அதிகாரவர்க்கத்தினர் உருவாக்கப்படுகின்றனர்.
சிவில் சர்வீஸ் படிப்பு, தேர்வு முறை மற்றும் பயிற்சி உள்ளிட்டவை வெறும் வேலைக்கான தகுதியை மட்டும் வழங்குவதில்லை. அது ஒரு சாமானிய மனிதனை, அரசின் மிக முக்கியமான கொள்கைகளை முடிவெடுக்கும் அதிகாரத்துவ வர்க்கத்தின் (Bureaucratic Elite Class) பிரதிநிதியாக மாற்றும் ஒரு நீண்ட நெடிய செயல்முறையாகும்.
இந்தத் தயாரிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்றால், சிவில் சர்வீசுக்கான படிப்பும் பயிற்சியுமானது ஒருவரை, அவர் அதுவரைக்கும் கொண்டிருக்கும் உலகப் பார்வையையும் சித்தாந்தத்தையும் கைவிடச் செய்துவிடுகிறது.
இதற்கான படிப்பில் வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் சாசனம், சர்வதேச உறவுகள், சுற்றுச்சூழல் என்பதையெல்லாம் தாண்டி நிலவும் சமூகத்திற்கு விசுவாசமாக இருப்பதற்கான “அறநெறி மற்றும் நேர்மை (Ethics and Aptitude)”யை முதன்மையாக்குகிறது.
படிக்க:
♦ ஜெம் வீரமணிகளை தண்டிப்பது சாத்தியமா? சட்டத்தின் முன் அனைவரும் சமமா?
♦ ஜெம் வீரமணிகளுக்கு வளைந்துக் கொடுக்கும் அதிகார வர்க்கம்!
பின்னர் தேர்வில் பங்கேற்போர் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அரசின் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் நாட்டின் இறையாண்மை சார்ந்த பார்வையில் மட்டுமே சிந்தித்துப் பதிலளிப்பவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
தேர்வாகி வரும் இளம் அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் மாநிலம் முசூரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) கடுமையான பயிற்சி அளிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என அனைத்துத் துறை அதிகாரிகளும் இணைந்து பெறும் முதல் பயிற்சி இதுதான். ஆனால், இதன் மூலம்தான் அவர்களுக்குள் வாழ்நாள் முழுமைக்குமான ஒரு ‘அதிகாரத்துவப் பிணைப்பு (Networking)’ உருவாக்கப்படுகிறது. இதை அதிகாரவர்க்கத்திற்கான “அஸ்திவாரப் பயிற்சி (Foundation Course)” என்றழைக்கிறார்கள்.
பிறகு அவர்களுக்கு சட்டம் – ஒழுங்கு மேலாண்மை, நிதி மேலாண்மை, நில நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் உலக நாடுகளைச் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியின்போதே அவர்களை உலகப் பொருளாதாரத்தின் நலனோடு இணைக்கும் போக்குத் தொடங்கிவிடுகிறது.
அடுத்ததாக இந்தியாவின் ஒட்டுமொத்தச் சமூக – பொருளாதாரக் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதற்கான பாரத் தர்ஷன் (Bharat Darshan) என்ற களப்பயிற்சி தொடங்கும். இந்தியாவின் கிராமப்புற எதார்த்தங்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கை, ராணுவ எல்லைகள் மற்றும் பெருநிறுவனங்களின் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் நேரில் கண்டறியும் பயிற்சி இது.
இந்தப் பயிற்சி என்ன செய்கிறது என்றால், ‘இதுதான் இந்தியாவின் எதார்த்தம். இங்கே பட்டினிச்சாவும் உண்டு; பகட்டான கார்ப்பரேட்டும் உண்டு. இது இப்படித்தான் இருக்கும், இருக்க வேண்டும்’ என்று மனதைக் கெட்டிதட்டிப் போகும்படி செய்துவிடுகிறது.
இப்படி எல்லா வகையிலும் இந்த நிர்வாக முறைக்கு ஏற்ற வகையில் தயாராகிறவர்களைப் பதவியின் அதிகாரமும் சொகுசும் சேர்ந்து இன்னும் உறுதிப்படுத்திவிடுகிறது.
இவர்களின் அதிகார வாழ்க்கை என்பது ஒரு மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ சுருங்கிவிடக்கூடியதல்ல. அது மாநில அளவில் தலைமைச் செயலாளராகவும் (Chief Secretary), மத்திய அளவில் கேபினட் செயலாளராகவும் (Cabinet Secretary) விரிவடையக்கூடியது. அப்படி மத்திய அரசுப் பணியில் திறமை காட்டுகிறவர்களை இந்திய அரசானது உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) என்று உலக அளவில் கொண்டுசெல்லும்.
இந்தப் பதவியும் அதிகாரமும் தனிநபர் அளவிலானது மட்டுமில்லை. அது பதவியிலிருப்பவர் குடும்பத்திற்கும் வாரிசுக்கும் சேர்ந்தே இருப்பது. எனவே பதவியிலிருப்பவர் நிர்வாக முறைக்கு இயல்பான விசுவாசியாகத் தானாகவே மாறிவிடுகிறார். ஒருவேளை அவர் அப்படி விசுவாசியாக இல்லாமல் தவறிழைத்துவிட்டால் அது அவரது தலைமுறையை வெகுவாகப் பாதிக்கும். அவரும் அவரது குடும்பமும் தேச விரோதிகளாகப் பார்க்கப்படுவார்கள். அதன் பிறகு, அவர்களுக்குப் பெரும்பாலும் நடைபிணம் போன்ற வாழ்க்கைதான் அமையும். இதைவிடக் கொடிய தண்டனை இருக்கவே முடியாது.
