நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்

  1. இந்தியாவில் 2014ல் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த ஆர்.எஸ்.எஸ், பாஜக தனது பாசிச சர்வாதிகாரத்தை படிப்படியாக நிலைநாட்டிக் கொண்டு வருகிறது. 2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாசிச மோடிக்கெதிராக மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியிருந்த போதும் அனைத்து வகையான தில்லு முல்லு, விதிமீறல், முறைகேடுகளை செய்து மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. மக்கள் விரோத குடியுரிமைச்சட்டம், தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பு, விவசாயிகள் விரோத வேளாண்சட்டம் ஆகியவற்றை சட்ட விரோதமாகவும் ஜனநாயக விரோதமாகவும் நடைமுறைப்படுத்த துடிக்கிறது. கார்ப்பரேட்- காவி பாசிஸ்டுகளின் மக்கள் விரோத சட்டங்களை முறியடிப்பதற்கான பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் கட்டியமைக்க இம்மாநாடு உறுதியேற்கிறது.
  2. இந்தியாவில் ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களாகிய விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுவணிகர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரின் பொருளாதார வாழ்க்கையை பாஜகவின் கார்ப்பரேட் – காவி பாசிச அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகள் சீர்குலைத்துவிட்டது. கடும் வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசியப் பொருள்களின் விலைஉயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைஉயர்வு, மின்கட்டணம், சொத்துவரி, சேவைவரி, வருமானவரி என்று ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்க்கையே சூறையாடப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் பொதுத்துறைகள் மட்டுமல்லாது இயற்கை வளங்கள் அனைத்தையும் தேசங்கடந்த தரகு முதலாளிகளான அம்பானி, அதானி போன்ற ஒருசில விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் விளைவாக மிகப்பெரும் ஏற்றத்தாழ்வு மிக்க நாடாக இந்தியா மாறி இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வை போக்க அம்பானி, அதானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சமூக உடமையாக்கப்பட வேண்டும்.  இதனால் உருவாகியுள்ள ஏற்றத்தாழ்வை ஒழிக்கும் போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் முன்னணியில் நின்று போராடும் என இம்மாநாடு அறிவிக்கிறது.
  3. நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் மடாலயங்கள், ஆதீனங்கள் போன்றவற்றுக்கும், இதர மதநிறுவனங்களுக்கும் சொந்தமாக உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை உழுபவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். அதேபோல் , பல ஆண்டுகளாக ஆதீனங்கள் மற்றும் கோவில் நிலங்களில் குடியிருந்து வருபவர்களின் வீடுகள், மனைகள் அனைத்தும் குடியிருப்பவருக்கே சொந்தமாக்கப்பட வேண்டும் என இம்மாநாடு அறைகூவல் விடுப்பதோடு அதற்கான பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை நடத்தவும், விவசாயிகளுடன் இணைந்து போராடவும் இம்மாநாடு உறுதி ஏற்கிறது.
  4. மக்களின் வாழ்வாதாரத்திலும், இந்திய பொருளாதாரத்திலும், முக்கிய பங்கு வகிக்கின்ற, மிகப்பெரும் அளவில் வேலைவாய்ப்புக்களை வழங்குகிற சிறுகுறு நடுத்தரத் தொழில்களை அழிக்கின்ற வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அதிகரித்துக் கொண்டே போவதையும் கார்ப்பரேட்டுகளுக்கு 25 லட்சம் கோடி வரிச்சலுகைகளை வாரிக்கொடுப்பதையும் இந்தமாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும், சிறு, குறு, நடுத்தரதொழில்களை வளர்த்தெடுக்கவும், மேம்படுத்தவும் உரிய திட்டங்கள் வகுக்க வேண்டும் என்றால் கார்ப்பரேட்-காவி பாசிசம் வீழ்த்தப்பட்டு ஜனநாயக கூட்டரசு அமைய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  5. மதச்சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்களை, பார்ப்பன (இந்து)மதத்தை ஏற்காத நாத்திகர்கள், பார்ப்பனியத்தை ஏற்காத இந்துமத சீர்த்திருத்தவாதிகளை பின்பற்றுகிறவர்கள் ஆகிய அனைவரையும் எதிரிகளாக சித்தரித்து அவர்கள் மீது வெறுப்பு அரசியல் பேச்சுகள், கொலைவெறித் தாக்குதல்களை நடத்துவது, வழிபாட்டு தலங்களான மசூதிகள்,  சர்ச்சுகளை இடிப்பது, புல்டோசரை வைத்து வீடுகளை இடித்து வாழ்வாதாரத்தையே அழிப்பது என்பது தொடர்கதையாகி உள்ளது. மதச்சிறுபான்மையினர் மீது ஏவப்படும் இந்த பாசிச நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, மத உரிமைகளுக்கு ஆதரவாக நின்று செயல்படும் ஜனநாயக கடமையை ஆற்றுவோம் என இந்த மாநாடு நம்பிக்கையூட்டுகிறது.