அதனால் இவர்கள் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாறிவிடுவதென்பது தவிர்க்க முடியாதது. அரசும் விசுவாசிகளை முடிந்தவரையில் பாதுகாக்கவே செய்கிறது.
அரசியலமைப்பின் 311-ஆவது பிரிவின் மூலம் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு மிக வலுவான பாதுகாப்பை வழங்குகிறது. அதன்வழி அரசியல்வாதிகள் நினைத்த மாத்திரத்தில் இவர்களைப் பணியிலிருந்து நீக்கம் செய்ய முடியாது; அதிகபட்சமாக இடமாற்றம் (Transfer) மட்டுமே செய்ய முடியும்.
மட்டுமில்லாமல் இவர்கள், இவர்களில் ஒருவரையும் பலி கொடுக்காத வகையில் பார்த்துக்கொள்வதற்கான, ஒருங்கிணைவதற்கான சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
படிக்க:
♦ பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷனை வழக்கிலிருந்து விடுவித்த நீதிமன்றம்!
♦ விஜய்யின் ‘சிங்கப்பெண் அதிரடி படை’யும் கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலையும்
அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், இந்த அதிகாரிகள் 60 வயது வரை (சுமார் 30 முதல் 35 ஆண்டுகள்) நிரந்தரமாகப் பதவியில் நீடிப்பார்கள். ஒருவர் ஓய்வு பெறுகிற இடத்தில் அவரைப் போலவே தயாரிக்கப்பட்ட இன்னொருவர்தான் வந்து அமர்வார். இதனால்தான் இவர்களை “நிரந்தர நிர்வாகத்துறை (Permanent Executive)” என்று அழைக்கிறோம்.
(“டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை – அவர்கள்தான் நம்மை அடிமைப் படுத்தியிருக்கிறார்கள்” நூலிலிருந்து).
இந்த அதிகார வர்க்கத்திற்கும், அவ்வப்போது தேர்வு செய்யப்படுகின்ற அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், அமைச்சர்களுக்கும், ஏன் முதலமைச்சர்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வருகிறது.
பாலியல் வன்கொடுமை மட்டுமின்றி ஆற்று மணல் கொள்ளை; கிரானைட் கொள்ளை; கடற்கரை மணல் கொள்ளை; வைகுண்ட ராஜனின் தாது மணல் கொள்ளை, செம்மண் கொள்ளை போன்றவை அனைத்திற்கும் உடந்தையாக நிற்பது இந்த அதிகார வர்க்க கிரிமினல் குற்றக் கும்பல் தான்.
எந்த ஆட்சி மாறினாலும் இந்த அதிகார வர்க்கத்தை தாண்டி நேர்மையான ஆட்சியை நடத்துவது என்பது குதிரை கொம்பே ஆகும். இவ்வாறு வரையறுப்பதால் ஜெம் வீரமணி செய்த பாலியல் வன்கொடுமைகள் எல்லா ஆட்சி காலத்திலும் நடக்கிறது. அவர் மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பொருள் அல்ல.
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி இளம் வயது பெண்களுக்கு நடத்த கொடுமை அம்பலமாகி நாறிய போதிலும், அதன் மீது எந்த தீவிரமான தண்டனையும் எடுக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி உண்மை குற்றவாளிகள் தப்பித்து சுதந்திரமாக உலவிக்கொண்டு உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வீரமணி என்ற கிரிமினல் மீது வழக்கை முடித்துக் கொள்வதாக அரசு தரப்பு முன்வைத்தும் நீதித்துறையில் தப்பி தவறி நேர்மையாக உள்ள சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா சண்முகசுந்தரம், போன்றவர்கள் மறுவிசாரணைக்கு உட்படுத்திய காரணத்தினால் தான் வீரமணி பற்றிய உண்மைகளும், அந்த கிரிமினல் பொறுக்கி நடத்திய பாலியல் வன்கொடுமைகளும் வெளியே வந்துள்ளன.
இது பற்றி அரசியல் கட்சிகள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டு லாவணி பாடி கொண்டிருக்கும் அதே வேளையில் தற்போது 84 வயதான ஜெம் வீரமணி இந்த வழக்கில் இருந்து தப்பி விடலாம் அல்லது சிறையிலேயே உயிர் துறக்கலாம்.
எனவே, இது போன்ற கிரிமினல் குற்ற கும்பலை சட்டரீதியாக விசாரணை செய்து சிறையில் அடைப்பது தண்டனை கொடுப்பது என்பதெல்லாம் ஒருவகையில் அநீதியான வழிமுறைகள் தான். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோர் அடங்கிய முக்கூட்டு இது போன்ற கிரிமினல்களை பல்வேறு வழிகளிலும் பாதுகாத்து வருகிறது.
இதற்கு மாற்றாக பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை ஏவுகின்ற வக்கிர பேர்வழிகளை வீதியில் நிற்க வைத்து தண்டிக்கின்ற வகையிலான அரசு கட்டமைப்பும், ஆட்சி அதிகாரமும் மக்கள் கையில் வர வேண்டும். சீனாவிலும், நேபாளத்திலும் தவறு செய்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டதை போல ஒரு அமைப்பு முறை மட்டும்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு நிரந்தரமாக முடிவு கட்டும்.
அத்தகைய சமூக கட்டமைப்பு உருவாக்குகின்ற காலகட்டம் புறநிலை தேவைகளின் அடிப்படையில் நெருங்கிக் கொண்டுள்ளது.
- கணேசன்
புதிய ஜனநாயகம் தினசரி