  6. நாடு முழுவதும் பழங்குடிகள், பட்டியலின மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதி தீண்டாமைக்கு எதிராக போராடி வளர்ந்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வேங்கைவயல், ஒரத்தநாடு. விருதுநகர், நாங்குநேரி,  தென்மாவட்டங்களில் தொடரும் தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள், ஆணவக்கொலைகள் நடப்பது கவலையளிக்கிறது. முன்னேறிய நாகரிக சமூகத்தில் இத்தகைய நடவடிக்கைள் வெட்ககேடானவை. இத்தகைய சம்பவங்களுக்கு பின்னால் உள்ள மனித தன்மையற்ற ஆர்.எஸ்.எஸ் காட்டுமிராண்டிகள், ஆதிக்க சாதிவெறியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் பழங்குடிகள், பட்டியலின மக்களின் பாதுகாவலான மக்கள் கலை இலக்கியக் கழகம் இருக்கும் என்பதை இம்மாநாடு அறிவிக்கிறது.
  7. சமூகத்தில் சரி பாதியினரான பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளது. பல்வேறு அவசரச் சட்டங்களை நிறைவேற்றும் அரசின் இச்செயல் கண்டனத்திற்கு உரியது.  பண்பாட்டுத் தளத்தில் பெண்ணடிமைதனம் சாதி மத நிறுவனங்கள் மூலம் கட்டிக்காக்கப்படுகிறது.   நாடு முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்தவண்ணம் உள்ளது. ஆணாதிக்க பாலியல் வக்கிரங்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  8. சனாதன தர்மம் என்னும் நால்வருணப் பாகுபாட்டை நிலைநிறுத்தும் நான்கு வேத, உபநிடத கற்பனைகள், ஆகமங்கள், மனுநீதி ஆகியவற்றை நிலைநாட்ட பார்ப்பன பாசிஸ்டுகள் எத்தனித்து வருகிறார்கள், பார்ப்பனரல்லாத சாதிகளில் குறிப்பாக சூத்திர, பஞ்சம சாதிகளைச் சார்ந்த மக்களின் மீது பண்பாட்டுத் தாக்குதல்கள் ஏவப்படுகிறது. குறிப்பாக பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வழிபட செல்வதை தடுப்பது,  அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது, இந்து ஒற்றுமை, இந்துக்கள் நலன் என்று கூச்சலிடும் அதே வேளையில் பார்பனர் அல்லாதவர்களுக்கு கோவிலில் அர்ச்சகராகும் உரிமை மறுக்கப்படுகிறது.  உச்ச நீதிமன்றமே இதற்கு ஆதரவாக நின்று தீர்ப்பு வழங்கியதன் மூலம் சட்டபூர்வமாகவே சனாதன- வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்டுவதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமைக்காகவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையை நிலைநாட்டவும், அதற்ககான போராட்டங்களை முன்னேடுக்கவும் இம்மாநாடு உறுதியேற்கிறது.
  9. இந்தியா பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய மாநிலங்களின் ஒன்றியம் என்ற நடைமுறையை நிராகரித்துவிட்டு சட்டம் ஒழுங்கு முதல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வரிவசூல் போன்ற அனைத்து மாநில உரிமைகளையும் பறிப்பதுடன், அவற்றை மைய அரசின் கட்டுப்பாட்டில் ஒன்று குவித்து  ஒரே நாடு, ஒரே தேர்தல்,, ஒரே மதம், ஒரே கல்வி, ஒரே பண்பாடு என்ற நோக்கத்துடன் இந்து ராஷ்டிரத்தை நோக்கி செல்லும் ‘ஒற்றை அதிகார பாசிசப் போக்கை முறியடிக்க வேண்டும்!’ என இந்த மாநாடு அறைகூவல் விடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் உண்மையான கூட்டாட்சிக்கு மாநில அதிகாரங்களை பெற அனைத்து தேசிய இன மக்களும் போராட இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.
  10. புதிய கல்விக் கொள்கை மூலம் ஏழை எளிய உழைக்கும் மக்களுக்குக் கல்வி உரிமையை மறுப்பதோடு கார்ப்பரேட்டுகளுக்கு தேவையான ரோபோ மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிமைகளை உருவாக்கும் திருப்பணியை கார்ப்பரேட் காவி பாசிஸ்ட்டுகள் செய்து வருகிறார்கள். இந்திய வரலாற்றை திரித்து ஆர்.எஸ்.எஸ், பாஜக முன்வைக்கும் காவி வரலாற்றை கல்வியில் திணிப்பதும் நடைபெற்று வருகிறது.  இது தேசிய இனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாநிலங்களின் தனித்தன்மையான பண்பாடு, மொழி மற்றும் வரலாற்று உரிமைகளை மறுப்பதாகும். புதிய தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்பட வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாநில அரசுகளை வற்புறுத்துவது, மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீட்டை முடக்குவது என்ற ஒன்றிய அரசின் செயலை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.  புதிய பாடத்திட்டங்களையும், கல்விமுறைகளையும் அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமைக்காக அனைவரும் போராட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  11. உழைத்து வாழும் பெரும்பான்மை மக்களின் உயரிய பண்பாடு கலாச்சார வெளிப்பாடாக விளங்கும் கிராமிய நாட்டார் கலைகள் மற்றும் கலைஞர்களை பாதுகாக்கவும், வாய்ப்புள்ள நாட்டார் கலைகளை மீட்டுருவாக்கம் செய்து நவீனப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை செய்துவரும் தென்னிந்திய பண்பாட்டு மையம்,  மத்திய மாநில அரசுகளின் கலைப்பண்பாட்டுத் துறைகள், இயல் இசை நாடக மன்றம் ஆகியவற்றில் நிலவும் அதிகார முறைகேடுகள்,  லஞ்ச ஊழல், ஒழிக்கப்பட வேண்டும்.   இத்துறைகளில் ஊடுருவி விட்ட காவி பாசிச ஏவலாளிகளை அடையாளம் காணவும், அது போன்ற சக்திகளை புறக்கணிக்கவும் இப்பேர்வழிகளை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தவும் வேண்டும். அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் கலை இலக்கிய அமைப்புகளோடு இணைந்து மகஇக போராடும். மகஇக முன்னெடுக்கும் கிராமிய நாட்டார் கலைஞர்களுக்கான வாழ்வுரிமை போராட்டங்களில் கிராமிய நாட்டார் கலைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று மாநாடு கேட்டுக்கொள்கிறது.
  12. ஜனநாயகப் போர்வையில் உலவும் ஆர்எஸ்எஸ், சனாதன் சன்ஸ்த்தான் போன்ற இந்துமதவெறி அமைப்புகளான சங்பரிவார் அமைப்புகள் பாசிச பயங்கரவாத இயக்கங்கள் ஆகும். அவை அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. மக்கள் இதுபோன்ற பாசிச அமைப்புகளை சமூகப்புறக்கணிப்பு செய்ய வேண்டும் என இந்த மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
  13. பாசிச பாஜகவால் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் வாடும் பீமாகோராகான் வழக்கில் உள்ள சமூக செயல்பாட்டாளர்கள், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராடிய ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் உமர்காலித் போன்ற ஜனநாயகசக்திகள், காஷ்மீர், வடகிழக்குமாநிலங்களில் போராடும் இனஉரிமை அமைப்புகளை சேர்ந்த போராளிகள், மா.லெ அரசியலை ஏற்று போராடும் போராளிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என இந்தமாநாடு அறைகூவல் விடுக்கிறது. கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக போராடும் உரிமைகளை நசுக்கும் பொடா, உபா,  என்.எஸ்.ஏ போன்ற கருப்புசட்டங்கள், என்.ஐ.ஏ போன்ற ஜனநாயக விரோத நிறுவனங்கள், சொந்த நாட்டு மக்களின் மீது ஏவப்படும் இராணுவ துணை இராணுவ அடக்குமுறைகள் போன்ற அனைத்தும் திரும்ப பெற வேண்டும். கலைக்கப்பட வேண்டும் என இந்த மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
  14. கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி மாற்றாக ஒரு ஜனநாயக கூட்டரசை நிறுவிட அனைத்து புரட்சிகர, ஜனநாயக,  இடதுசாரி இயக்கங்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரோடும், ஒன்றிணைந்து போராடுவதோடு அதற்கு இசைவாக பாசிச எதிர்ப்பு ஜனநாயக கலை இலக்கிய முன்னணியை கட்ட ஊக்கமான பங்களிப்பை செலுத்த இம்மாநாடு உறுதியேற்கிறது.
  15. பெரியாரின் கருத்துக்களைப் பள்ளிப்பாடங்களில் சேர்க்க வேண்டும் என்றும் பெரியார் பிறந்தநாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது.

16.மார்க்சிய ஆசான்கள் காரல்மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோருக்கு தலைநகரில் சிலை வைத்து மணிமண்டபம் வைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

17.திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதன் அடிப்படையில் மதுவிலக்கை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இம்மாநாடு கோருகிறது.

18.ஏகாதிபத்தியங்கள் தங்கள் பொருளாதார நெருக்கடியை உலக மக்களின் மீது திணித்து வருகிறது. இதனால் ஏற்படும் போராட்டங்களைத் திசைத்திருப்ப இனவெறியைத் தூண்டி வருகின்றது. இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் இதற்கு உதாரணம். உலக மக்கள் ஏகாதிபத்தியங்களின் இத்தகைய சதிச்செயல்களுக்கு பலியாகாமல் எச்சரிக்கையுடன் ஏகாதிபத்தியப் போர் வெறிக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி

தோழமையுடன்:

மாநில செயற்குழு,
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here